Wednesday, May 28, 2014

தமிழ்நாட்டில் சமூக மூச்சுத் திணறலின் முடிவும், திறந்த காற்றோட்டமும்


                ( The end of the social suffocation in Tamilnadu & Free Ventilation)

                                            -செ.அ.வீரபாண்டியன் –



நல்ல ஆரோக்கியமான மனித  வாழ்வுக்கு, திறந்த காற்றோட்டமான இடத்தில் (Free Ventilation)  வாழ்வது அவசியமாகும். அதே போல் நல்ல ஆரோக்கியமான மனதுடன் வாழ்வதற்கு, தாம் வாழுமிடம்,பணியாற்றுமிடம், பங்கேற்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தமக்கான சமூக வெளியில் (social space) சமூக சுவாசத்திற்கான  (social breathing)  'திறந்த காற்றோட்டமும்' அவசியமாகும்.

சமூக சுவாசத்திற்கான  (social breathing)  'திறந்த காற்றோட்டம் இருக்கும் பொழுது தான், நமது மனதுக்கு சரி என்று பட்டதையும், தவறு என்று பட்டதையும் தடையின்றி வெளிப்படுத்த முடியும். நம்மிடம் உள்ள தவறுகளைப் பிறர் சுட்டிக் காட்ட முன் வருவார்கள். நாமும் அதை பரிசிலித்து, சரியெனில் நம்மை திருத்திக் கொள்ள முடியும். ஒருவர் துயரப்படும் போது, லாப நட்ட நோக்கமின்றி அடுத்தவர் உதவ முடியும்.  உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions) நாம் வாழவும்,உண்மையான அன்புடன் நம்மை சுற்றியுள்ளவர்களையும், இயற்கையையும் நேசித்து வாழவும் முடியும்.

 வளர்கின்ற குழந்தையிடம் உள்ள திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கவும், தமது வளர்ச்சிப் போக்கில் தமக்கான உள்ளார்ந்த ஈடுபாடுகளை (Passions) அக்குழந்தை அடையாளம் கண்டு பேணவும்,  அக்குழந்தையின் பெற்றோர்களும், வளரும் சூழலும் நல்ல சமூக சுவாசமுள்ளதாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள வித்தியாசமான மூச்சுத்திணறல் வகைகளில் ஒன்று வருமாறு:

தமிழ்நாட்டில்  ஒருவர் தனது குடும்பம்,நட்பு  சமூக வட்டத்தில் இன்னொருவருடன் இயல்பாக உரையாடுவது பெரும்பாலும் முடியாத காரியமாகி வருகிறது. தம்மை விட செல்வம் செல்வாக்கில் மேலான நபர் எனில், அவரிடம் குழைந்து, வாலாட்டி காரியம் சாதிக்கும் நோக்கில் பழகுவது; கீழான நபர் எனில் ஒதுக்குவது: சம அளவில் உள்ள நபர் எனில் இயன்ற அளவுக்கு தம்மை விட கீழ் என மட்டம் தட்டுவதிலேயே குறியாக இருப்பது;

மேலேக் குறிப்பிட்ட மூன்று வகைகளில் ஒரு நபர் நம்மிடம் எந்த வகையில் பழகினாலும், அது ஒரு இயல்பான மனிதர் பழகுவதாக இல்லாமல் செயற்கையாகத் தானே இருக்கும். நமது சமூக வட்டத்தில் பெரும்பாலோர் அப்படியே பழகுவது அதிகரித்து வருமானால், மனித இயல்போடு வாழ விரும்புபவர்களுக்கு மூச்சுத் திணறல் வராதா?

சமூகத்தில் குழந்தைகள் வளரும்போதே, மேலேக் குறிப்பிட்டவாறு வாழும் தமது பெற்றோர்களையும், மற்ற பெரியவர்களையும் முன்மாதிரிகளாகக் கொண்டு, மேலேக் குறிப்பிட்ட மூன்று வகைகளிலேயே மற்ற குழந்தைகளுடன் பழகி வளர்வது சமூகத்தில் மூச்சுத் திணறல் மேலும் அதிகரிக்க வழி வகுக்காதா?

