கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு
-- முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
முன்னுரை:
இடைக்காலத் தமிழக வரலாற்றில் அரசுத்துறை மிகச் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டது. பல்வேறுத்துறை அதிகாரிகள், ஊர், நகர சபைகள், கோயில் நிர்வாகம் ஆகிய அமைப்புகள் திறம்படச் செயல்பட்டு சட்டம் ஒழுங்கு, தர்மநெறி பிறழாமல் கடமையாற்றியுள்ளனர். இருப்பினும் அரசுக்கு வரி செலுத்தாமல் ஏமாற்றுவது, பொது நிறுவனங்களின் சொத்துக்களை முறையற்ற வழியில் அனுபவிப்பது, லஞ்சம் வாங்குதல், கோயில் மற்றும் அறநிறுவனங்களில் வைக்கப்பட்ட நிரந்தர இருப்புகளைக் கையாடல் செய்தல், கொலைக் குற்றங்கள், தற்கொலைக்குத் தூண்டுதல் என முறைகேடான செயல்களும் ஆங்காங்கே நடந்துள்ளன. அரசும் இதைக் கண்டறிந்து எதிர் காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் பார்த்துக் கொண்டது. குற்றங்களைக் கண்டறிதல், தண்டித்தல், தீர்வு என ஏராளமான நிகழ்வுகள் இடைக்கால கல்வெட்டில் காணக்கிடக்கின்றன. அவைகளைப் பற்றி ஆராய்கிறது இக்கட்டுரை.
குற்றங்களின் வகை:
இடைக்காலத்தில் அதிகார குவிப்பு மையங்களாக விளங்கிய பிரம்மதேயங்கள், சதுர்வேதிமங்கலங்கள், கோயில் நிர்வாகம், கிராம சபை போன்றவற்றில் குற்ற நிகழ்வுகள் நடந்துள்ளதைக் கல்வெட்டுக்கள் சுட்டுகின்றன. இக்குற்ற நடவடிக்கைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
1. அரசின் உள்ளாட்சி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சரியாகக் கணக்குக் காட்டாமல் இருத்தல். அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து பிறர் சொத்துக்களை அபகரித்தல், கையூட்டு வாங்குதல், அரசுக்கு வரிசெலுத்தாமல் நிலங்களை அனுபவித்தல், தம் கடமையைச் செய்யாமல் ஏமாற்றுதல்.
2. கோயில் வழிபாட்டுக்கென வைத்த நிரந்தர வைப்புகளைத் திருடுதல், தாமே அனுபவித்தல்.
3. திட்டமிடப்பட்ட கொலை, தற்செயல் கொலை, தற்கொலைக்குத் தூண்டுதல், முன்பகை காரணமாகக் கொலைகள் என குற்றவியல் வழக்குகளை வகைப்படுத்தலாம்.
இவற்றில் முதல் இரண்டு குற்றங்கள் சிவில் குற்றங்களாகவும் மற்றவை கிரிமினல் குற்றமாகவும் கருதலாம். இத்தகைய குற்றங்கள் பற்றிய செய்திகள் நமக்கு கி.பி 9 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுக்களில் கிடைக்கின்றன. இத்தகைய குற்றங்களைப் புரிந்தவர்கள் நிறைந்த உரிமைகளும், தன்னாட்சியுரிமை பெற்ற தேவதான, பிரம்மதேய, சதுர்வேதிமங்கலத்தை நிர்வாகம் செய்யும் பிராமணர்கள், வழிபாடு செய்து சமயத்தை வளர்க்கும் தேவகண்மிகள் போன்ற அலுவலர்களே பெரும்பாலும் இடம் பெற்றுள்ளனர். சாமானிய மக்களும் குற்றச் செயல்களில்; ஈடுபட்டுள்ளதையும் காணமுடிகிறது.
திட்டமிட்ட கொலை:
பாண்டிய நாட்டில் கி.பி.13 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற கொலை வழக்கின் விசாரணை பற்றி சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணபெருமாள் கோயிலில் உள்ள மூன்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இக்கோயிலில் ஐந்து அலுவலர்கள் இருந்தனர். இவர்களுள் ஒருவர் வாமனபட்டர் என்பவராவார். இவர் ஐப்பசி மாதம் 25 ஆம் தேதி கோயிற் பணிகளை முடித்து கிழக்கு வீதி வழியாகத் தன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது சத்தியநாவன் என்பவன் தெருவின் இருமங்கிலும் தன் அடியாட்களை ஆயுதங்களோடு நிறுத்திவைத்திருந்தான். பட்டர் இருட்டில் வருவதை அறிந்த அவ்வடியாட்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர். சத்தியநாவனும் அடியாட்களும் அருகிலுள்ள பன்றித்திட்டுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாயினர்.
