Friday, December 28, 2018

சங்க இலக்கியத்தில் திதலை

—  முனைவர்.ப.பாண்டியராஜா


1. முதலில் திதலை என்றால் என்னவென்று பார்ப்போம்.

வேப்பு நனை அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு
இரை தேர் வெண்_குருகு அஞ்சி அயலது
ஒலித்த பகன்றை இரும் சேற்று அள்ளல்
திதலையின் வரிப்ப ஓடி விரைந்து தன்
நீர் மலி மண் அளை செறியும் - அகம் 8-12

இதன் பொருள்:
வேம்பின் அரும்பினைப் போன்ற நீண்ட கண்ணினையுடைய நீர் நண்டானது
இரையினைத் தேடித்திரியும் வெள்ளைக் கொக்குக்கு அஞ்சி, அருகிலிருக்கும்
தழைத்த பகன்றையினை உடைய கரிய சேறும் சகதியுமாய் இருக்கும் தரையில்
திதலையைப் போன்று வரிகள் உண்டாக ஓடி, விரைவாகச் சென்று, தன்
ஈரம் மிக்க மண் வளையுள் பதுங்கிக்கொள்ளும்.

இங்குள்ள ஒவ்வொரு சொல்லையும் உற்றுப்பார்க்கவேண்டும்.

நண்டுக்கு ஒரு பக்கத்துக்கு நான்கு என மொத்தம் எட்டுக்கால்கள் உண்டு. அவற்றைத் தவிர இரண்டு கவட்டைபாய்ந்த முன்னங்கைகளும் உண்டு. இவற்றின் நுனியில் கூரான நகங்கள் உண்டு. இந்த நண்டு, முன்னால், பின்னால், பக்கவாட்டில் என்று எத்திசையிலும் செல்லக்கூடியது. இது நடப்பதோ சேற்று அள்ளல், அதாவது குழைசேறு. வைத்தவுடன் கூரான நகங்கள் பொதக்கென்று ஆழ்ந்துவிடும். இது ஒரு இரைதேடும் கொக்கைக்கண்டு அஞ்சி ஓடுகிறது. எனவே வளைந்து வளைந்துசெல்லாமல் நேராக ஓடித் தன் வளைக்குள் புகுந்துவிடும். அப்போது அந்தக் கால்கள் ஏற்படுத்தும் தடத்தைக் கற்பனை செய்து பாருங்கள். நகங்கள் சேற்றில் ஆழும்போது அவை ஏற்படுத்தும் பலவான புள்ளிகள். அந்த நகங்களை விரைவாக எடுத்து முன்னே வைக்கும்போது ஏற்படும் சிறிய நேர்கோடுகள், அந்தப் புள்ளிகளை இணைத்தவாறு செல்லும். அதுவே திதலை.

இந்தப் படம் இதனை ஓரளவு விளக்கும்.



2. இத்தகைய புள்ளிகளாகிய வரி போன்ற அமைப்பு பெண்களின் மேனியில் அரும்புகின்றது என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை
வார்ந்து இலங்கு வால் எயிற்று பொலிந்த தாஅர்
சில் வளை பல் கூந்தலளே அவளே - நற் 198/6-8

இதன் பொருள்:
வரிகள் பொருந்திய உயர்ந்துநிற்கும் அல்குலில் அரும்பிய திதலையும்
நேராக விளங்கும் வெண்மையான பற்களும், அழகுள்ள மாலையும்,
ஒருசில வளையல்களும், நிறைந்த கூந்தலும் உடையவள் அவள்;
அரும்புதல் என்பது முகிழ்த்து உருவாதல்.


3. இந்தத் திதலை பெண்களின் மேனியில் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்று பார்ப்போம்.

