Showing posts with label முனைவர் வே.கட்டளை கைலாசம். Show all posts
Showing posts with label முனைவர் வே.கட்டளை கைலாசம். Show all posts

Monday, May 9, 2022

தாமிரமும் தமிழரும்



-- முனைவர் வே. கட்டளை கைலாசம் 



தாமிரம், இயற்கையில் ஒரு தனி உலோகமாகக் கிடைக்கிறது. உலோக வகையைச் சார்ந்த இத்தனிமத்தை “செப்பு”, “செம்பு” என்றும் கூறுவர். இதன் மூலக்கூறு வாய்பாடு "CU" என்பதாகும். லத்தீன் சொல்லான "Cuprum" என்பதனை "CU" என்கின்றனர். ஆங்கிலத்தில் "Copper" என்று அழைக்கப்படுகிறது. இதன் அணு எண் 29. மனிதன் முதலில் பயன்படுத்திய இவ் உலோகம் மிகுந்த பயன்பாடு உடையது. தமிழர்கள் இதன் பயன்பாட்டை உணர்ந்து ஆதிகாலம் தொட்டே பயன்படுத்தி வருகின்றனர். 

தமிழ் நிகண்டுகள்:
சொற்களுக்குப் பொருள் தரும் அகராதிகளாகிய தமிழ் நிகண்டுகள், தாமிரம் பற்றிக் கூறுகின்றன. திவாகரம் என்ற தமிழ் நிகண்டு ஐவகையுலோகத்தைப் பற்றிக் கூறும்போது,             
          “ பொன்னும், வெள்ளியும், செம்பும், இரும்பும் அன்ன ஈயமும், ஐவகை யுலோகம்" 
என்று உரைக்கிறது. 
செம்பு பற்றிக் கூறும்போது 
          “சீருமை, தாம்பிரம், கற்பம், செம்பே”          - திவாகரம் - 1042 எனக்கூறும். 
பிங்கலம் என்ற நிகண்டு, 
          "தாமிர மெருவை வடுவே கற்பம் 
          உதும்பரஞ் சீருள் சீருணஞ் செம்பே"          - பிங்க லம் - 1235 
எனச் சுட்டுகிறது. 
நாம தீப நிகண்டு 
          “இரவி யுதும் பரமி ராசிவடுக் கற்ப 
          பெருமவை செம்பு தாம்பிரம்....          - நாம தீப நிகண்டு - 37 
இரவி,  உதும்பரம், இராசி, வடு, கற்பம், எருவை, செம்பு, தாமிரம், ஆகியன செம்பின் பெயர்களாய்க் கையாளப்படுகின்றன.
நாநார்த்த தீபிகை என்ற தமிழ் நிகண்டு தாமிரத்திற்கு, “சிவப்பு", மற்றும் “செம்பு" என இருபொருள் தருகின்றது. - (நாநார்த்த தீபிகை - 575)
அபிதான மணிமாலை செம்பு என்பதற்கு,
           “செம்பு, எருவை, தாம்மிரம், சீருணம், சீருள் 
          உதும்பரம், வடுவொடு, கற்பமுமிதற்கே"           (அபிதான மணிமாலை - 1452) 
எனப் பொருள் தரும். 

இவ்வாறு தமிழ் நிகண்டுகள் தாமிரம் என்ற சொல்லுக்கான பல பொருட்களைத் தருகின்றன. இதனால் தமிழர் வாழ்வில் தாமிரம் சிறப்பிடம் பெற்றுத் திகழ்வதை நாம் அறிய முடிகிறது. 

சிந்துச்சமவெளி நாகரிகத்தில் களிமண், தாமிரம் மற்றும் வெண்கலத்தினால் உருவான பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  இலக்கியங்களில் தமிழர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்திய உலக்கை, திருகை போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளன. பாத்திரங்கள் பலவற்றைப் பயன்படுத்திய குறிப்புகளும் உள்ளன. செப்புப் பட்டயங்கள், எழுத்தூசி, ஓலைச்சுவடிகள் சட்டங்கள், சிற்பங்கள் போன்ற பலவகைப் பொருட்களிலும் தாமிரத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்று அறியப்படுகிறது. 

பஞ்ச சபைகள்:
பஞ்சலோகம், பஞ்சவர்ணம், ஐம்பொன் என்பன ஐந்து என்ற எண்ணிக்கையைக் குறிப்பன. பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் சேர்ந்ததைப் பஞ்சலோகம் என்பர். கருப்பு, சிவப்பு, பச்சை, வெள்ளை , மஞ்சள் நிறங்களில் கூடிநிற்பது பஞ்சவர்ணம்.


