Wednesday, August 10, 2016

கோண்ட்வானா

-- சிங்கநெஞ்சம் சம்பந்தம்.

“கோண்ட்வானா லேண்ட்”, “குமரிக் கண்டம்”  இரண்டும் ஒன்றா? கேள்விக் கணையுடன் என் அறையில் நுழைந்த நண்பர் கையில் ஆங்கிலப் புத்தகம் ஒன்று இருந்தது. அதில் GONDWANA LAND (KUMARIK KANDAM) என்றிருந்தது.. முன்பெல்லாம் லெமூரியா  அல்லது குமரிக் கண்டம் என்று எழுதி வந்தனர். லெமூரியா கருத்து கைவிடப்பட்டதால் இப்போது கோண்ட்வானாவைப் பிடித்துக் கொண்டனர். அவ்வளவுதான்.

சரி, கோண்ட்வானா என்றால்  என்ன?  “ கோண்ட்” என அழைக்கப்படும் பழங்குடியினர் வசிக்கும் பகுதி / வனப் பகுதி கோண்ட்வானா என்று அழைக்கப் பட்டது. இதில், வங்கத்தின் மேற்குப் பகுதி, ஜார்கண்ட் , சத்தீஸ்கரின் கிழக்கு மற்றும் தென் மேற்குப் பகுதிகள் (பஸ்தார்), விதர்பாவின் கிழக்குப் பகுதி மற்றும் தெலுங்கானாவின் வடக்குப் பகுதி ஆகியவை அடங்கும். இவர்கள் தனித்தனி குழுக்களாக இருந்து வருவதால் இதுதான் எல்லை என்று கோண்ட்வானா லேண்டை வரைப்படுத்த இயலாது.

இனி, பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ரயில் வண்டி , 1850 களில் நம் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. நீராவி என்ஜினை இயக்க நிலக்கரி வேண்டுமே, அதற்காக 1851 இல் எங்கள் “ GEOLOGICAL SURVEY OF INDIA  ( GSI) ( ஜி.எஸ்.ஐ ) துவக்கப் பட்டது..  இவர்களின் முதல் வேலை , நிலக்கரிப் படிவங்களைக் கண்டு பிடிப்பதுதான். நிலக்கரிப் படிவங்கள் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் உருவான படிவப் பாறைகளில் மட்டுமே கிடைக்கும். அத்தகைய படிவப் பாறைகளை அவற்றில் உள்ள தொல்லுயிர் எச்சங்கள், குறிப்பாக தொல் தாவர எச்சங்களைக் (படம்)கொண்டு  இனம் கண்டுகொள்ள இயலும். 


ஜார்கண்ட் , சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டம், ஓடிஷாவின் டால்சிர் பகுதி, வங்கத்தின் மேற்குப் பகுதி, விதர்பாவின் கிழக்குப் பகுதி  இங்கெல்லாம் நிலக்கரிப்படிவங்களை (படம்) உள்ளடக்கிய படிவப்பாறைகள் கண்டறியப்பட்டன.


இந்தப் படிவப்பாறைகள் கோண்ட் பழங்குடிகள் வாழும் பகுதியில் அதிகம் கிடைத்ததால், இந்தப் பாறைத் தொகுப்புக்கு, ஜி.எஸ்.ஐ.  புவியியலாளர்  HENRY BENEDICT MEDLICOTT,1872 ஆம் ஆண்டு “கோண்ட்வானா பாறைகள்” எனப் பெயரிட்டார். (இது மரபு. தமிழகத்தின் கிழக்குக் கரையோரம் அதிக  அளவில் காணப்படும் “கடலூர் மணற்பாறைகள்” முதன்  முதலில் கடலூர் திருவந்திபுரம் அருகே கண்டறியப்பட்டதால் அவை அப்பெயரில்  அறியப்படுகின்றன. புதுக்கோட்டையிலும் இருந்தாலும்  சரி , புதுச்சேரியிலும் இருந்தாலும் சரி அவை “கடலூர் மணற்பாறைகள்” என்றே அழைக்கப் படுகின்றன.).

இந்த “கோண்ட்வானா பாறைகள்’ உருவான காலம் “கோண்ட்வானா காலம்” என்று அறியப்படுகிறது (இன்றைக்கு முன் சுமார் முப்பது கோடி ஆண்டுகளுக்கும் பதினான்கு கோடி ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட  காலம்).

 

இந்த கோண்ட்வானா பாறைகள் தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களிலும் பெருமளவில் காணப் படுகின்றன. இதன் காரணமாகவே முதலில் “லெமூரியா” , பின் “கண்டப் பெயர்ச்சி”. தொடர்ந்து “கடல் தரை பரவுதல்” போன்ற கருத்துகள் தோன்றின. பின் கூறிய இரண்டு கருத்துகளும், எல்லாக் கண்டங்களும் சேர்ந்து  ஒரே அகண்டமாக இருந்திருக்க வேண்டும் எனும் புவியியல் உண்மையை வலியுறுத்தின.

புவிக்கோளின் தென்பகுதியில் உள்ள கண்டங்கள் சேர்ந்திருந்த அகண்டம் .“கோண்ட்வானா லேண்ட் “ என்று பெயரிடப்பட்டது.  இந்தியாவில் அறியப்பட்ட .“கோண்ட்வானா பாறைகள்” எல்லா தென்கண்டங்களிலும் காணப் படுவதால் , ஆஸ்திரியாவை சேர்ந்த அறிவியலாளர் எட்வர்ட் சூயெஸ் என்பவர், இந்தத் தென் அகண்டத்திற்கு இந்தப் பெயரை சூட்டினார். 



இந்த “கோண்ட்வானா லேண்ட், வட கண்டங்களை உள்ளடக்கிய “லவ்ரேஷியா” அகண்டத்துடன் சுமார் முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன் இணைந்து “பேன்ஜியா” (PANGEA ) என்றழைக்கப்படும் பேரகண்டம் உருவானது. பின்னர் சுமார் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன் .“கோண்ட்வானா லேண்ட் அகண்டம்” பிரிந்து, தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்க்டிகா ஆகிய கண்டங்கள்  வெவ்வேறு திசைகளில் நகர்ந்து இன்றைய நிலையில் உள்ளன. “புவிதட்டுகளின் கட்டமைப்பு” கோட்பாடு கண்டப் பெயர்ச்சி மட்டுமல்லாமல் புவியியலின் தீர்க்க முடியாத புதிர்கள் பலவற்றிற்கும் விடை காண்கிறது.





 ________________________________________________________ 
 
Singanenjam
singanenjam@gmail.com
 ________________________________________________________ 

1 comment:

  1. அறிவு பூர்வ விளக்கம். நரசய்யா

    ReplyDelete