3.1
பொன் உரை கடுக்கும் திதலையர் - திரு 145

என்கிறது திருமுருகாற்றுப்படை, இதற்குப் பொன்னை உரைத்துப்பார்க்குபோது ஏற்படும் தடம் போன்ற திதலையையுடையவர் என்பது பொருள்:

பொன்னை எவரும் நேர்கோட்டில்தான் உரைத்துப்பார்ப்பர். அந்த உரைகல் சொரசொரப்பானது. அதில் பொன்னைத் தேய்க்குப்போது புள்ளிகளாலாகிய ஒரு நேர்கோடு உருவாகும். மேலும் உண்மையான தங்கமாயிருந்தால் மினுமினுக்கும். எனவே மினுமினுப்புடன் கூடிய புள்ளிகளாலான கோடுகளின் அமைப்பே திதலை என்றாகிறது.



3.2
மாவின்
தளிர் ஏர் அன்ன மேனி, தளிர் புறத்து
ஈர்க்கின் அரும்பிய திதலையர் - மது 706-708

என்கிறது மதுரைக்காஞ்சி. இதன் பொருள்:

மாமரத்தின்
தளிரினது அழகை ஒத்த நிறத்தினையும், தளிரினது புறத்தில்
ஈர்க்குப்போலத் தோன்றிய திதலையையும் உடையர்
வெற்றிலையை நீளவாக்கில் மடித்தால் வெளிப்புறத்தில் ஒரு நீண்ட காம்பு தெரியுமல்லவா! அதுதான் ஈர்க்கு. அதைப்போன்ற மாந்தளிரின் ஈர்க்கு போன்றதாம் இந்தத் திதலை. பொதுவாக மாந்தளிரின் நிறத்தைப் பெண்களின் மேனி நிறத்துக்கு ஒப்பிடுவர். அந்தத் தளிரின் ஈர்க்குப் போன்றதாம் பெண்களின் தளிர் மேனியில் தோன்றும் திதலை.
இந்த ஈர்க்கு, பொன்னிறத்தில் நீண்டு இருப்பதைப் படத்தில் பாருங்கள்.


3.3
மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல்
ஆய் இதழ் பன் மலர் ஐய கொங்கு உறைத்தர - கலி 29/7,8

என்கிறது கலித்தொகை. இதற்கு, மா மரம் துளிர்விட்ட தளிரின் மேல், மாமை நிற மகளிரின் அழகுத் தேமல் போல, என்பது பொருள்:

அழகிய இதழ்களைக் கொண்ட பலவான மலர்களின் மென்மையான மகரந்தப்பொடிகள் படிந்திருக்க, மாநிற மகளிரின் மேனியில் திதலையானது, மாந்தளிரின் மேல் மாம்பூக்களின் மகரந்தப்பொடிகள் உதிர்ந்துகிடப்பது போன்று இருப்பதாகக் கலித்தொகை குறிப்பிடுகிறது.

எந்த மரத்தின் பூவாக இருந்தாலும் அதன் தாது பொன்னிறத்தில்தான் இருக்கும்.

இந்த மாந்தளிர்கள் தொங்கியபடி இருப்பதை மேலுள்ள படம் காண்பிக்கிறது. அதன் மீது உதிர்ந்த பூந்தாதுக்கள் சரிந்து துகள்களாலான ஒரு நேர்கோடாகப் பொன்னிறத்தில் மின்னிக்கொண்டிருக்கும் அல்லவா! அதுவே திதலை.


4. இந்தத் திதலை பெண்களின் மேனியில் எங்கெங்கு தோன்றுகின்றன என்பதையும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

4.1
திதலையைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் 29 இடங்களில் காணப்படுகின்றன. அவற்றில் 15 இடங்களில் திதலை என்பது அல்குலில் காணப்படுவதாகக் குறிப்புகள் உள்ளன. அவற்றில் 13 இடங்களில் திதலை அல்குல் என்ற தொடர் இடம்பெற்றுள்ளது.

அவற்றில் சில....

திதலை அல்குல் முது பெண்டு ஆகி - நற் 370/6
திதலை அல்குல் என் மாமை கவினே - குறு 27/5
திதலை அல்குல் நின் மகள் - ஐங் 29/4
திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் - ஐங் 72/2
திதலை அல்குல் எம் காதலி - அகம் 54/21

இங்கே அல்குல் என்பது பெண்குறி என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. அல்குல் என்பது இடுப்புக்குச் சற்றே கீழ் உள்ள பகுதி. அது இடுப்பைச் சுற்றி எந்த இடமாகவேண்டுமானாலும் இருக்கலாம்.

