Friday, August 19, 2016

கழுந்திரட்டு - வழிபாடு

கழுந்திரட்டு - வழிபாடு
முனைவர் வே.கட்டளை கைலாசம் 



தமிழ்நாட்டில் நாட்டார் தெய்வ வழிபாட்டில் இரண்டு நிலைகளைக் காணமுடிகிறது. ஒன்று, தாமே பூமியில் வந்து பிறந்து அருள்செய்யும் தெய்வங்கள் மற்றது இறந்தவர்கள் தெய்வமாக்கப்படுவது. தற்கொலை,கொலை,விபத்து,வீரமரணம் போன்ற நிலைகளில் இறந்தவர்களுக்குக் கோயில்கட்டி வழிபடுகின்றனர். இத்தெய்வங்கள் நாட்டார் தெய்வங்கள்,கிராம தேவதைகள்,சிறுதெய்வங்கள் எனப் பலவாறு அழைக்கப்படுகின்றன.இவற்றின் வழிபாட்டு முறைகள் தனித்தன்மை வாய்ந்தவை. “கழுந்திரட்டு” அல்லது “கீழுவடி” வழிபாடு என்பது இறந்த ஒரு வீரனின் வழிபாடாகும்.   

கழுந்திரட்டு வீரன் கதைகள்: சாத்தான்குளம் பகுதியில் கன ஆய்வு மேற்கொண்டபொழுது கழுந்திரட்டுப் பற்றிய கதைகளை அறியமுடிந்தது. அக்கதைகள் யாவும் கழு ஏற்றப்பட்ட ஒரு வீரனின் வரலாறாக உள்ளன. 
1. சாத்தாவி நல்லூரைக் கடம்பராஜா என்பவர் ஆண்டு வந்தார்.அவரது அரசவையில் இருந்த அழகான வீரன் ஒருவன், அரசனின் மகள் மீது காதல் கொண்டான். இளவரசியைக் கற்பழித்தான் என்று அரசனால், கழு ஏற்றப்பட்டான்.கழுவில் நின்ற அவன் தெய்வமாகிவிட்டான்.  

    2. திருக்களூரில் பிறந்த உடையார் தென்காசி மன்னன் சீவலமார்பனின் நம்பிக்கைக்கு உரிய வீரனாகத் திகழ்ந்தான். மன்னன் அவன்மீது மிகுந்த பற்றுடையவராக இருந்தார். இதனால் பொறாமை கொண்ட அமைச்சர்கள் அரசன் எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளன்று அவரது முத்திரை மோதிரத்தை உடையாரின் உடைவாள் உரையில் சூழ்ச்சியாக வைத்துவிட்டனர். உடையார் குற்றம் சாட்டப்பட்டு கழு ஏற்றப்பட்டார். அவர் தெய்வமானார். 3. டாக்டர். தி.நடராசன் "உடையார் கதை" என்ற வில்லுப்பாடலை பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
              திருநெல்வேலி மாவட்டம் திருக்களூர் என்னும் கிராமத்தில் சங்கரமூர்த்திக் கரையாளர், தன்னப்பெத்தாள் இருவரும் திருமணம் ஆகிப் பலவாண்டு காலம் குழந்தையின்றி இருந்தனர். திருக்களூர் கோவிலுக்குத் 
திருவிழா நடத்தி "உடையார்" என்ற மகனைப் பெற்றனர். பூச நட்சத்திரத்தில் பிறந்த அவன் மோதிரம் ஒன்றால் இறப்பான் எனச் சோதிடம் மூலம் அறிந்தனர். பல கலைகளையும் கற்று அழகனாகத் திகழ்ந்த உடையார் மீது நல்லதங்கை என்ற இடைக்குலப்பெண் மோகம் கொண்டாள். உடையாரின் வீரம் தென்காசி ஸ்ரீவல்லபாண்டியனுக்குத் தெரிய வந்தது. மன்னன் உடையாரைக் காண விரும்பினார். உடையாரின் பெற்றோர் அவனைத் தென்காசிக்கு அனுப்ப விரும்பவில்லை. உடையார், பெற்றோர் சொல்லை மீறி தனது துணையாக சிறுவன் ஒருவனுடன் தென்காசி சென்றார். அங்கு தாசிகள் தெருவில் தங்கினார். இலைவாணிப் பெண் அனைஞ்சி, செட்டிப் பெண் பூவனைஞ்சி  ஆகியோருடன் மகிழ்ந்திருந்தார். அரசனிடம் சென்று தனது எண்ணெய் காப்பு சாத்தும் திறனைக் காட்டினார். அரசன் மகிழ்ந்து தன்னுடன் வைத்துக் கொண்டார். அரசனின் மனைவி நீலக்கன்னி உடையார் மீது மோகம் கொண்டாள். அவன் அஞ்சினான். பெண் வேடத்தில் அந்தப்புரத்திற்கு  வரச்சொன்னாள். உடையார் பெண் வேடத்தில் சென்று அரசியுடன் மகிழ்ந்திருந்தார்.
           உடையாரின் புகழ், பெருமை இவற்றைக்  கண்ட அமைச்சர்கள் பொறாமை கொண்டனர். எண்ணெய்க் காப்பு சாத்தும் மறத்தலைவனின் துணையுடன் அரசனின் முத்திரை மோதிரத்தை உடையாரின் உடைவாளின்  உறையில் மறைத்து வைத்தனர். அரசன் முத்திரை மோதிரத்தைத் தேடினான். உடையாரின் உடைவாள் உறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. உடையார் அதிர்ச்சி அடைந்தார். தனக்குக் கழு அமைக்க இரும்பு வேண்டினார். அரசன், அரசி, பெற்றோர், ஊரார் கழு ஏற வேண்டாம் எனத் தடுத்தனர். உடையார் கழு  அமைத்தார். உடையாருடன் சென்ற சிறுவன் தானே உடைவாளை பாய்ச்சி இறந்தான்.உடையார் கழு ஏறினார். உடையார் ஆறு நாட்கள் கழுவில் இருந்தார். நல்லதங்கை அவருக்கு மோர் ஊற்றினாள். நல்லதங்கையிடம் அரசி நீலக்கன்னிக்குச் செய்தி சொல்லி அனுப்பினார். ஏழாவது நாள் உடையாரின் உயிர் பிரிந்தது. அதே நேரத்தில் அரசியின் உயிரும் பிரிந்தது. இருவரும் ஒன்றாகச் சிவலோகம் அடைந்தனர். 