சிவபெருமான் திருநடனம் ஆடிய இடங்களைப் பஞ்சசபை என்பர். 
          "குடதிசை யதனில் மருவுகு ற்றாலம்
                    கோதறு சித்திர சபையாம் 
          குற்றமில் குணக்கின் பழையனூர் மன்றம்,
                    குலநவ ரத்தினமன் றென்பர்; 
          அடல்விடைப் பாகன் நெல்லையம் பதியில்
                    அம்பலம் தாமிர சபையாம்; 
          ஆலவாய் மதுரை வெள்ளியம் பலமாம் 
                    அணித்தில்லைச் செம்பொ னம்பலமே"
                                        (இரட்டையர் தில்லைக் கலம்பம்)

இரட்டையர் தில்லைக் கலம்பகம் கூறும் “தாமிரசபை” நம் தாமிரவருணிநதிக் கரையில் அமைந்து தாமிரவருணிக்குப் பெருமை சேர்க்கிறது. சிவபெருமானே தனக்கான திருநடனத்திற்குத் தாமிரத்தால் ஆன சபையைத் தேர்ந்தெடுத்துள்ளான்.

தமிழ் மருத்துவத்தில் தாமிரம்:
தமிழர்களின் மருத்துவமான சித்தமருத்துவத்தில் தாமிரம் பல மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. "தாமிரபஸ்பம்" என்பது ஒன்று; இதனைத் "தாம்பூர பற்பம்" என்பர். ஒரு செம்பு நாணயத்தைப் பழுக்கக் காய்ச்சிப் புளியிலைச் சாற்றில் பலதடவை துவைத்துப் பிறகு மூசையிலிட்டு இரண்டு தடவை அவ்வுருக்கு முகத்தில் கந்தகத்தைச் சேர்த்து உருக்கவும், பிறகு அதை எடுத்து நொறுங்கப்பொடி செய்து எலுமிச்சை சாற்றில் சுத்தி செய்ய தாம்மிரம் வெளுத்துக் காணும். இதைப் புடமிடப் பற்பமாகும்.  இப்பற்பம் குட்டம் முதலிய சரும நோய்களுக்குக் கொடுக்க குணமாகும். அன்றியும் பல்வலி, மண்ணீரல் வீக்கம், ஈரல் வீக்கம், சூலைப் பிடிப்பு, வாதநோய் முதலிய நோய்களுக்கும் கொடுக்கலாம். ( டி.வி. சாம்பசிவம்பிள்ளை - தமிழ் - ஆங்கில (மருத்துவம்) அகராதி). 

தங்கம், வெள்ளியைவிட செம்பு உயர்ந்தது என்கிறார் போகர். தங்கமும் வெள்ளியும் உடல் என்றால் அவற்றை முழுமையாக்கும் உயிராக செம்பைக் குறிப்பிடுகிறார். அதாவது சிறிதளவு செம்பு சேர்த்தால் மட்டுமே தங்கத்தையும் வெள்ளியையும் பயன்படுத்த முடியும். 
          “தாம்பரத்தாற் சோரிபித்தஞ் சந்நிவழுவைகபம் 
          வீம்பார் பிலீகமந்தம் வெண்மேகம் - தேம்பழலை 
          சூதகநோய் புன்கிரந்தி தோடசுவாசம் கிருமி 
          தாதுநட்டம் கண்ணோய் போஞ்சாற்று”
என்பது தேரையார் வாக்கு. 

இவ்வாறு நோய்கள் தீர்க்கும் மருந்தாக்கத்தில் தாமிரம் தனியிடம் பெற்றுள்ளது. பிற மருத்துவத்தாரும் தாமிரத்தைப் பயன்படுத்தி உயிர்காக்கின்றனர். அன்றாடவாழ்வில் தாமிரத்தின் பயன்பாடு எல்லையற்றது. தமிழர்கள், தாமிரத்தின் பயனை உணர்ந்து தமது வாழ்வியலோடு இணைத்துப் பயன்பெற்று வருகின்றனர். உலகின் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பதிலும் தாமிரத்திற்குத் தனியிடம் உண்டு. தாமிரவருணி நதிநீரின் அல்வாவைச் சுவைக்கும் நாம், தாமிரத்தின் பயன் உணர்வோம். தாமிரந்தி போற்றுவோம்.


_____________


"தாமிரவருணித் தமிழ் வனம்"
ஆசிரியர்: முனைவர் வே. கட்டளை கைலாசம்
முதற்பதிப்பு: மல்லி பதிப்பகம், டிசம்பர்-2021
விலை: ரூ.50 

நூலில் இருந்து . . . . . 