கொள்வீர் அல்குல் ஓர் கோவணம் - தேவா-சம்:582/2
(பொருள்: அரையிற் கோவணம் உடுத்தியவராய் விளங்கும் கள்வரே)

என்கிற சம்பந்தர் தேவாரத்தில் அல்குலில் கோவணம் அணிந்தவராக இறைவனை விளிக்கிறார் சம்பந்தர்.

இடுப்பில் கயிறுகட்டி, அதில் கோவணத்தைச் செருகி, முன்பக்க மானத்தை மறைத்துப் பின்பக்கமாக இழுத்துப் புட்டத்திற்கு மேலே செருகியிருப்பர். எனவே, அல்குல் என்பது அடிவயிறு, அல்லது அடிமுதுகு என்றாகிறது.

திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் - ஐங் 72/2

என்ற அடி, அல்குலில் கூந்தல் கிடந்து அசையும் என்கிறது. குட்டையான கூந்தல் முதுகில் கிடந்து அசைவதைப் பற்றி யாரும் பாராட்டிப்பேசமாட்டார்கள். நீண்ட கூந்தல் முதுகுக்கும் கீழே தொங்கி, இடுப்புக்கும் கீழே எழுந்துநிற்கும் புட்டத்தின் மேல் பட்டு, நடக்கும்போது முன்னும் பின்னும், பக்கவாட்டிலும் அசைவதே துயல்வருதல்.  இதைத்தான்

கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை - நற் 198/6

என்கிறது நற்றிணை. எனவே அல்குல் பெரும்பாலும் பெண்களின் இடுப்புக்குக் கீழான பின்புறம் என்பதே சரி எனப்படுகிறது.

எனவே, மிகப்பெரும்பாலும் பெண்களின் அடிஇடுப்பைச் சுற்றி அல்குல் அரும்புவதாக அறிகிறோம்.

4.2
அடுத்து, திதலை என்பது பெண்களின் மார்புப்பகுதியிலும் காணப்படும் என்கின்றன இலக்கியங்கள்.

திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற
புதல்வன் புல்லி புனிறு நாறும்மே - நற் 380/3,4

என்கிறது நற்றிணை. இதன் பொருள்:
தேமல் படிந்த மென்மையான கொங்கைகளின் இனிய பால் சுரந்து வழிய
புதல்வனை அணைத்துக்கொள்வதால் புனிற்றுப் புலவு நாறுகின்றது;

புதல்வன் தடுத்த பாலொடு தடைஇ
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை - அகம் 26/12,13

என்கிறது அகநானூறு. இதன் பொருள்:
புதல்வனுக்கே திகட்டும் பாலுடன் சரிந்து
அழகுத் தேமலை அணிந்த இனிமை கொண்ட மெல்லிய கொங்கைகள்

என்ற அடிகளால், பிள்ளைபெற்ற பெண்களின் மார்புப்பகுதியில் திதலை அரும்புவதாக அறிகிறோம்.

திதலை செய் பூண் முலை மங்கை_பங்கா என் சிவகதியே - திருவா:6 41/4

என்ற திருவாசக அடியும் இதனை உறுதிப்படுத்தும்.

4.3
அடுத்து, பெண்களின் வயிற்றுப்பகுதியிலும் திதலை அரும்புவதாக அறிகிறோம்.

புதல்வன் பயந்த திதலை அம் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி - அகம் 86/11,12

என்கிற அகநானூற்று அடிகளுக்கு,

மகனைப் பெற்ற திதலையையுடைய அழகிய வயிற்றினையுடைய
தூய அணிகலன்களையுடைய மகளிர் நால்வர் கூடிநின்று
என்று பொருள்.

வரி கிளர் பணை தோள் வயிறு அணி திதலை
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில் - அகம் 245/8,9
(பொருள்: வரி விளங்கும் பருத்த தோளினையும், வயிற்றில் அணிந்த திதலையையும் உடைய கள்விற்கும் மகளிர், இருக்கின்ற மனையகத்தில்)

என்ற அகநானூற்று அடிகள் இதற்குச் சான்று பகர்கின்றன. இந்த மகளிர் பிள்ளைபெற்று பலநாட்கள் ஆனவர்கள்.

