-- சிங்கநெஞ்சம் சம்பந்தம்.
ஃபிலிபஸ் பால்டேயஸ் (Philippus Baldaeus) எனும் பாதிரியார் தமிழில் மொழி பெயர்த்த கர்த்தரின் ஜெபம் 1672 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் அச்சானது. ஐரோப்பிய மொழிகள் அல்லாத வேற்று மொழி ஐரோப்பாவில் அச்சானது இதுவே முதன்முறை.
இந்த பரமண்டல ஜெபத்தை , 1964இல், நான் 4 ஆம் வகுப்புப் படிக்கும் போது , எங்கள் செயின்ட் டேவிட் பள்ளியில் சொல்ல ஆரம்பித்தேன். அப்போது எனக்கு எட்டு வயது. துடுக்குத்தனம் அதிகம். நேரே தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றேன். அனுமதி மறுக்கப்பட்டது. "இன்னார் வீட்டுப் பையன் " என்றேன் ; உள்ளே விட்டார்கள்.
தலைமை ஆசிரியர் அருமை நாயகம் அவர்கள். பெயருக்கு ஏற்றார் போல் அருமையான மனிதர், மிகச் சிறந்த ஆசிரியர்.....என்னைப்பார்த்து
" ஏன்னா வேணும்"
"சார், இந்த ஜெபம் நல்லா இல்ல சார்."
"ஏண்டா"
"நல்லாவே புரியல சார். 'ராச்சியம் வருவதாக,,,,,அன்றன்றுள்ள அப்பம்' .... ஒண்ணுமே புரியல சார் , மாத்துங்க சார்."
"டேய் டேய் ....அப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது. பெரியவங்க எழுதினது "
"யார் , யார் சார் எழுதினாங்க, எங்க இருக்காங்க , அவங்க கிட்ட சொல்லி மாத்துங்க சார். உங்களுக்கு தெரிஞ்சவங்கதானே/"
" டேய் . கிளாசுக்குப் போ....நேரமாவுது. .....அப்புறம் சொல்றேன். "
உணவு இடைவேளையில் கண்ணில் பட்டார் .
"சார் "
" அப்புறம் சொல்றேன்னு சொன்னேன் இல்ல , போடா....சாப்ட்டு வா...போ."
அடுத்த திங்கள் முதல் பீரியட் , "நீதி போதனை", H.M. எங்கள் வகுப்புக்கு வந்தார். பொதுவாக சின்ன கிளாசுக்கெல்லாம் வர மாட்டார். மிரண்டுவிட்டனர் அனைவரும். என்னை முறைத்தார்கள்.
" கர்த்தருடைய ஜெபம் , யார்- எப்போ எழுதினதுன்னு இவன் கேட்டான். நல்ல கேள்வி...இப்பிடித்தான் கேக்கணும். இத்தினி வருஷமாச்சி எனக்கும் தெரியாது. பெரியவங்கள கேட்டு சொல்றேன் ...நீங்களும் கேட்டுப் பாருங்க " என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதிர்ச்சியில் உறைந்தோம். H.M.முக்கே தெரியாதா?
ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஓடி விட்டன.கடந்த ஜூன் மாதம் இணையத்தில் அந்த ஜெபம் கண்டேன். புள்ளி இல்லை. நெடில் தனியே இல்லை. நிச்சயமாகப் பழைய ஆவணம் என உணர்ந்து, மின் தமிழிலும் , ஃபேஸ்புக்கிலும் போட்டேன். நண்பர் ஒருவர், இந்த ஜெபம் ஃபிலிபஸ் எழுதியது எனக்குறிப்பிட்டிருந்தார்.
________________________________________________________
Singanenjam
singanenjam@gmail.com
singanenjam@gmail.com
________________________________________________________
No comments:
Post a Comment