Wednesday, November 4, 2015

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 4

--செல்வன். 

கேள்வி: 1990ல் மக்கள் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவை கொண்டாடினார்கள். அந்த காலகட்டத்தில் அம்பேத்கரின் கொள்கைகளும், தலித் எனும் சொல்லாடலும் தமிழகமெங்கும் பரவலாக அறியப்பட்டன. அந்த காலகட்டத்தில் இருந்து தமிழகத்தில் இயங்கிவரும் இயக்கங்கள் குறித்து கூற முடியுமா? அப்போதுதான் டி.பி.ஐ (விடுதலை சிறுத்தை இயக்கம்) மற்றும் புதிய தமிழகம் இயக்கம் ஆகியவை உருவாகின. அதேபோல பல அமைப்புகளும் அக்காலகட்டம் முதல் மக்களை குறிப்பிட்ட அளவில் தம் அமைப்பில் திரட்டியும் வருகின்றன

பதில்:  பல எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் தலித் மக்களின் ஒருங்கிணைப்பு அம்பேத்கர் நூற்றாண்டு விழாவின் போதுதான் துவங்கியது என கூறிவந்தாலும் நான் ஆரம்பம் முதலே இதற்கு மாறான கருத்தையே நான் கொண்டுவந்துள்ளேன்.

கேள்வி: அப்போதுதான் இது பரவலாக அறியபட்டது

பதில்: இருக்கலாம், ஆனால் நான் அந்த கருத்தாக்கத்தையே மறுக்கிறேன். தலித் இயக்கங்கள் எப்போதுமே போராடியே வந்துள்ளன. பொதுவாக ஒரு இயக்கத்தால் முப்பது வருடம் மாத்திரமே தீவிரமாக போராடமுடியும். முப்பது வருடம் கழித்து இயக்க முன்னோடிகள் பலருக்கும் வயதாகிவிடும்- வயது நிச்சயமாக இதில் பங்கு வகிக்கிறது- அவர்கள் துணிச்சல் குறையும், அடுத்த தலைமுறை புதிதான ஒரு துவக்கத்தை எதிர்கொள்ளும். உலகெங்கும் உள்ள சமூக இயக்கங்களின் ட்ரெண்டே இதுதான். தமிழக வரலாற்றையே எடுத்துக்கொண்டால் 1880களில் துவங்கிய தலித் இயக்கம் 1914ல் அயோத்திதாசர் மறைவுக்குப்பின் சிறிது தடுமாறியது. அவருக்குபின் 1919ல் அவ்வியக்கம் மீண்டும் வலுப்பெற்றது. 1920களில் திராவிட இயக்கம் தோன்றி அதை நீர்த்துபோகச்சேயும்வரை தலித் இயக்கம் வலுவாகவே இருந்தது. அதன்பின் அம்பேத்கரின் காலகட்டத்தில் 1932 முதல் 1956 வரை தலித் இயக்கம் தமிழ்நாட்டில் வலுவாகவே இருந்தது. 1956ல் அம்பேத்கரின் மரணத்துக்குபின்  பிராந்திய அளவிலான தலித் தலைவர்கள் தோன்றும் வரை அதில் சிறிது தொய்வு ஏற்பட்டது.  அதன்பின் 1960 முதல் 1980 வரை மாநிலமெங்கும் சிறிய அளவில் செல்வாக்கு கொண்ட ஏராளமான பிராந்திய தலைவர்கள் உருவானார்கள். இவர்கள் அதிக அளவில் பேசபட்டவர்களாக இருந்தாலும் இவர்கள் அங்கீகாரம் பெறவில்லை. நீங்கள் எத்தனை போராட்டம் நடத்தியிருந்தாலும், அங்கீகாரம் பெற்றிருந்தால் தான் நீங்கள் தலைவராக ஏற்கபடுவீர்கள் அல்லவா? 1990களுக்கு முன்பு பெரிய அளவில் மோதல்கல் நிகழ்ந்துள்ளன. மீனாட்சிபுரத்தில் நிகழ்ந்த கலவரம் குறித்து மோதல் கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் இம்மோதல்களை பதிவு செய்ய அக்காலகட்டத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

கேள்வி: இவ்விடைக்காலத்தில் உதித்த தலைவர்கள் யார்?

பதில்: வை. பாலசுந்தரம், சேப்பன், இளையபெருமாள், சக்திதாசன் என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. ஆனால் அக்காலகட்டத்தில் அவர்களை அங்கீகரிப்பவர்கள் இல்லை. அவர்கள் இயக்கமாக இருந்தார்களே ஒழிய அரசியலில் அவர்களால் நுழைய முடியவில்லை. 1990க்கு முந்தைய காலகட்டத்தில் இன்னொரு சிக்கலும் இருந்தது. 1990க்கு முன் இன்றைய தலித் சிந்தனையாளர்களும், தலித்-அல்லாத சிந்தனையாளர்களும் 1990க்கு முற்பட்ட தலித் இயக்கத்தை கொள்கையால் உந்தபட்ட இயக்கமாக கருதவில்லை. அவர்கள் அம்பேத்கரையே சாதிகட்சி தலைவராக தான் பார்த்தார்கள். அவர்கள் மனதில் பெரிய தத்துவஞானிகள் என்றால் அவர்கள் லெனின், மார்க்ஸ், மாவோ, ஸ்டாலின் என்ற எண்ணமே இருந்தது. இக்கண்ணோட்டம் கொண்ட அவர்கள் தலித் இயக்கங்களை நிலம், பொருளாதாரம் சம்பந்தபட்ட பொருளியல் ரீதியான போராட்டங்களாகவே கருதினார்கள். அவர்கள் அம்பேத்கரை ஒரு ஜனநாயகவாதியாக அல்லது முற்போக்குவாத எண்ணம் கொண்ட ஒரு முதலாளித்துவ சக்தியாகவே கருதினார்கள். அப்படித்தான் அவர்களால் அவர் வரையறை செய்யபட்டார். இதன் விளைவாக தலித் இயக்கங்களின் பின்புலம், சித்தாந்தம் மற்றும் மக்களை திரட்டுதல் ஆகியவற்றுக்கு அவர்கள் முக்கியத்துவம் அளிக்க தவறினார்கள்.

