Saturday, August 8, 2020

நாட்டுப்புறப் பாடல்களில் வாழ்வியல் மற்றும் கல்வி

நாட்டுப்புறப் பாடல்களில் வாழ்வியல் மற்றும் கல்வி 

தேமொழி 


நாட்டுப்புற வாழ்வியல் ஆய்வாளர்கள் தங்களது களப்பணி மூலம்  நாட்டுப்புறப் பாடல்களையும் அது குறித்த தகவல்களையும் முதன்மைநிலை ஆய்வுத் தரவுகளாகத் தேடித்  தொகுத்துப் பதிப்பித்த நூல்களின்  பாடல்களை,  இரண்டாம் நிலை தரவு மூலகங்களாகக்  கொண்டு  (that is, secondary data analysis in social studies) ஆராயும் முயற்சி இது.  தாங்கள் பதில் காண விரும்பும் நாட்டுப்புறவியல் வாழ்வியல் குறித்த கேள்விகளுக்கு இவ்வகையில் அடுத்து வரும் ஆய்வாளர்கள் எவ்வாறு பதில் காண முயல்கிறார்கள் என்பதன் ஓர் எடுத்துக்காட்டு என்றும் கொள்ளலாம். அதாவது இரண்டாம் நிலை தரவு மூலகங்களின் வழியே ஆய்வுக் கோணத்தில்  மக்கள் இலக்கியத்தை அணுகும் ஓர் ஆய்வாளரின் ஆய்வுக்  கோணம் இது எனலாம். 

நாட்டுப்புறப்  பாடல் தொகுப்புகள்: 
அயல்நாடுகளில் நாட்டுப்புறப்  பாடல் வழி சராசரி மக்களின் வாழ்க்கை வரலாறு அறியும் முயற்சி ஒரு ஆய்வுப் புலமாக முதலில் துவங்குகிறது. தொடர்ந்து  பாடல்களின் தொகுப்பாக அச்சு நூல்  முயற்சி துவங்குகிறது. அதுவரை வரலாற்றிலும் ஆய்விலும் சாதாரண மக்களின் வாழ்க்கை வரலாறு முக்கியத்துவம் பெறாமலே இருந்து வந்திருக்கிறது.  1871 ஆம் ஆண்டில் 'The Folk-songs of Southern India' என்ற தலைப்பில்  Charles E. Gover  வெளியிட்ட நூலே தமிழக நாட்டுப்புற இலக்கியங்களின் துவக்கமாக அமைகிறது. முதன் முதல் தமிழில் அச்சு நூலாக  'காற்றிலே மிதந்த கவிதை' என்னும் தலைப்பில் நாட்டுப்புறப்பாடல்கள் தொகுப்பு முயற்சி 1943ல் மு. அருணாசலம் அவர்களால் எடுக்கப்படுகிறது. இவரே நாட்டுப்புறப் பாடல் தொகுப்பின் முன்னோடியாக அறியப்படுகிறார். இந்த நூல்  முதற்கொண்டு தொடர்ந்து  இன்றுவரை 100க்கும் மேற்பட்ட நாட்டுப்புறப் பாடல்  தொகுப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் சுமார் 20% இலங்கையின் நாட்டுப்புறப் பாடல்  நூல்கள். 

தேவையால் தோன்றுவது நாட்டுப் புறப் பாடல்கள் என்பதால் அவை சூழ்நிலைப் பாடல்களாக அமைகிறது. அந்தத் தேவை வாழ்வியலில் மறைந்தவுடன் அத்தகைய பாடல்களும் வழக்கொழிந்து விடுவதே இயல்பு.  இயந்திரமயமாக்கலுக்கு முன்னர் மக்கள் வாழ்வில் பின்னிப்பிணைந்திருந்த ஏற்றம் இறைத்தல், நெல் குத்துதல், சுண்ணாம்பு இடித்தல் போன்ற பல தொழில்சார்ந்த பாடல்கள் அந்த வகையில் அடங்குகிறது. வாய்மொழி இலக்கியங்களான நாட்டுப்புறப் பாடல்கள் யாவும்  அந்தந்த காலகட்டத்தின் பதிவு. வாழ்வியல் மற்றும் உணர்வுகளின் பதிவு.  பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு  வாழ்க்கை வட்டச் சடங்குகளிலும் பாடல்கள் பாடப்பட்டு வந்துள்ளமையைக் காணமுடிகிறது.  குழந்தைக்கான தாலாட்டு, விளையாட்டு, பூப்புச்சடங்கு, திருமணம், இறப்பு என வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் மக்கள் பாடல்கள் பாடி வந்துள்ளனர். நமக்கு நாமே பாடிக் கொள்ள முடியாத இரு பாடல்களில் ஒன்று பிறந்தவுடன் பாடப்படும் தாலாட்டு  பாடலும், மற்றொன்று இறந்த பின்னர் பாடப்படும் ஒப்பாரிப் பாடல்களுமே.  அவற்றை வேறு யாராவதுதான் நமக்காகப் பாட வேண்டியிருக்கும்.  