Friday, January 14, 2022

காணும் பொங்கலும், சிறு வீட்டுப் பொங்கலும் தமிழர் பண்பாட்டின் அடையாளமா ?

-- முனைவர் வே.கட்டளை கைலாசம்



”காணும்பொங்கல் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும், சிறுபெண்கள் கூடி மகிழ்ச்சியாக கொண்டாடும் விழாவாக சிறுவீட்டுப் பொங்கலும் உள்ளது”

"தமிழர்கள் கொண்டாடும் திருவிழாக்களில் தலை சிறந்ததாகவும், தனிச் சிறப்புடையதாகவும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா தை மாதம் முதல் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது" இயற்கை வளங்கள் நிறைந்த தமிழகப் பகுதிகளில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்த தமிழர்கள் இயற்கையை வழிபடுவதையும், இயற்கைக்கு நன்றி செலுத்துவதையும் தம்முடைய பழக்க வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்படியாக தமிழர்கள் இயற்கை தெய்வமான சூரியனுக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்றி தெரிவித்து "உழவுக்கு வந்தனை செய்வோம்" என்பதற்கிணங்க இயற்கையில் விளைந்த நெல், கரும்பு, வாழைக்காய், கனி, தானியங்களை இயற்கை தெய்வமான சூரியனுக்குப் படைத்து உழவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் பசு, கன்று காளைமாடு போன்ற உயிரினங்களையும் சிறப்பிக்கும் வகையில் அவற்றிற்கும் விழா எடுப்பதே இன்றுவரை தமிழர்களின் பண்பாடாக இருந்து வருகிறது.

இந்தப் பண்டிகையை  மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், சிறு வீட்டுப் பொங்கல், என தை மாதத்தில் அடுத்தடுத்து ஒவ்வொரு வகையில் தமிழர்களால் கொண்டாடப்படுவது ஏன்? இப்பொங்கல் ஆரம்பக் காலத்தில் எப்படிக் கொண்டாடப்பட்டது?

தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்று பொங்கல் விழா,  "பொங்கல்" என்பது கஞ்சி வடிக்காது சமைத்த அன்னம் என்பதாகும், பொங்குதல், செழிப்பின் வெளிப்பாடு, மிகுதியினால் வெளிவருவது, செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போகாமல் சரியளவு நீர் வைத்துச் சமைத்து, பருப்புக் குழம்புடன் உண்பது பொங்கல் மரபு, "பருப்புக் கேட்கும் பச்சரிசிச்  சோறு, செருப்புக் கேட்கும் சித்திரை மாத வெயிலில் " என்பது பழமொழி..

தை மாதம் முதல்நாள் தமிழர்களால் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது, சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாள் மகரசங்கராந்தி எனப்படுகிறது, பிற மாநிலத்தவர் சூரிய வழிபாட்டு நாளை  மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர், தமிழர்கள் பொங்கல் விழாவாக கொண்டாடி வருகின்றனர், சிலப்பதிகாரம் திங்களையும், ஞாயிரையும், மாமழையையும் போற்றி  வணங்கித் தொடங்குகின்றது.

தமிழர் இயற்கையைத் தெய்வமாக வழிபட்டு வரும் மரபினர், தை மாதத்தைச் சிறப்பாக கொண்டாடி வந்த தமிழரின் இலக்கியங்கள் 'தைஇத் திங்கள் தண் கயம் படியும் பெருந் தோட் குறுமகள்' (நற்றிணை - 80) என்று நற்றிணையிலும், 'தைஇத் திங்கள் தண்ணிய தரினும்' (குறுந்தொகை-196) என்று குறுந்தொகையிலும்,  'தைஇத் திங்கள் தண்கயம் போல' (புறநானூறு -70, ஐங்குறுநூறு-84)' என்று புறநானூற்றிலும்,  ஐங்குறுநூற்றிலும் பதிவு செய்துள்ளன, 'தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ' (கலித்தொகை-59)  எனக் கலித் தொகையும் கூறுகிறது.

