சிலருக்கு வாழ்ந்திட வழி வகுக்குது பொம்மலாட்டம். சிலருக்கோ அவர்கள் வாழ்க்கையே ஒரு பொம்மலாட்டம். இரண்டிலுமே சூத்திரதாரி நூலை இழுத்திட ஆடுகின்றன பொம்மைகள்.
மதராசில் (அதுதான் சென்னை நகரின் அந்நாளையப் பெயர்) செந்நிறத்தில் கலை நுணுக்கத்தோடு கம்பீரமாய் நிற்பது உயர் நீதி மன்றம். அதன் ஒரு புறம் எஸ்ப்ளனேட் சாலை. அந்த சாலையில் சில உயர்ந்த கட்டிடங்கள். அவற்றுள் ஒன்றின் பின்னே வெளியூர் சென்றிடும் பேருந்து நிலையம். அதன் அருகிலேயே மற்றொரு கட்டிடத்தின் பின்னே ஒரு திறந்த வெளி மைதானம். இவ்விரண்டுக்கும் இடையே பேருந்து நிலையத்திற்கு வந்து போகும் பேருந்துகளும் பயணிகளும் செல்வதற்கென ஒரு தெரு.
காலி மைதானத்தின் இரு பக்கங்களில் பெட்டிக் கடைகள் பயணிகள் கடைசி நேரத்தில் எடுத்து வர மறந்த சாமான்களை வாங்கிடுவதற்காக. அவற்றில் கிடைக்காத சாமான்களே இருக்காது என்று சொல்லாம். சோப்பு, சீப்பு, கண்ணாடி, பற்பசை, தின் பண்டங்கள் இத்தியாதி.
பெட்டிக் கடை பார்த்ததுண்டா நீங்கள்?
பெட்டிக் கடைகள் என்பவை நான்கு கால்களின் மேல், சுமார் இரண்டரை அடி உயரத்தில் அமர்ந்திருக்கும் மரப் பலகைகளால் ஆன சிறு கடை. தகரத்தால் ஆன கூரை. கடையின் முன் புறம் மேல் நோக்கித் திறந்திடும் முழு அகலக் கதவு. பெட்டிக் கடையின் கால்கள் முன் புறமும், இரு பக்கங்களும் மரப் பலகையால் மூடப் பட்டிருக்கும். பின் புறம் ஒரு ஆள் தவழ்ந்து உள்ளே நுழைந்திடும் அளவிற்கு ஒரு நுழை வாயில் கதவு. சில கடைகளில் இந்த இடத்தில் ஒரு சாக்குத் துணி தொங்கிக் கொண்டிருக்கும்.
திறந்த வெளியில் ஒரு கட்டில். கட்டிலைச் சுற்றி இங்கும் அங்குமாக உதிரிக் கற்களால் ஆன விறகடுப்புகள். அந்த அடுப்புகளின் அருகில் சில சட்டிப் பானைகளும், குப்பைத் தொட்டியில் இருந்து பொறுக்கி வந்தது போன்ற அலுமினியத் தட்டுகளும். கட்டிலில் ஒரு நாற்பது வயது மதிக்கத் தக்க ஆண். முகத்தில் க்ஷவரம் செய்யப் படாத தாடி மீசை. எண்ணை கண்டு பல மாதங்கள் ஆன பரட்டைத் தலை. அவர் பிறரை அடக்கி ஆள்வதைப் பார்த்தால் அவர் தான் அந்த இடத்தின் உரிமையாளரோ என்னும் அளவிற்கு நம் மனதில் சந்தேகம் எழும்.
இந்தச் சூழலில் தான் அரங்கேறுகிறது நம் பொம்மலாட்டக் கதை.
ஒரு நாள் கையில் கைத் தடியுடன் வந்த இரு போலீஸ் காரர்கள் அங்கிருந்த சட்டிப் பானைகளை உடைக்க ஆரம்பித்தனர். அங்கிருந்தவர்களில் சிலர் ஓடி மறைந்தனர். அங்கே நின்று வேடிகை பார்த்துக் கொண்டிருந்த இரு பெண்களை மட்டும் தங்களோடு எஸ்ப்ளனேட் காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றனர்.
தன் கடமைகளை ஆற்றுவதில் தான் எத்தனை ஈடுபாடு அந்த காவல் காரர்களுக்கு! சட்டத்துக்குப் புறம்பாக சர்க்கார் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தான் எத்தனை கவனம்!
