Thursday, May 1, 2014

ஶ்ரீபுரம்!

ஸ்ரீபுரம்


வேலூர் என்றால் வேலூர் கோட்டை நினைவுக்கு வரும். அல்லது சி.எம்.சி. மருத்துவமனை  நினைவுக்கு வரலாம். மற்றும் வெகு சிலருக்கு வாணியம்பாடியில் உள்ள  ‘ஏழைகளின்ஊட்டி’ என்றழைக்கப்படும் ஏலகிரி நினைவில் வரலாம். ஆனால் தற்போது வேலூருக்கு கிடைத்திருக்கும் புது அடையாளம் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள பொற்கோவில்.

ஸ்ரீபுரம் என்ற பெயருக்கு ஏற்ப இது மகாலக்ஷ்மிக்கான கோவில். கட்டி முடிக்கப்பட்டு சில வருடங்களே ஆகியிருந்தாலும் மிக பிரபலமாகிவிட்டது. பொற்கோவில் என்றால் பஞ்சாபிலுள்ள அமிர்தசரஸ் என்கிற நிலை மாறி தமிழ்நாட்டிலும் ஒரு பொற்கோவில் என்று சொல்ல வைத்திருக்கிறது   இந்த கோவில்.



இதன் பின்னணி

வேலூரிலிருந்து சுமார் 6 கி.மீ.தொலைவில் திருமலைக் கொடி என்ற இடத்தில் 100 ஏக்கரா நிலப் பரப்பில் 55,000 சதுர அடியில் அமைந்துள்ளது இந்தக் கோவில். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து  400 பொற்கொல்லர்களும் செப்பு வேலை செய்பவர்களும் ஆறு வருடங்கள் அயராது உழைத்து 600 கோடி ரூபாய் செலவில் இந்த கோவிலை வடிவமைத்து இருக்கிறார்கள். இங்கு வந்து தரிசனம் செய்யும் பக்தர்கள் இதனை உலக அதிசயங்களில் ஒன்று என்று கருதுவதாக சொல்லுகிறார்கள். முதலில் கோவிலின்  சுவர்களில் செப்புத்தகடுகள் அடிக்கபட்டு பிறகு தங்கத்தகடுகள் 9 அடுக்குகளாக வேயப்பட்டதாக சொல்லப்படுகிறது. உபயோகப்படுத்தப்பட்ட தங்கம் இந்திய ரிசர்வ்வங்கி மூலம் ஒளிவு மறைவின்றி வாங்கப்பட்டதாம்.

ஸ்ரீசக்திஅம்மா:
இக்கோவிலை தன்னுடைய இறை சக்தி மூலம் வடிவமைத்துள்ளார் ஸ்ரீசக்தி அம்மா. மிகச் சிறிய வயதிலேயே இறை ஞானம் பெற்றவர் இவர்  என்று இந்த கோவிலின் இணையதளம் இவரைப்பற்றி குறிப்பிடுகிறது. மனிதர்கள் தங்களைப் பற்றிய உண்மை அறிவு பெறவும், தர்ம நெறியில் நடந்து முக்தி பெறவும் இந்த கோவிலைதான் அமைத்ததாக ஸ்ரீசக்தி அம்மா கூறுகிறார். 1992 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம்தேதி தானே ஸ்ரீநாராயணி அம்மனாக அவதரித்து இருப்பதாக இவர் அதிகாரபூர்வமாக அறிவித்தார். “எப்போதெல்லாம் தர்மம் குறைந்து அதர்மம் தலை  தூக்குகிறதோ, அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன்; இந்த முறை நாராயணியாக அவதரித்து இருக்கிறேன். என் பெயர் சக்தி அம்மா” என்று சொன்னாதாக இணைய தளத்தில் ஒரு தகவல் காணக் கிடைக்கிறது.

ஸ்ரீநாராயணி பீடம்:
இது கைலாசகிரி என்ற சிறு குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன் இந்த இடத்தில் பல சித்தர்களும் முனிவர்களும் கடும் தவம் செய்து லோகமாதாவை இந்நில உலகில் வந்து பிறக்க வேண்டும்  என்று பிரார்த்தனை செய்தார்களாம். அதன் காரணாமாகவே தற்போது சக்தி அம்மாவாக அவதாரம் எடுத்து இருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன. ஸ்ரீநாராயணி பீடத்தில்தான் ஸ்ரீசக்திஅம்மா தங்கி இருக்கிறார்.