நாட்டுப்புறப் பாடல்கள் என்றால் அவற்றுக்கு என்று குறிப்பிட்ட சில பண்புகளும் உண்டு. இப்பாடல்கள் எளிமை  மற்றும் இனிமையான பாடல் வரிகளைக் கொண்டிருப்பது,  பாடல் வரிகளும் வாய்மொழி வழியாக எழுதாப் பாடல்களாகப் பாடல் பாடப்படும் அந்த வட்டாரத்தின் பேச்சு வழக்கில் அமைந்திருப்பது,  சூழ்நிலை தரும் மன உணர்வு பாடலின் கருத்தாக இருப்பது,  பாடல் எழுதியவர் யார் என்று அறிய முடியாமல் இருப்பது, பாடலிலும்  காலத்திற்கேற்ப இடத்திற்கேற்ப வரிகள் மாறும் தன்மை கொண்டதாக இருப்பது,  அவ்வாறு வரிகளை மாற்றியமைத்தவரும் யார் என்றும் தெரியாமல் இருப்பது,  தென்காஞ்சியாக மனம் போன வகையில் பாடுவது (அதாவது தென்பாங்காகப்  பாடுவது) என்ற பண்புக்  கூறுகளைக் கொண்டவை நாட்டுப்புறப் பாடல்கள்.

தொல்காப்பியம் கூறும்  பண்ணத்தி என்பது நாட்டுப்புறப்  பாடல்கள்தான் என்பது இத்துறை சார்ந்த ஆய்வாளர் பலரின் முடிவு.  இலக்கியங்களில்  சிற்றிலக்கியப்  பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கத்தில் அமைந்தவை என்பவர் ஆய்வாளர்கள்.  பாரதி பாடல்களிலும் நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கம் உண்டு.  இன்று திரையிசையிலும்  அதன் தாக்கம் தொடர்கிறது.  வெறியாடல், ஆலோலப் பாடல், குறவஞ்சி, குரவை, வேட்டுவ வரி, பள்ளு பாடல், ஏற்றம், நடவு, குலவை, தாலாட்டு, ஒப்பாரி பாடல் வடிவங்கள்  நாட்டுப்புறப்  பாடல்களின் கூறுகள் என நாம் அறிவோம்.  வாழ்க்கையின் சாதாரண சம்பவங்களான பிறப்பு, குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், காதல், பொருந்தா மணம், குடும்ப விவகாரங்கள், கிராமத் தொழில்கள், பஞ்சம், கிராம தேவதைகள் முதலியனவே பெரும்பாலான பாடல்களின் கருத்தாக இடம் பிடிப்பன. பாமரர் இலக்கியமாகிய நாட்டுப் பாடல்கள் கிராமப்புற வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புள்ளவை.  நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் (ஐவர் ராஜாக்கள் கதை, பஞ்சபாண்டவர், மதுரை வீரன், ராஜா தேசிங்கு, காத்தவராயன், முத்துப்பட்டன், மதுரைவீரன் போன்ற கதைப்பாடல்கள்) தவிர ஏனைய மற்றப் பாடல்கள் நாட்டுப்புற வாழ்க்கையின் அன்றாட சம்பவங்களையே பொருளாகக் கொண்டவை.  இருப்பினும்; இயல் இசை நாடகம் என்ற முத்தமிழ் படைப்புகளின் வழியாக  நாம் கடந்தகால மக்களின் வாழ்க்கைமுறையை அறியும் பொருட்டு ஆராயும் பொழுது, பெரும்பாலான நேரங்களில் நாடோடிப் பாடல்கள் குறிப்பதை, அந்த எளிய பாடல்கள் படம் பிடித்துக் காட்டும் மக்களின் வாழ்க்கைமுறைக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து அறிந்து கொள்ளத் தவறி விடுகிறோம் என்பதுதான் உண்மை. 

நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி எண்ணும் பெரும்பாலோர், இவை சாதாரண  கிராமியப்பாடல்கள்  அல்லது நாடோடிப்பாடல்கள்,  இதற்கு மேல் இவற்றில் என்ன இருக்கப் போகிறது  என்று  நினைக்கலாம். ஆனால் இதனையே மானுடவியலாளர் (anthropologist) ஒருவர், “இலக்கியம் ஒரு காலத்தின் கண்ணாடி” என்று அறிந்தவர் நோக்கும் கோணம் வேறொன்றாக இருக்கும்.