பசலை பாய்ந்த திதலை தித்தி
அசைந்த அம் வயிறு அடைய தாழ்ந்த - உஞ்ஞை 43/128,129

திதலை அம் வயிறு அங்கையின் அதுக்கி - உஞ்ஞை 44/25

என்ற பெருங்கதை அடிகளும் இதனை மெய்ப்பிக்கின்றன.


5. அடுத்து எவ்வகைப் பெண்களுக்கு இந்தத் திதலை அரும்பும் என்று காண்போம்.

5.1
முதலாவதாக, பேறுகாலத்துக்குச் சற்றுப்பிந்திய பெண்களுக்கு மார்பில் இந்தத் திதலை அரும்பும் என்று முன்னர்க் கண்டோம்.

5.2
அடுத்து, பிள்ளை பெற்றுச் சில ஆண்டுகளான பெண்களுக்கு வயிற்றில் இந்தத் திதலை அரும்பும் என்றும் முன்னர்க் கண்டோம்.

5.3
புதல்வன் ஈன்று என பெயர் பெயர்த்து அம் வரி
திதலை அல்குல் முது பெண்டு ஆகி - நற் 370/5,6
(பொருள்: புதல்வனை ஈன்றதனால் தாய் என்னும் வேறொரு பெயரைப் பெற்று, அழகிய வரிகளையுடைய திதலையை உடைய அல்குலுடன் முதுபெண் ஆகி)

என்ற அடிகள் ஈன்று அண்மைத்தான பெண்களுக்கு அல்குலிலும் திதலை தோன்றும் என்று உணர்த்துகின்றன. இங்கு, அம் வரி திதலை என்ற சொற்கள், திதலை என்பது (பொன்னைத் தேய்த்த) அழகிய கோடு போன்றது என்று நாம் கண்டதை உறுதிசெய்கின்றது.

5.4
திதலை அல்குல் பெரும் தோள் குறு_மகட்கு - நற் 6/4

திதலை அல்குல் குறு_மகள் - நற் 77/11

திதலை அல்குல் குறு_மகள் அவனொடு
சென்று பிறள் ஆகிய அளவை - அகம் 189/9,10

என்ற அடிகளில் காணப்படும்  குறுமகள் என்பது இளம்பெண்ணைக் குறிக்கும். இவள் திருமணப்பருவத்து இளம்பெண்.

இவளது அல்குலிலும் திதலை தோன்றும் என அறிகிறோம்.


6. அடுத்து, இந்தத் திதலை என்பது மகளிரின் மேனிக்கு அழகுசேர்ப்பது என்றும், பாராட்டப்படுவது என்றும் இலக்கியங்கள் பகர்கின்றன.

கண்ணும் தோளும் தண் நறும் கதுப்பும்
திதலை அல்குலும் பல பாராட்டி
நெருநலும் இவணர்-மன்னே - நற் 84/1-3

இதன் பொருள்:
என் கண்ணையும், தோளையும், குளிர்ச்சியான நறிய கூந்தலையும்
திதலை படர்ந்த அல்குலையும் பலவாறு பாராட்டி
நேற்றுக்கூட இவ்விடம் இருந்தார், நிச்சயமாக

கடல் ஆடு வியல் இடை பேர் அணி பொலிந்த
திதலை அல்குல் நலம் பாராட்டிய
வருமே தோழி வார் மணல் சேர்ப்பன் - நற் 307/3-5

இதன் பொருள்:
கடலாட்டுவிழா நடைபெறும் அகன்ற இடத்தில், பெருமைமிக்க அணிகளால் பொலிவுபெற்ற உன் தேமல் படர்ந்த அல்குலின் அழகைப் பாராட்டுவதற்கு வருகின்றான் தோழி! நீண்ட மணல் பரந்த நெய்தல் நிலத் தலைவன்!

