தங்க வேட்டையா? அப்படியென்றால்............
தங்க நகைக் கடைகளை அட்சயத் திரிதியை அன்று பார்த்தால் நம் மக்கள் தங்க வேட்டையாடும் காட்சியை கண்ணாரப் பார்க்கலாம். ஓடி ,ஓடி வேட்டையாடுவார்கள்.
தங்கத்தின் மீது மனிதனுக்கு எப்பவுமே காதல் அதிகம் தான்.
"மாற்றம் ஒன்றே மாறாதது " என்கிற சொல்லாடல் தங்கத்தின் விஷயத்தில் பொய்யாகி விட்டது.பின்னே பாருங்களேன். நமக்கு இருக்கும் ஆசைகளில் மிகப் பெரிய ஆசை " பொன்னாசை " .மனிதனுக்கு இந்த மஞ்சள் உலோகத்தின் மீது இருக்கும் அளவற்ற காதல் எத்தனயோ நூற்றாண்டுகளாய் தொடர்கிறது.
"இந்தியர்கள் தான் அதிகமாக தங்கம் வாங்குகிறார்கள் ." என்பது பொதுவான கருத்து. ஆனால் நம் ஊரில் எப்பவும் தங்கத்தைக் கடையில் இருந்து தான் வாங்குவோம். ஏன் பிற நாட்டினர் எல்லாம் திருடுகிறார்களா? என்று கேட்க வேண்டாம். நான் சொல்வது கூட்டம் கூட்டமாய் கலிபோர்னியாவில் தங்க வேட்டையாடின வெளி நாட்டினரைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறேன்.
கலிபோர்னியாவில் தங்க வேட்டை நடந்த வருடம் 1848. 1848ற்கு முன்பாக அதிகம் பேசப்படாத ஊராக இருந்த கலிபோர்னியாவிற்கு, ஸ்டட்டர் என்பவர்
சுவிஸ் நாட்டிலிருந்து பெரிய விவசாய சாம்ராஜ்யம் அமைக்கும் முயற்சியில் வந்து இறங்குகிறார். . அங்கிருக்கும் மக்களை வேலைக்கு வைத்துக் கொண்டு விவசாயத்தில் இறங்கினார். இவருடைய மரம் அறுக்கும் மில்லை கவனித்து க் கொள்ள மார்ஷல் என்பவரை வேலைக்கு அமர்த்தினார்.
ஒரு நாள் மரம் அறுக்கும் மில் அருகில் இருக்கும் ஆற்று மணலில் மஞ்சளாய் என்னவோ மின்னுவதைப் பார்த்து கையில் எடுத்துப் பார்த்த மார்ஷல் ஆச்சர்யத்தில் உறைந்திருக்க வேண்டும். அவருக்கு அது தங்கம் என்று புரிந்தது. திரு. ஸ்டட்டர் கவனத்திற்கு கொண்டு சென்றார். இருவரும் விஷயத்தை மிக மிக ரகசியமாக வைக்க முயன்றார்கள்.
ரகசியம் என்றாலே அது எப்படியாவது வெளியே பிய்த்துக் கொண்டு வருவது இயல்பு தானே. அப்படியே இந்த ரகசியமும் இவர்கள் இருவரைத் தவிர திரு. Sam Brannan என்பவருக்கு எப்படியோ தெரிந்து போயிற்று.
தங்கம் கட்டி கட்டியாகக் கிடைக்குமிடம் தெரிந்தால் முதல் வேலையாக அங்கே எவ்வளவு கிடைக்கும் என்று தேடத் தானே பார்ப்போம். அதைத் தானே திரு..Sam Brannan செய்திருப்பார் என்று நினைப்போம். அவர் சிந்தனை வேறாக இருந்தது.
நாம் தங்கம் தேடிப் போனால் எப்படியும் எல்லோருக்கும் தெரிந்து எல்லோரும் நம்முடன் தங்கம் தேடி வருவார்கள் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. இந்தப் போட்டியில் நாம் எதற்கு இறங்க வேண்டும். தங்கத்திற்குப் போட்டி என்றால் அடிதடி , கொலை என்று இல்லாமலா இருக்கும் .ஆனால் அதே சமயத்தில் இந்த சந்தர்ப்பத்தை உபயோகித்துப் பெரும் பணக்காரராக வேண்டும் என்று தீர்மானித்தார். அதற்காக அவர் போட்ட பிளான் அருமை.