கொலையாளிகள் தப்பியோடவே “மூலப்பரிஷத்து” என்ற சபையினர் ஒன்று கூடினர். சத்தியநாவனுக்குச் சொந்தமான நிலங்கள், வீடுகள், தோட்டங்கள் முதலிய உடைமைப் பொருட்களும் ஆண், பெண் பணியாட்களும் கையகப்படுத்தப்பட்டு சொக்கநாராயணப் பெருமாள் கோயிலுக்கு உடைமையாக்கப்பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பு கொலை நடந்த பத்து நாட்களுக்குள் வழங்கப்பட்டது. மேலும் கொலையில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான தேவர்கள்நாயன் என்பவன் அயல்நாட்டிற்குத் தப்பிச்சென்றதை அறிந்த ஊர்சபை அவனுடைய சொத்துக்களையும் கையகப்படுத்தி கோயிலுக்கு உரிமையாக்கினார். இந்நிகழ்ச்சி நடந்து முடிந்த நான்கு மாதங்களுக்குப்பின் சத்தியநாவன் மகன் சேர்மலைப்பெருமாள் என்பவன் அவ்வூர்க் கோயில் அலுவலர் முதல் பணியாளர்கள் வரை அனைவரையும் ஒருங்கு கூட்டினான். தம்தந்தை செய்த கொலைக்கும் தமக்கும் எந்த தொடர்புமில்லை எனவும், தாம் நிரபராதி என்றும், உடைமைகளின் பறிமுதலால் தாம் பெருந்துன்பத்திற்கு ஆளாகியிருப்பதாகவும் ஊர்சபை கையகப்படுத்திய நிலங்கள், வீடுகள், தோட்டங்கள், பணியாளர்கள் முதலிய அனைத்தையும் மீள அளிக்க வேண்டுமென்றும், அதற்கு ஈடாகக் கோயிலுக்கு எண்ணூறு பணம் கொடுப்பதாகவும் விண்ணப்பம் செய்தான்.
அவனுடைய வேண்டுதல் விண்ணப்பத்தில் உண்மையிருப்பதை ஊர் சபையோர் உணர்ந்தனர். அவ்விண்ணப்பத்தையும் ஊர்ப் பொதுமக்களின் பரிந்துரையையும் ஊர்சபை ஏற்றுக்கொண்டது. கோயிலுக்கு வீரகேரள மலையரையன் சந்தி என்ற கட்டளையைத் தொடர்ந்து நிறைவேற்றி வைக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டின் அடிப்படையில் சேர்மலைப் பெருமாளுக்கு உடைமைகள் அனைத்தும் மீள வழங்கப்பட்டது.
பிறன்மனை விருப்ப கொலை:
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம் ஜம்பையில் உள்ள சம்புநாதர் கோயிலில் முதலாம் இராஜராஜனின் கி.பி 1013 ஆண்டில் வெளியிடப்பட்ட கல்வெட்டில் பிறன்மனை விருப்பத்தால் நடந்த கொலை பற்றிக் குறிப்பிடுகிறது. பாலைப்பந்தல் என்னும் ஊரைச் சார்ந்த அங்காடி பொற்றாமன் என்பவன் வாணிபம் செய்து வந்தான். அவன் சீமாதேவி என்னும் பெண்ணை தன் வாழ்க்கை துணைவியாகக் கொண்டிருந்தான். நாவலூர் என்ற கிராமத்திலிருந்து இவ்வூரில் வாழ்ந்து வந்த சீராளன் என்பவன் சீமா தேவியை அடைய விரும்பினான். ஒரு நாள் நள்ளிரவில் சீமாதேவியைக் கற்பழிக்கும் நோக்கில் வீட்டில் புகுந்து கட்டாயப்படுத்தி இழுத்தான். இந்நிகழ்வை நேரில் பார்த்த அங்காடிப்பொற்றாமன் சினம் கொண்டு சீராளனைக் குத்தி கொன்றான்.
இவ்வழக்கை விசாரித்த ஊர்சபையோர் அங்காடிப் பொற்றாமனின் செயல் மனவெழுச்சியால் நிகழ்ந்ததாகக் கருதினர். இருப்பினும் சீராளனைக் கொன்ற குற்றத்திற்காக ஒரு நந்தா விளக்கைச் சூரியச் சந்திரர் உள்ளவரை இவ்வூர்க் கோயிலில் எரிக்க வேண்டுமென ஆணையிட்டனர். ஊர்சபையோர் கணவனை இழந்த சீராளனின் மனைவியை அணுகி இத்தீர்ப்பிற்கு இசைவையும் பெற்றனர்.