தமிழக நாட்டார் வழக்காற்றியலைப் பற்றி நாட்டுப்பாடல்கள் மூலம் அறிந்து கொள்ள விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டிய நூல்கள் இரண்டு. ஒன்று திரு. பெர்சி மெக்குவீன் (Percy Macqueen) அவர்கள் சேகரித்த பாடல்களை கி. வா. ஜகந்நாதன் அவர்கள் தொகுத்து வெளியிட்ட “மலையருவி” என்ற நூல்.  இது தஞ்சை சரஸ்வதி மகால் வெளியீடாக 1958 ஆம் ஆண்டு வெளிவந்தது.  இலக்கிய நயத்துடன் உள்ள பாடல்களைத் தெரிவு செய்து, நாடோடிப்பாடல்கள் பற்றிய சிறந்த ஒரு அறிமுக முன்னுரையையும் வழங்கியுள்ளார் ஆசிரியர். மற்றொரு சிறந்த நூலாகக் கருதப்படுவது, தமிழக நாட்டார் வழக்காற்றியல் துறை அறிஞர் பேராசிரியர் திரு. நா. வானமாமலை அவர்கள் 1964 ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘தமிழர் நாட்டுப் பாடல்கள்’ என்ற நூல்.  இந்த நூலின் தனிச் சிறப்பு என்னவெனில்  நாட்டார் பாடல்களைச் சமுதாயக் கண்ணோட்டத்தோடு அணுகும் முறையை வானமாமலை அவர்கள் அறிமுகப்படுத்திய முறை.  தமிழக நாட்டார் வழக்காற்றியல் துறையில் இந்நூலின் வரவு ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்றால் மிகையாகாது. பாமர மக்களின் ஆன்மாவையே நமக்குப் படம் பிடித்துக் காட்டுவதாகப் பாராட்டப்பட்ட இந்நூலின் வழிகாட்டுதலின் பேரில் பல நாட்டார் வழக்காற்றியல் துறை ஆராய்ச்சிகள் வெளிவந்தன. பல ஆய்வறிஞர்களைச் சமுதாயக் கண்ணோட்டத்தோடு நாட்டுப்பாடல்களை அணுகும் இந்த முறை ஈர்த்தது என நூலின் முன்னுரையும் அறிவிக்கிறது.

பொதுவாக நாட்டுப்பாடல் என்பது வாய்மொழிப் பாடல்கள் மட்டுமே, அவை இதுவரை எழுதப்படாத பாடல்கள், எழுதியவர் யாரென்றே அறிய வழியில்லாது தொன்று தொட்டு வழங்கி வரும் பாடல்களையே தூய நாட்டார் பாடல்கள் என்றும், அவையே சிறந்த நாட்டார் கலை இலக்கியம் என்ற எண்ணமும் வழக்கில் உள்ளது. “நாட்டுப் பாடலின் பொதுத் தன்மை என்பது அதை உருவாக்கியதில் இல்லை, அப்பாடல் பரவுதலில் தான் இருக்கிறது” என்று Folk Song in England என்ற நூலின் ஆசிரியர் லாயிட் (A. L. Lloyd, 1908-82) கூறுவதாகக் குறிப்பிடுகிறார் பேராசிரியர் திரு. நா. வானமாமலை. நாட்டுப் பாடல் என்றாலே வாய்மொழிப் பரவல் என்ற நம்பிக்கை தவறாக ஏற்பட்டுவிட்டது, அத்துடன் எழுதியவர் பெயர் தெரிவதால் மட்டும் அது நாட்டுப் பாடல் தன்மையை இழந்து விடாது. அசல் நாட்டுப் பாடல் என்பது நாட்டாரின் பண்பாட்டு மதிப்புகளுக்கேற்ப எழுதி, அது பரவுமானால் அதுவும் நாட்டுப் பாடலேயாகும் என்று பேராசிரியர் வானமாமலை விளக்குகிறார். இதனைத் தவிர்த்து, வாய்மொழிப் பாடல், எழுதப்படாத பாடல், தூய நாட்டார் பாடல் என்ற விதிமுறைகளை முன்னிறுத்துவதெல்லாம் நாட்டுப் பாடலின் உருவாக்குதலையும், பரவுதலையும் பற்றிய அறியாமையால் எழுவது என்றும்;  எழுத்தில் பரவும் முறை வாய்மொழிப் பரவலைவிட விரிவானது என்றும் குறிப்பிடுகிறார் வானமாமலை.