          கழுந்திரட்டுப் பற்றிய இக்கதைகள் யாவும் கழுவில் உள்ளவன் சிறந்த வீரன் என்பதனை உணர்த்துகின்றன. கரையனார் என்பது கோனார் இனத்தின் ஒரு பிரிவாகும். உடையார் கோனார் இனத்தவர் என்று கூறுகின்றனர். இவ்வழிபாடு செய்வோர் பெரும்பாலும் கோனார் இனத்தவர்களே.

கழுவடி: பழங்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்ற கழுமரத்தினைப் பயன்படுத்தினர். இக்கழுமரம் கூர்மையான நுனியை உடைய மரம் அல்லது இரும்பால் ஆன தூணாகும். வழுவழுப்பும் கூர்முனையும் கொண்ட தூணின் உச்சியில் தண்டனைக்குரியவரை  அமரச் செய்து தண்டனையை நிறைவேற்றுவர். சாத்தான்குளம் பகுதியில் உள்ள கழுவடி தளத்தில் கல்தூண் ஒன்று நடப்பட்டு அதன் கூர்மையான உச்சியில் மனித உருவிலான மரப்பொம்மை வயிற்றில் குத்திய நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இம்மரப்பொம்மை நீண்ட முடியும் வழமையான உடற்கட்டும் கொண்டு விளங்குகின்றது. கோடைவிழாவின் போது கழுமரத்தைச் செப்பனிட்டு புதிய மரப்பொம்மையை கழுவில் ஏற்றுகின்றனர். உடையார் கோவில் வில்லுப்பாடலை ஆய்வு செய்த ஆய்வாளர் கொடைவிழாவில் கழுவேற்றத்தினைச் சேவல் மூலம் நிறைவேற்றுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மாவட்டம் வேளச்சேரி, சூளைமேடு ஆகிய இடங்களில் மதுரை வீரனுக்குக் கழுவடி பூசை நடத்தப்படுகின்றது. அங்கு இரண்டு கம்புகளை நட்டு அதில் கீழிருந்து ஏழு அரிவாள்களைக் குறுக்காகக் கட்டி, மேல்பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக இரண்டு அரிவாள்களைக் கட்டுவர். மதுரைவீரன் சாமி வந்து ஆடுபவர் ஒவ்வொரு கழுவடியிலும் நின்றும் படுத்தும் ஆடுவர். இதனைக் கழுவடி வழிபாடு எனக் கூறுகின்றனர். பூம்புகார் பல்லவன் ஈசுவரன் கோவில் பட்டினத்தூர் வழிபாட்டில் கழுவேற்றுதல் நிகழ்ச்சி நிகழ்த்தப்படுகின்றது. தஞ்சை, நாகப்பட்டின பகுதி வட்டார மாரியம்மன் கோவில்களில் கழுவடி மேடை அமைக்கப்படுகின்றது என்றும் கூறுகின்றனர்.

சாத்தான்குள வட்டார கழுத்திரட்டு வழிபாடு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள கோனார் இனமக்கள் தாம் வழிபாடும் கூவையாடன் பீடத்தின் முன்பு ஒரு கழுந்திரட்டினை அமைத்துள்ளனர். கோயிலுக்கு,வெளிப்புறம் தனியாக ஒரு கழுந்திரட்டினையும் அமைத்துள்ளனர். சுடலைமாடன்  கோயில் கொடைவிழாவின் போது கழுந்திரட்டிற்குச் சிறப்பான பூசை நடைபெறுகின்றது. இத்தெய்வத்தினை வழிபடுவோர் தங்கள் வீட்டில் குழந்தைபிறப்பு, பூப்புனித நீராட்டு, திருமணம், இறப்பு போன்ற நிகழ்ச்சிகளின் போது கழுந்திரட்டினை வழிபடுகின்றனர். அச்சமயங்களில் சேவல் ஒன்றினைப் பலிகொடுக்கின்றனர்.

