-மேகலா இராமமூர்த்தி
தமிழ்மணம் பரப்பிய குளிர்தென்றல்!
வெள்ளையர் ஆட்சியில் தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலை தவறிக்கெட்டுப் பாழ்பட்டு நின்றது நம் பாரதம். அத்தருணத்தில் மண்விடுதலை பெறுவதற்காகக் கண்ணுறக்கமின்றி உழைத்த உத்தமர்தாம் எத்தனை பேர்! அத்தகையோரில் நாட்டுவிடுதலைக்கு மட்டுமல்லாது, தொழிலாளர் முன்னேற்றம், பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், மொழி வளர்ச்சி, சமய நெறி எனப் பல்துறைகளிலும் பார்வையைச் செலுத்திச் சாதனை படைத்தோர் வெகுசிலரே ஆவர். அத்தகு அரிதான மனிதர்களில் ஒருவர்தாம் திருவாரூர் விருத்தாசலக் கலியாணசுந்தரனார் என்ற பெயருடைய திரு.வி.க. அத்தமிழ்மகனாரைப் பற்றிச் சிறிது சிந்திப்போம்!
பூர்வீகமாய்த் திருவாரூரைக் கொண்டிருந்த திரு.வி.க.வின் குடும்பம் அவருடைய பாட்டனார் காலத்திலேயே சென்னைக்குக் குடிபெயர்ந்துவிட்டது. 1883-ஆம் ஆண்டு ஆகஸ்டு 26-ஆம் நாள், சென்னைக்கு அருகிலுள்ள துள்ளம் எனும் கிராமத்தில் பிறந்தார் திரு.வி.க.
குடும்பச்சூழல் காரணமாகப் பத்தாம் வகுப்புக்குமேல் படிக்க வழியின்றிப்போனாலும், நாவன்மையில் சிறந்தவரும், தமிழ் வடமொழி ஆகிய இருமொழிப் புலமை செறிந்தவருமான யாழ்ப்பாணத்துக் கதிரைவேற் பிள்ளையிடமும், மகாவித்வான் தணிகாசல முதலியாரிடமும் தமிழ்க் கல்வியையும் வடமொழிக் கல்வியையும், சைவசமய நூல்களையும் கசடறக் கற்றார் திரு.வி.க. அதுமட்டுமா? வேதாந்தம், பிரம்மஞான தத்துவம் போன்றவற்றிலும்கூடப் புலமைபெற்றிருந்தார் அவர்.
சென்னை ஆயிரம்விளக்கு பகுதியிலுள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய திரு.வி.க., அதனைத் தொடர்ந்து வெஸ்லி கல்லூரியிலும் சிலகாலம் பணியாற்றியிருக்கின்றார்.
வெள்ளையர் எதிர்ப்பு மிகத்தீவிரமாக இருந்த அக் காலகட்டத்தில், நாட்டு விடுதலையில் நாட்டங்கொண்டிருந்த திரு.வி.க.வால் ஆசிரியர் பணியில் ஆர்வங்காட்ட இயலவில்லை. ஆகையால், ஆசிரியப் பணியைத் துறந்தார்; நாட்டு விடுதலைக்கு முழுமூச்சாய்ப் பாடுபடத் தொடங்கினார். தேசபக்தன், திராவிடன், நவசக்தி போன்ற பல இதழ்களில் பணிசெய்த அவர், தம் கனல் கக்கும் எழுத்துக்களால் இளைஞர்களிடத்து சுதந்திரத் தீயை மூட்டினார்; விடுதலை வேட்கையை ஊட்டினார். அப்போது பத்திரிகைகளில் அவர் எழுதிய தலையங்கங்கள் மக்களிடத்துப் பெரும் வரவேற்பைப் பெற்றன. தம் எண்ணங்களைத் திறம்பட எழுத்தில் கொணர்வதெப்படி என்பதை அறிந்துகொள்ள இன்றைய பத்திரிகையாளர்களும் அவசியம் படிக்கவேண்டிய எழுத்துக்கள் அவை!
