Tuesday, November 10, 2015

தீபாவளி வாழ்த்து

-- கவிஞர் ருத்ரா.


எல்லோரும் வாழ வேண்டும்
எல்லாமும் பெற்று வாழவேண்டும்.
இதற்காக‌
இனிப்பு புத்தாடை பட்டாசுகளோடு
வாழ்த்துவோம்.
எந்த பண்டிகை என்றால் என்ன?
எந்த கடவுள் என்றால் என்ன?
மகிழ்ச்சியின் திளைப்பை
களிப்பின் உள் மலர்ச்சியை
எப்படி நுள்ளிப்பார்த்தாலும்
எப்படி கிள்ளிப்பார்த்தாலும்
ஒன்றாய் தானே இருக்கவேண்டும்.
மகிழ்ச்சியைக்கொண்டாடுவோம்.
மகிழ்ச்சியே இல்லாத மூலைகள்
எங்கே இருந்தாலும்
ஒரு துளி மகிழ்ச்சியாவது
அங்கே பட்டு
நனைய‌வேண்டும்.
இதில் தனித்தனி வாய்க்கால்கள் வெட்டும்
அருளுரைகள் கூட‌
மொத்தக்கடலின் திவலைகளாக தெறிக்கட்டும்.
பள்ளிவாசல்
தேவாலயம்
கோவில்
எல்லாம் வெறும் இடங்கள்.
மகிழ்ச்சி வேண்டி மண்டியிடும்
மனங்களே
இங்கு எல்லாம்.
நாம் கொண்டாடுவோம்
எல்லா பண்டிகைகளையும்.
ஒருவர் பண்டிகை
மற்றவருக்கு வெறும் விடுமுறையாய்
கழிந்து போகும்
போலித்தன்மைகள்
கழன்று போகும் நாளே
பொன்னான நாள்.
எல்லாமதங்களும் 
ஒரே மதமாய் ஆகும்போது
அப்போது தான் 
நாம் அறிகிறோம்
மதங்கள் உரிந்து போன‌
மன வெளியை.
அந்த மகிழ்ச்சிக்கு
கடல்கள் துச்சம்.
கவலைகளுக்கும் அச்சம்
நெருங்குவதற்கு.
மகிழ்ச்சியை
எல்லா மண் தொட்டிகளிலும்
பதியம் இடுவோம்.
அந்த பூக்களுக்கு
அதன் மகரந்தங்களுக்கு
சுவர்கள் இல்லை.
கூரைகள் இல்லை.
அந்த மகிழ்ச்சியே மீண்டும் மீண்டும்
அந்த மானிடத்து ஒளியின்
மகரந்த சேர்க்கையாய்
மத்தாப்பூக்கள் சுடர்ந்திடட்டும்






கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்

ruthraasivan@gmail.com

No comments:

Post a Comment