முன்பகை கொலை:
கி.பி.1127 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விக்கிரம சோழனின் ஒன்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் இராஜேந்திரசோழ வளநாடு பெண்ணைத் தென்கரை நாட்டிலிருந்த கடம்பூரில் நிகழ்ந்த கொலை சம்பவத்தைப் பற்றி விவரிக்கிறது. ககடம்பூரில் வாழ்ந்த கூடலுடையான் குளத்தான் சேந்தன் என்பவனுக்கும், பிச்சன்பன்மன் கண்டன் என்பவனுக்கும் பகை மூண்டிருந்தது. முன்பகைக் காரணமாக இருவரும் ஒருவரையொருவர் சண்டையிட்டுக் கொண்டனர். அப்போது கூடலுடையான் சேந்தன் முட்டிக்குத்தியதில் பிச்சன்பன்மன் கண்டன் இறந்தான். இவ்வழக்கு ஊர் சபையோரிடம் வந்தது. பன்மன்கண்டனின் தந்தை, பிச்சன்பன் மனைவியும், உடன் பிறந்த தம்பியான பெரியனையும், அவன் தம்பி முனையானையும், இளையான் அக்களனையும் அழைத்துப் பேசினர். அவர்கள் அனைவரும் கூடலுடையான் சேந்தன் செய்த கொலைக் குற்றத்திற்காக அவனை அறச்செயல் செய்ய வேண்டினர். அவர்களுடைய அனுமதி பெற்ற சபையினர் ஊர் வழக்கப்படி உரியனசெய்வதாக உறுதியளித்தனர். இக்குற்றத்திற்காகச் சேந்தனிடம் தண்டமாக முப்பத்திரண்டு பசுக்களைக் கைக்கொள்ளலாம் என முடிவெடுத்தனர். அம்முடிவை பன்மன்கண்டனின் குடும்பத்தார் ஏற்றுக் கொண்டனர். சேந்தனும் அத்தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு முப்பத்திரண்டு பசுக்களைக் கொடுத்தான்.
தற்கொலை வழக்குகள்:
கி.பி.1055 ஆம் ஆண்டு முதலாம் இராஜேந்திர சோழனின் மூன்றாம் ஆட்சியாண்டில் இராஜேந்திர சோழ வளநாட்டின் பெண்ணை ஆற்றின் தென்கரையில் கூகுர்ப்பாடி என்னும் ஊர் இருந்தது. இதேவூரில் வீரபுத்திரன் என்பவனின் அன்னை சேந்தன் உமையாளும் வாழ்ந்து வந்தாள். அவரை வரிசெலுத்த வேண்டுமென அவ்வூர் அரசு அலுவலரான பழங்கூரன் குன்றன் என்பவன் வற்புறுத்தினான். அனைத்து வரிகளையும் சேந்தன் உமையால் செலுத்திவிட்டதாகவும் எதற்கும் வரிசெலுத்த வேண்டியதில்லை எனவும் மறுத்துக்கூறிவிட்டாள். பழங்கூரன் உமையாளை அரசன் முன்பு நிறுத்தி வரியை மீண்டும் செலுத்தச்செய்தான். அச்செயலால் மனம் நொந்த சேந்தன் உமையாள் நஞ்சு குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.நான்கு திசைகளிலிருந்த பதினெண் ஊர்களைச்சேர்ந்த ஊர்சபையினர் அனைவரும் கூடினர். வரி செலுத்திய சேந்தன் உமையாளை அரசன் முன்பு கொண்டு நிறுத்தி அவரை மீண்டும் வரி செலுத்தச் செய்து, அவமதிப்புக்குள்ளாக்கிய செயலே தற்கொலைக்குக் காரணம் என உணர்ந்தனர். பழங்கூரன் குன்றனுக்கு ஊர்சபையோர் முப்பத்திரண்டு பொற்காசுகளைத் தண்டம் விதித்தனர். அக்காசுகளை முதலீடாகக் கொண்டு அதன் வட்டியில் நாள்தோறும் உழக்கெண்ணெய் வாங்கி கோயிலில் விளக்கு எரிக்க ஆணையிட்டனர்.