மேலும், எழுத்தில் பரவும் நாட்டார் பண்பாட்டுப் படைப்புகள் எல்லாம் மீண்டும் உயிர் பெற்று வழங்கும் என்பதை எதிர்பார்க்க இயலாது, வாழுகிற மரபு என்பது எந்நாளும் வாழுகிற மரபும் அல்ல என்று குறிப்பிடும் அவர், சமூகப் பண்பாட்டு மாறுதல் ஏற்படும் வரை எந்த ஒரு மரபும் வாழும் பிறகு சிறுகத் தேய்ந்து புதிதாக உள்ள பண்பாட்டுப் படைப்புகளோடு சேர்ந்து புத்துருவம் கொள்ளும் என்று அதன் பரிணாம வளர்ச்சியையும் விளக்குகிறார். அவர் குறிப்பிடும் பண்புகளைக் கொண்டு ஒப்பிட்டால், அதாவது; அசல் நாட்டுப் பாடல் என்பது நாட்டாரின் பண்பாட்டு மதிப்புகளுக்கேற்ப நாட்டார் வழக்காற்றியல் பற்றி எழுதப்பட்டு, அது பரவுமானால் அதுவும் நாட்டுப் பாடலாகும் என்ற வரையறைக்கு உட்படுத்தினால்,  இக்காலத்தின் திரையிசைப்  பாடல்களும், எடுத்துக்காட்டாக,  “பட்டணம் தான் போகலாமடி பொம்பளே” என்ற உடுமலை நாராயணகவியின் பாடலையும் கூட நாம் நாட்டுப்புறப்  பாடல் வரிசையில் சேர்த்துவிடலாம். 

குழந்தையைத் தாலாட்டித் தூங்கவைக்கும் பாடல்கள் தமிழகத்திற்குப் புதிதல்ல.  தமிழ் இலக்கியத்தில் சிற்றிலக்கியப் பிரிவில் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று பிள்ளைத்தமிழ். குழந்தையின் வளர்ச்சியில் மூன்றாம் மாதம் முதல் இருபத்தியொன்றாம் மாதம் வரையில் உள்ள வளர்ச்சியின்  காலகட்டத்தை பத்துப் பருவங்களாகப்  பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு பருவத்திற்கும்  பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் மரபு.   பிள்ளைத்தமிழ் கூறும் வரையறையின் அடிப்படையில், மூன்றாம் பருவமாக வரும் தாலப்பருவம் என்னும் தாலாட்டுப் பருவம் குழந்தையின் ஏழாம் மாதம் பாடப்படும். பிள்ளைத்தமிழ் இலக்கியம் போன்று குழந்தையைத் தாலாட்டுப்பாடி  தூங்கவைக்கும் தாலாட்டுப்பாடல்கள் தனி சிற்றிலக்கியமாகவும், நாட்டுப்புறப் பாடல்களாகவும், ஏன் இன்றுவரை திரையிசைப் பாடல்கள் வரை தொடர்ந்து எங்கும் பரவியிருக்கிறது.

குழந்தையைத் தூங்க வைக்கும் பொருட்டு பாடப்படும் தாலாட்டுப் பாடல்களின் மூலமாகப் பல கதைகளும் செய்திகளும், குழந்தைக்குக் கூறுவது போலப் பகிர்ந்து கொள்ளப்படும்.  குழந்தைக்குப் பாடலின் பொருள் ஒன்றும் புரியாவிட்டாலும், தாயின் அன்பு நிறைந்த குரலில் வரும் பாடலின் இசையில் மூழ்கி அமைதியாகத் தூங்கிவிடும்.  குழந்தைக்குத் தேவையில்லாத செய்திகளைப் பாடல் வழியாகச் சொல்வதில் என்ன பயன்?  பெரும்பாலும் ஒரு தாய் தனது குழந்தைக்குக் கூற விரும்பும் செய்திகளைத் தாலாட்டுப் பாடல் வழி சொல்கிறாள்.  அதில் தனது சொந்தக் கதை, தான் பிறந்து வளர்ந்த கதை, தனது சகோதரன் அல்லது அக்குழந்தையின் தாய்மாமனின் அன்பு, தனது கணவன் அல்லது அக்குழந்தையின் தகப்பனின் பெருமை, உற்றார் உறவினரின் பரிவு எனப் பல செய்திகளை மட்டும் நாட்டுப்புறப் பாடல்களில் வரும் தாலாட்டுப் பாடல்கள் வழி நாம் அறிந்து கொள்வதில்லை.   இவற்றிற்கும் மேலாகவும், பற்பல செய்திகளைத் தன்னகத்தேக் கொண்டு  இலக்கியக் காலக் கண்ணாடியாக நாட்டார் இலக்கிய தாலாட்டுப் பாடல்கள்  வழங்கும் பிற தகவல்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