சான்பிரான்சிஸ்கோவிலும், அதை சுற்றிலும் இருக்கும் கடைகளில் இருக்கும் மண்வெட்டி, மண் அள்ளும் பாண்டு, கடப்பாரை என்று தங்கம் வெட்டும் உபகரணங்கள் எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கிக் கொண்டார்.
எந்தக் கடையிலும் இந்த சாமான்கள் இல்லை. அத்தனையையும் இவரே வாங்கிக் கொண்டார்.. சான்பிரான்சிச்கோவிற்கும், தங்கம் கிடைக்கும் இடத்திற்கு நடுவில் மண் வெட்டும் உபகரணங்கள் கடையை அமைத்துக் கொண்டார். பின்னர், அவர் சான்பிரான்சிஸ்கோ நகரில் ,தெருத்தெருவாக கையில் தங்கத்தை ஒரு பாட்டிலில் போட்டு க் கொண்டு ,
" தங்கம் வாங்கலையோ தங்கம் " என்று கூவி கூவி விற்பதைப் பார்த்த நகரத்தினர் முதலில் நம்பத்தான் இல்லை. ஆனால் சிலரின் ஆர்வம் சும்மா விடுமா என்ன? அவர் சொன்னது உண்மை என்று புரிய ஆரம்பித்த பின்னர் தங்க வேட்டை ஆரம்பமானது. முதலில் ஆற்று மணலில் கிடைத்த தங்கம், பின்னர் தோண்டினால் மட்டுமே கிடைக்க ஆரம்பித்தது. அவர்களுக்கு தோண்டுவதற்கு வேண்டிய உபகரணங்கள் நம் Sam Brannan கடையில் தானே வாங்க வேண்டும்.15 செண்டிற்கு வாங்கிய மண்வெட்டியை 30 டாலருக்கு விற்க ஆரம்பித்தார் Brannan. எல்லோரும் தோண்டி , உழைத்து, போட்டியிட்டு பல் சங்கடங்களை வென்று தேடிய தங்கத்தை விடவும் அதிக பணம் சம்பாதித்தார் Brannan . கலிபோர்னியாவில் இந்தத் தங்க வேட்டையின் முதல் கோடீஸ்வரர் இவர் தான்.
அதற்குப் பிறகு தங்க வயலானது கலிபோர்னியா மாகாணம் எனலாம்.. தங்க வயல் பற்றிய செய்தி மிக வேகமாக தீயாய் பரவ, எல்லோரும் படையெடுக்க ஆரம்பித்தனர். உலகம் முழுதும் இருந்து கிடைக்கும் கப்பலக்ளில் எல்லாம் பயணிக்க ஆரம்பித்தனர். ஆஸ்திரேலியா, சீனா, ஐரோப்பா என்று பல நாட்டவர்கள் தங்க வயலில் வந்திறங்கினர்.
வெறும் 200 பேர்களை மட்டுமே கொண்டிருந்த சான்பிரான்சிஸ்கோ நகரம் தீடீரென்று 3,00,000 மக்கள் (ஒரு வருடத்தில்) தங்க வேட்டை நடத்துவதை
மூச்சு முட்ட பார்த்துக் கொண்டிருந்தது எனலாம்.
தங்க வேட்டையால் தங்கம் கிடைத்ததோ இல்லையோ, அந்த ஊரின் பொருளாதார வரை கோடு மிக மிக வேகமாக ஒரே வருடத்தில் சரேலென உயர்ந்தது . இந்தத் தங்க வேட்டைக்கு வந்தவர்களை 48ers என்றும் , 49ers என்றும் அழைத்தார்கள். (தங்க வேட்டை நடந்த வருடம் 1848,1849 )
பல உப தொழில்கள் வேகமாக வளர்ந்தன. ஒரு நேரத்தில் சான்பிரான்சிஸ்கோ நகரம் பேயடித்த இடம் போல் தென்பட்டது என்றும் தெரிய வருகிறது. வெறும் உடைந்த கப்பல்கள் மட்டுமே இருந்ததாம். எல்லாம் அங்கு வந்த தங்க வேட்டைக் காரர்கள் பயணித்ததோ , அல்லது உணவு, உடை விற்பதற்காக வந்த கப்பல்களோ எதுவோ ஒன்று. ஆக தங்கம் என்கிற மஞ்சள் உலோகம் பல வெளி நாட்டவரை இழுத்துக் கொண்டு வந்து சேர்த்தது .
