Wednesday, October 28, 2015

வேதக்கல்லூரி இயங்கிய “எண்ணாயிரம்”

- கோ.செங்குட்டுவன்.

எண்ணாயிரம் ...

விழுப்புரம் அருகே அமைந்துள்ள சின்னஞ்சிறிய கிராமம். வரலாற்றில் நீங்காத இடத்தைப் பிடித்த ஒரு ஊர்.  இதற்குக் காரணம் இராசேந்திரச் சோழன் காலத்தில் (கி.பி.1012-1044) இங்கு இயங்கி வந்த வடமொழி வேதக்கல்லூரியாகும். இக்கல்லூரிக்காக சோழப் பேரரசன் 300 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியிருக்கிறான்.

இங்கு இளநிலை மாணவர்கள் 270பேரும், முதுநிலை மாணவர்கள் 70 பேரும், ஆசிரியர்கள் 14பேரும் இருந்திருக்கின்றனர்.  இளநிலை மாணவர்கள் 270 பேர்களில் 40 பேர் ரூபாவதார இலக்கணமும், 75 பேர் ரிக் வேதமும், 75 பேர் யஜுர் வேதமும், 20 பேர் வாஜசனேய சாமவேதமும், 20 பேர் சண்டோக சாம வேதமும், 10 பேர் அதர்வ வேதமும், எஞ்சிய 10பேர் பௌதாயன கிருஷ்ய சூத்திரம், கல்ப சூத்திரம், ஞான சூத்திரம் ஆகியவற்றையும் பயின்றுள்ளனர்.  முதுநிலை மாணவர்கள் 70 பேர்களில் மேம்பட்ட பாடங்களான வியாபரணத்தை 25 பேரும், பிரபாகர மீமாம்சத்தை 35 பேரும், வேதாந்தத்தை 10 பேரும் படித்துள்ளனர்.  

இளநிலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் நாள்தோறும் ஆறு நாழி நெல் கொடுக்கப்பட்டது. முதுநிலை மாணவர்களுக்கு பத்துநாழி நெல் தினசரி கொடுக்கப் பட்டது.  மீமாம்சமும் வியாகரணமும் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கு ஊதியமாக தினசரி ஒரு கலம் நெல் கொடுக்கப்பட்டது. வேதாந்தப் பேராசிரியருக்கு கூடுதல் ஊதியமாக ஒன்றரைக் கலம் நெல் வழங்ககப்பட்டது. மற்ற ஆசிரியர்களுக்கு ஒரே அளவு ஊதியமாக முக்கால் கலம் அல்லது மூன்று குருணி கொடுக்கப்பட்டது.  தானியமாகக் கொடுக்கப்பட்ட இந்த ஊதியத்தைத் தவிர ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை மாணவர்களுக்குத் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

வேதாந்த ஆசிரியருக்கு இந்தத் தங்கம் கொடுக்கப்படவில்லை. காரணம், வேதாந்தத்தைச் சொல்லிக் கொடுத்து பணம் சம்பாதிப்பது சட்டப்படியும், வழக்கப்படியும் தடை செய்யப்பட்டிருந்தது. வேதாந்த ஆசிரியருக்குத் தங்கம் கொடுக்கப்படாதிருந்ததற்கு இதுவே காரணமாக இருந்திருக்கக்கூடும் என்பார் “சோழர்கள்” நூலாசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி.




சோழராட்சியில் கோயில்களில் அழகியத் தமிழில் தேவாரம் ஓதப்பட்டது. அதே நேரம் வடமொழி வேதமும் கற்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  எண்ணாயிரம் கிராமத்தில் இயங்கிய இவ்வேதக் கல்லூரி காலப்போக்கில் அழிந்து விட்டது.  இதுபற்றிய விவரங்களைச் சொல்லும் கல்வெட்டுகள் மட்டும், இங்குள்ள அழகிய நரசிங்கப் பெருமாள் கோயிலில் எஞ்சி நிற்கின்றன.



எண்ணாயிரம் – கவிகாளமேகம் பிறந்த ஊர் என்பதும் கூடுதல் சிறப்பாகும். 




கோ.செங்குட்டுவன் 

ko.senguttuvan@gmail.com

No comments:

Post a Comment