தமிழர் கொண்டாடும் பொங்கல் விழாவினை ஐந்து நிலைகளில் காண முடிகிறது,  மார்கழி இறுதிநாள் போகி என்று கூறி பழையன கழிந்து புதியன புகுத்துகின்றனர், தை மாதம் முதல் நாளன்று தைப் பொங்கல் விழா, இதனையடுத்து உழவுக்குத் துணைநின்ற மாடுகளுக்கு நன்றி செலுத்த மாட்டுப்பொங்கல் என்றும், அதற்கு அடுத்த நாள் பெரியவர்களைக் கண்டு ஆசிபெற்று வருவதைக் காணும் பொங்கல் என்றும் கூறுகின்றனர். சிறு பெண்கள் சிறிய வீடு அமைத்துப் பொங்கலிடும் சிறு வீட்டுப் பொங்கல் பெரும்பாலும் பூச நட்சத்தரத்தன்று கொண்டாடுவது வழக்கம்,  தை மாதத்தின் வேறு நாட்களிலும் தென்மாவட்டத்தில்  குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

காணும் பொங்கல்:
உற்றார், உறவினர்கள் நண்பர்கள் எனப் பலரையும் கண்டு மகிழ்வது "காணும் பொங்கல்".  இந்தநாளில் வயதில் முதியவர்களை வணங்கி அருள் பெறுவது வழக்கம், உழைப்பாளிகள் கலைஞர்கள் எனப் பலரும் நன்றி தெரிவிக்கும் நோக்கில் தமக்கு உதவியவர்களைக் கண்டு வருவர்,  அவர்களும் அன்பையும் பரிசையும் வழங்கி வாழ்த்துவர்,  குறிப்பாக இது பொங்கல் படி கொடுத்தல் என்றே கூறப்படுகிறது,

கிராமங்களில் நாதசுர வித்துவான் போன்ற பல கலைஞர்களும்,  ஊரின் பொது வேலைகளைச் செய்வோர்களான லாந்தர் விளக்கு (மின்சாரம் வரும் முன் இருந்த கல்தூண் விளக்கு) ஏற்றுவோர், தெருக்களைச் சுத்தம் செய்வோர், மந்தை மேய்ப்போர் (ஊரின் மாடுகளை மேய்ப்போர்),  நாட்டார் தெய்வப் பூசாரிகள், ஊர்களில் துணி வெளுப்போர், முடி திருத்துவோர் எனப் பல தொழிலாளர்கள் ஊராரிடம் பொங்கப்படி பெறுவது வழக்கமாக இருந்தது. காணும் பொங்கல் என்பது தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக இருந்துள்ளது, ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகள், மலைப்பகுதிகளுக்குப் பொங்கல் சோற்றினை எடுத்துக்கொண்டு குடும்பத்தோடும், நண்பர்களோடும் உண்டு மகிழ்வர் என்று கூறினார்.

சிறுவீட்டுப் பொங்கல்:
சங்க இலக்கியத்தில் சிறுவயதுப் பெண்கள் சிற்றில் கட்டி விளையாடுவதை 'பொய்தல்' 'வண்டல்' 'சிறுமனை' என்ற சொற்களால் குறிப்பிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இன்றும் சிறு வயது உடைய அனைவரும் ஆற்றங்கரையில், கடற்கரையில் சிற்றில் கட்டி விளையாடுவதைக் காணலாம்,  சிறுமிகள் சிறுவீடு கட்டுவது என்பது சிறப்பான நிகழ்வு, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, பெரும்பாணாற்றுப்படை ஆகிய நூல்களில் இதனைக் காணலாம்,  "சிறுமனைப் புணர்ந்த நட்பே தோழி" என்று குறுந்தொகை கூறும் பாடலில் கடற்கரையில் சிறு வீடுகட்டி விளையாடிய போது   தலைவனோடு ஏற்பட்ட நட்பு என்பாள் தலைவி, ஆண்டாள் நாச்சியார் சிற்றிலைக் கண்ணன் "கண்ணன் உடைக்கும் படர் ஓசையை வெள்ளை நுண் மணல் கண்டு சிற்றில் விசித்திருப்ப வீதிவாய் ......" என்பர்.

பெரியாழ்வார் பாடலில் "சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே" என திவ்யபிரபந்தத்தில் கண்ணனின் விளையாட்டினைப் புனைந்துள்ளார். தமிழில் பிள்ளைத் தமிழ் இலக்கியம் தோன்றிய போது பெண்பால் பிள்ளைத்தமிழில் "சிற்றில்" என்ற தலைப்பில் பத்துப் பாடல்கள் பாடப்பட்டுள்ளது. அதாவது தமிழ் மரபில் பெண்கள் சிறுவீடு கட்டி விளையாடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இன்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சிறுவீடு கட்டி சிறுவீட்டுப் பொங்கல் விடுவதைக் காண முடிகிறது, மார்கழி மாதத் தொடக்கத்தில் இருந்தே பெண் பிள்ளைகள் வீட்டின் முன்னர் கோலமிட்டு சாணிப் பிள்ளையார் வைப்பர். அப்பிள்ளையாருக்கு பூசணி பூ வைப்பது வழக்கம். தை மாதப் பொங்கலுக்குப் பின்னர் வரும் பூச நட்சத்திரத்தில் பொதுவாக சிறு வீட்டுப் பொங்கல் விடுவர். தங்களுக்கு உகந்த நாட்களையும் தேர்ந்தெடுப்பர்.

