Wednesday, November 4, 2015

கூவம்

- கோ.செங்குட்டுவன்.

 கூவம் ...

இந்தப் பெயரைக் கேட்டவுடன் சென்னையில் நாற்றமெடுத்து ஓடிக் கொண்டிருக்கிற அந்த ஆறுதான் நினைவுக்கு வரும். இந்த ஆறு முன்பு நல்ல நிலைமையில் இருந்தது என்பது வேறு விசயம்.



கூவம் என்பது ஒரு கிராமத்தின் பெயர். திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ளது இந்த ஊர். திருக்கூவப் புராணம் இயற்றிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் பாடுகிறார்,

“மைந்தரை அன்னையை மாதரை ஆவைத்
தந்தையை அந்தணர் தம்மை வதைத்த
அந்தம்இல் பாதகர் ஆயினும் எல்லை
வந்திடின் அந்நகர் வண்கதி நல்கும்”


மைந்தரையும், தாயையும் மடந்தையரையும் பசுவையும் தந்தையை அந்தணரைக் கொன்ற எல்லையற்ற பாவம் செய்தவரே ஆயினும் அவர் கூவம் என்ற பதியின் எல்லையை அடைந்தார் என்றால், அவர்க்கு அப்பகுதி நல்கதியைத் தரும், என்பது சிவப்பிரகாச சுவாமிகளின் வாக்கு. சமய இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளில் திருவிற்கோலம், கூகம், மதுராந்தக நல்லூர், தியாக சமுத்திரம் போன்ற பெயர்களால் அழைக்கப்படும் இந்த ஊர், இப்போது கூவம் என்றழைக்கப்படுகின்றது.



இங்கு திரிபுர சுந்தரி சமேத திரிபுராந்தக சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் குறித்து,

“தொகுத்தவன் அருமறையங்கம் ஆகமம்
வகுத்தவன் வளர்பொழில் கூகமேவினான்
மிகுத்தவன் மிகுந்தவர் பரங்கள் வெந்தறச்
செகுத்தவன் உறைவிடம் திருவிற்கோலமே”

என்று பாடுகிறார் திருஞான சம்பந்தர்.

தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பாலான கோட்டைகளைக் கட்டித் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் துன்பத்தினை விளைவித்தனர். தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் முறையிட இறைவன் அசுரர்களின் ஆற்றலை ஒடுக்கியதோடு, அந்த மூன்று நகரங்களையும் அழித்தக் காரணத்தால் திரிபுராந்தகர் என்றும், போருக்குச் சென்றபோது வில்லேந்திய கோலத்துடன் சென்றதால் திருவிற்கோல நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி திரிபுராந்த நாயகி.


இறைவனைத் தொடாமலேயே (தீண்டாத் திருமேனியர்) இங்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இப்பகுதியில் மழை மிகுதியாகப் பொழியும் என்பதைத் தனது வெண்மையானத் திருமேனி மூலமாகவும், மழைக் குறைவு, வன்மை போன்றவற்றைத் தமது செம்மையான திருமேனி மூலமாகவும் இறைவன் முன் உணர்த்துதலைச் செய்கிறார் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

கூவம் உள்ளிட்ட ஐந்து ஊர்களைச் சேர்ந்த கொண்டல்கட்டி வேளாளர் சமூகக் கோயிலாகவும் திரிபுராந்தகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் 1909இல் நடத்தப்பட்ட ஆய்வில் 31 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. இரண்டாம் இராசேந்திரன் காலந்தொடங்கி பல்வேறு காலக்கட்டங்களில் வழங்கப்பட்டக் கொடைகளை இக்கல்வெட்டுகள் விளக்குகின்றன.



இந்த ஊரைத் தொட்டு வருவதால்தான், அந்த ஆற்றுக்கு ‘கூவம் ஆறு‘ எனும் பெயர் வழங்கப்படுகிறது. 



 

  


 
கோ.செங்குட்டுவன் 

ko.senguttuvan@gmail.com
 
 
 
 
 
 

No comments:

Post a Comment