திரு.வி.க. நவசக்தியில் பணிபுரிந்துகொண்டிருந்த சமயத்தில்தான் (1924) தந்தை பெரியார் கேரளாவிலுள்ள ‘வைக்கம்’ எனுமிடத்தில் தீண்டாமைக்கு எதிராகப் போர்புரிந்து சிறைசென்றார். பெரியாரின் வீரத்தைப் பாராட்டித் தம்முடைய தலையங்கத்தில் ‘வைக்கம் வீரர்’ (Hero of Vikom) என்று அவரை வருணித்திருந்தார் திரு.வி.க. அப்பெயர் பெரியாருக்கு இன்றுவரை நிலைத்துவிட்டதை நாமறிவோம்.
தொழிலாளர் நலனிலும் பெரிதும் அக்கறைகாட்டிய திரு.வி.க.வின் சீரிய முயற்சியால் 1918-இல் சிங்காரச்சென்னையில் ’தொழிற்சங்கம்’ எனும் அமைப்பு முதன்முதலில் தோற்றங் கண்டது. இது தமிழர்களாகிய நாம் பெருமிதம் கொள்ளவேண்டிய ஒன்றாகும்!
அன்னைத் தமிழின் அருமையை மறந்தோராய், தனித்தமிழில் எழுதுவதே சாத்தியமற்றது என்று எண்ணிக்கொண்டு, மணிப்பவள நடைமீது மயல்கொண்டிருந்த அன்றைய தமிழ்ச்சமுதாயத்தின் மடமையைப் போக்கித் தெள்ளுதமிழ் நடையில் எழுதுவதே தமிழரின் கடமை என்று உறுதிபட மொழிந்த திரு.வி.க., தன் ஆற்றொழுக்கான அழகுத்தமிழ் நடையால் மக்களைத் தென்றலாய் வருடினார்; அவர்தம் மனங்களைத் திருடினார். அதனாலன்றோ ’தமிழ்த்தென்றலாய்’ இன்றும் அவர் மக்கள் மனங்களில் உலாவருகின்றார்!
தேசத் தலைவர்களான மகாத்மா காந்தி, திலகர் போன்றோர் தமிழகம் வந்தபோது அவர்களின் மேடைப்பேச்சுக்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் ‘மொழிபெயர்ப்பாளராகவும்’ திரு.வி.க. திகழ்ந்திருக்கின்றார். அண்ணல் காந்தியாரின் அகிம்சைக் கொள்கையும், அறவாழ்வும் திரு.வி.க.வைப் பெரிதும் ஈர்த்தன. அதனால் வாணாள் முழுவதும் காந்தியத்தைப் பின்பற்றுவதையே தம் கடனாய்க் கொண்டிருந்தார் அவர்.
மகாத்மாவை, ’காந்தியடிகள்’ என்ற பெயரால் முதலில் அழைத்தவரும் திரு.வி.க.வே ஆவார். அதற்கு அவர்தரும் விளக்கம் மனங்கொளத்தக்கது. ”அறநெறியில் நின்று உயர்ந்தோரே ’அடிகள்’ எனும் பெயருக்கு உரியோர்; அவ்வகையில் இளங்கோவடிகள், கவுந்தியடிகள், அறவண அடிகள் போலத் தம் வாழ்வையே அறவாழ்வாக மாற்றிக்கொண்ட மாமனிதர் மகாத்மாவை நான் காந்தியடிகள் என அழைக்கின்றேன்” என்றார் அவர்.
’காந்தியடிகளின் வாழ்வே மனிதவாழ்வுக்கு இலக்கணம்’ எனும் உறுதியான கொள்கையுடைய திரு.வி.க., ’மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’ எனும் அருமையான நூலொன்றை எழுதியுள்ளார். அதில் மகாத்மாவையும், அவர்தம் வாழ்வியல் முறைகளையும் வாயூறிப் பேசுகின்றார். (It’s a study of the implications of Gandhi’s thought for human conduct).
