Thursday, August 13, 2020

சொல்லாக்கியன் - கவிதைகள்

அகரமே எழுத்தெல்லாம்.. 

--சொல்லயாக்கியன்


எழுத்தெல்லாம் அகரமே! உலகெல்லாம் இறைமையே!
எழுத்தெல்லாம் அகரமே! உலகெல்லாம் இறைமையே!

அகரம் 
இதழிழுத்தால் இகரமாம் குவித்தாலோ உகரமாம்
இம்மூன்றும் உயிர்களிலே இணையில்லா சிகரமாம் 

முவ்வுயிர் சேர்ந்தேதாம் பிறவுயிர் முகிழ்த்ததாம்
குறிலென்றும் நெடிலென்றும் இருவகை எழுந்ததாம்

அகரமும் இகரமும் ஐகாரம் ஆனதாம்
அகரமும் உகரமும் ஔகார ஒகரமாம்

இகரமும் அகரமும் எகரம் ஆனதாம்
இகரம் அகரமே யகாரமாயும் போனதாம்
 
உகரம் அகரமோ வகாரமாய்ப் போனதாம்
யகரமும் வகரமும் உயிரினும் மெய்யாம்

அகரமும் ககரமும் ஆய்தம் சிலையாம்
ஆய்த எழுத்தாலே மெய்கள் நிலையாம்

உயிரின்றி மெய்யும் உருவாதல் பொய்யே 
உயிரும் மெய்யும் சேருமுயிர்  மெய்யே 

எனவே
எழுத்தெல்லாம் அகரமே! உலகெல்லாம் இறைமையே!
அகரமே எழுத்தெல்லாம், இறைமையே உலகெல்லாம்!



~~~*~~~*~~~
நண்பா!


"அடேய் மச்சான்!"
இனி, யாரைக் கூப்பிடுவேன்?

"அடேய் ஓய்!"
என, யாரென்னை அழைப்பார்கள்?

எத்தனைக் காலம்நம் நட்படா?
ஆண்டுக்கு, நாற்பத்து நான்கு
மனத்திற்கு, யுகங்களடா!

புத்தா
ஜேகேவை உன்னால்தான் அறிந்தேன்
கீதையையும் நீதானே தந்தாய்.

பாலமதி மலையில்
பால்நிலா ஒளியில்
வழிந்தோடும் ஓடையில்
சிலிர்த்தோடும் தென்றலில்
அல்லியின் நடனத்தில்
சில்லியின் இசைப்பில்
எவ்வளவு நேரம் இருப்போம்
அழகின் கவிதையை இரசிப்போம்
ஆ, அது அந்த காலமில்லை
நினைவிற்கு எல்லாம் நிகழ்காலமே!

தவறென்றால் யாராயினும் இடித்துரைப்பாய்
நன்றென்றால் வாயார போற்றிடுவாய்.
எதையும் தேக்காத வெள்ளம் நீ
எவர்க்கும் உதவிடும் உள்ளம் நீ

எவ்வளவு சோகத்தையும்
பேசியே போக்கிடுவாய்
சிரித்து சிரித்தே
அனைவரையும் சிரிக்க வைப்பாய்
என்ன மாயமடா அது?
உனக்கு மட்டும் எப்படி?

புதுப்புது செய்திகளைக் கொணர்வாய்
அதிலும் புதுமையைச் சேர்ப்பாய்
நம்பவே முடியாததையும் நம்பவைப்பாய்
நாவன்மை, உன் உடன்பிறப்பு!

நீ கடிதம் எழுதினால், 
அது கவிதையாய் இருக்கும்,
உரைநடையில் இருந்தாலும்
அன்பின் இசைமையால் 
மனதைப் பிசைந்துவிடும். 

மாணவர்களை விழிக்க வைக்கும் ஆசிரியராய்
சின்ன சொல்லதிர்ச்சியால்
மனதைத் திறக்க வைப்பாய்.

என்மனம் மிரண்டபோதும்
அறிவு இருண்டபோதும்
அருளொளியாய் வந்தவன் நீமட்டுந்தான்
இறையைப்போல்!
உன்னை நட்பாய் பெற்றது, என்வரம்
நீ இடையில் பிரிந்ததோ, சாபம்!

எத்தனையோ பேர்
வாழ்க்கையில் வருகிறார்கள் போகிறார்கள்
பெரிதாய் வலி தெரிவதில்லை.
ஆனால், வெகுசில நண்பரில் ஒருவன்..
போனால், உயிரே போனதுபோல்..
நெஞ்சம் அடைக்குதடா
தலையோ கனக்குதடா
கண்ணீர் பிதுங்குதடா
வெறுமை விழுங்குதடா

ஆம்
நட்பும் வினோதமானது!
காதலைப் போன்றே
நினைக்கவே சுகமானது
மறக்க முடியாத சோகமாவது!

ஒருவேளை..
திருமணம் மட்டுமல்ல,
நட்பும் சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றதோ?



