-- இ. பு. ஞானப்பிரகாசன்.
அறப்போராளி தாவீது (டேவிட்) ஐயாவுக்கு
நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி
ஈழ விடுதலைப் போராட்டத்தைக் குறை கூறும் எல்லோரும் கேட்கும் முதன்மையான கேள்விகளுள் ஒன்று, “அவர்கள் என்ன காந்தி போல அறவழியிலா போராடினார்கள்? ஆயுதம் ஏந்தியவர்கள்தானே!” என்பது.
காலமெல்லாம் எழுப்பப்பட்டு வந்த, வருகிற இந்தக் கேள்விக்கான வாழும் விடையாக நடமாடிக் கொண்டிருந்த காந்தியம் தாவீது(டேவிட்) ஐயா கடந்த ஐப்பசி 24 [௧௧-௧௦-௨௦௧௫ (11.10.2015)] அன்று நம் தமிழுலகை விட்டு மறைந்தார்.
ஈழத் தமிழ் மக்களால் ‘டேவிட் ஐயா’ என அன்பொழுக அழைக்கப்படும் சாலமன் அருளானந்தம் டேவிட் அவர்கள் எழுபதுகளில், அன்றைய ஈழத் தமிழ் மண்ணிலே காந்திய வழியில் தமிழர்களுக்காகப் பாடுபட்டவர். “தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளத் தகுதியானவர்களாக மாறுவதுதான் ஈழத் தமிழர் சிக்கலுக்கான தீர்வின் முதல் படி” என்று நம்பியவர். விடுதலை, தனி ஈழம் போன்ற எந்த நோக்கமும் இன்றி வெறுமே கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், தமிழ் வளர்ச்சி ஆகியவற்றை மட்டுமே சார்ந்து செயல்பட்டார். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தன் நண்பர்கள் மருத்துவர் இராசசுந்தரம், அவர்தம் மனைவியார் முதலான சிலருடன் சேர்ந்து வேளாண் கல்விப் பண்ணை அமைத்தார்; நடமாடும் மருத்துவமனைகள் தொடங்கினார்; கல்விக் குடில்கள் திறந்தார்; காந்தியையும் காந்தியத்தையும் முதன்மையாகக் கொண்டு பாடத்திட்டம் வகுத்தார்; பெண்களுக்கும் சிறாருக்கும் அந்த காந்தியக் கல்வியைப் புகட்டினார்; இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்பும் படிப்பும் அளித்தார்; குழந்தைகளுக்குப் பாலும் பால் மாவும் இலவசமாக வழங்கினார்; ஒவ்வோர் ஊரிலும் ஒரு பெண்மணியைத் தேர்ந்தெடுத்துக் கல்வி கற்பித்து அவர்கள் மூலம் அந்தந்த ஊர்களில் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்வதன் மூலம் எல்லா ஊர்களிலும் கல்வித்தரத்தை உயர்த்தத் தொலைநோக்குத் திட்டம் தீட்டினார்.
ஆனால், இப்படி முழுவதும் மக்கள் தொண்டினை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கிய இந்த மாமனிதரை சிங்கள அரசு, ஈழ விடுதலைப் போராளிகளைச் சந்தித்ததை ஒரு சாக்காக வைத்து வன்கொடுமையாளர் (terrorist) முத்திரை குத்திச் சிறையில் தள்ளியது. சிறையில் தானும் மற்ற தமிழர்களும் நடத்தப்பட்ட விதத்தைப் பற்றி இவர் கூறுவதைப் படித்தால் தமிழர் அல்லாதவர்க்கும் கடும் சீற்றம் பிறக்கும். (படிக்க: டேவிட் ஐயா – தமிழ் மக்களின் துயர் தீர்க்க காந்திய வழியில் போராடிய அறப் போராளி).