இரண்டாம் இராஜேந்திரசோழனின் நான்காம் (கி.பி.1055 – 1056) ஆட்சியாண்டில் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் திசை ஆயிரத்து ஐநூற்றுவர் என்ற வணிகக்குழுவினர் இருந்தனர். இவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி கட்டிலேறுவதற்குத் (திருமண சடங்கு) தயாராக இருந்தாள். தில்லைக்கூத்தனும், மற்றொருவனும் அதற்குத் தடையாக இருந்து மணமகனுக்கு இராமன் என்பவனின் மகளைத் திருமண ஏற்பாடு செய்தனர். இதனால் முதல் பெண் நஞ்சு குடித்து உயிரை மாய்த்துக்கொள்கிறாள். இதனை அறிந்த திசை ஆயிரத்து ஐநூற்றுவரும், பெருநிரவியரும் இதற்குப் பிராயச்சித்தமாகச் சங்கு பரமேசுவரியை எழுந்தருளுவித்து இவ்வூர்க் மாதேவர்க்கு மூன்று சந்தியும் விளக்கெரிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
தற்செயல் கொலைகள்:
திண்டிவனம் வட்டம், கிடங்கில் பக்தபிரஹதீஸ்வரர் கோயிலில் உள்ள முதலாம் குலோத்துங்கசோழனின் 21வது (கி.பி.1091) ஆட்சியாண்டைச் சார்ந்த கல்வெட்டு தற்செயல் கொலையைப் பற்றிக் கூறுகிறது. ஓய்மாநாட்டு குடிப்பள்ளி கிராமத்தில் மாலன் என்பவனின் மகன் கற்றளி என்னும் ஆறு வயது சிறுவன் இருந்தான். இவன் ஒருநாள் கையில் அரிவாளைக் கொண்டு மரத்தை வெட்டிக்கொண்டிருந்தான். அப்போது இவ்வூர்க் பொன்மகனார் மகன் நக்கன் என்னும் ஏழு வயது சிறுவன் விளையாட்டாகக் கையை நீட்டக் கையை வெட்டிவிட்டான். சிறுவன் நக்கன் இறந்து விடுகிறான். தன்மகன் கற்றளி கையை வெட்டி மரணத்தை ஏற்படுத்திய செயலுக்காக மாலன் மனம் நொந்து கோயிலுக்கு விளக்கெரிக்க நாள்தோறும் உழக்கெண்ணெய் அளித்துள்ளான்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் எலவனாசூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள இரண்டாம் இராஜாதிராஜ சோழனின் பத்தாம் ஆட்சி யாண்டைச் சார்ந்த (கி.பி. 1173) கல்வெட்டு தற்செயல் கொலை வழக்கைப் பற்றிக் குறிப்பிடுகிறது. ஜனநாதவளநாட்டு பரனூர்க் கூற்றத்து மாடூரில் வாழ்ந்த கோச்சாத்தன்காமன் என்பவனின் அகமுடையாள் ஏதோ காரணத்திற்காக தன் மகள் மீது கடும் கோபத்துடன் அரைமனை (அரிவாள்மனையாக இருக்கலாம்) கோலை வீசினாள். அக்கோலானது இலக்கு மாறி இதேவூரை சார்ந்த மிண்டன்காமன் என்பவனுடைய மகள் மீது பட்டது. காயமுற்ற அப்பெண் இருபது நாள்வரை இன்னல்பட்டு இறந்தாள். இவ்வழக்கு ஊர்சபைக்கு வந்தது. குற்றங்களைத் தீர விசாரித்த சபையோர் கோச்சாத்தன்காமனின் அகமுடையாள் உயிர்க்கொலை செய்யும் நோக்கில் அரைமனைகோலை எறியவில்லை. இந்நிகழ்வு எதிர்பாராமல் கைப்பிழைப்பாடாக நடந்த விபத்து என்று தீர்ப்புக் கூறினார். இருப்பினும் கோச்சாத் தன்காமனிடம் முப்பத்திரண்டு பசுக்களைத் தண்டமாகப் பெற்றனர். இப்பாவத்திற்குக் கழுவாயாக கோச்சாத்தன் அகமுடையாள் கோயிலுக்கு விளக்கு வைக்க இருதிறத்தாரும் ஒப்புக்கொண்டனர்.
இதேகோயிலில் உள்ள மூன்றாம் இராஜராஜசோழனின் பத்தாவது ஆட்சியாண்டு (கி.பி.1226) கல்வெட்டு மற்றொரு தற்செயல் கொலை வழக்கைப்பற்றிக் கூறுகிறது. வடநாரையூர்க் கூற்றத்து வாணபிராட்டியிலிருக்கும் ஆறிக்குளத்தூருடையான் முடிகொண்டான் காரியாந வீரபாலன் என்பவன் பன்றி வேட்டையாட இரவு காட்டிற்குச் சென்று அம்பு எய்ய, அது குறிதவறி புஞ்ச நூற்பள்ளிபடியன் கந்தனான புஞ்ச நூற்போயன் மகன் தில்லையான் ஆறாயிரப்போயன் மீது பட அவன் இறந்து விடுகிறான். இவ்வழக்கை விசாரித்த ஊர் சபையோர் இச்சம்பவத்திற்கு ஏதேனும் முன்பகை உள்ளனவா என்பதைத் தீரவிசாரித்தனர். இந்நிகழ்வு தற்செயலாக நடந்ததே தவிர பகையேதுமில்லை என்று தீர்ப்புக் கூறினர். இதன் கழிவிரக்கமாக வீரபாலன் எலவனாசூர் கோயிலுக்கு முப்பத்திரண்டு பசுக்களைத் தானமாகக் கொடுத்துள்ளான்.
