எழுதியவர்:
கீதா சாம்பசிவம்
இந்தப் படம் ஏற்கெனவே போட்டுட்டேன். திரு இன்னம்புரார் வீட்டுச் சந்திப்பில் கலந்து கொண்டபோது அரிசி உப்புமா பண்ணி எடுத்துச் சென்றேன். அப்போ இந்தப் பெரிய உருளியில் செய்தேன். இதில் செய்தால் எத்தனை மணி நேரம் வைத்திருந்தாலும் களிம்பு ஏறிக் கைத்துப் போகாது. கைக்காத வெண்கலம் என்றே சொல்வோம் இதை. இவை அதிகமாய்க் கிடைக்குமிடம் முன்னெல்லாம் நாகர்கோயில். நாகர்கோயில் வெண்கலம் என்றும் சொல்வார்கள். என்னுடைய வெண்கலப் பானை, வெண்கல உருளி எல்லாமும் நாகர் கோவில் வெண்கலம் தான்.
படத்தில் முன்னால் தெரிவது பித்தளைத் தாம்பாளம். ஒரு லிட்டர் தண்ணீர் கொள்ளுமளவுக்கு ஆழமானது. இதில் சாப்பாடுகள் வைக்க முடியாது. பூஜை, தர்ப்பணம் இன்ன பிறவற்றிற்குப் பயன்படுத்துகிறோம். பின்னால் தெரியும் வெண்கலப்பானை கால்படி வெண்கலப்பானை என்று பெயர். ஆனால் நல்ல அரிசி என்றால் கால்படி போட முடியாது. கால்படி என்பது மெட்ராஸ் வழக்கில் இரண்டு ஆழாக்கு ( 400) கொள்ளளவு. தென்மாவட்ட வழக்கில் இரண்டு அரைக்கால்படி உழக்கால் போட்டால் கால்படி. அதே (400) கொள்ளளவு. சொல்வது தான் மாறுபடும். பக்கத்தில் உள்ளது சின்ன உருளி. இதுவும் வெண்கலம் தான். இதிலும் உப்புமா, பொங்கல் போன்றவை செய்யலாம். குழம்பு வைக்கலாம். மேலுள்ளதிலும் குழம்பு வைக்கலாம். இனிப்புகள் செய்ய சர்க்கரைப் பாகு வைத்துக் கிளறலாம். அடிப்பிடிக்கும் பயம் இல்லாமல் கிளற முடியும். மேலுள்ள உருளியில் தான் முதல் முதல் கோதுமை அல்வாவும், மைசூர்ப்பாகும் செய்யக் கற்றுக் கொண்டேன்.
மாக்கல் சட்டி இது. கல்சட்டி சமையல் என்றாலே தனி ருசி தான். இன்று கூட முருங்கைக்காய்க் குழம்பு இதில் தான் செய்தேன். கீரை மசிப்பதெனில் கல்சட்டி தான். ஊறுகாய்கள், உப்பு, புளி, மாவடு போட்டு வைக்கலாம். இதைவிடப் பெரிய கல்சட்டி எல்லாம் எங்க வீட்டில் இருந்தன. என்னைக் கேட்காமலேயே எல்லாத்தையும் கொடுத்துட்டாங்க. இது நான் ரொம்ப ஆசைப்பட்டுக் கும்பகோணத்தில் வாங்கினது. வாங்கினதும் எண்ணெயில் மஞ்சள் பொடியைக் குழைத்துக் கல்சட்டியில் தடவி ஊற வைக்க வேண்டும். பின்னர் இரண்டு, மூன்று நாட்களுக்கு அரிசி கழுவிய கழுநீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும். அதன் பின் சமைக்கத் தொடங்கலாம். அடுப்பில் போட்டு அடியில் தாளிதம் செய்து குழம்பு வைக்கலாம். புளிக்காய்ச்சல், மிளகு குழம்பு, மாங்கொட்டைக் குழம்பு போன்றவை செய்யலாம். ருசியில் நிச்சயம் மாறுபாடு இருக்கும். அதுவும் குமுட்டி அடுப்பில் கல்சட்டி போட்டுச் செய்தால் அந்த ருசி தனி.
