Sunday, May 8, 2016

கூவம்...

--கோ.செங்குட்டுவன்.


சென்னையில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ள நீர்வழித் தடம்.

ரஜினி நடித்த வேலைக்காரன் படத்தில்கூட கவிஞர் மேத்தா இப்படி எழுதியிருப்பார் “சிங்காரமா ஊரு சென்னையின்னு பேரு, ஊரச்சுத்தி ஓடுதையா கூவம் ஆறு.”

ஊரச்சுத்தி ஓடுவதெல்லாம் கூவம் கிடையாது. அடையாறு, ஓட்டேரி நல்ல, கேப்டன் காட்டன் என பல கால்வாய்கள் இருக்கின்றன.

கூவம் ஆற்றின் தண்ணீர்தான் தெளிவில்லையே தவிர இதன் பயணம் தெளிவானது.

இந்த ஆற்றின் தொடக்கம் என்று சொல்லப்போனால், திருவள்ளூர் மாவட்டம் கேசாவரமாகும்.

பாலாற்றில் மழைக்காலத்தில் பெருக்கெடுக்கும் வெள்ள நீரானது, அரக்கோணம் தாலுகாவில் உள்ள காவேரிப்பாக்கம் ஏரியில் சேகரிக்கப்படுகிறது.

இந்த ஏரி நிரம்பியதும் இதன் உபரி நீர், கல்லாற்றுக்குத் திருப்பி விடப்படுகிறது. கல்லாற்றின் குறுக்கே, பேரம்பாக்கத்துக்கு அருகில், கேசாவரம் எனுமிடத்தில் அணை கட்டப்பட்டுள்ளது.



இந்த அணையில் இருந்துதான் கூவம் மற்றும் கொற்றலை ஆறுகள் தமதுப் பயணத்தைத் தொடங்குகின்றன.

கடம்பத்தூர் ஒன்றியத்தில் இருக்கும் கூவம் கிராமத்தைத் தொட்டு வருவதால் இந்த ஆற்றுக்கு இந்த ஊரின் பெயரே வழங்கப்படுகிறது.

மணவாள நகர், அரண்வாயல், திருமழிசை, வெள்ளவேடு, கன்னார் பாளையம், பருத்திப்பட்டு, பூவிருந்தவல்லி, மதுரவாயல் வழியாகச் சென்னைக்குள் நுழையும் கூவம் ஆறு கோயம்பேடு, அமைந்தகரை, சேத்துப்பட்டு வழியாக எழும்பூர் வருகிறது. சிந்தாதரிப்பேட்டை - பூங்கா இடையே இரண்டாகப் பிரிந்து, சிறிது தூரத்தில் மீண்டும் ஒன்றாகச் சேர்கிறது. பின்னர் வங்காள விரிகுடாவை அடைகிறது.


கூவம் ஆற்றின் மொத்த நீளம் 72 கி.மீ. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் 54 கி.மீ.ம், சென்னை மாநகருக்குள் 18 கி.மீ.ம் பயணிக்கிறது.

இரண்டு நூற்றாண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்கள் கோட்டைக் கட்டிக் கொள்ள தேர்வு செய்த இடம் கூவம் முகத்துவாரம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாகாணத்தில் இருந்து பிரியும்போது, ஆந்திரக்காரர்கள் வைத்தக் கோரிக்கைகளில் ஒன்று சென்னை நகரை முற்றிலுமாக ஆந்திராவுடன் இணைக்க வேண்டும் அல்லது கூவம் ஆற்றை மையமாக வைத்து சென்னையை வடக்குத் தெற்கு என இரண்டாகப் பிரித்து வடசென்னையை ஆந்திராவுக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான்.

அப்படியேதும் நடக்கவில்லை என்பது நமக்கு ஆறுதல் அளிக்கும் விசயம்.

2004இல் ஏற்பட்ட சுனாமியின் போது பொங்கியெழுந்தக் கடல் நீரை உள்வாங்கி சென்னை மாநகரைக் காப்பாற்றியப் பெருமை கூவம் ஆற்றுக்கு உண்டு!



நன்றி:
கூவம் அடையாறு பக்கிங்காம் சென்னையின் நீர்வழித் தடங்கள்
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்.    
_____________________________________________________

கோ.செங்குட்டுவன்
ko.senguttuvan@gmail.com
_____________________________________________________

No comments:

Post a Comment