குமுகச் (சமூகச்) சேவை செய்த ஒரே குற்றத்துக்காக மேற்படியெல்லாம் இழிவுபடுத்தப்பட்ட இந்தப் பெருமனிதர் அன்று இடப்பட்ட அந்த வன்கொடுமையாளர் எனும் முத்திரை கடைசி வரை மங்காமல் மறையாமல் ௯௦ (90) அகவையிலும் ‘பேரிடர் (அபாயம்) விளைவிப்போர் பட்டியலிலேயே வைக்கப்பட்டிருந்து, அந்த அடையாளம் மாறாமலே இதோ நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார்.
இந்த மனிதர் செய்த குற்றம்தான் என்ன? தன் மக்களின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டதா? படிக்காத மக்களுக்குக் கல்வியும் வேலைவாய்ப்பும் அளித்ததா? காந்தியத்தைப் பரப்ப முயன்றதா? காந்திய வழியில் தன் மக்களை முன்னேற்ற முடியும் என்று நம்பியதா? “ஈழத் தமிழர்கள் என்ன காந்திய வழியிலா போராடினார்கள்” என்று மீண்டும் மீண்டும் கேட்டு, வயிற்றிலிருந்த தளிர் முதல் தலை நரைத்த கிழம் வரை எந்தப் பாகுபாடும் இல்லாமல் துள்ளத் துடிக்கக் கொன்றொழிக்கப்பட்ட அந்த இனப்படுகொலையின் குற்றச்சாட்டை நீர்க்கச் முயல்பவர்களே! இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன? இவர் என்ன தனிநாடு கேட்டாரா? தன்னாட்சி கோரினாரா? அரசுக்கு எதிராகக் கலகங்கள் தூண்டினாரா? புரட்சி செய்தாரா? போர்க்கொடி தூக்கினாரா? ஒன்றுமே இல்லை!
குற்றம் எனச் சொல்ல வேண்டுமானால், காந்தியரான இவர், கூடவே ஆயுதப் போராளிகளோடும் தொடர்பு கொண்டிருந்து, அவர்கள் தப்பிச் செல்ல உதவியதைச் சொல்லலாம். ஆனால், அது கூட மனிதநேயத்தின் அடிப்படையில் அவர் செய்த ஓர் உதவிதானே தவிர, மற்றபடி ஆயுதப் போராளிகளை அவர் தாங்கவோ அவர்கள் வழியைப் பின்பற்றவோ இல்லை. தன்னளவில் அவர் எப்பொழுதும் காந்தியராகவே இருந்தார். ஆனால், அப்படிப்பட்டவருக்கு இலங்கை-சிங்கள அரசு அளித்த அடையாளம்! இதற்கே இவருக்கு இந்த நிலைமை எனில், இன்னும் காந்திய வழியில் விடுதலை வேறு கேட்டுப் போராடியிருந்தால் இவர் நிலை என்ன?
மற்றவர்களைப் பொறுத்த வரை வேண்டுமானால், தாவீது(டேவிட்) ஐயா ஈழத் தமிழர்களின் காந்திய முகமாக இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரை, அவர் சிங்களர்களின் ஈவிரக்கமற்ற குணத்துக்கு முன்னால் காந்தியம் எப்பேர்ப்பட்ட தோல்வியைத் தழுவும் என்பதற்கான நடமாடிய எடுத்துக்காட்டு!
இப்படி, ஈழத்து காந்தி செல்வநாயகம் அவர்கள் முதல் காந்தியம் தாவீது (டேவிட்) அவர்கள் வரை இலங்கையில் தமிழர்களுக்காகக் காந்திய வழியில் போராடிய தலைவர்கள் அனைவரும் தோல்வியாளர்களாகவே வரலாற்றில் நிலைபெற்றிருக்க, நாம் மறுபடியும் மறுபடியும் விடுதலைப்புலிகளின், ஈழத் தமிழர்களின் போராட்ட முறையை “என்ன இருந்தாலும் ஆயுதப் போராட்டம்தானே?” எனப் போகிற போக்கில் இழிவுபடுத்திப் பேசுவது எந்த வகையிலான காந்தியம், அறம் என எனக்குப் புரியவே இல்லை.
ஈழப் போராட்டம் பற்றி ஓரளவாவது அறிந்த யாருமே இரண்டு சிறை நிகழ்வுகளைப் பற்றிக் கண்டிப்பாய்க் கேள்விப்பட்டிருப்பார்கள்.