வீட்டின் முற்றத்தில் குறுமணலால் சுவர் போல் கட்டி சிறு வீடு அமைப்பர். சிலர் காவியைக் கொண்டு சிறு வீட்டினை வரைவர். சிறுவீட்டுப் பொங்கல் அன்று பெண் பிள்ளைகள் பட்டாடை அணிந்து பொங்கல் விழா போலவே பொங்கலிட்டு மகிழ்வர். வீட்டின் முன்னர் தொடர்ந்து வைத்து வந்த சாணிப் பிள்ளையாரை எருவாகத் தட்டி வைத்திருப்பர். சிறு வீட்டுப் பொங்கலன்று அவற்றை எடுத்துச் சென்று ஆற்றில் கரைத்து விடுவ. சிறு பெண்கள் கூடி மகிழ்ச்சியாக கொண்டாடும் ஒரு விழாவாக சிறு வீட்டுப் பொங்கல் உள்ளது எனத் தமிழர்களின் பண்பாட்டில் பொங்கல் விழா இவ்வாறாகவே கொண்டாடப்பட்டு வந்ததாக தெரிவித்தார்.

இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இயற்கை நமக்களித்த செழிப்பினை கொண்டாடும் வகையிலும், அமைந்திருக்க வேண்டிய பொங்கல் கொண்டாட்டங்களை எரிவளி அடுப்பிலும், மின்சார அடுப்பிலும் புகையில்லா பொங்கல் என்று அடுப்பங்கரையிலேயே நவீன பொங்கலிட்டு தமிழர் திருநாளைக் கொண்டாடும் மக்களும் நம் மத்தியில் இன்றும்  இருக்கிறார்கள். காலத்திற்கு ஏற்ப கலாச்சாரத்தை மக்கள்  மாற்றினாலும், எந்தக் காலத்திலும் கலாச்சாரமும், அதன் அடிப்படையும் மாறாத ஒன்று.. அதற்கு அடையாளம் நம்முடைய தமிழ் இலக்கியங்களும், சுவடுகளுமே, மேலும் அவற்றைத் தம்முடைய தலையில் வைத்துத் தாங்கி நிற்கும் தமிழ்ச் சான்றோர்களுமே. இவ்வாறு தமிழர் பண்பாட்டின் அடையாளமாக நம் மத்தியில் நம்முடைய பல்வேறு செயல்பாடுகள் இருந்துகொண்டே இருக்கிறது நம்மையும் அறியாமலே!!!!!!!


முனைவர் வே. கட்டளை கைலாசம்
மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்  
ம.தி.தா.இந்துக் கல்லூரி
--------




Friday, August 19, 2016

கழுந்திரட்டு - வழிபாடு

கழுந்திரட்டு - வழிபாடு
முனைவர் வே.கட்டளை கைலாசம் 



தமிழ்நாட்டில் நாட்டார் தெய்வ வழிபாட்டில் இரண்டு நிலைகளைக் காணமுடிகிறது. ஒன்று, தாமே பூமியில் வந்து பிறந்து அருள்செய்யும் தெய்வங்கள் மற்றது இறந்தவர்கள் தெய்வமாக்கப்படுவது. தற்கொலை,கொலை,விபத்து,வீரமரணம் போன்ற நிலைகளில் இறந்தவர்களுக்குக் கோயில்கட்டி வழிபடுகின்றனர். இத்தெய்வங்கள் நாட்டார் தெய்வங்கள்,கிராம தேவதைகள்,சிறுதெய்வங்கள் எனப் பலவாறு அழைக்கப்படுகின்றன.இவற்றின் வழிபாட்டு முறைகள் தனித்தன்மை வாய்ந்தவை. “கழுந்திரட்டு” அல்லது “கீழுவடி” வழிபாடு என்பது இறந்த ஒரு வீரனின் வழிபாடாகும்.   