கல்வி குறித்து  நாட்டுப்புறப் பாடல்கள் சொல்வதென்ன?
கடந்த 200 ஆண்டுகளில் தமிழக வரலாற்றை அறிய வெளிநாட்டார் எழுதி வைத்த குறிப்புகள் தவிர வேறு எழுதப்பட்ட சான்றுகள் இல்லை என்கிறார் வானமாமலை அவரது  "தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்" நூலின் முன்னுரையில். அவற்றைச்  சாதாரண மக்கள் வாழ்வை நாட்டுப்புறப்  பாடல்கள்  மூலம்தான் நாம் அறிய முடியும். இன்றைய நாட்டுப்புறப் பாடல்கள் கடந்த 200-300  ஆண்டுகளாகப் புழக்கத்திலிருந்தவை என்பது நா. வானமாமலை  அவர்களின் கூற்று.     அவ்வாறானால், கடந்த 200 ஆண்டுகளில் தொகுக்கப்பட்ட பாடல்களில்  சாதாரண மக்களின் கல்வி குறித்து என்னென்ன  செய்திகள் பதிவாகியுள்ளன ?  அவர்கள்  கல்வியறிவு எத்தகையது ? அவர்களுக்கு என்ன முறைகளில்  கல்வி  கற்பிக்கப் பட்டது? குறிப்பாகத் தாலாட்டுப் பாடல்களில் தங்கள் பிள்ளையின் கல்வி குறித்துப் பெற்றோரின் கனவாக ஏதேனும் பதிவாக்கியுள்ளதா?
          "தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
          சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
          சிலைபோல ஏனங்கு நின்றாய்?"
என்று  ஒரு தந்தை தனது மகளுக்குக் கூறும் அறிவுரையைப்  பாரதிதாசன் பாடல்  காட்டுவது போல, கல்வி குறித்து என்ன சூழ்நிலைகள் நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் நம்மால் அறிய முடியும்? என்பது போன்று எழும்  கேள்விகளை இக்கட்டுரையின்  பொருண்மையாக எடுத்துக் கொண்டு நாட்டுப்புறப் பாடல்கள் மீள்பார்வை செய்யப்பட்டது. சொல்லப் போனால் அது போன்ற வரிகள் நான் தேடிய பாடல்களில் இல்லை. தேடல் விரிவானால் கிடைக்கக்கூடும். 

நாட்டுப்புறப்பாடல்கள் மூலம்  தமிழக நாட்டுப்புற வழக்காறுகளை நாம்  அறிந்து கொள்கிறோம்.  அவ்வாறானால்  நாட்டுப் புறப் பாடல்கள் கல்வி, கற்றல், பள்ளி போன்றவற்றைக் குறித்துத் தரும் செய்திகள் என்ன  என்று தேடியதில் கிடைத்த செய்திகளை இங்குக் கீழே கொடுக்கப்படுகிறது. 
 
பெரும்பாலும் பாடல்களில் செல்வந்தர் வீட்டுக் குழந்தைகள் "56 தேசமும் ஆளவந்த சீமானோ" என்று சீராட்டப் படுகிறார்கள்.  இல்லாதவர் வீட்டுக் குழந்தையிடம் "வெத்துக் குடிசையிலே விளையாட வந்தாயா" என்று கூறப்படுகிறது.  ஆனால் குழந்தையின் கல்வி குறித்த பெற்றோரின் எதிர்காலக் கனவு காணக் கிடைக்கவில்லை. 

பாட்டனார் பெருமை.. கூறும் ஒரு தாலாட்டில்,  
          "இருந்து கணக்கெழுதும் இந்திரனார் பேரனோ 
          சாஞ்சு கணக்கெழுதும் சமர்த்தனார் பேரனோ"
என்று கூறப்படுவதிலிருந்து  குழந்தையின் பாட்டனார் கல்வி அறிவு பெற்றவர் என்பது புலனாகிறது. 

அடுத்து மற்றொரு பாடலில்,  
          சாய்ந்துகணக்கெழுதுவார் - கண்ணே
          சமத்துள்ள உன்தகப்பன்.
          குந்திக் கணக்கெழுதும் - கண்ணே
          கோபாலனோ உன்மாமன்?
என்று தாய் தாலாட்டில் பாடுகிறாள்.  இதிலிருந்து தந்தையும்  மாமனும்  கல்வி பெற்றவர்கள் என்பது தெரிய வருகிறது. 