சிகிரெட், கஞ்சாவைப் போல் போதையாக சமூக மூச்சுத்திணறலை 'அனுபவிக்க' தொடங்கியவர்கள், அதிலும் அவ்வாழ்க்கை அவர்களுக்கு கட்டுபாடற்ற புலனின்பம்,வருமானம் போன்றவற்றிற்கும் வழிகளாக அமைந்து விட்டால், அதே 'போதையிலேயே' மற்றவர்களை 'முட்டாள்களாக'க் கருதி வாழ்ந்து மறைவார்கள்.

திறந்த மனதுடன் அறிவுபூர்வமாக விவாதம் நடப்பதற்கே வழியில்லாதவாறு உணர்வுபூர்வ போதையில் நமது சமூக வட்டத்தில் உள்ளவர்கள் அதிகரித்து வரும்போது, நமக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரிப்பதை தடுக்க முடியுமா?

தமது கருத்துக்கு ஆதரவு தருவோரே 'உண்மையான தமிழர்' என்றும், அதை மறுப்போர் 'தமிழ்த் துரோகி' என்றும், 'கடவுள் படைத்த' நீதிபதிகளைப் போல் 'பாராட்டும், தண்டனையும்' வழங்கும் போக்கு உள்ள நபர்களிடம் இயல்பாக உரையாடமுடியுமா? அத்தகையோர் நமது சமூக வட்டத்தில் அதிகரிக்கும் போது, நமக்கு சமூக மூச்சுத் திணறல் அதிகரிக்காதா?

அதிலும் ஆழ்ந்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அறிவுபூர்வமாக வெளிப்படுத்தும் கருத்து, தமிழ்நாட்டில் மிகவும் செல்வாக்கான நபர் யாருடைய கருத்தும்/'சாதனையும்' தவறு என்ற முடிவுக்கு இட்டுச் செல்லுமானால், அது நாம் உயிர்வாழ்வதற்கு கூட சிக்கலை ஏற்படுத்தும் அபாயம் தமிழ்நாட்டில் உள்ளது. அந்த அளவுக்கு சமூக மூச்சுத் திணறல் அதிகரித்துள்ளது. இத்தகைய சமூக மூச்சுத்திணறல் போக்கும், தமிழ்நாடு தமிழ் அறிவுப் பாலைவனமாகும் (intellectual desert) போக்கும்   ஒன்றையொன்று வளர்க்கும் அபாயமும் உண்டு.

எனவே தான் தமிழ்நாட்டில் பெரும்பாலும் எழுத்தாளர்களும், பேச்சாளர்களும், 'உணர்வு பூர்வ அலையில்' உள்ள பிரச்சினைகளில் ஒன்று ஆதரித்து, அல்லது 'மெள்னம்' சாதித்து தப்பித்துக் கொள்கிறார்கள். அல்லது வலிமைமிக்க கட்சிகளின்/தலைவர்களின் 'பின்பலத்தில்' தமது பிழைப்புப் போக்கில் அதை எதிர்ப்பது போல் காட்டிக் கொள்வார்கள். புதுமைப் பித்தனைப் போல்,  எந்த பின்புலமும்/பலமும் இன்றி துணிச்சலாக  நிகழ்கால  'உணர்வுபூர்வ' பிரச்சினைகளில் தமது கருத்தை வெளிப்படுத்தும் எழுத்தாளர் இன்று இருப்பது அபூர்வமே.

மூச்சுத் திணறலை உணரத் தொடங்குவதே ஆரோக்கியமான சமூக வாழ்வு வாழ்வதற்கான அறிகுறியாகும்.அவர்கள் எல்லாம் மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் சமூக வெளியிலிருந்து(social space)  விலகி, திறந்த காற்றோட்ட சமூக வெளி நோக்கி தமது வாழ்வில் மாற்றங்கள் செய்வதும் இயல்பே ஆகும்.  அதன் விளைவாக‌ தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல் அதிசயமாக  சமூக மூச்சுத் திணறலுக்கு எதிரான திறந்த காற்றோட்ட ஜன்னல்கள் ஒவ்வொன்றாக திறந்து வருகின்றன.