முதலாவது, வெலிக்கடைச் சிறை இனவெறித் தாக்குதல்!
தமிழ் அரசியல் கைதிகள் மீது திட்டமிட்டே தொடுக்கப்பட்ட இந்தக் கொலைவெறித் தாக்குதலில்தான் குட்டிமணி, தங்கத்துரை, செகன் முதலான ஏராளமானோர் மிகக் கொடுமையான முறையில் துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்டனர். பிறர் சொல்லக் கேட்டால் கூட உள்ளத்தை நடுங்கச் செய்யும் இந்தக் கொடிய நிகழ்வில் தானும் கொல்லப்பட இருந்தபொழுது கடைசி நொடியில் நல்லவேளையாகத் தப்பிய தாவீது (டேவிட்) ஐயா, அங்கிருந்து மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப்பட்டார்.
அப்பொழுதுதான் நடந்தது, ஈழ வரலாற்றின் அடுத்த முதன்மைச் சிறை நிகழ்வான மட்டக்களப்புச் சிறை உடைப்பு!
தமிழர்கள் மீது அன்றைய சிங்கள இனவெறி அரசு கட்டவிழ்த்து விட்ட இனப்படுகொலையால் எங்கெங்கும் தமிழரின் உயிர் ஓலம் எதிரொலித்த அந்த நேரத்தில், அதுவரை சிங்களர்கள் அடித்தாலும் மிதித்தாலும் கொன்றாலும் கொளுத்தினாலும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே முயன்று வந்த தமிழர் கரங்கள் முதன் முறையாக வேறு வழி இல்லாமல் திருப்பி அடித்தன! அதன் ஒரு பகுதியாக, வெலிக்கடையில் நடந்தது போலவே மட்டக்களப்பிலும் தமிழர் குருதி மீண்டும் பெருக்கெடுக்காதிருக்க அந்தச் சிறை தமிழ்ப் போராளிகளால் தகர்க்கப்பட்டுக் கைதிகள் தப்ப வைக்கப்பட்டனர். அதில் உயிர் பிழைத்தவர்களில் ஐயாவும் ஒருவர்.
இவ்வாறு, ஈழ விடுதலைப் போராட்டத்தில் காந்தியத்தின் தோல்வி, இலங்கை ஆட்சியாளர்கள் அந்தக் காலத்திலேயே எப்பேர்ப்பட்ட இனவெறி கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதற்குச் சான்றான வெலிக்கடைச் சிறைத் தாக்குதல், எப்படிப்பட்ட கையறு நிலையில் வேறு வழியேயில்லாமல் ஈழத் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்துக்கு மாறினார்கள் என்பதற்குச் சான்றான மட்டக்களப்புச் சிறையுடைப்பு எனத் தமிழீழ வரலாற்றின் தலையாய மூன்று திருப்புமுனைகளுக்குக் கண்கூடான சான்றாளராய் நம்மிடையே இத்தனை ஆண்டுக் காலமாக வாழ்ந்து வந்த தாவீது(டேவிட்) ஐயா, இவையெல்லாம் முறைப்படி உசாவப்பட்டு உலகக் குமுகாயத்தின் (சமுதாயத்தின்) முன்னால் உறுதிப்படுத்தப்படும் முன் நம்மை விட்டுப் பிரிந்து விட்டது பெரும் வேதனை!
ஐயா அவர்களைப் பற்றி நான் முதன் முதலில் அறிந்தது ஆனந்த விகடன் மூலமாகத்தான். செய்தியாளர் அருள் எழிலன் அவர்கள் மேற்கொண்ட நேர்காணலில் கேட்போர் உளம் உருகும் தன் வரலாற்றை எடுத்துரைத்த ஐயா அவர்கள், நடந்து முடிந்த அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், தன்னிடமிருந்த நூல்களைப் பற்றித்தான் கவலையுடன் குறிப்பிட்டார். ஒன்றில்லை இரண்டில்லை, ஆயிரத்து ஐந்நூறு தமிழ் நூல்களை அவர் பாதுகாத்து வந்தார்.
