Wednesday, October 28, 2015

கட்டாக் காலிகளின் கொக்கரிப்பு மேய்ச்சல்

--மறவன்புலவு க. சச்சிதானந்தன்.


25.10.2015 ஞாயிற்றுக்கிழமை நண்பகல்
வயல் வரப்புகளில் 30-40 மாடுகள், ஒன்றன் பின் ஒன்றாக ஓடிக்கொண்டிருந்தன. யாரோ கலைத்துக் கொண்டிருந்தார்கள்.

24.09.2015 மறவன்புவில் மழை தூறத் தொடங்கிய நாள். காய்ந்த நிலம் ஈரமானது. ஆனாலும் உழவோ விதைக்கவோ முடியாத ஈரம்.

05.10.2015 வரை தூறலாக வழங்கிய வானம், அடுத்த சில நாள்கள் மழையாகப் பொழிந்து தந்தது. உழவு தொடங்கியது. நெல் விதைப்பும் தொடர்ந்தது.

16.10.2015 தொடக்கம் கால்நடைகளை (கோழி, ஆடு, மாடு) வயல்களுக்குள் விடவேண்டாம் என்ற ஒலிபெருக்கி அறிவித்தல் தெருவெங்கும் சந்து பொந்தெங்கும். அடுத்த நாள் வயல்களுள் ஆடுகள் மாடுகள் இல்லை. வீட்டருகு வயல்களில் விதைத்த நெல்மணிகளைச் சில கோழிகள் கொறித்தன. அதுவும் அதற்கடுத்த நாள்களுள் கூடுகளுள் முடங்கின.

விட்டு விட்டுத் தொட்டுத் தொட்டுப் பெய்த மழை. உழவுச் சால்களில் நீர்தேங்குவதும் உடனே வற்றுவதுமாக. புழுக்கம் தரும் வெயிலிலும் காயாத வயல் தரை. முந்தி விதைத்த வயல்கள் பசுமைத் தரைகளாக. 20.10.2015 அன்று மறவன்புலவு பார்க்குமிடமெங்கும் நீக்கமறப் பசுமைத் தரையானது. மறவன்புலவு மட்டுமன்று. கிழக்கே தளங்களப்பு, மேற்கே கைதடி-நாவற்குளி, அப்பால் தச்சன்தோப்பு வரை. கொடும் வெயிலில் காய்ந்த வயல்களில் எரிந்த புல்களைக் கண்டு புகைந்த கண்களுக்குப் பசுமை விரித்துக் குளிர்வித்தனள் நிலம் என்னும் நல்லாள்.

முளைவிட்ட நெல் வயல்களில் மாடுகள். மேய்ந்து கொண்டிருந்தன 30-40 மாடுகள். என் வயிறு புகைந்தது.கைகள் மரத்தன. கால்கள் சோர்ந்தன. கண்கள் பனித்தன. நெஞ்சம் பதைத்தது.

நகைகள் அடைவில். உயர் வட்டியில் கடன். உந்தால் உழுவிக்க, கைகள் விசிற, விரல்வழி சிதறும் நெல்மணிகள் விதையாக, விதைத்த ஐந்தாம் நாள் உந்தால் உழுது மறுக்க, ஒவ்வொரு பரப்புக்கும் சில ஆயிரங்கள் செலவாக, கண்களைக் குளிர்வித்த பசுந்தரையே நெஞ்சில் பாலை வார்த்தது வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வாதாரம் தேடும் வேளாண் பெருமகனுக்கு.

அந்தப் பசுமையை, முளைவிட்ட நெல்மணிகளை, மிதித்து, உழக்கி, நுனியில் கடித்துக் குதறும் மாடுகளை என் செய்யலாம்? காலில் கயிறால் கட்டிப் பழக்கமற்ற மாடுகள். எனவே கட்டாக் காலிகள். எவருக்கும் சொந்தமில்லாத மாடுகள். கிட்டப் போனால் எவரையும் முட்டித் தள்ளும் மூர்க்க மாடுகள். கலைத்தால் வாலைக் கிளப்பி மிரட்டும் நாகுகள், நாம்பன்கள், பசுக்கள், எருதுகள்.

1999 மார்கழி தொடக்கம் 2009 ஆவணி வரை 10 ஆண்டுகள் உயர்பாதுகாப்பு வலையமாக மறவன்புலவை அரசுப் படையினர் மாற்ற, மக்கள் விட்டுச் சென்ற மாடுகள் பல்கிப் பெருகிக் கட்டாக் காலிகளாக, சில ஆண்டுகளுக்குமுன் பல பிடிபட, சில பிடிபடாமல் உலவுகின்றன அறுகு வெளி தொடக்கம் தச்சன்தோப்பு வரை நீண்ட கட்டற்ற வெளிகளில்.

