— முனைவர் க.சுபாஷிணி
தோல்பாவை கூத்து தமிழகத்தின் பாரம்பரியக் கூத்துக் கலைகளில் ஒன்று. இந்தியாவின் பல இடங்களில் இக்கலை வழக்கில் இருக்கின்றது. இந்தியா தவிர்த்து கிழக்காசிய நாடுகளான மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் கூத்துக் கலை இன்றும் மக்களின் பண்பாட்டுக் கூறுகளில் கலந்து போன முக்கிய கலையாகவும் பெரும்பாலான பண்பாட்டு விழாக்களில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளையும் காண்கின்றோம். இப்படி ஆசிய நாடுகளில் பல இடங்களில் வழக்கில் இருக்கும் தோல்பாவை கூத்து எனும் இக்கலை எவ்வாறு தமிழகக் கலைகளில் ஒன்றாகத் திகழ்கின்றது என்பதை ஆராய வேண்டிய அவசியம் உள்ளது. இக்கலையைப் பற்றிய நீண்ட கால ஆய்வுகளைச் செய்தவரும், தமிழக நாட்டார் வழக்காற்றியல் துறை ஆய்வாளரும், அறிஞர் அண்ணா கல்லூரி தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான முனைவர்.அ.கா.பெருமாள் அவர்களோடு உரையாடி தோல்பாவை தொடர்பான செய்திகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை பதிவிற்காக கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாத வாக்கில் சென்றிருந்தேன். அச்சந்திப்பில் செய்யப்பட்ட பதிவுகள் விழியப் பதிவுகளாக டிசம்பர் மாத மண்ணின் குரல் வெளியீடுகளாக இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டன.
பகுதி 1- https://youtu.be/7RWy9M70B2g
முனைவர்.அ.கா.பெருமாள் அவர்களுடனான பேட்டி
பகுதி 2 - https://youtu.be/XmqcsZ9BiNo
ஒரு தோற்பாவைக்கூத்துக் கலைஞரின் வாழ்க்கை
தமிழக நாட்டார் வழக்காற்றியல் துறை ஆய்வுகளில் தவிர்க்க முடியாத பெயர் முனைவர் அ.க.பெருமாள். 75 நூல்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், விரிவான நீண்ட கால கள ஆய்வுப் பணி அனுபவங்கள் எனத் தொடர்ச்சியாக நாட்டார் வழக்காற்றியல் துறையில் இவரது பங்களிப்பு அமைந்திருக்கின்றது. இவரது களப்பணிகளின் பயனாக இவரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்களும் கலைக்களஞ்சியங்களும் இத்துறையில் ஆய்வு செய்ய விரும்பும் ஒவ்வொரு ஆய்வு மாணவருக்கும் மிகப் பயனுள்ள ஆவணமாக அமைகின்றன. அத்தகை நூல்களில் தோல்பாவை கூத்து தொடர்பான ஆய்வுகளை முன்னிறுத்தி தனது களப்பணி அனுபவங்களின் வழி திரட்டிய செய்திகளைத் தொகுத்து தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து எனும் நூலினை இவர் எழுதியுள்ளார். காவ்யா பதிப்பகத்தின் வெளியீடாக இந்த நூல் வெளிவந்துள்ளது.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, தமிழகம் ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக இக்கலை இருந்துள்ளது என்பதை அறிகின்றோம். தமிழகத்தை எடுத்துக் கொண்டால் தோல்பாவை கூத்து தஞ்சாவூர், நாகர் கோயில் ஆகிய பகுதிகளில் பெருவாரியாக மக்கள் கலையாக இருந்தது என்பதை அறிய முடிகின்றது. ஆனால் இன்றோ தமிழகத்தில் மிக அருகிப்போய்க்கொண்டிருக்கும் கலைகளில் ஒன்றாக இக்கலை மாறி வருகின்றது.
தோல்பாவை கூத்தில் இடம்பெறும் உருவ பொம்மைகள் ஆட்டுத் தோலினால் உருவாக்கப்படுகின்றன. மாட்டுத்தோல் விளக்கின் ஒளி ஊடுருவிச் செல்ல உதவாது என்பதால் ஆட்டுத்தோல் பயன்பாடுதான் இவ்வுருவ பொம்மைகளைச் செய்ய ஏதுவானதாக அமைகின்றன. ஆரம்பக்காலத்தில் மான்தோலையும் இவ்வுருவ பொம்மைகளைத் தயாரிக்கப் பயன்படுத்தியிருக்கின்றார்கள். இன்று பதப்படுத்தப்பட்ட ஆட்டுத்தோல் கடைகளில் எளிதாகக் கிடைப்பதால் புதிய தோல்பாவை பொம்மைகளை உருவாக்குவது என்பது சற்று எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
தோல்பாவைக்கூத்தில் முக்கிய கதைக்களமாக எடுத்தாளப்படும் கதைகள் இந்திய நாட்டில் பெருவாரியாக அறியப்பட்ட ராமாயண, மகாபாரதக் கதைகளே. இவற்றோடு இன்று சமூக சூழலை மையப்படுத்தி மக்களுக்குத் தேவையான கருத்துக்களை எடுத்துச் செல்லும் சாதனமாகவும் தோல்பாவைக் கூத்துக் கலையைக் காண்கின்றோம். இத்தகைய புதிய கருத்தாக்கங்களை வழங்கி நாகர்கோயில் பகுதியில் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களை ஊக்குவித்து வரும் முனைவர் அ.க. பெருமாள் அவர்களின் பங்கு தமிழர் பண்பாட்டு ஆய்வுப் பாதையில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
தோல்பாவைக் கூத்துக் கலையைத் தமிழகத்தின் நாகர் கோயில் பகுதியில் தொழிலாகச் செய்து வரும் கலைஞர் ஒருவரையும் எனது அப்பயணத்தில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது.