விடுதலை பெற்ற தமிழீழ நூலகத்தில் தன் நூல்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பதும் விடுதலையடைந்த ஈழத் தமிழ் மண்ணில் தன் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதும்தாம் அவருடைய கடைசி விருப்பங்களாக இருந்தன. ஆனால், இதோ வரலாறு காணாத தமிழினப் பெரும்படுகொலையால் சிவந்து போயிருக்கும் இலங்கை மண்ணின் நிறம் மாறும் முன்பே கிளிநொச்சியில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது! மிஞ்சியிருப்பது தன் நூல்கள் பற்றிய அவருடைய விருப்பம் மட்டும்தான். அதையாவது நாம் நிறைவேற்றி வைக்கலாமே?
தற்பொழுது தமிழ்நாடு அரசின் ‘தமிழ் இணையக் கல்விக்கழகம்’ ௨௦௧௬ (2016) – பொங்கல் திருநாளுக்குள் நூறாயிரம் (இலட்சம்) நூல்களை மின்னுருவாக்கும் அரும்பெரும் பணியில் இறங்கியுள்ளது. இதற்காகத் தமிழ்நாடெங்கும் அரிய நூல்களை எல்லோரிடமிருந்தும் தேடிச் சேகரிக்கும் பெருமுயற்சியை அந்நிறுவனம் முடுக்கி விட்டிருப்பதாக அண்மையில் ‘வலைப்பதிவர் திருவிழா – ௨௦௧௫ (2015)’இல் பேசிய அந்நிறுவன உதவி இயக்குநர் முனைவர் மா.தமிழ்ப்பரிதி அறிவித்தார். முறைப்படி அரசு அறிவிப்பாகவும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் நூல்கள் நிலைபேறு அடைய இப்படியொரு சிறப்பான முயற்சியில் இறங்கியிருக்கும் தமிழ் இணையக் கல்விக்கழகம், ஈழத் தமிழர்களுக்காக அறவழியில் பாடுபட்ட காந்தியர் தாவீது (டேவிட்) ஐயாவின் அரிய நூல்களையும் தங்கள் திட்டத்தின் கீழ்ச் சேர்த்துக் கொண்டு அந்த நூல்களை அழியாமல் பாதுகாக்க முன் வர வேண்டும் என மிகவும் பணிவன்போடு வேண்டுகிறேன்! தமிழர் வரலாற்றிலேயே மிகப் பெரிய இழப்பாகக் கருதப்படுவது ‘யாழ் நூலக எரிப்பு’. ஈழத்திலிருந்து வந்தவர் என்பதால் ஒருவேளை அந்தப் பேரழிப்பில் நாம் இழந்த அரிய நூல்கள் கூட ஐயா அவர்களின் சேகரிப்பில் இருக்கலாம். அப்படி இருந்தால், அவற்றை மின்னுருவாக்கம் செய்வது தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வரலாற்றிலேயே ஈடு இணையற்ற புகழாக இருக்கும். எனவே, நிறுவனத்தினர் உடனே இதற்கான முயற்சியில் இறங்க முன்வர வேண்டும்!
அவருடைய இறுதி விருப்பங்கள் இரண்டில் ஒன்றைத்தான் நம்மால் நிறைவேற்ற முடியவில்லை. நம்மால் இயன்ற இந்த இன்னொன்றையாவது நிறைவேற்றலாமே? கடைசி விருப்பத்தை நிறைவேற்றி வைப்பதை விட ஒரு மனிதருக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி வேறென்ன இருக்க முடியும்? எனவே தமிழ்நாடு அரசே! தமிழ் இணையக் கல்விக்கழகத்தினரே! தமிழ்த் தலைவர்களே! அருள் கூர்ந்து இதற்கு ஆவன செய்யுங்கள்!
நன்றி:
அகரமுதல - http://www.akaramuthala.in/modernliterature/katturai/அறப்போராளி-டேவிட்-ஐயாவிற/
No comments:
Post a Comment