'உணர்வு பூர்வ, ஆதாயபூர்வ' அடிப்படைகளில் செயல்படும் நபர்களையும், கட்சிகளையும் அவர்களை அண்டி வாழ வேண்டிய அவசியம் இல்லாத பொது மக்கள் அவர்களை விட்டு விலகி வருகிறார்கள். தமிழ்நாட்டில் அத்தகைய அமைப்புகள் நடத்தி வந்த இலக்கிய/மற்ற கூட்டங்களின்/அறைக் கூட்டங்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் பெருமளவு குறைந்து விட்டது. தப்பித்தவறி நடக்கும் கூட்டங்களும், திருமணங்கள் போல் 'சமூக சந்திப்பு' வாய்ப்புகளாகவே நடைபெறுகின்றன. உணர்வு பூர்வ போதையில் பயணிக்கும் தங்களுக்கான சமூக வெளி குறைந்து வரும் போக்கை பற்றிய அறிவும், விவாதமும் ‘இத்தகைய சமூக சந்திப்பு’களில் நடைபெறுவதாக தெரியவில்லை. அதற்கு மாறாக தமிழ்நாட்டில் 'தமிழுணர்வு’  குறைந்து விட்டதாக, பொது மக்களை குறை சொலவது அதிகரித்து வருகிறது.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக இவர்களின் 'வாடையே'(மூச்சுத்திணற‌லே) இல்லாமல் உள்ளர்ந்த ஈடுபாடுகளுடன் வாழ்ந்து, சாதனைகள் படைத்து வருபவர்கள் வளர்ந்து வருகிறார்கள். 'விளம்பரமின்றி' உதவுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  லாப நட்ட நோக்கமற்ற உண்மையான அன்புடன் வாழ்பவர்களுக்கு, அவர்களது சமூக வட்டத்தில் 'முட்டாள்'கள் என்று கருதுவது மாறி, வியந்து மதிப்பதும் அதிகரித்து வருகிறது. தடையற்ற கருத்து பரிமாற்ற ஜன்னல்களுக்கான வாய்ப்புகள் இணையத்தில் அதிகரித்து வருகின்றன.

வெறுப்பு , கோபம்,  பழி வாங்கல் போன்ற எதிர் உணர்வுகளுக்கு (negative feelings) அடிமையாகி வாழ்பவர்கள் உடல் நோய்களுக்கும், மன நோய்களுக்கும் பலியாவதைத் தடுக்க முடியாது என்பது தொடர்பான மருத்துவ ஆய்வு முடிவுகள் அதிகரித்து வரும் காலம் இது. லாப நட்ட நோக்கமற்ற அன்பு, சக மனிதர்களையும் இயற்கையையும் நேசித்து வாழும் உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (passions)  கூடிய,  நேர் உணர்வுகள்(positive feelings)  மிகுந்து வாழும் வாழ்வு உடல் நலனையும், மன நலனையும் வளர்க்கும் என்பது தொடர்பான மருத்துவ ஆய்வு முடிவுகள் அதிகரித்து வரும் காலமும் இது.

இவ்வாறு சமூக மூச்சுத் திணறலுக்கு எதிரான திறந்த காற்றோட்ட ஜன்னல்கள் ஒவ்வொன்றாக திறந்து வருகின்றன.  மூச்சுத் திணறல் ஏற்படுத்தி வந்த 'சமுக நோய்த் துகள்களும்' , அவற்றைப் பாதுகாத்து வரும் அமைப்புகளும் காணாமல் போகும் காலம் தொலைவில் இல்லை.



கட்டுரை ஆசிரியர்: செ.அ.வீரபாண்டியன் (pannpandi@yahoo.co.in)
http://musicdrvee.blogspot.in/                        
http://musictholkappiam.blogspot.in/

No comments:

Post a Comment