~~~*~~~*~~~
யார் நாடு? 


உன் நாடா?
அப்படியென்றால், என் நாடு? எம் நாடு?
இவர் யாவரின் நாடு?

எம்மை அகதியாக்கவா உரிமைகள் தந்தோம்?
தேசாந்திரி ஆக்கவா அதிகாரம் தந்தோம்?

சுவிஸ் வங்கியின் கொள்ளைப் பணத்தை
மீட்பீர் என்றே நம்பி இருந்தோம்.
மல்லை நிரவைக் கொணர்வீர் என்றே
இதுநாள் வரையும் காத்து இருந்தோம்.

அண்டை நாட்டொடு நட்பைத் தொடர்வீர்
அந்நியச் செலாவணி பெருக்கச் செய்வீர்
உலக நாட்டிடை இந்தியாவை உயர்த்துவீர்
என்றெல்லாம்... கனவுகள் கண்டோம்.

கல்வித்தரம் உயரும் உடல்நலமும் பெருகும்
விவசாயம் தழைக்கும் தொழில்வளம் கொழிக்கும்
வேலைகள் வாய்க்கும் வறுமைகள் பொய்க்கும்
என்றெல்லாம்...மாய்மாலம் காட்டினீர்.

நடந்தது என்ன? நடப்பது என்ன?

முதலைக்கே பணத்தைக் கடனாக தந்தீர்
அனாமதேய சான்றிதழால் கட்சியைப் பெருத்தீர்
மாநிலம் தவறாமல் குதிரைபேரம் செய்வீர்
சாணக்கியத் தந்திரமென மார்தட்டிக் கொள்வீர்.

நட்பான நாடுகளும் கசப்பென்றே ஒடுதே
இந்தியப் பொருளென சந்தையில் இல்லையே
உலகுசுற்றல் மிச்சம் பெற்றதோ அற்பம்
கனவுகள் எல்லாம் தவிட்டுப் பொடியோ?

பாரபட்சக் கல்வி, கொள்ளைநோய் அறியாமை
நீராண்மைக் கோளாறு, தனியார் ஆயுதங்கள்
வெறிகளே வேலைகள், விசுவாசமே மாலைகள்
காவலே களவாகும், ஆவலால் கொலையாகும்.

காத்தலும் இல்லை, ஈட்டலும் இல்லை
வகுத்தலும் இல்லை, பின்,  எதற்குத்தான் ஆட்சி?!



~~~*~~~*~~~
போற்றுதும்...ஏற்றுதும்... 


ஞாயிறு தூற்றுவர் ஞாயிறு தூற்றுவர்
சூரிய வெம்மை முதுகென்பில காய்தலால்!

திங்களைத் தூற்றுவர் திங்களைத் தூற்றுவர்
நிலவின் தண்மை அகவன்பில தோய்தலால்!

செம்புலமும் கருந்திணையும் வெடித்துச் சிதறுதே
தேங்கிய அணையாவும் உடைந்துச் சரியுதே

முடையின் நாற்றம் மூக்கிலும் நாக்கிலும்
மதவெறித் தீண்டல் நோக்கிலும் வாக்கிலும்

இரணத்தின் வேதமும் மரணத்தின் ஓலமும்
காதுகள் துளைக்க இருளுதென் நாடே!

அறத்தை மறந்தோம், மறத்தையும் துறந்தோம்
பயமதைப் போர்த்தி விதிக்குள் புதைந்தோம்.

எழுகாயோ என் காடே!
எழுப்பாயோ புது நாடே!

பெண்டிர் போற்றுதும் பெண்டிர் போற்றுதும்
பிள்ளைகள் காக்கவே பெண்டிர் எழுகவே!

மாணவர் போற்றுதும் மாணவர் போற்றுதும்
மாயைகள் போக்கி விழிக்கவே கொதிக்கவே!

இளைஞர் ஏற்றுதும் இளைஞர் ஏற்றுதும்
சேவையும் தியாகமும் காலத்தின் தேவையே!

எழுகிறதே என் காடு!
வருகிறதே புது நாடு!



~~~*~~~*~~~

No comments:

Post a Comment