அவர்கள் சிந்தனையில் மாற்றம் எப்போது வந்தது என கேட்டால் 1988 முதல் 1991 வரை ரஷ்யாவில் பெருத்த மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. கோர்பசேவ் ரஷ்யாவில் பெரஸ்ட்ராய்டிகாவை அறிமுகபடுத்துகிறார். ஆனால் அது தோல்வியடைகிறது. அது தோல்வியடைந்தபின் சோவியத்யூனியன் வீழ்ச்சியடைகிறது. சோவியத் யூனியனின் குடியரசுகள் விடுதலையடைந்து முதலாளித்துவ, ஜனநாயக அமைப்பை உருவாக்குகின்றன. கம்யூனிசத்தால் உந்தப்பட்ட சிந்தனையாளர்கள் பலரும் ரஷ்யாவிலேயே தம் கவனத்தை செலுத்தி வந்ததால் உள்ளூரில் உருவான இயக்கங்களை படிக்க தவறிவிட்டார்கள். சோவியத்யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னரே அவர்கள் ஆய்வுகளில் மாற்றம் உருவானது.  சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் தான் அவர்கள் அங்கே நடப்பதை பற்றி பேசுவதில் எப்பலனும் இல்லை எனும் முடிவுக்கு வருகிறார்கள். சீனாவிலும் அதே சமயம் முதலாளித்துவம் அறிமுகமாகிறது. இம்மாற்றங்களால் அவர்கள் சிந்தனையில் மாற்றம் நிகழ்ந்த சமயத்தில் தான் அம்பேத்கர் நூற்றாண்டு உதயமாகிறது. இதன்பின்னர்தான் இந்த சிந்தனையாளர்கள் அம்பேத்கரை படிக்கவே தொடங்குகிறார்கள். அம்பேத்கரை படித்தபின் தான் அவர் ஒரு தலைசிறந்த சிந்தனையாளர் என்பதை அறிந்து அவரை அங்கீகரிக்க துவங்குகிறார்கள். இவர்கள் அடைந்த மனமாற்றத்தை ஏதோ சமூகமே மாறியதாக கருதி எழுதினார்கள். இந்த கண்ணோட்டத்தில் தான் அவர்கள் அம்பேத்கர் நூற்றாண்டுக்கு பின்னரே தலித் இயக்க எழுச்சி உருவானதாக கருதுகிறார்கள். முந்தைய போராட்டங்களையும், இயக்கங்களையும் யாரும் கருத்தில் கொள்ளவில்லை.

கேள்வி: நீங்கள் சொல்வது உண்மையே. அவர்களை நாம் மறந்துவிடக்கூடாது

பதில்: ஆம், அவர்களை நாம் மறக்ககூடாது, ஆனால் அவர்கள் மறக்கபட்டுவிட்டார்கள் 1990களுக்கு முந்தைய காலகட்டத்தில் கணக்கற்ற தலித் இதழ்கள் வெளிவந்தன. ஆனால் இவர்கள் அவற்றை படிக்கும் எண்ணம் கூட கொண்டிருக்கவில்லை. இவர்கள் என்ன செய்தார்கள் என்றால் 1990க்குபின் அவர்கள் இந்த இதழ்களை படிக்க துவங்கினாலும், தாம் அவற்றை படிக்க துவங்கியதையே தலித் இயக்க எழுச்சியின் காரணமாக கூறிவருகிறார்கள். தலித்-அல்லாத சிந்தனையாளர்களிடம் தான் தலித்துகளுக்கு முன்பு இல்லாத சித்தாந்த அறிவு இருப்பதாக இவர்கள் கருதுகிறார்கள். களம் எதுவாக இருப்பினும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய இயக்கங்கள் எழும். அதேபோல அம்பேத்கர் நூற்ராண்டுவிழாவின்போது புதிய தலித் இயக்கங்கள் எழுச்சி பெற்றன. தலித் சிறுத்தைகள் இயக்கம் அப்போது மறுமலர்ச்சி பெற்றாலும், அது 1990க்கு முன்பே உருவாகிவிட்டது. ஆனால் திருமாவளவன் தலைமையேற்ற பின்னரே இந்த தலித்-அல்லாத சிந்தனையாளர்கள் அவரை ஆதரித்கு உடன் வர ஒத்துழைக்கிறார்கள். அன்று இருந்த இயக்கம் இதுமட்டுமல்ல. புதிய தமிழகமும் இருந்தது, அருந்ததியினர் இயக்கங்கள் இருந்தன, பல சிறு இயக்கங்களும் ஜாதி ஒழிப்பு இயக்கங்களும், முண்ணனிகளும் இருந்தன. இந்த எழுச்சியின் ஒரு காரணமாக அம்பேத்கர் நூற்றாண்டை குறிப்பிடலாமே ஒழிய- தலித் இயக்கம் உருவாகவே இதுதான் காரணி என கூறமுடியாது. ஏனெனில் (அது உண்மையெனில்) அம்பேத்கரின் சிந்தனைகளை இத்தனை ஆண்டுகளாக அழியாமல் பாதுகாத்து வந்தவர்கள் யார்?
(திரு. சன்னா அவர்களின் நேர்காணல் தொடரும்..)




 


  செல்வன்

 
holyape@gmail.com





 






No comments:

Post a Comment