கழுந்திரட்டு வீரன் கதைகள்: சாத்தான்குளம் பகுதியில் கன ஆய்வு மேற்கொண்டபொழுது கழுந்திரட்டுப் பற்றிய கதைகளை அறியமுடிந்தது. அக்கதைகள் யாவும் கழு ஏற்றப்பட்ட ஒரு வீரனின் வரலாறாக உள்ளன. 
1. சாத்தாவி நல்லூரைக் கடம்பராஜா என்பவர் ஆண்டு வந்தார்.அவரது அரசவையில் இருந்த அழகான வீரன் ஒருவன், அரசனின் மகள் மீது காதல் கொண்டான். இளவரசியைக் கற்பழித்தான் என்று அரசனால், கழு ஏற்றப்பட்டான்.கழுவில் நின்ற அவன் தெய்வமாகிவிட்டான்.  

    2. திருக்களூரில் பிறந்த உடையார் தென்காசி மன்னன் சீவலமார்பனின் நம்பிக்கைக்கு உரிய வீரனாகத் திகழ்ந்தான். மன்னன் அவன்மீது மிகுந்த பற்றுடையவராக இருந்தார். இதனால் பொறாமை கொண்ட அமைச்சர்கள் அரசன் எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளன்று அவரது முத்திரை மோதிரத்தை உடையாரின் உடைவாள் உரையில் சூழ்ச்சியாக வைத்துவிட்டனர். உடையார் குற்றம் சாட்டப்பட்டு கழு ஏற்றப்பட்டார். அவர் தெய்வமானார். 3. டாக்டர். தி.நடராசன் "உடையார் கதை" என்ற வில்லுப்பாடலை பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
              திருநெல்வேலி மாவட்டம் திருக்களூர் என்னும் கிராமத்தில் சங்கரமூர்த்திக் கரையாளர், தன்னப்பெத்தாள் இருவரும் திருமணம் ஆகிப் பலவாண்டு காலம் குழந்தையின்றி இருந்தனர். திருக்களூர் கோவிலுக்குத் 
திருவிழா நடத்தி "உடையார்" என்ற மகனைப் பெற்றனர். பூச நட்சத்திரத்தில் பிறந்த அவன் மோதிரம் ஒன்றால் இறப்பான் எனச் சோதிடம் மூலம் அறிந்தனர். பல கலைகளையும் கற்று அழகனாகத் திகழ்ந்த உடையார் மீது நல்லதங்கை என்ற இடைக்குலப்பெண் மோகம் கொண்டாள். உடையாரின் வீரம் தென்காசி ஸ்ரீவல்லபாண்டியனுக்குத் தெரிய வந்தது. மன்னன் உடையாரைக் காண விரும்பினார். உடையாரின் பெற்றோர் அவனைத் தென்காசிக்கு அனுப்ப விரும்பவில்லை. உடையார், பெற்றோர் சொல்லை மீறி தனது துணையாக சிறுவன் ஒருவனுடன் தென்காசி சென்றார். அங்கு தாசிகள் தெருவில் தங்கினார். இலைவாணிப் பெண் அனைஞ்சி, செட்டிப் பெண் பூவனைஞ்சி  ஆகியோருடன் மகிழ்ந்திருந்தார். அரசனிடம் சென்று தனது எண்ணெய் காப்பு சாத்தும் திறனைக் காட்டினார். அரசன் மகிழ்ந்து தன்னுடன் வைத்துக் கொண்டார். அரசனின் மனைவி நீலக்கன்னி உடையார் மீது மோகம் கொண்டாள். அவன் அஞ்சினான். பெண் வேடத்தில் அந்தப்புரத்திற்கு  வரச்சொன்னாள். உடையார் பெண் வேடத்தில் சென்று அரசியுடன் மகிழ்ந்திருந்தார்.
           உடையாரின் புகழ், பெருமை இவற்றைக்  கண்ட அமைச்சர்கள் பொறாமை கொண்டனர். எண்ணெய்க் காப்பு சாத்தும் மறத்தலைவனின் துணையுடன் அரசனின் முத்திரை மோதிரத்தை உடையாரின் உடைவாளின்  உறையில் மறைத்து வைத்தனர். அரசன் முத்திரை மோதிரத்தைத் தேடினான். உடையாரின் உடைவாள் உறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. உடையார் அதிர்ச்சி அடைந்தார். தனக்குக் கழு அமைக்க இரும்பு வேண்டினார். அரசன், அரசி, பெற்றோர், ஊரார் கழு ஏற வேண்டாம் எனத் தடுத்தனர். உடையார் கழு  அமைத்தார். உடையாருடன் சென்ற சிறுவன் தானே உடைவாளை பாய்ச்சி இறந்தான்.உடையார் கழு ஏறினார். உடையார் ஆறு நாட்கள் கழுவில் இருந்தார். நல்லதங்கை அவருக்கு மோர் ஊற்றினாள். நல்லதங்கையிடம் அரசி நீலக்கன்னிக்குச் செய்தி சொல்லி அனுப்பினார். ஏழாவது நாள் உடையாரின் உயிர் பிரிந்தது. அதே நேரத்தில் அரசியின் உயிரும் பிரிந்தது. இருவரும் ஒன்றாகச் சிவலோகம் அடைந்தனர். 

