Thursday, October 15, 2015

கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. து. சுந்தரம்

-- தேமொழி








கோவையைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. து. சுந்தரம் அவர்கள் அவினாசி பள்ளியிலும், கோவை அரசு கலைக்கல்லூரியிலும் படித்து, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றியவர். தொல்லியல் ஆர்வமும் கல்வெட்டறிவும் அமையப்பெற்றதால், நடுவணரசுப் பணிநிறைவுக்குப் பின்னர், கல்வெட்டுகளைத் தேடிச் சென்று, அவற்றை ஆராய்ந்து, தகவலைப் படித்து, கல்வெட்டுகளைப் படமெடுத்து, அவற்றைப் பற்றி தானறிந்த விவரங்களை “கொங்கு கல்வெட்டு ஆய்வு” என்ற தனது வலைத்தளத்தில் தொகுத்து பதிவு செய்து வருகிறார். அத்துடன் “கல்வெட்டு எழுத்துகள் கற்போம்” என்ற தொடரின் வழியாகக் கல்வெட்டுகளை எப்படிப் படிப்பது என்று கல்வெட்டுகளைப் படிக்கும் பயிற்சியை வழங்கும் பாடங்களையும் மின்தமிழ் குழுமத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார். தமிழக வரலாற்றில், கல்வெட்டுகளில் ஆர்வம் உள்ள எவரும் அவரது பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதில் பயனடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

“கொங்கு கல்வெட்டு ஆய்வு” என்ற அவரது வலைத்தளத்தில் தான் மேற்கொண்ட கல்வெட்டு பயணத்தை விவரித்து, கல்வெட்டு பற்றி சேகரித்த செய்திகளை படங்களுடனும் விளக்கங்களுடனும் இவரது கட்டுரைகளின் முதற்பகுதியில் அறியத் தரும் திரு. து.சுந்தரம் அவர்கள், கட்டுரைகளின் பிற்பகுதியை கல்வெட்டுப் பாடத்திற்காக ஒதுக்கி, அவற்றில் கல்வெட்டின் வரிகளைக் கொடுத்து, அவற்றைப் படிக்கும் முறையைக் குறிப்பிட்டு விளக்கமும் தருகிறார். காட்டாகப் பின் வரும்; கல்வெட்டு எழுத்துகள் கற்போம், இராசகேசரிப்பெருவழி கல்வெட்டு, பெள்ளாதி – நடுகல் சிற்பம் புலிகுத்திக்கல் கல்வெட்டு, மதுரை அரண்மனை, சுமை தாங்கிபோன்ற பதிவுகள் சுவையான வரலாற்றுச் செய்திகள் பல அடங்கியவை.

தொல்லியல்துறை சொற்பொழிவுகளுக்கு சென்று அங்கு அத்துறை அறிஞர்களின் உரையில் கிடைக்கும் தகவல்களையும் திரு. சுந்தரம் தனது வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார். ஆர்வத்துடன் தான் திரட்டும் தொல்லியல் செய்திகளை அனைவருக்கும் உதவும் வகையில் பதிவு செய்து, கல்வெட்டுகளைப் படிக்க பயிற்சியும் அளித்துவரும் திரு. சுந்தரம் அவர்களின் தன்னார்வப் பணி தமிழக வரலாற்றைப் பற்றிய விரிவான பார்வையை பலரும் பெற உதவும் என்றால் அது மிகையன்று. திரு. சுந்தரம் அவர்களது மயிலாடும்பாறைக் கல்வெட்டு, கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்: ஜார்ஜ் மன்னர் பெயரில் ஒரு விநாயகர், கொங்கவிடங்கீசுவரர் கோவில், சோழர் ஆட்சியில் தென்னிந்தியா: முனைவர் எ.சுப்பராயலு அவர்களின் சொற்பொழிவு ஆகிய அவரது தொல்லியல், கல்வெட்டுப் பாடம் கட்டுரைகள் இந்த இதழில் இடம்பெறுகின்றன.

________________________________________________________


தேமொழி 
themozhi@yahoo.com
________________________________________________________

2 comments:

  1. அய்யா,வணக்கம்
    தன் இன வரலாறு தெரியாமல் மிகவும் மன வருத்தமாய் உள்ளோம்,
    சக்கிலியர் தமிழ்குடியா, இல்லையா தயவு செய்து தெளிவுபடுத்தங்கள்,
    கண்ணீருடன் கேட்கிறோம்

    ReplyDelete