அந்நூலிலிருந்து சில கருத்துக்கள்…
”மக்களின் கொலை புலை தொலையக் கீழைநாட்டில் தோன்றிய ஞாயிறு காந்தியடிகள். அண்ணலின் வாழ்க்கையே ஓர் பெருங்கல்விக் கழகமாகும். அதில் நாம் கற்கவேண்டியவை எண்ணிறந்தவையாகும்.
தன்னை ஓர் சனாதன இந்து என்று சொல்லிக்கொள்ளும் மகாத்மா, ஒழுங்கீன முறைமையற்ற வருணாசிரம தர்மத்தை நான் நம்புகிறேன் என்றார். வருணாசிரம தர்மத்தை ஏற்கும் அதேவேளையில் அவை உயர்வு தாழ்வு பேசுவதை அவர் ஏற்றுக்கொண்டாரில்லை. நால் வருணங்களும் மனிதனின் கடமைகளைக் குறிப்பனவேயன்றி உயர்வு தாழ்வைக் குறிப்பவையல்ல என்பதே அண்ணலின் எண்ணம். மனித வாழ்வுக்கு இலக்கியமாக வாழும் பெரியாரான காந்தியடிகள், அகிம்சை தர்மத்தை அரசியற் போரில் முதன்முதல் நுழைத்த பெருந்தகையாளர் ஆவார்.”
இவ்வாறெல்லாம் மகாத்மாவின் வாழ்வியலைச் சொல்லோவியங்களாகத் தீட்டியுள்ளார் திரு.வி.க. அந்நூலில்!
தமிழிலக்கியத்தில் ஆழ்ந்த புலமையும் காதலுமுடைய திரு.வி.க., பண்டைத் தமிழரின் இயற்கையோடு இயைந்த இனியவாழ்வை, காட்சிக்கினிய ’முருகை’யே (முருகு-அழகு) அவர்கள் கடவுளாய்க் கொண்ட தன்மையை தம்முடைய ’முருகன் அல்லது அழகு’ (Lord Murugan or Beauty) எனும் நூலில் பின்வருமாறு விவரிக்கின்றார்:
”மலைப்பகுதியே மாந்தஇனம் முதலில் வாழ்ந்த இடம் என்பது அறிஞர்கள் துணிபு. குறிஞ்சி நிலத்தைச் சார்ந்த அம்மக்கள் தம் கண்களுக்குப் புலப்பட்ட ’கைபுனைந்தியற்றா கவின்பெறு வனப்பான’ இயற்கையழகில் ஈடுபட்டு அதற்கு ’முருகு’ என்று பெயர் சூட்டினர். காலையும், மாலையும் மலையில் தோன்றும் காய்கதிர்ச்செல்வனின் கண்ணுக்கினிய செம்மையழகும், செக்கர் வானத்தின் சொக்கவைக்கும் பேரழகும் அம்மக்களைப் பெரிதும் கவர்ந்தன. அச்செவ்விய இயற்கையழகைச் ’சேய்’ என்று போற்றினர் அவர்கள். குன்றாத அழகும், குறையாத இளமையும், மாறாத மணமும், மறையாத கடவுள்தன்மையும் கொண்ட அந்த முருகையே செம்பொருளாகக் கருதி அவர்கள் வழிபட்டனர்” என்று குறிப்பிடுகின்றார். அடடா! இயற்கையில் நிறைந்திருக்கும் இறையின் தோற்றத்தைக் கவினுறக் காட்சிப்படுத்தியுள்ள தமிழ்ச்சான்றோர் திரு.வி.க.வின் புலமைத்திறன் போற்றத்தக்கதன்றோ?