முதலில் அங்கு வந்தவர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை . ஒருவரையொருவர் அடித்துக் கொள்வது, இடத்தை வளைத்துக் கொள்வதில் போட்டி என்கிற சிரமங்கள். பலர் தங்கள் குடும்பங்களை தங்கள் ஊர்களிலேயே விட்டு விட்டு வந்தவர்கள். பின்னால் சிலர் திரும்பிக் கூட போக முடியாத நிலைமை. எல்லோருக்கும் தங்கம் கட்டி கட்டியாக கிடைத்து விடுமா என்ன? சிலருக்கு குந்து மணியளவு கூட கிடைக்கவில்லை என்பதும் நிஜம். ஆனால் அதற்காக அவர்கள் தங்கள் உடைமைகளை விற்று, அடகு வைத்து என்று பெரும் கடனாளியானவர்கள் ஏராளமோ ஏராளம்...... குடுமபத்தோடு வந்தவர்களில் சிலரின் நிலைமை இன்னும் மோசம் . போட்டி ச் சண்டையில் விதவையான பெண்கள் ஏராளம்.பெரும் செல்வ சீமாட்டிகள் இப்போது வறுமையில்... தங்கம் மேலுள்ள மோகம் இதற்கெல்லாம் காரணம். இப்படி சொல்ல முடியாத சங்கடங்கள் இருந்தாலும், சிலர் பெரும் பணக்காரர்களானதும் உண்மையே!
வருடங்கள் செல்ல செல்ல அங்கு தங்கம் கிடைக்கும் அளவும் குறைய ஆரம்பித்தது எனலாம். அதற்குப் பிறகு மக்கள் தங்க வேட்டைக்கு வந்தவர்களும் எண்ணிகையில் குறைந்தது
ஆனால் Gold Rush San Franciscoவை பெரிய நகரமாகவும், கலிபோர்னியா மாகாணத்தை மிகப் பிரபலமாகவும் ஆக்கியது எனலாம்.
கலிபோர்னியாவில் நடந்த தங்க வேட்டைப் பற்றிப் பார்த்தோம்.
நம் ஊரில் நடந்த தங்க வேட்டை பற்றி சொல்லாமல் விடலாமா?
ஒரு சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிலும் , உத்தரபிரதேசத்தில் தங்கம் இருப்பதாக ஒரு சாமியாருக்குக் கனவு வர, அதைத தோண்டியெடுக்க அரசாங்கமே குதித்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன. ஆனால் இங்கு ஒன்றுமே கிடைக்க வில்லை. ஆயிரம் டன் தங்கம் என்றால் சும்மாவா? ஒரே நாளில் வல்லரசாகி விட்டிருப்போம். நமக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை போலிருக்கிறது. ஆனாலும் பரவாயில்லை. தங்கம் கிடைக்காவிட்டால் தான் என்ன? நம் இளைஞர்கள் தான் புடம் போட்ட தங்கமாய் இருக்கிறார்களே. இவர்கள் உழைப்பினால் அதிவிரைவில் இந்தியா வல்லரசு ஆகி விடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.அப்புறம் எதற்கு ஆயிரம் டன் தங்கம் நமக்கு?.....
நம் ஊர் அட்சயத் திரிதியை கதைக்கு வருகிறேன்.....
பக்கத்து வீட்டு நந்தினியை இன்று கடைக்குப் போகும் போ து பார்த்து கேட்டேன்,.
" நாளை அட்சயத் திரிதியை ஆயிற்றே. என்ன வாங்குவதாய் இருக்கிறீர்கள்? "
"எனக்கு இதிலிலெல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் என் தம்பி மனைவிக்கு இதில் நம்பிக்கை அதிகம் அவளுக்குத் துணையாகப் போக வேண்டும் அப்படியே ஏதாவது வாங்கி விட வேண்டியது தான்." நந்தினி சொன்னார்.
இப்படித் தான் நிறைய பேர்.......
ஏதாவொரு காரணம் சொல்லிக் கொண்டு நகைக் கடைக்காரர்களை வளமாக்கப் போகிறோம் என்று மட்டும் புரிகிறது.
image courtesy---google.
facts---wikkipedia.
கட்டுரை ஆக்கம் திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம்
Good
ReplyDelete