மற்றொரு தாலாட்டுப் பாடலில் தாய் தன் வரலாற்றைக் குழந்தைக்குக் கூறுகிறாள்,
          அஞ்சு வயசிலே நான் - கண்மணியே
          *அரிசித்தரி படிச்சேனம்மா.                    
          பத்துவயசுக் குள்ளேநான் - கண்மணியே
          படிப்பெல்லாம் முடிச்சேனம்மா.

          பன்னிரண்டு வயசிலே நான் - கண்மணியே
          பருவமான காலத்திலே
          வாலிபப் பிராயத்திலே - கண்மணியே
          வாழ்க்கைப்பட்டேன் உங்கப்பாவுக்கு
இந்த தாலாட்டுப் பாடல் வழி தாயின் கல்வி அறிவு தெரிகிறது. ஐந்து வயதில் *அரிச்சுவடி படித்தவளாம் அவள்.   பெரியவளானதும் படிப்பை நிறுத்தி  திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள்.  அவளது கல்வி பத்து வயதிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது என்பது அக்காலத்துப் பெண்கல்வியின் நிலை எப்படி இருந்ததது என்பதை அறிவிக்கிறது. 

          தந்தானோ சின்னண்ணன்?
          பொன்னால் எழுத்தாணியும் - 
          கண்ணே உனக்கு
          மின்னோலைப் புஸ்தகமும்
          கன்னாரே பின்னாரெண்ணு - கண்ணே
          கவிகளையும் கொடுத்தானோ?       
என்று மற்றொரு தாலாட்டுப் பாடல் வழி அண்ணன் தங்கைக்குக் கல்விக்குத் தேவையானவற்றை ஆசையுடன் கொடுத்து உதவியது சொல்லப்படுகிறது. 

சிறார் விளையாடும் கழங்கு விளையாட்டுப் பாடல்களில் எண்ணிக்கை குறிக்கும் சொற்கள் உள்ளன. 
ஏழானுக்கு : 
          "ஏழண்ணா  எங்கண்ணா
          எழுத்தாணி எங்கண்ணா
          குருத்தோலை  வாசிப்பான் 
          ஏழேழுத்தாம் கண்ணாடி 
          குத்தி குத்திப் பார்த்தாலும் 
          குத்தாலத்திலே  சீட்டெழுதி"
என்பதன் மூலம் சிறுவர்கள் எண்ணும் எழுத்தும் அறிந்ததுள்ளதைப் புரிந்து கொள்ள முடிந்தாலும்.  அவர்கள் எவ்வாறு  இந்தக் கல்வியைக் கற்றார்கள் என்ற தகவலைத்தான்  அறிய முடியவில்லை. 

ஒரு பெண் தனது கணவனைப் பற்றி பாடும் பாடலில் அவனது கல்வி பற்றி அறிய முடிகிறது,  
          வெள்ளிப் பென்சில்களாம் 
          விதவிதமாய் மைக்கூடாம் 
          வீற்றிருந்து கணக்கெழுதும் 
          வேப்ப மரம் கச்சேரியாம் 

          தங்கப் பென்சில்களாம் 
          தரந்தரமாய் புத்தகமாம் 
          சாய்ந்திருந்து கணக்கெழுதும் 
          சாலையோரம் கச்சேரியாம் 

          கணக்கன் கணக்கன்னு 
          கணக்கனுக்கு வாக்கப்பட்டு 
          கணக்கெடுத்த நேரமெல்லாம் 
          விளக்கெடுக்கச் சொல்லுறானே 
ஒரு கணக்கெழுதும் கிராமக் கர்ணம்  மேல் காதல் கொண்ட அவன் மனைவி பாடும் பாடல் இது.  

மற்றொரு பெண்  ஆங்கிலப் பள்ளியில் படித்த தனது மாமன் மகனிடம் கேட்கும் கேள்வியும் அதற்கு அவன் தரும் பதிலும்,  
அவள்:
          சாலேயிலே போறவரே! 
          சந்திரனே, ஏகொழுந்தா! 
          இங்லீசு படிக்கயிலே 
          உங்கள என்ன சொல்லிக் கூப்பிடட்டும் ? 

அவன்:
          மாமன் மகளே!
          மத்தாப்புச் சேலைக்காரி!: 
          கோதும்பை லவுக்கக்காரி! 
          கொழுந்தனுண்னு கூப்பிடம்மா. 

