- கோ.செங்குட்டுவன்.
ஒவ்வொரு முறையும் சென்னைக்குச் செல்லும் போதும் மாமண்டூரில், பரந்து விரிந்து காணப்படும், அந்த ஏரியைப் பார்த்துப் பெருமூச்சு விடுவேன்.
பல்லவரின் நீர் மேலாண்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் ஏரி அது.
அப்போது என் உள்மனம் சொல்லும், “உன் மாவட்டத்திலும் பல்லவர் வெட்டிய ஏரி இருக்கிறதே.“
அப்படியா? எங்கு? பனைமலையில்...!
பனைமலை ஏரியைப் பார்க்கும் வாய்ப்பு 2001இல் தான் எனக்குக் கிடைத்தது.
“நந்தன் கால்வாய்த் திட்டம்” தொடர்பான விவரங்கள் சேகரிப்பதாக, நண்பர் அன்னியூர் சிவா அவர்களின் துணையுடன் பனைமலை கிராமத்துக்குச் சென்றேன்.
குன்றின் அருகே மேற்கில், வானையும் நிலத்தையும் இணைப்பதுப் போன்று பிரம்மாண்டாகக் காட்சியளித்தது பனைமலை ஏரி.
நானும் சிவாவும் ஏரியில் இறங்கி சில அடிகள் நடந்தோம். பாளம் பாளமாக வெடித்திருந்தது. மழைத் துளியைப் பார்த்து வருடங்கள் பலவாகின்றதாம்!
2011இல் “நந்தன் கால்வாய்” நூலுக்காக மீண்டும் பனைமலை ஏரிக்குச் சென்றேன்.
இப்போது நிலைமை மாறியிருந்தது. அப்போதுதான் மழை பெய்திருந்ததால் ஏரி முழுக்கத் தண்ணீர் நிரம்பி, கண்களுக்கு விருந்தாகவும், புகைப்படம் எடுக்கவும் அழகாக இருந்தது.
பொறியாளரும் மூத்த ஆய்வாளருமான காலஞ்சென்ற கொடுமுடி ச.சண்முகன் பனைமலை ஏரி குறித்து இப்படி விவரிப்பார்:
“80 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி 30 அடி ஆழம் உள்ளது. இதன் தொழில்நுட்பம் பார்த்து வியக்கத்தகுந்தது. தொடர்ச்சியாக பல மலைக் கரடுகளை இணைத்து இடையில் சிறுசிறு நீளத்திற்கு மட்டும் கரை அமைக்கப் பட்டுள்ளது. 30 அடி ஆழ மதகும் கால்வாயும் உள்ளன. ஒரு கோடியில் உள்ள பாறையே கழிங்கலாக அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானச் சிக்கனத்திற்கு இது எடுத்துக் காட்டு. இன்றைய மேட்டூர் அணையோடு, பனைமலை ஏரி பல வகையில் ஒப்பிடத்தகுந்தது.”
பல்லவர் கால கட்டட, ஓவியக் கலைக்குச் சான்றாதாரமாக இன்றும் நின்றிருக்கும் தாளகிரீசுவரர்க் கோயில், பனைமலை ஏரிக்கு அருகிலேயே குன்றின் மீது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“இந்த ஏரி அமைத்து வளம் பெருகிய பின்னரோ அல்லது சமகாலத்திலோ தாளகிரீசுவரர் ஆலயம் அமைந்திருக்கலாம்” என்பதும் கொடுமுடியாரின் கருத்தாகும்.
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சல் ஆற்றில் இருந்துத் தொடங்கும் நந்தன் கால்வாய், பனைமலை ஏரியில் சேர்கிறது.
இந்த ஏரியின் மூலம் 1079.24 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேலும் நங்காத்தூர், முட்டத்தூர், நகர், பிரம்மதேசம், எசாலம், பெருங்கலம்பூண்டி, அன்னியூர், வெள்ளேரிப்பட்டு, வீரமூர், வெங்கந்தூர், ஆரியூர் ஆகிய ஊர்களுக்கான ஏரிகளுக்கும் இங்கிருந்து தான் தண்ணீர் செல்கிறது என்பதும் குறிப்பிடத்தகுந்ததாகும்.
பனைமலை ஏரியின் கிழக்கில் நந்தன் கால்வாய்த் திட்டத்தின் கதாநாயகரான, மறைந்த அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
பல ஏரி கல்வெட்டுகளில் அதை வெட்டுவித்தவர்கள் “ஏரியை காப்பவர் அடி என் முடி (தலை) மேலன” என்று சொல்லியிருப்பார்கள்.
இந்தச் சொல்லை சிரமேற் கொண்டவர்கள்தான், பனைமலை ஏரியை இன்னமும் ஏரியாகவே வைத்திருக்கின்றனர்.
இன்று, ஏரிகள் பலவும் பேருந்து நிலையங்களாகவும், பெருந்திட்ட வளாகங்களாகவும், மருத்துவக் கல்லூரிகளாகவும் மாறிவருகின்றன. இன்னும் சில ஏரிகளை பழைய வரைபடங்களில் மட்டுமே பார்க்க முடிகின்றது.
மிச்சம் மீதியிருக்கும் போரூர் ஏரி போன்றவற்றைக் காப்பாற்றுவதற்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.
இந்தச் சூழலில், வரலாறுப் பண்பாட்டுக் கூறுகளின் எச்சமாகவும், விவசாயத்துக்கும் நிலத்தடி நீராதாரத்திற்கும் நிலைக்களனாகவும் பனைமலை ஏரி எஞ்சி நிற்பது மகிழ்ச்சியைத் தருகிறது...!
பனைமலை:
விழுப்புரம்-செஞ்சி சாலையில் சூரப்பட்டு சென்று, அங்கிருந்து வடக்கே 7ஆவது கி.மீ.இல் அமைந்துள்ளது. செஞ்சி-அனந்தபுரம் வழியாகவும் இங்கு வரலாம்.
No comments:
Post a Comment