மறவன்புலவில் 1250 ஏக்கர் நெற்செய்கை வயல்கள். தனங்களப்பில் 800-900 ஏக்கர் நெற்செய்கை. கைதடி நாவற்குளியில் 750-800 ஏக்கர் நெற்செய்கை. யாவும் இப்பொழுது இந்தக் கட்டாக் காலிகளின் கொக்கரிப்பு மேய்ச்சலில். காலையில் பசும் நெல்லை மேய்தல், பகலில் குளமொன்றில் நீரருந்துதல், இரவில் மேட்டு நிலத்தில் ஓய்வு. எவருக்கும் சொந்தமில்லாத எதுவும் நிலப்பரப்பிலும் நிலத்தின் கீழும் வானத்தில் இருந்தாலும் அவை அரசுக்குச் சொந்தமல்லவா? இந்தக் கட்டாக் காலிகளும் அரசுக்குச் சொந்தமானவையே.

உணவு உற்பத்தியைப் பெருக்கவேண்டும், நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு காணவேண்டும், அதற்காகக் கமக்காரரை ஊக்குவிக்கவேண்டும். மானிய விலையில் உரம், விதைநெல், கடன் என்பன வழங்கவேண்டும் என்ற கொள்கை அரசுக்கு. அந்தக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் அரசே விதைத்து முளைவிட்ட வயலில் கட்டாக் காலி மாடுகளை மேயவிட்டால்?

இஃது எங்கள் பணியல்ல, பிரதேசச் செயலகத்திடம் முறையிடுக என்றார் சாவகச்சேரிக் காவல்நிலையப் பொறுப்பாளர். கட்டாக்காலி மாடுகள் பிரதேச சபையின் பொறுப்பில் வருவன. நெல் விதைத்தபின் வருவன யாவுக்கும் கமநல சேவைத் திணைக்களமே பொறுப்பு என்றார் பிரதேசச் செயலர். நாங்கள் என்ன செய்யமுடியும் என்றார் பிரதேச சபைப் பொறுப்பாளர். பொறுத்திருங்கள் ஆவன செய்கிறேன் என்றார் கமநலசேவைத் திணைக்களத் துணை ஆணையர். தளங்களப்புக் கமக்காரர் அமைப்புத் தலைவரும் மறவன்புலவுக் கமக்காரர் அமைப்புத் தலைவரும் (ஒலிபெருக்கியில் அறிவித்தவர்) ஆற்றாமையால் கைவிரித்தனர். இன்றே கடிதம் கொடுக்கிறேன் என்றார் அரசின் நிலதாரி.

20.10.2015இல் கட்டாக் காலி மாடுகளை என் கண்கள் கண்டது முதலாக என் முயற்சிகளுக்குக் கிடைத்த விடைகள் இவை. நான் கடிதங்கள் எழுதினேன். இன்று வரை தோராயமாக 50 ஏக்கர் நெல்வயல்களை அரசின் கட்டாக் காலி மாடுகள் மேய்ந்து அழித்தன. தடுக்க எவரும் முன்வரவில்லை. கண்டால் கலைக்கும் சில வேளாண் பெருமக்களைத் தவிர. இன்று 25.10.2015வரை மாடுகள் வயல்களுள் முளைவிட்ட நெல்லை மேய்கின்றன.

அரச அலுவலர்களுக்கு மாதம் முடிய வங்கியில் சம்பளத் தொகை. ஓடித்திரிய மகிழுந்து. அழைக்கத் தொலைப்பேசி. பணிக்குக் குளுரூட்டிய அறைகள். கூட்டங்களுக்குப் போயுள்ளார், களத்துக்குப் போயுள்ளார் மேல்நிலை அலுவலர் என்ற செய்தி தரும் கீழ்நிலை அலுவலர். யாவும் குடிமகன் தரும் ஊழியமும் வசதிகளும். அவர்கள் ஊழியம் பெற்று வசதியுடன் வாழ்கிறார்கள். உணவு உற்பத்திக்கு ஓயாது உழைக்கும் கடன் மிஞ்சிய வேளாண் பெருமகன் தன்னை மாய்ப்பதற்கு முயல்வதைத் தவிர வேறு வழி?

 

மறவன்புலவு க.சச்சிதானந்தன்
 
மறவன்புலவு க.சச்சிதானந்தன்

tamilnool@gmail.com


No comments:

Post a Comment