சிவில் வழக்குகள்:
பண்டையகால அரசுக்கு நிலவருவாயே நிரந்தரவருவாயாகும். “அறு கூறினால் புரவு மாயாதியும் பொன்னும் பெறுமாறு சோழகோன்” என்ற கல்வெட்டு வரியில் ஆறில் ஒருபங்கு நிலவரியாக வசூலிக்கப்பட்டதை அறிய முடிகிறது. இதில் “புரவு” என்ற சொல் நிலவரியைச் சுட்டுவதாகும். இவ்வரிகளை வசூல் செய்வதற்காக ஒவ்வொரு ஊரிலும் புரவுவரி சீகரணம், புரவு வரியார், புரவுவரித் திணைக்களநாயகம் என்ற பெயரில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மக்களிடம் நிலவரியை வசூல் செய்து அரசுக்குச் செலுத்த வேண்டும். இருப்பினும் வரி ஏய்ப்பு செய்பவர்கள், பொய்க்கணக்கு எழுதும் அதிகாரிகளும் இருந்துள்ளனர். இவர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றிக் காண்போம்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம் ஓமாம்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயிலில் உள்ள இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டில் நிலவரி செலுத்தாதவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிக் கூறுகிறது. ஸ்ரீஉலகளந்த சோழச்சதுர்வேதிமங்கலத்திலிருந்த சிலர் நிலத்தின் மீதான வரியைச் செலுத்தாமல் ஊரைவிட்டுச் சென்று விட்டனர். இவர்களுக்கு இதேவூரைச் சேர்ந்த பிராமணர்கள் சிலர் பிணையளித்திருந்தனர். பிணையளித்தவர்களும் வரியைச் செலுத்தவில்லை. இதனால் வரியை உடனே செலுத்துமாறு இவர்களுக்கு ஆணையிடப்பட்டது. ஆணைப்படி வரிகட்டத் தவறியதால் பிணைஅளித்தவர்களின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இவர்களின் நிலத்தை பிணைவிளையாகப் பெற்றுக்கொள்ளயாரும் முன்வராததால் நிலத்தின் ஒரு பகுதியினை கோயில் நிர்வாகத்தினரே விலைக்குப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டினர். கோயில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஆபரணங்களை விற்று நிலங்களை கோயில் நிர்வாகமே வாங்கியது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கள்ளப்பெரம்பலூர் கைலாசநாதர் கோயிலில் உள்ள மூன்றாம் இராஜராஜ சோழனின் 19ஆம் ஆட்சியாண்டைச்சார்ந்த கல்வெட்டு பொய் கணக்கு எழுதியதற்காகக் கொடுக்கப்பட்ட தண்டனையைப்பற்றிக் கூறுகிறது. “நம்மூரில் காணி உடையநாய் கணக்கெழுதி வன்தசேஞலூருடையான் மதளை உத்தமப்பிரியன் எல்லோமுக்கும் மேற்கிராமத்து துரோகியாய் கணக்கெழுதலாகா தொழிகையால் இவனும் இவன் வங்கிஷத்தாரும் இவன் உறவு முறையென்று வந்து கணக்கெழுதுவார்களாகில் திருவாணை புவன முழுதுடையாராணை” என்ற கல்வெட்டு வரியால் சேஞலூருடையான் மதளை உத்தமபிரியன் என்பவன் பொய்க்கணக்கு எழுதியதை அவ்வூர் சபையோர் தணிக்கை செய்தபோது கண்டறிந்தனர். உடனே அவனை அரசுப்பணியிலிருந்து நீக்க ஆணையிடப்பட்டுள்ளது. இனி அவனும், அவனது வழித்தோன்றல்களாக வருவோரும், அவனுடைய உறவினர் என்று சொல்லிக் கொண்டு வருகின்றவர்களுக்கு ஊர்கணக்கு எழுத நிரந்தர தடை விதிக்கப்பட்டதையும் உணரமுடிகிறது.
மெகா வரியேய்ப்பு நடவடிக்கை:
பழையவடஆர்க்காடு மாவட்டம் அரக்கோணம் வட்டம் திருமால்புரத்திலுள்ள சோழர் கல்வெட்டில் மெகாவரியேய்ப்பு முறைகேடு பற்றிக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு நூறு வரிகளைக் கொண்டது. இவ்வரியேய்ப்பு முதலாம் ஆதித்த சோழனின் 22ஆவது (கி.பி 893) ஆண்டிலிருந்து, உத்தம சோழனின் நான்காம் (கி.பி 974) ஆட்சியாண்டு வரை ஏறக்குறைய 82 ஆண்டுகள் நடந்துள்ளது. திருமால்புரத்துக் கோயில் வழிபாட்டிற்காக புரவுநெல் 3,000 காடி, இரவு நெல் 561 காடி, பொன்னாக 200 கழஞ்சு, சிற்றியாற்றூர் என்ற ஊரும் தானமாக அளிக்கப்பட்டது. இவ்வூர் நிலங்களில் சங்கப்பாடிகிழான் என்பவனின் நிலம் மட்டும் நீக்கி பிற நிலங்கள் அனைத்தும் கொடையாக அளிக்கப்பட்டன.