இடப்பக்கம் தெரியும் சின்ன ஜாடி உப்பு ஜாடி. கல்யாணம் ஆகிக் குடித்தனம் வந்தப்போ ரங்கநாதன் தெரு பழைய ரத்னா ஸ்டோரிலே வாங்கியவை இவை. இதிலே ஒன்று உடைந்து விட்டது. மூடி இருந்தது. அதை எங்க பையர் விளையாடி உடைத்தார். நடுவில் நீலக்கலரில் இருப்பது அமெரிக்காவில் எங்க பெண் என் ஜாடிப் பைத்தியத்தைப் பார்த்துட்டு வாங்கிக் கொடுத்தாள். சின்னதில் இருந்து பெரிசு வரைக்கும் கிட்டத்தட்ட ஏழோ என்னமோ. ஶ்ரீரங்கம் வருகையில் அங்கே உறவினருக்கு இரண்டைக் கொடுத்துவிட்டேன். இப்போ இதில் புளி போட்டு வைக்கிறேன். அன்றாடத் தேவைக்கான புளி இதில் இருக்கும். அடுத்து இருக்கும் உயரமான ஜாடி ராஜஸ்தானில் ஊறுகாய்க்கு என வாங்கினது. அதுவும் பல வருடங்கள், பல ஊர்கள் கண்டுவிட்டது. இப்போ மொத்தப் புளியையும் அதில் அடைத்து வைக்கிறேன்.
மாவடு போட்டு வைக்கவென சென்னை ஈவ்னிங் பஜார் கண்ணாடிக்கடையில் வாங்கிய பாட்டில் இது. இன்னொன்றும் உண்டு. அதில் போன வருஷத்து மாவடு இருக்கிறது. இதில் இந்த வருஷத்து மாவடு. ஊறுகாய்களைக்குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் வழக்கம் இல்லை. மாசக்கணக்கா இருந்தாலும் வெளியேயே வைக்கிறேன். சரியான உப்பு, காரம், எண்ணெய், கடுகுப்பொடி போன்றவை போட்டுவிட்டால் பல வருஷங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது. போன வருஷத்து ஆவக்காய் மிஞ்சி விட்டால் இந்த வருஷம் அதில் வெல்லத்தைப் பாகு வைத்துக் காய்ச்சி ஆற வைத்துச் சேர்த்து ஜீரகப் பொடியைப் போட்டு வைப்பேன். சப்பாத்திக்கு, பரோட்டாவுக்குத் தொட்டுக்க சைட் டிஷோடு இதுவும் துணையாக இருக்கும். நாளாக ஆக வெல்லத்தில் ஊறி இனிப்பு, புளிப்பு, காரம் சேர்ந்த கலவையாக சுவை தூக்கி அடிக்கும். இப்போ ரங்க்ஸுக்கு இனிப்புச் சேர்க்கக் கூடாது என்பதால் அந்தத் திப்பிச வேலை எல்லாம் பண்ணமுடியலை. குமுட்டி அடுப்பு இன்னொரு நாள் போடுகிறேன்.
இன்னும் ஈயச் செம்பு இருக்கிறது. அதில் தான் தினம் ரசம் வைக்கிறேன். வரும் விருந்தினருக்குத் தக்கவாறு ரசம் வைக்க வித்தியாசமான அளவுகளில் ஈயச் செம்பு, ஈய அடுக்கு இருக்கின்றன. அவற்றைப் பின்னர் பகிர்கிறேன். வெளியே சின்ன ஈய அடுக்குத் தான் நாலு பேருக்கு ரசம் வைக்கும் அடுக்குத் தான் இருக்கு. அதைப் படம் எடுக்க மறந்துட்டேன்.
ராஜலக்ஷ்மி உப்பை ஜாடியில் போட்டு வைக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஒரு பதிவு எழுதி இருந்தார். அதன் பின்னூட்டங்களில் பாரம்பரியப் பாத்திரங்கள் குறித்த பேச்சு வர அதைத் தொடர்ந்து நான் தினமும் புழங்கும் சில பாரம்பரியப் பாத்திரங்கள் இங்கே படங்களில். இப்போதைய நான் ஸ்டிக் உலகில் இவற்றின் பெயர் தெரிந்தவர் மிகக் கொஞ்சமாகவே இருப்பார்கள். இன்னும் பெரிய திருச்சூர் உருளியும் இருக்கிறது. அதை எல்லாம் தினமும் புழங்க முடியாதென்பதால் பெட்டியில் இருக்கு. வெளியே எடுத்தால் படம் எடுத்துப் போடறேன்.
No comments:
Post a Comment