பரம்பரை பரம்பரையாக ஏழாவது தலைமுறையாக இந்தக் கலையைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றார் இக்கலைஞர். மராட்டிய பின்புலத்தைக் கொண்ட இவர்களது குடும்பத்தார், சரபோஜி மன்னர் காலத்தில் தமிழக நிலப்பகுதிக்கு வந்து வாழ்ந்து வரும் கணிகர் சமூகத்தில் உள்ள 12 பிரிவுகளில் ஒரு பிரிவினைச் சார்ந்தவர்கள்.
இவரது தோல்பாவை கூத்து பாணியில் ராமாயண கதைகளே முக்கியக் கதைக்களமாக அமைகின்றன. ராமாயணத்தில் உள்ள நகைச்சுவை கதைகளை எளியச் சொற்களில் பாடல்களாக்கி தங்கள் கூத்து நிகழ்ச்சிகளில் பாடுகின்றனர். இன்றைய காலச் சூழலில் மக்களின் இரசனைப்போக்கிற்கு ஏற்றவகையில் திரைப்படத் துறைகளில் பிரபலமான சில பாடல்களையும் தமது பாடல்களில் இணைத்துக் கொள்கின்றனர்.
சமகால சமூக நலன் தொடர்பான கருத்தாக்கங்களை உட்புகுத்தி புதிய வடிவங்களில் தோல்பாவை கூத்து நடத்துவதும் இன்று வழக்கில் வந்துள்ளது.
“பா கூத்து” என்று அடிப்படையில் வழக்கில் இருந்து பின்னர் தோல் பொம்மைகள் உட்புகுத்தப்பட்ட பின்னர் “தோல்பாவை கூத்து” எனப் பரிமாணம் பெறுகின்றது இக்கலை.
ஆய்வாளர் முனைவர்.அ.க.பெருமாள் அவர்களின் வழிகாட்டுதலில் புதுமையான முயற்சிகளையும் உட்புகுத்தி புதிய கதை வடிவங்களை தமது தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சிகளில் நடத்திக் கொண்டிருக்கின்றார்.
சமூக விழிப்புணர்வு சார்ந்த கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையிலும் இன்று தோல்பாவை கூத்துக் கலை தொடர்கின்றது.
இக்கலைஞர்களில் பெரும்பாலோர் பொருளாதார ரீதியாக பெரும் சிரமத்திற்குள் வாழும் நிலையே தொடர்கின்றது. கால ஓட்டத்தில் தோல்பாவை கூத்துக் கலைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. எட்டாவது தலைமுறையான இக்கலைஞரின் மகனது காலத்திலேயே இக்கலையைத் தொழிலாக ஏற்கும் வழக்கம் இல்லாது போய்விட்ட நிலை தான் கண்கூடு.
குடும்பக் கலையாக இத்தகைய கலைகள் தொடர்வது என்பது இக்காலச் சூழலில் பொருந்தாது. குலக்கல்வி என்பது ஒரு சாரரை தனித்து ஒதுக்கி சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மக்களைப் பின்தங்கச்செய்யும் அபாயம் இருக்கின்றது என்பதை உணரவேண்டியதும் அவசியமாகின்றது. தோல்பாவை கூத்து போன்ற மக்கள் கலைகள் மீட்கப்பட வேண்டுமென்றால் அவற்றிற்குத் தகுந்த சமூக அங்கீகாரம் என்பது கிடைக்க வேண்டும். பள்ளிக்கூடங்களிலும், கலைக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இக்கலை ஒரு பாடமாக அமைக்கப்பட வேண்டும். மக்கள் மனதிலிருந்து படிப்படியாக மறையும் இவ்வகைக் கலைகளை மீட்டெடுக்க இதுவே ஆக்கப்பூர்வமான ஒரு வழியாக அமையும்.
தொடர்பு: முனைவர் க.சுபாஷிணி (ksubashini@gmail.com)

No comments:
Post a Comment