இந்தக் கோவிலுக்குச் செல்லும் வழி:
சென்னையிலிருந்து பல பேருந்துகள் வருகின்றன.  ஸ்ரீபுரத்திற்கு அருகில் இருக்கும் ரயில் நிலையம் காட்பாடி.
பெங்களூரிலிருந்து காட்பாடி  வந்து அங்கிருந்து ஸ்ரீபுரம் போகும் பேருந்து மூலம் செல்லலாம்.  சென்னையிலிருந்தும் மற்ற முக்கிய ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் இருக்கின்றன. காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை பலவிதமான தரிசனங்கள் உள்ளன. இந்த தரிசனங்களுக்கும் அபிஷகத்திற்கும் 2 மாதங்களுக்கு முன்பே பதிவு செய்து கொள்ளவேண்டும்.
பக்தர்கள் வந்து தங்க நல்ல வசதிகள் இருக்கின்றன.




கோவிலுக்குள்:

நுழைவாயிலிலிருந்துகிட்டத்தட்ட 3 கி.மீ. தொலைவு நடக்க வேண்டும். பாதுகாப்பு கெடுபிடிகள் சற்று அதிகம்தான். கைதொலைபேசி, காமிரா ஆகியவற்றை  எடுத்துப் போகக் கூடாது. எடுத்துப் போனால் கோவிலில் நுழைவதற்கு முன்பு அங்கு உள்ள பாதுகாப்பு அறைகளில் வைத்துவிட்டு பிறகு வெளியே வந்தவுடன் எடுத்துக் கொள்ளலாம். திருப்பதி கோவில் போலவே இங்கும் க்யூ உண்டு. ஸ்ரீசக்ரவடிவில் அமைந்துள்ள பாதையில் பக்தர்கள் போக வேண்டும். பாதை நெடுகிலும் நல்ல போதனைகள் பலவற்றைக் காணலாம்.

சீனியர் சிடிசன்களுக்கு கியூ இல்லை. நேராக செல்லலாம். குடும்பத்தவர் எவரும் அவருடன் செல்ல அனுமதி இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கும், மிகவும்வயதானவர்களுக்கும் சக்கர நாற்காலிகள் தரப் படுகின்றன. தரிசனம் முடிந்து வெளியே வரும் போது லட்டு, பொங்கல் முதலிய பிரசாதம் கொடுக்கப்படுகின்றன. பக்தர்கள் லுங்கி, நைடிஸ், ஷார்ட்ஸ், பர்முடாஸ் போட அனுமதி இல்லை. புகை பிடித்தல், மது அருந்துதல் கூடாது.
வெகு நேரம் வரிசையில் நின்று விட்டு உள்ளே போனால் தூரத்தில் இருந்து தான் ஸ்ரீ மகாலக்ஷ்மியை தரிசிக்க முடிகிறது. பல பக்தர்களுக்கும் இதுதான் பெரிய குறையாக தெரிகிறது.
என்ன செய்கிறது? கலி காலத்தில் கடவுள் கூட கோவில் நிர்வாகிகளின் கைப்பாவை ஆகி விடுகிறார்!

published in a2ztamilnadunews.com

கட்டுரை ஆக்கம் ரஞ்சனி நாராயணன்

4 comments:

  1. சோதனைப் பின்னூட்டம்

    ReplyDelete
  2. தரிசனம் செய்கிற மக்களுக்கு இலவசமா குங்கும பிரசாதம் கூட கிடையாதாமே? அதுக்கு காசு கொடுத்து வாங்கணுமாம்! நல்ல பிசினெஸ் சென்டர்.....

    ReplyDelete
  3. ஆமாம், குங்குமம் இலவசமாத் தரதில்லை. நாங்க போயிட்டு வந்தப்போவே எழுதினேன் இது குறித்து. :)

    ReplyDelete
  4. டி வீ , ஸ்டவ் , பேன், என்று அரசாங்கமே இலவசம் இலவசம் என்று கொடுக்கிறது என்றால், அது கோவிலில் கடவுளின் அருள் மட்டும் இலவசமாக கிடைப்பதால் தான். 'அருளே பொருள்'

    ReplyDelete