அவள் : 
          தூத்துக்குடியிலேயும் 
          துரை  முகத்தார் பள்ளிக் கூடம்; 
          பள்ளிக் கூடம் போய்ப் படிக்கும் 
          பாலகனே, ஏ கொழுந்தா ! 
          பத்துப் படிச்சவரே, 
          பட்டணம் போய்ப் பார்த்தவரே! 
          விட்டுப் பிரிந்தீரானால் 
          விட்டுருவேன் சீவனேயே! 
என்று படித்த மாமன் மகனிடம் சொல்கிறாள். 

அச்சு நூல்கள் தோன்றி பரவி வந்த காலம், காதலன் அது போன்ற ஒரு நூல் ஒன்றை வாசிப்பதைக் கண்டு பெருமிதம் அடையும் காதலி பாடும் பாடல் ஒன்று. அவளுக்குப் படிக்கத் தெரியாது, ஆனால் அவன் படிப்பதிலோ அவளுக்குப் பெருமை தாளவில்லை, 
          அச்சடிச்ச புத்தகமாம் 
          அரிச்சந்திர நாடகமாம் !
          என்னத்  தொட்ட மன்னவரு 
          என்ன சொல்லி வாசிக்கிறாரோ ?

          அச்சடித்த புத்தகமே 
          ஆரவல்லி நாடகமே !
          என்னத் தொட்ட சாமியல்லோ 
          என்ன கவி பாடுதாரோ ?

மாப்பிள்ளையைக்  கேலி செய்யும் பாடல் ஒன்று உண்டு அவனது கல்வியறிவை நையாண்டி செய்கிறது, 
          சாப்பாடு வேணுமாண்ணா
          கூப்பாடு போட்டழுவார்
          பத்துவரை எண்ணச்சொன்னால்
          சுற்றுமுற்றும் பார்த்தழுவார்.     

உழைக்கச் சென்ற இடத்தில் படித்தவர்கள் இருப்பதைக் காண முடிகிறது, 
          களைக்காட்டிலே - ஏலேலோ     
          கணக்குப்பிள்ளை - ஐலசா
          கம்புவச்சு - ஏலேலோ  
          நிற்கிறாண்டி - ஐலசா.    

          களையெடுத்தும் - ஏலேலோ    
          பழமெடுத்தும் - ஐலசா
          கணக்குப்பிள்ளை - ஏலேலோ   
          கம்பாலடிப்பான் - ஐலசா.      

          பெரியரைட்டன் - ஏலேலோ    
          பிரம்பெடுத்து - ஐலசா
          பெறப்படுவான் - ஏலேலோ     
          பழக்காட்டுக்கு - ஐலசா.  

          ரயிட்டன் வந்து - ஏலேலோ     
          லயிட்டுப் போட்டு - ஐலசா
          சயிட்டடிப்பான் - ஏலேலோ     
          நயிட்டிலேதான் - ஐலசா. 
அதாவது, Writer, Light, Sight, Night என்ற ஆங்கிலச் சொற்களின் புழக்கம் வெகு சாதாரண மக்களின் வாழ்வில் கலந்திருக்கிறது.  

          தேக்கப் பலகை வெட்டி 
          தெற்கு வாக்க ஸ்டோரு கட்டி 
          ஸ்டோருக்குள்ளே பேரெழுதும் 
          தொகை மயில் டைம் கீப்பர் 

          நாகரிகக் காரருக்குக் - கண்ணே ஆற்றில்
          நல்லமாதிரி போட் இருக்கும்.
          குறைப்படிப்புக் காரருக்குக் - கண்ணே நல்ல
          சுரைக்குடுக்கை தானிருக்கும்.

அயல்மொழிச் சொற்கள் என்ற கோணத்தில் ஆராய்கையில், நாட்டுப்புறப் பாடல்களில் சமஸ்கிருத கலப்பை விட ஆங்கிலச் சொற்களின் கலப்பு மிகுதியாகக் காணப்படுகிறது.  அட்வான்ஸ், பஸ், ஏரோபிளேன், ஷாப், ஜெயில், போலீஸ், ரோடு, டாக்டர், கலர், ஹார்பர், மெடல், இன்ஸ்பெக்டர், பப்ளிக் , நம்பர்,  டெலிபோன்,  ரவுடி, ரெயில், மெயில், சப் மாஜிஸ்ரேட் கோர்ட், மோட்டார், பம்ப், ஜோக், போட், காப்பி என்று பல சொற்கள் பாடல்களில் இடம் பெறுவதைக் காண முடிகிறது.  ஆக வேலைக்குச் செல்லும் இடத்தில் கல்வி கற்றவர் குறித்த தகவல் உள்ளது என்பதும், அந்தத் தொடர்பால் சராசரி மக்களிடமும் ஆங்கிலச் சொற்கள் சென்று சேர்ந்துள்ளதைப் புரிந்து கொள்ளலாம். 