          கழுந்திரட்டுப் பற்றிய இக்கதைகள் யாவும் கழுவில் உள்ளவன் சிறந்த வீரன் என்பதனை உணர்த்துகின்றன. கரையனார் என்பது கோனார் இனத்தின் ஒரு பிரிவாகும். உடையார் கோனார் இனத்தவர் என்று கூறுகின்றனர். இவ்வழிபாடு செய்வோர் பெரும்பாலும் கோனார் இனத்தவர்களே.

கழுவடி: பழங்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்ற கழுமரத்தினைப் பயன்படுத்தினர். இக்கழுமரம் கூர்மையான நுனியை உடைய மரம் அல்லது இரும்பால் ஆன தூணாகும். வழுவழுப்பும் கூர்முனையும் கொண்ட தூணின் உச்சியில் தண்டனைக்குரியவரை  அமரச் செய்து தண்டனையை நிறைவேற்றுவர். சாத்தான்குளம் பகுதியில் உள்ள கழுவடி தளத்தில் கல்தூண் ஒன்று நடப்பட்டு அதன் கூர்மையான உச்சியில் மனித உருவிலான மரப்பொம்மை வயிற்றில் குத்திய நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இம்மரப்பொம்மை நீண்ட முடியும் வழமையான உடற்கட்டும் கொண்டு விளங்குகின்றது. கோடைவிழாவின் போது கழுமரத்தைச் செப்பனிட்டு புதிய மரப்பொம்மையை கழுவில் ஏற்றுகின்றனர். உடையார் கோவில் வில்லுப்பாடலை ஆய்வு செய்த ஆய்வாளர் கொடைவிழாவில் கழுவேற்றத்தினைச் சேவல் மூலம் நிறைவேற்றுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மாவட்டம் வேளச்சேரி, சூளைமேடு ஆகிய இடங்களில் மதுரை வீரனுக்குக் கழுவடி பூசை நடத்தப்படுகின்றது. அங்கு இரண்டு கம்புகளை நட்டு அதில் கீழிருந்து ஏழு அரிவாள்களைக் குறுக்காகக் கட்டி, மேல்பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக இரண்டு அரிவாள்களைக் கட்டுவர். மதுரைவீரன் சாமி வந்து ஆடுபவர் ஒவ்வொரு கழுவடியிலும் நின்றும் படுத்தும் ஆடுவர். இதனைக் கழுவடி வழிபாடு எனக் கூறுகின்றனர். பூம்புகார் பல்லவன் ஈசுவரன் கோவில் பட்டினத்தூர் வழிபாட்டில் கழுவேற்றுதல் நிகழ்ச்சி நிகழ்த்தப்படுகின்றது. தஞ்சை, நாகப்பட்டின பகுதி வட்டார மாரியம்மன் கோவில்களில் கழுவடி மேடை அமைக்கப்படுகின்றது என்றும் கூறுகின்றனர்.

சாத்தான்குள வட்டார கழுத்திரட்டு வழிபாடு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள கோனார் இனமக்கள் தாம் வழிபாடும் கூவையாடன் பீடத்தின் முன்பு ஒரு கழுந்திரட்டினை அமைத்துள்ளனர். கோயிலுக்கு,வெளிப்புறம் தனியாக ஒரு கழுந்திரட்டினையும் அமைத்துள்ளனர். சுடலைமாடன்  கோயில் கொடைவிழாவின் போது கழுந்திரட்டிற்குச் சிறப்பான பூசை நடைபெறுகின்றது. இத்தெய்வத்தினை வழிபடுவோர் தங்கள் வீட்டில் குழந்தைபிறப்பு, பூப்புனித நீராட்டு, திருமணம், இறப்பு போன்ற நிகழ்ச்சிகளின் போது கழுந்திரட்டினை வழிபடுகின்றனர். அச்சமயங்களில் சேவல் ஒன்றினைப் பலிகொடுக்கின்றனர்.