சிறந்த மேடைப்பேச்சாளராகவும் புகழ்பெற்றவர் திரு.வி.க. பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பெண்கல்விக்காகவும் உண்மையாய் உழைத்தவர் அவர். விதவைகள் மறுமணத்தை வலியுறுத்திய முற்போக்குச் சிந்தனையாளராகவும், மனிதாபிமானம் மிக்க மனிதராகவும் அவர் திகழ்ந்தார். பெண்மையின் சிறப்பையும் தனித்துவத்தையும் நவில்வதற்கென்றே ‘பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை’ எனும் ஒப்பற்ற நூலை எழுதினார். பெண்ணுரிமை குறித்து அதிலே அவர் கூறியுள்ள கருத்துக்கள் சிந்திக்கற்பாலன.
”பகுத்தறிவற்ற அஃறிணை உலகில் பெண்ணுரிமைக்குப் பழுதுநேர்ந்ததில்லை. அந்தோ! ஆறறிவுள்ள உயர்திணை இனத்திலேயே பெண்ணுரிமைக்குப் பழுது நேர்ந்திருக்கின்றது…வெட்கம்! வெட்கம்! இதற்குக்காரணம் ஆண்மகனின் தன்னலமே ஆகும். ஆண்மகன், பெண்மகளைத் தனக்குரிய காமப்பொருளாகவும், பணியாளாகவும் கொண்ட நாள்முதல் அவள்தன் உரிமையை இழக்கலானாள். ஆனால், ஒரு நாட்டின் நாகரிகம் என்பது அந்நாட்டுப் பெண்கள் நிலையைப் பொறுத்தேயன்றோ அமைகின்றது. பெண்கள் எவ்விதக் கட்டுப்பாடும் இடுக்கணுமின்றி எங்கே தம் பிறப்புரிமையை நுகர்கின்றனரோ அங்குள்ள ஆண்மக்களே நாகரிக நுட்பம் உணர்ந்தோராவர். அந்நாடே நாகரிகம் பெற்றதாகும்.” என்று முழங்குகின்றார்.
வாய்ச்சொல் வீரராயும், நன்னெறிகளை ஏட்டில் மட்டுமே எழுதிக்குவிக்கும் காகிதப் புலியாகவும் திகழ்ந்தவர் அல்லர் திரு.வி.க. தாம் வலியுறுத்திய வாழ்வியல் நெறிகள் அனைத்தையும் தம் வாழ்வில் தவறாது கடைப்பிடித்தவர். இளவயதிலேயே தம் அருமை மனைவியைப் பறிகொடுத்தும் பிறிதொரு பெண்ணைச் சிந்தையாலும் தொடாத பேராண்மையாளர் அவர் என்றறியும்போது அவருடைய புலனடக்கமும், தவவொழுக்கமும் நம்மைச் சிலிர்க்க வைக்கின்றன.
பல்துறைப் புலமையும், அண்ணல் காந்தியைப் போன்ற எளிமையும், சொல்லும் செயலும் ஒன்றேயான நேர்மையும், பெண்களைத் தெய்வமாய்ப் போற்றும் நீர்மையும் கொண்ட அரிதினும் அரிதான மாமனிதர் தமிழ்த்தென்றல் திரு.வி.க. என்பதை எவரே மறுப்பர்?
இம்மனிதருள் மாணிக்கத்தைப் பற்றி நூலெழுதியுள்ள பேராசிரியர் திரு. ம.ரா.போ. குருசாமி அவர்கள், “படிப்பால் இமயம், பண்பால் குளிர்தென்றல், பணியால் நாவுக்கரசர், சுருங்கச் சொல்லின் தமிழகம் கண்ட ஓர் காந்தி இவர்!” என்று திரு.வி.க.வைப் பற்றி வியந்துபேசுவது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை!
***
கட்டுரைக்கு உதவியவை:
3. முருகன் அல்லது அழகு – திரு.வி.க.
4. பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை – திரு.வி.க.
5. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் – திரு.வி.க.
No comments:
Post a Comment