காதல்கொண்ட தலைவர்களால், இந்தத் திதலை பாராட்டப்படுவது மட்டுமன்று. காதல்வயப்பட்டு, பிரிவுத்துன்பத்தால் வாடும் தலைவிகளும் பிரிவால் வாடும் தம் கவின்பெறு திதலையை எண்ணிப் பெருமூச்சு விடுவதும் உண்டு எனக் காண்கிறோம்.

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமை கவினே - குறு 27

இதன் பொருள்:
கன்றும் உண்ணாமல், பாத்திரத்திலும் வீழாமல்
நல்ல பசுவின் இனிய பால் நிலத்தில் சிந்தியதைப் போல்
எனக்கும் பயன்படாமல், என் தலைவனுக்கும் இன்பம் செய்யாமல்,
பசலைநோய் உண்பதை விரும்பும்
திதலை படர்ந்த என் அழகிய பின்புறத்தின் மாந்தளிர் போன்ற அழகினை.


7.  அடுத்து, திதலை என்பது ஆகுபெயராகவோ, ஒப்புப்பொருளாகவோ பெண்களின் மேனி சார்ந்ததாக இல்லாமலும் சங்க இலக்கியத்தில் ஓரிடத்தில் வருவதைக் காண்கிறோம்.

திதலை எஃகின் சேந்தன் தந்தை
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி - நற் 190/3,4

புள்ளிகள் படர்ந்த வேலையுமுடைய சேந்தன் என்பானின் தந்தையாகிய, தேன் கமழ்கின்ற விரிந்த மலராலான மாலையையும், சிறப்பாகச் செய்யப்பட்ட தேரையும் உடைய அழிசி என்பது இதன் பொருள்.

பற்பல காரணங்களால், பெண்களின் மேனியில் காணப்படும் பொன்னிற மாற்றம்தான் திதலை என்றிருக்க, ஒரு வேலுக்கு எவ்வாறு திதலை அரும்பும்?

இங்கே, திதலை எஃகின் என்ற தொடரை, தீத்தலை எஃகின் என்று பாடம் கொள்வார் ஔவை துரைசாமியார். ஆனால்,

மிகப் பல ஆசிரியர்கள் திதலை எஃகின் என்றே பாடம் கொண்டு தேமல் படர்ந்த வேல் என்று பொருள் கொள்கின்றனர்.

சிலவகை இரும்புகளைத் தேய்க்கும்போது புள்ளிகளோடு கூடிய வரிகள் தோன்றலாம். ஆனால் அதனைப் புலவர் விதந்து குறிப்பிடுவது ஏன்? பகைவரைக் குத்தியதால் வேலில் பட்ட குருதி வழிந்த தடம் துடைக்கப்படாமல் காய்ந்துபோய், பொன் உரை போலத் தோன்றுவதால் அதனையும் திதலை எஃகு என்கிறார் புலவர் என்று ஓர் அருமையான விளக்கம் தருகிறார் புலியூர்க்கேசிகனார்.

இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டி
கண் திரள் நோன் காழ் திருத்தி நெய் அணிந்து
கடி உடை வியன் நகரவ்வே அவ்வே
பகைவர் குத்தி கோடு நுதி சிதைந்து
கொல் துறை குற்றில மாதோ என்றும்
உண்டு ஆயின் பதம் கொடுத்து
இல் ஆயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல் எம் கோமான் வை நுதி வேலே - புறம் 95

என்ற ஔவையின் பாடல் நினைவுக்கு வருகிறதல்லவா?

இதுகாறும் கண்டவற்றால், திதலை என்பது பெண்களின் மேனியில் சின்னஞ்சிறு பொன்னிறப் புள்ளிகளால் ஏற்பட்ட வரிவரியான அமைப்பு என்பது தெரிய வருகிறது.

இதனை,
 1. தேமல்., Yellow spots on the skin, considered beautiful in women;
 2. ஈன்ற பெண்களுக்குள்ள வெளுப்பு நிறம். Pale complexion of women after confinement;
என்கிறது தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon).




தொடர்பு: முனைவர்.ப.பாண்டியராஜா
pipiraja@gmail.com
http://sangacholai.in
tamilconcordance.in/



1 comment:

  1. நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்! நன்றி!

    ReplyDelete