இந்த ஊரை ஏற்று மேற்கூறிய அளவு வரியைச் செலுத்தும் பொறுப்பை புதுப்பாக்கம் சபையோர் ஏற்றுக்கொண்டனர். இது தொண்டைமானாற்றூர் துஞ்சினதேவரின் (முதலாம் ஆதித்த சோழன்) 21 ஆட்சியாண்டில் கொடுக்கப்பட்டு 22 ஆவது ஆண்டில் சாசனம் செய்யப்பட்டது. ஆனால் இதுபற்றிய விவரம் அரசாங்க வருவாய் கணக்குப் புத்தகத்தில் எழுதப்படவில்லை. ஆனால் இப்படி அரசுக் கணக்கில் எழுதப்படாமல் இருந்த விவரம் பராந்தக சோழனின் நான்காவது ஆட்சியாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டது. அதன் பிறகும் புதுப்பாக்கத்துச் சபையோர் கோயிலுக்குச் சேரவேண்டிய பொன்னையும், நெல்லையும் கொடுக்காமல் இவ்வரசனின் 36 ஆவது ஆண்டுவரை அதாவது முப்பத்திரண்டு ஆண்டுகள் ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் கோபமடைந்த அரசன் சபையோரிடமிருந்து சங்கப்பாடிகிழான் முதலிய அனைத்து நிலங்களையும் மீட்டு கோயிலின் நேரடி நிர்வாகத்தில் விடுகிறான்.
ஆனால் இப்படி முன்னர் நீக்கிய சங்கப்பாடிகிழான் நிலத்தைக் கோயிலுக்கு வரியிலிட்டு குடுத்தப்பின்னரும் அந்த நிலத்தைப் புதுப்பாக்கதுச் சபையோர் வன்முறையினால் கைப்பற்றி அனுபவித்துக் கொண்டதுடன் கோயிலுக்குச் சேரவேண்டிய இறையையும் கட்டாமல் விடுகின்றனர். இந்த வரியேய்ப்பை எதிர்த்துக் கேட்ட கோயில் அதிகாரிகளையும் அவர்கள் துன்புறுத்தியுள்ளனர். சபையோர்களின் அட்டகாசம் எல்லை மீறியபோது இத்தகவல் அரசனிடம் முறையிடப்படுகிறது. அதனை கேட்ட அரசன் கோயில் அதிகாரிகளையும், சபையோரையும் அழைத்து நேரடி விசாரணை செய்த போது ஊழல் வெளிப்படுகிறது. சபையோர் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்கின்றனர். அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். மேலும் இவ்வழக்கு விசாரணையானது இப்பகுதியின் பிரம்மதேயக் கிழவர்கள், நாட்டார்கள், நகரத்தார்கள், ஊரார்கள், பள்ளிச்சந்தம் மற்றும் பிற சபை அமைப்புகளின் அலுவலர்கள் போன்றோர்களின் முன்னிலையில் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அப்போது மன்னனுடன் கருமம் ஆராய்கின்ற அதிகாரி ஒருவனும், நடுவிருக்கை, ஆணத்தி, வாய்க்கேழ்வி, ஓலை எழுதும் அதிகாரி, ஓலைநாயகம், புரவுவரி அதிகாரி, உத்தரமந்திரி, வரிப்பொத்தகக் கணக்கு ஆகிய வருவாய்த்துறை அதிகாரிகளும் உடனிருந்து வழக்கை நடத்தி ஒழுங்குபடுத்தியுள்ளனர். இதிலிருந்து பிரம்மதேய சபையோர்கள் அரசனின் ஆணைகளையே மதியாமல் ஏமாற்றும் துணிச்சல் மிக்கவர்களாக இருந்துள்ளனர். இவ்வழக்கிற்காக மன்னன் காஞ்சிபுரம் வந்து விசாரணை செய்ததையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
தண்டனைகள்:
சபையோர் நீதி வழங்குவதில் காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் வாதி, எதிர்வாதி ஆகியோரின் முன்னிலையில் விசாரணை செய்து தீர்ப்பு வழங்கினர். மேலும் வாதியின் குடும்பத்தினரை அழைத்து இக்குற்றத்திற்கு என்ன வழிகாணலாம் எனக் கேட்கப்பட்டிருப்பது ஊர்சபையோரின் மிக உயர்ந்த நீதி வழங்கும் பண்பைக் காட்டுகிறது. மேலும் சபையோர் மரண வழக்குகளைக் கையாண்ட விதம் அளப்பரியதாக உள்ளது. காரணம் கொலைக் குற்றத்திற்கு மரணதண்டனை விதிக்கப்பெறாமல் குற்றவாளி திருந்துவதற்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் தண்டம் விதித்து அத்தொகையைக் கோயிலுக்கு விளக்கெரிக்க நிவந்தமாக அளிக்க வேண்டுமென விதியமைத்துள்ளனர். மனிதன் சமுதாய, அரசியல் சட்டங்களுக்கு மேலாகத் தன்னுடைய மன சாட்சிக்குக் கட்டுப்பட்டவன் ஆவான். கொலைசெய்தல் கொடுமையான செயல் என்று அறிந்தும் மனவெழுச்சியால் அறிவிழந்து அக்கொடிய செயலுக்கு உட்படுகிறான். சூழ்நிலையே ஒருவனைக் குற்றவாளியாக ஆக்குகிறது. இதனை உணர்ந்த சபையோர் கொலைக்குற்றம் செய்தவர்களுக்குத் தாம் செய்த தவற்றை உணர்ந்து சிந்திக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்ற உயரிய கருது கோளை கொண்டிருந்ததை அறியமுடிகிறது. குற்றம் செய்தவனை மரணத்தின் மூலம் தண்டிப்பதை விட அவனைச் சீர்திருத்துவதில் தான் நீதியின் பெருமை நிலைநிறுத்தப்படுகிறது. குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்க விதியிருந்தும் 302 இ.