சாத்தான்குளத்தின் அருகில் உள்ள சாஸ்தாவி நல்லூர் கிராமத்தின் அருகில் வயிரவம் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள கோனார்கள் தங்கள் ஊருக்கு அருகில் உள்ள தருவாய் என்ற இடத்தில் கழுந்திரட்டு ஒன்று வைத்துள்ளனர். இங்கும் சுடலைமாடன்  கோயில் உள்ளது. இச்சுடலைமாடனை தேவர், ஹரிஜன இனமக்களும் வழிபடுகின்றனர். வயிரவத்தில் வாழ்ந்து வந்த கோனார்கள் குடும்ப பிரச்னைக் காரணமாக சாத்தான்குளம், தச்சமொழி, நரையன்குடியிருப்பு, தூத்துக்குடி அருகில் உள்ள தட்டாப்பாறை போன்ற இடங்களுக்கும் பிரிந்து சென்றுள்ளனர். அவர்கள் இங்கிருந்து "பிடிமண்" எடுத்துச் சென்று தங்கள் ஊர்களில் "கழுந்திரட்டு" அமைத்து வழிபட்டு வருகின்றனர்.

உடையார் வழிபாடு ஸ்ரீ உடையார் சுவாமி வழிபாடு தென்தமிழகத்தில் வேரூன்றிப் பரவியுள்ளது. இவ்வழிபாடு இன்றளவும் காலம் காரணமாக எவ்வித மாறுதலும் அடையவில்லை. கொடைவிழாவின் போது கதையாடல் மற்றும் நிகழ்கலை நோக்கில் கழுவேற்றமும் நடைபெறுகிறது. கதையைப்பாடும் புலவரும் பார்வையாளர்களும் உடையார் கோவிலுக்கு உரிமையுடையவர்களாக உள்ளனர். கழுவேற்றத்தினைச் சேவல் மூலம் நிறைவேற்றும் போது பார்வையாளர்கள் கண்ணீர் விட்டு அழுவதும், அமைதியான சூழ்நிலையை மேற்கொள்ளுவதும் தொன்றுதொட்டு நிலவி வருகிறது என உடையார் வழிபாடு பற்றி ஆய்வு செய்யும் ஆய்வாளர் த.த.தவசிமுத்து குறிப்பிட்டுள்ளார்.

சமணர்களைக் கழுவேற்றிய செய்தியினைத் தேவாரப்பாடல்கள் கூறுகின்றன. பட்டினத்தார் வழிபாட்டில், தான் குற்றவாளியல்லன் என்பதனை நிரூபிக்க கழுமரத்தினை எரிக்கின்றனர். சில மாரியம்மன் கோவில்களில் கழுவடி மேடை அமைக்கின்றனர். மதுரைவீரன் வழிபாட்டிலும் இக்கழுவடி வழிபாடு இணைந்துள்ளது. சாத்தான்குளம் பகுதியில் கழு ஏற்றிய நிலையில் உள்ள உருவவழிபாட்டினை நாம் பார்க்கின்றோம். கழுவடி வீரன் தம் குடும்பத்திற்குத் துணை நிற்பான் என்ற நம்பிக்கையில் இவ்வழிபாடு இன்றுவரை நிலைபெற்றுள்ளது. மானத்திற்காக உயிர்விட்ட உடையாரின் நினைவாக இவ்வழிபாடு நடைபெறுகிறது என அறியமுடிகிறது. ஸ்ரீவல்லபாண்டியன் காலத்தில் நிகழ்ந்ததாக வில்லுப்பாடல் குறிப்பிடுகின்றது. அரசர்கள் மட்டுமல்லாது அரசகுடும்ப பெண்களும் பிற ஆண்களுடன் மோகம் கொண்ட நிலையை இக்கதைகள் வழி அறிகின்றோம். திருநெல்வேலி பகுத்திக்கு என்ற தனிச்சிறப்பு பெற்ற வில்லுப்பாடலில் உடையாரின் கதை இடம்பெற்று சமயச் சடங்காக நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இதனை மேலும் வரலாற்று அடிப்படையில் அணுகவேண்டும். இதுபோன்று உயர்வர்க்கப் பெண்களுடன் தொடர்பு கொண்டு உயிர்விட்ட பிறவீரர்களின் கதைகளையும் சேகரித்து ஆய்வு செய்ய வேண்டும்.

குறிப்பு:
கழுவேற்றம் சடங்கு தொடர்பில் அமைந்த ஒரு கட்டுரையைப் பகிர்ந்து கொள்கிறேன். இக்கட்டுரையை நமக்காக தட்டச்சு செய்து வழங்கிய நண்பர்கள் மைதிலி, சுவர்ணலதா ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
-சுபா

No comments:

Post a Comment