கல்வி பற்றி மேலும் சில குறிப்புகள்  சந்தனத்தேவன்  கதைப் பாடலிலும், நாடார் ஜம்புலிங்கம் கதைப் பாடலிலும்  கிடைக்கிறது. அவர்கள் ஒரு வகையில் அரசால் குற்றவாளிகள் என அடையாளம் காணப் பட்டாலும்,  மக்கள் மனதில் அவர்களின் குலம் காக்க வந்த வீரர்கள் போன்றவர்கள். ஒருவகையில் இவர்கள் கொள்ளையடித்து ஏழை எளியவர்களைக் காக்கும் 'ராபின் ஹுட்' போன்றவர்கள். ஆனால், இவர்கள் இருவரும் நன்கு படித்தவர்களாக நாட்டுப்புறப்  பாடல்களில் பதிவாகியுள்ளதை  அறிய முடிகிறது. அவர்கள்  கல்வி பெற்றதால், ஒடுக்கப்பட்ட தங்கள் மக்களை மீட்க விரும்பி அவர்கள் அரசின் பார்வையில் குற்றவாளிகளாக மாறிய நிலை ஏற்பட்டிருக்கலாம். 

முதலில், சந்தனத்தேவனின் பெருமை; சந்தனத் தேவனுக்குக் கல்வி கிடைப்பது சிறைச்சாலையின் சீர்திருத்தப் பள்ளியில்!!
          கணக்குப்பிள்ளைக்குக் காசுங்கொடுத்து -ஏலங்கிடி லேலோ
          கரிசல்காட்டை மால்பிடித்து - ஏலங்கிடி லேலோ.    
          சந்தனத்தேவன் வாரானையா - ஏலங்கிடி லேலோ

          எல்லாரும் படிக்கும் இடம் - ஏலங்கிடி லேலோ
          ஏழைக்கேற்ற பள்ளிக்கூடம் - ஏலங்கிடி லேலோ.   
          சந்தனம் படிக்கும் இடம் - ஏலங்கிடி லேலோ
          சரியான ஜெயிலுக்கூடம் - ஏலங்கிடி லேலோ.        

அடுத்து, நாடார் ஜம்புலிங்கம் புகழ் குறித்து, 
          எம். ஏ. பி. ஏ. படித்து
          எப்போதும் இங்கிலீஷ்பேசி
          தப்பாமே தாய்ப்பாஷையும்
          சிப்பாய்போலே தான்படித்து
          வாரார் சொக்கத் தங்கம் - நம்ம
          நாடார் ஜம்புலிங்கம்.

          பிச்சை எடுக்கவுமில்லை
          பெற்றோரைப் பழிக்கவுமில்லை
          மெத்தவும் படித்துவிட்டு
          மேன்மையான வேலைபார்க்க
          வாரார் சொக்கத் தங்கம் - நம்ம
          நாடார் ஜம்புலிங்கம்.

          ஜேப்புக்குள்ளே கையைவிட்டுச்
          சின்னப் பென்சலை எடுத்துப்
          பீட்டுநோட்டை யுந்திறந்து
          போட்டுவிட்டுக் கையெழுத்து
          வாரார் சொக்கத் தங்கம் - நம்ம
          நாடார் ஜம்புலிங்கம்.

இது போன்ற கல்வி குறித்த குறிப்புகள் நாட்டுப்புறப் பாடல்களில்   கிடைக்கின்றன. ஆனால் ஒரு பள்ளி எவ்வாறு இருந்தது என்றோ, அது எவ்வாறு இயங்கியது என்றோ தெரிந்து கொள்ள இயலவில்லை. முனைவர் கட்டளை கைலாசம்  சாதாரண மக்களுக்குக் கல்வி புகட்டிய 'அண்ணாவி பள்ளிகள்' என்ற பள்ளிகள்  ஆவணப் படுத்தப் படவில்லை என்று குறிப்பிடுவார். மேலும் பல கள ஆய்வுகள் செய்வோர்  பல செய்திகளைச் சேகரிக்கும் பொழுது நமக்குச்  சென்ற 18, 19 நூற்றாண்டுகளில் கிராமப்புற கல்வி குறித்து மேலும் தகவல்கள்  கிடைக்கக் கூடும். 


குறிப்பு:
பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியும், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பும் இணைந்து "நாட்டுப்புறவியலும் தமிழர் வாழ்வியலும்" என்ற பொருண்மையில்  நடத்திய இணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கத்தில்  ஜூலை 31, 2020 அன்று வழங்கிய உரை. 

No comments:

Post a Comment