மதிய சிற்றுண்டி அருந்துவதற்காக ‘அம்பீஸ் கபே’ நோக்கி நடந்து கொண்டிருந்த நான் தற்செயலாக எஸ்ப்ளனேட் காவல் நிலையப் பக்கம் என் பார்வையைத் திருப்பினேன். அங்கு வராந்தாவில் அந்த இரு பெண்கள். உள்ளே ஆய்வாளரிடம் பேசிக் கொண்டிருந்தது பரட்டைத் தலை. சிற்றுண்டி முடித்துத் திரும்பிய போது காவல் நிலையத்தில் அந்தப் பெண்களும் இல்லை. பரட்டைத் தலையும் இல்லை.
ஒருக்கால் அவர்களை எதிரிலேயே இருந்த நீதி மன்றத்திற்கு அழைத்துச் சென்றிருப்பார்களோ? இது என் அடுத்த சந்தேகம். அதிக நேரம் நீடிக்க வில்லை அது. அலுவலகம் திரும்பிய நான் அவர்களை அவர்களது வழக்கமான இடத்தில் பார்த்தேன், கட்டிலில் பரட்டைத் தலையும், கீழே தரையில் அந்த இரு பெண்களும்.
பின் ஒரு நாள் காக்கி அரைச் நிஜாரும், பெல்ட்டும், வெள்ளை அரைக் கை சட்டையும், தலையில் நெட்டி, காக்கித் துணி இவற்றால் செய்த தொப்பியும் (hat), கையில் சிகப்புப் பட்டி போட்டுக் கட்டிய கோப்பு ஒன்றுமாக ஒரு நடுத்தர வயதுக் காரர் வந்து சேர்ந்தார் அந்த மைதானத்திற்கு. வந்தவர் நேராக பரட்டையிடம் சென்று பேசிக் கொண்டிருந்தார். அவர் முதுகுப் புறம் என் பக்கமாக இருந்தால் என்னால் ஊகிக்க முடிய வில்லை அவர்களுக்குள் என்ன பேச்சு நடந்தது என்பதை.
ஆகா பிறந்திடப் போகிறது பொன்னான விடிவுக் காலம் இந்த தெரு வாழும் ஏழைகளுக்கு. அவர்கள் வாழ்க்கை நிலை பற்றிய குறிப்புகளும், கணக்கெடுப்பும் எடுக்க வந்துவிட்டாரே இந்த அரசு அதிகாரி! இதோ அவர் தன் கையில் இருந்த கோப்பினைக் கட்டிலில் வைத்து விட்டுத் தவழ்ந்து சென்று ஒரு பெட்டிக் கடையின் கீழ் புகுந்து கொண்டிருக்கிறார்.
சில நிமிஷங்களுக்குப் பின் வெளியே வந்த அவர், அவிழ்ந்திருந்த தனது பெல்டினை சரி செய்து கொண்டு நேரே பரட்டையிடம் சென்று அவர் கையில் எதையோ திணித்தார். பின் அவர்கள் இருவரும் முதலில் மெதுவாகப் பேசிப் பின் உரத்த குரலில் கத்த ஆரம்பித்தனர்.
பரட்டை ‘அரசு ஊழியர்’ தன் கையில் திணித்த அந்தப் பொருளை அவர் மூஞ்சியிலே விட்டெறிந்து, உரத்தக் கத்தினார், “காசைத் திருப்பித் தர முடியாது. வேணுன்னா இன்னோரு வாட்டி போயிட்டு வா” என்று.
அவர்கள் இப்படி வாக்கு வாதம் செய்து கொண்டிருந்த போது பெட்டிக் கடை அடியிலிருந்து எலும்பும் தோலுமாய் ஒரு பெண் தவழ்ந்து வெளியே வந்தாள். அப்போது தான் இந்த மர மண்டைக்கு உதயமானது ‘அரசு ஊழியர்’ பெட்டிக் கடைக் கீழே சென்று என்ன குறிப் பெடுத்தார் என்பது.
வெளியில் வந்த பெண் சற்று நேரம் விடாது இருமிக் கோழை துப்பினார். அதற்கு எதிரொலி போல பரட்டையும் ஓரிரு முறை இருமி எச்சில் துப்பியது.
சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் அங்கு ஒரு இருபது இருபத்திரண்டு வயது மதிக்கத் தக்க ஒரு பெண் வந்து சேர்ந்தாள். அன்று பூராவும் அவள் கவலையோடு உட்கார்ந்திருந்தாள். நெடுந் தூரப் பயணக் களைப்பாக இருக்க வேண்டும் எனத் தோன்றியது எனக்கு.