பி.கோ வின் கீழ் ஆயுள்தண்டனையாக மாற்றி விதிப்பதற்கு ஒப்பாக இக்கல்வெட்டு தீர்ப்புகள் உள்ளன. காலம் தாழ்த்தினால் நியாயம் மறுக்கப்படுகிறது என்பர். கல்வெட்டுக்களில் காலம் தாழ்த்தப்படாமல் நீதி வழங்கிய முறை சிந்திக்க வைப்பதாக உள்ளது.
தீர்வுகள்:
வேண்டுமென்றே திட்டமிட்டுக் கொலை செய்தமை இன்றைய குற்றவியல் சட்டம் இ.பி.கோ 300 விதிக்குப்பொருந்த வாமனப்பட்டர் சத்தியநாவனால் கொலைசெய்யப் பெற்றான். மரணம் நேரிடும் என்று தெரிந்தே மரணம் நேரிடும் வகையில் ஈடுபட்டமை இன்றைய குற்றவியல் விதி இ.பி.கோ.299 விதிக்குப் பொருந்த சீராளனை அங்காடி பொற்றாமன் கொன்றது. இந்தியக் குற்றவியல் சட்டம் 350 பிரிவில் உடலைத் தாக்குதல் குற்றம் எனக் கூறப்பட்டுள்ளது. கோச்சாத்தன்காமன் அகமுடையாள் அரைமனைகோல்; எறிந்தது, வீர பாலன் அம்பு எய்ந்தது. கற்றளி என்னும் ஆறுவயது சிறுவனின் கையை வெட்டியது போன்ற நிகழ்வுகள் தற்செயலாக வேட்டையாடும்போதோ, சுடும்போதோ, நேரிடக் கூடிய மரணம் இன்றைய குற்றவியல் விதி இ.பி.கோ 304 சட்டப்பிரிவின் படி குற்றமாகும்.
முதலாம் பராந்தகனின் காலத்தில் ஊர் சபைகள் எவ்வாறு குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு இயங்கின என்பதை அவனது 19 மற்றும் 21 ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. முதல் கல்வெட்டு ஊர்ச்சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் என்னென்ன தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறுகின்றது. ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஊரில் நடக்கும் சபை தேர்தலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் தகுதி, விதிமுறைகள் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அவ்விதி முறைகளின் வீரியத் தன்மைகளை நோக்கும் போது, எந்த அளவுக்கு முந்தைய கால நிர்வாகத்தில் உறுப்பினர்கள் ஊழல் புரிந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது. இதனை உணர்ந்த அரசன் ஊழலை நிரந்தரமாகத் தடுக்கும் விதிகளை ஆராய்ந்து வகுத்தளித்துள்ளான். இதன்மூலம் கிராம நிர்வாகத்திலிருந்த ஊழலின் ஊற்றுக் கண்கள் முழுவதும் அடைக்கப்பட்டது எனலாம்.
முதலாம் பராந்தகனுக்குப் பின்பு இராஷ்டிரகூட மன்னன் கன்னரதேவனின் கட்டுப்பாட்டின் கீழ்வந்தது தொண்டைமண்டலம். திடீர் அரசியல் மாற்றத்தால் கிராம சபையில் ஊழல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகச் சபையோர் நீதி வழங்கும் முறைக்கான விதிமுறைகளை ஒழுங்கு படுத்தியுள்ளதை அறிய முடிகிறது. உத்திரமேரூரில் மகாசபை பேரம்பலத்தின் முன்புள்ள திண்ணையில் பகல் நேரத்தில் கூடி நீதி வழங்கியதையும், ஊர்சபையோர் எடுத்த சில முடிவுகள் பற்றியும் கன்னரதேவனின் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
· ஊர்சபையோரால் தண்டிக்கப்பெற்ற குற்றவாளிக்கு விதித்த தண்டத்தொகை அனைத்தையும் உடனே ஊர்சபை வசூல் செய்ய வேண்டும். வசூல் செய்த தொகையை அந்த ஆண்டே கிராமத்தை ஆட்சி செய்யும் பெருமக்கள் குழுவிடம் கணக்கைக் கொடுத்து பைசல் செய்யவேண்டும்.