சாத்தான்குளத்தின் அருகில் உள்ள சாஸ்தாவி நல்லூர் கிராமத்தின் அருகில் வயிரவம் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள கோனார்கள் தங்கள் ஊருக்கு அருகில் உள்ள தருவாய் என்ற இடத்தில் கழுந்திரட்டு ஒன்று வைத்துள்ளனர். இங்கும் சுடலைமாடன்  கோயில் உள்ளது. இச்சுடலைமாடனை தேவர், ஹரிஜன இனமக்களும் வழிபடுகின்றனர். வயிரவத்தில் வாழ்ந்து வந்த கோனார்கள் குடும்ப பிரச்னைக் காரணமாக சாத்தான்குளம், தச்சமொழி, நரையன்குடியிருப்பு, தூத்துக்குடி அருகில் உள்ள தட்டாப்பாறை போன்ற இடங்களுக்கும் பிரிந்து சென்றுள்ளனர். அவர்கள் இங்கிருந்து "பிடிமண்" எடுத்துச் சென்று தங்கள் ஊர்களில் "கழுந்திரட்டு" அமைத்து வழிபட்டு வருகின்றனர்.

உடையார் வழிபாடு ஸ்ரீ உடையார் சுவாமி வழிபாடு தென்தமிழகத்தில் வேரூன்றிப் பரவியுள்ளது. இவ்வழிபாடு இன்றளவும் காலம் காரணமாக எவ்வித மாறுதலும் அடையவில்லை. கொடைவிழாவின் போது கதையாடல் மற்றும் நிகழ்கலை நோக்கில் கழுவேற்றமும் நடைபெறுகிறது. கதையைப்பாடும் புலவரும் பார்வையாளர்களும் உடையார் கோவிலுக்கு உரிமையுடையவர்களாக உள்ளனர். கழுவேற்றத்தினைச் சேவல் மூலம் நிறைவேற்றும் போது பார்வையாளர்கள் கண்ணீர் விட்டு அழுவதும், அமைதியான சூழ்நிலையை மேற்கொள்ளுவதும் தொன்றுதொட்டு நிலவி வருகிறது என உடையார் வழிபாடு பற்றி ஆய்வு செய்யும் ஆய்வாளர் த.த.தவசிமுத்து குறிப்பிட்டுள்ளார்.

சமணர்களைக் கழுவேற்றிய செய்தியினைத் தேவாரப்பாடல்கள் கூறுகின்றன. பட்டினத்தார் வழிபாட்டில், தான் குற்றவாளியல்லன் என்பதனை நிரூபிக்க கழுமரத்தினை எரிக்கின்றனர். சில மாரியம்மன் கோவில்களில் கழுவடி மேடை அமைக்கின்றனர். மதுரைவீரன் வழிபாட்டிலும் இக்கழுவடி வழிபாடு இணைந்துள்ளது. சாத்தான்குளம் பகுதியில் கழு ஏற்றிய நிலையில் உள்ள உருவவழிபாட்டினை நாம் பார்க்கின்றோம். கழுவடி வீரன் தம் குடும்பத்திற்குத் துணை நிற்பான் என்ற நம்பிக்கையில் இவ்வழிபாடு இன்றுவரை நிலைபெற்றுள்ளது. மானத்திற்காக உயிர்விட்ட உடையாரின் நினைவாக இவ்வழிபாடு நடைபெறுகிறது என அறியமுடிகிறது. ஸ்ரீவல்லபாண்டியன் காலத்தில் நிகழ்ந்ததாக வில்லுப்பாடல் குறிப்பிடுகின்றது. அரசர்கள் மட்டுமல்லாது அரசகுடும்ப பெண்களும் பிற ஆண்களுடன் மோகம் கொண்ட நிலையை இக்கதைகள் வழி அறிகின்றோம். திருநெல்வேலி பகுத்திக்கு என்ற தனிச்சிறப்பு பெற்ற வில்லுப்பாடலில் உடையாரின் கதை இடம்பெற்று சமயச் சடங்காக நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இதனை மேலும் வரலாற்று அடிப்படையில் அணுகவேண்டும். இதுபோன்று உயர்வர்க்கப் பெண்களுடன் தொடர்பு கொண்டு உயிர்விட்ட பிறவீரர்களின் கதைகளையும் சேகரித்து ஆய்வு செய்ய வேண்டும்.

குறிப்பு:
கழுவேற்றம் சடங்கு தொடர்பில் அமைந்த ஒரு கட்டுரையைப் பகிர்ந்து கொள்கிறேன். இக்கட்டுரையை நமக்காக தட்டச்சு செய்து வழங்கிய நண்பர்கள் மைதிலி, சுவர்ணலதா ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
-சுபா