புதிதாக வந்தவளைத் தன் அருகிலேயே கட்டிலில் அமரச் செய்தது பரட்டைத் தலை. அவளுக்கு புதிய சேலையும், அருகில் இருந்த பூக்கடையில் இருந்து தொடுத்த மல்லி, கதம்பச் சரங்களும் வாங்கி வந்து கொடுத்து அவளைச் சூடிக் கொள்ளச் செய்தது..
மறு நாளிலிருந்து புது வரவு அந்த இடத்திற்கே ராணி போலச் சுற்றி வந்து, அங்கிருந்த பெண்களோடு பேசி கொண்டு இருந்தது.
ஒரு நாள் அந்த மைதானத்தில் கும்பல். தம்பட்டம் அடித்த படி ஒருவர். அவரைச் சுற்றி குதியாட்டம் போட்டிடும் சிலர். அவர்கள் பின்னே தரையில் ஒரு பாடையில் எலும்புத் தோல் பெண், ரோஜா மாலைகள் அணிந்து.
அடுத்த நாள் ஓங்கி ஒரு அறை விட்டு, ‘ராணி’ யை பெட்டிக் கடை அடியில் புகச் செய்தது பரட்டைத் தலை. சில நொடிகளில் அதே பெட்டிக் கடையின் கீழே நுழைந்தார் ஒரு வெள்ளைக் காரர். சென்னைத் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி இருக்கும் ஒரு கப்பலின் ஊழியராக இருக்க வேண்டும் அவர்.
அப்போது தான் புரிந்து எனக்கு அவள் அவ்வப்போது இருமிக் காரி உமிழ்ந்து கொண்டிருந்த பரட்டைத் தலைக்கு சொந்தக் காரி இல்லை. சொந்தம் எனத் தன் ‘குடும்பத்துள்’ சேர்ததிட முதலீடு செய்து வாங்கி வந்து இருக்கிறார் அவர் அந்தப் புது வரவை என்பது.
சில நாட்களுக்குப் பின் மீண்டும் கும்பல் அந்த மைதானத்தில். அதே தம்பட்டம், குதியாட்டம் போடும் கும்பல். கூடவே அவ்வப்போது சங்கும், தடிமனான பித்தளைத் தட்டினைத் குச்சியால் தட்டி எழுப்பிடும் மணியோசையும்.
மைதானத்தின் நடுவே மலர்களால் அலங்கரிக்கப் பட்ட பாடையில் ரோஜா மாலைகள் அணிந்து நேற்று வரை அங்கு பொம்மலாட்டம் நடத்திய சூத்திரதாரி பரட்டைத் தலையின் சடலம்.
ஒரு நாள் நகராட்சி ஊழியர்கள் சிலர், யந்திரங்கள் உதவி கொண்டு, பெட்டிக் கடைகளை இடித்துத் தரை மட்டமாக்கினர்.
இப்படியாக முடிந்தது ஒரு பொம்மலாட்டம்.
“ஒரு நல்ல கதை எழுத வேண்டும் என்றால், படைப்பாளி அந்தக் கதையின் ஒரு பாத்திரமாகத் தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும்” என்று ரஷ்ய நாவலாசிரியர் அலெக்சாண்ட்ரே குப்ரின் என்பவர் எழுதிய “யாமா தி ஹெல் ஹோல்” என்ற கதையின் முன்னுரையில் படித்திருக்கிறேன்.
“பொம்மலாட்டம்” நல்ல கதையோ இல்லையோ தெரியாது எனக்கு. ஆனால் தெரிந்த ஒன்று நான் இக் கதையில் ஒரு பாத்திரம் இல்லை. பார்வையாளனே என்பது.
மூன்றாவது மாடியில் இருந்த என் அலுவலக அறையின் ‘பால்கனி’ ஒன்றில் இருந்து அலுவலகப் பணி ஆரம்பிக்கும் முன்னும், உணவு இடை வேளையிலும் காற்று வாங்கிட நின்ற போது பார்த்தவற்றைத் தான் இங்கு அளித்திருக்கிறேன்
(பொம்மலாட்டம் படம் இணையத்தில் இருந்து)
கட்டுரை ஆக்கம்: திரு நடராஜன் கல்பட்டு
Natrajan Kalpattu Narasimhan knn1929@gmail.com
No comments:
Post a Comment