· அவ்வாறு தண்டத்தொகை செலுத்த இயலாமல் தீர்வு பெறாத வழக்குகளைச் சபையோரைக் கொண்டு மீண்டும் தண்டம் விதிக்கச் செய்து முழுத்தொகையும் வசூல் செய்ய வேண்டும்.
· தண்டனை பெற்ற ஒருவன் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து தன் குற்றமின்மையை மெய்ப்பிக்க விரும்பினாலோ, வேறு சபையோரிடம் தன்னுடைய வழக்கை முறையிட்டு நீதி பெற விரும்பினாலோ, அதற்கும் அக்கிராம சபையினர் ஆவன செய்ய வேண்டும். அவ்வூர் நடுநிலையாளரையும், பாதுகாவலரையும் உடன் சேர்த்துப் பேசித் தண்டிக்கப்பெற்ற அதே ஆண்டிற்குள் அவ்வழக்கைத் தீர்த்து வைக்க வேண்டும்.
· தீர்வுபெறாத வழக்குகளை மீண்டும் சபையோரைக் கொண்டு உடனடியாக தீர்க்க வேண்டும்.
· இவ்வாறு கிராம காரியம் செய்வோர் செய்யாத நிலையில் அவர்களுடைய பதவியைப் பறித்து காணம் பொன் தண்டமிட்டனர். மேலும் எவ்வித அநீதிச் செயல்களும் நிகழாமல் வழக்கைத் தீர்த்துக் கொடுக்க உத்திரமேரூர் சபையோர் உறுதியளித்துள்ளனர்.
எனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளை உடனுக்குடன் விசாரணை செய்து தீர்ப்பதில் கிராமசபை உறுப்பினர்கள் எந்த அளவிற்கு விவேகத்துடன் செயல்படவேண்டும் என்பதை உத்திரமேரூர் கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது.
முடிவுரை:
தமிழக வரலாற்றில் இடைக்கால சோழர் காலமாகும், பராந்தக சோழனது காலத்திற்கு பிறகும், இராஜராஜனின் ஆரம்பக்காலத்திலும், சோழப் பேரரசின் இறுதி காலகட்டத்திலும், அதிகமாக ஊழல் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. பராந்தகனுக்குப் பிறகு கெடிலக்கரை வரையில் இராஷ்டிரகூடர்களின் ஆளுகையின் கீழ் தொண்டைநாடு சென்றது. இக்காலத்தில்தான் அப்பகுதியில் கிராமசபை, கோயில் நிர்வாகம், சதுர்வேதிமங்கலம், பிரமதேயங்களில் ஊழல்கள் மலிந்த நிகழ்வுகள் நடந்;தேறியுள்ளன. அதன் பிறகு முதலாம் இராஜராஜசோழன் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் நிலைமை சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் சோழப்பேரரசின் இறுதி நூற்றாண்டில் ஆட்சி செய்த வலிமை குன்றிய சோழவேந்தர்களின் காலத்தில் உள்ளாட்சி அமைப்பினர் எதேச்சைய அதிகாரம் பெற்றவர்களாகச் செயல்பட்டதை உணரமுடிகிறது. மேலும் 399 ஆண்டு சோழர்; ஆட்சியில் வலிமை மிக்க, வல்லமைபெற்ற தலைமையில் ஊழல், குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதையும் அறியமுடிகிறது.
குறிப்பு நூல் பட்டியல்:
1. தென்னிந்தியக் கல்வெட்டுகள், மடலம் VII
2. கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள், மடலம்; I
3. INSCRIPTIONS TEXTS OF THE PUDUKOTTAI STATE
4. ஜம்பை ஓர் ஆய்வு, தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை
5. தென்னிந்தியக் கல்வெட்டுகள், மடலம் XXII
6. கல்வெட்டு ஆண்டறிக்கை, மடலங்கள் 1914, 1918, 1927, 1939
7. அருண்மொழி ஆய்வுத் தொகுதி, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
8. ச.கிருஷ்ணமூர்த்தி, வரலாற்றில் எலவானாசூர்க்கோட்டை
9. தி.வை.சதாசிவப்பண்டாரத்தார், பிற்கால சோழர் வரலாறு
10. தென்னிந்தியக் கல்வெட்டுகள், மடலம் XVII
11. M.S. கோவிந்தசாமி, “அசோகரும் அவருடைய காலமும்”
தொடர்பு:
முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
உதவிப்பேராசிரியர், வரலாற்றுத்துறை
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி - தஞ்சாவூர்
No comments:
Post a Comment