திரைக்குப் பின்னால் – 1 – திரௌபதி வஸ்த்திராபரணம்
“துச்சாசனா இன்னுமா சீலையெ உருவி முடிக்கலே?”
“அண்ணா உருவ உருவ அது வந்துகிட்டே இருக்குதே.”
மெல்லச் சொல்கிறான் துரியோதனன், “ரெண்டு வருசத்துக்கு முன்னெ ஆரெம்கேவீலெ விளம்பரத்துக்காக வெச்சிருந்த சீலெயெக் கட்டிக்கிட்டு வந்தூட்டாளோ இந்த திரௌபதி?”
இயக்குனர் சொல்கிறார், “திரௌபதீ கூப்புடும்மா கிருஷ்ணனெ சீக்கிரம். சீலெ முடியப் போவுது.”
“ஆபத் பாந்தவா…. அனாத ரக்ஷகா… காப்பாத்து என்னெ.”
ஒப்பனை அறையில் இருந்து வருகிறது ஒரு குரல், “சார் கிருஷ்ணனுக்கு போட இருந்த நீலச் சாயத்துக்கு பதிலா செவப்பு சாய பாட்டிலெக் கொண்டாந்திருக்காங்க சார். தலெய்க்கு வெய்க்குற மயிலு பீலியையும் புல்லாங் குழலையும் காணும் சார்.”
“நீலச் சாயமும், மயிலு பீலியும் கொழலும் இல்லாட்டிப் பரவாயில்லையா. அந்த ஆளே நெருப்புக்குக் குளிப்பாட்டின நெறந்தான். பெட்ரொமாக்ஸு வெளீச்சத்துலெ நீலத்துக்கும் கருப்புக்கும் பெரிசா வித்தியாசம் ஒண்ணும் தெரியாதையா. கொழலுக்கு பதிலா அங்கெ கெடெந்த ஃபுட் ரூலெக் குடுத்து அனுப்பையா”.
“சார் பக்கத்துலெ இருக்குற நாயர் கடெய்க்குப் போயி ஒரு சிங்கிள் டீ குடிச்சீட்டு வறேன்னு போன கிருஷ்ணனெ இன்னும் காணும் சார்.”
“ஆபத் பாந்தவா… அனாத ரக்ஷகா…. என்னெக் காப்பத்துடாப்பா” தலையைத் தன் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு அண்ணாந்து பார்த்த படி கத்துகிறார் இயக்குனர்.
இயக்குனரைத் தொடர்ந்து துரியோதனன், “துச்சாதனா விடு சீலையை. நீ மிகவும் களைத்துப் போய் விட்டாய். போய் ஏதேனும் சிற்றுண்டி தின்று விட்டு வா. மீண்டும் தொடரலாம் புதிய தெம்போடு உன் வேலையை.”
“யொவ் தெரெ…. கீளெ உடுய்யா தெரெயெ” என்று இயக்குனர் கத்த விழுகிறது திரை.
(படம் இணைய தளம் ஒன்றில் இருந்து)
கட்டுரை ஆக்கம்:திரு. நடராஜன் கல்பட்டு
Natrajan Kalpattu Narasimhan <knn1929@gmail.com>
Who is this Natarajan kalepattu?
ReplyDeleteமின் தமிழில் எழுதும் நண்பர். அவரை knn1929@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ReplyDelete