Wednesday, March 9, 2016

பெண்ணே!

-- ருத்ரா இ.பரமசிவன்

http://ignite.globalfundforwomen.org/

பெண்ணின் எழுச்சியை
பூவுக்குள் பூகம்பம் என்றார்கள்.
அவள் சிரிப்பைக்கூட‌
காதல் மை தொட்டு
அப்படித்தான்
கவிதையும் எழுதப்படுகிறது.
அவள் துடைப்பம் எடுத்தாலும்
அது
சமணர்களின் மயில்பீலித் துடைப்பம்.
பெண்ணின் மடியில்
இன்று கணிப்பொறி குழந்தையும்
மழலை பொழிகிறது.
பெண் அழகு மட்டும் அல்ல!
அவள் அறிவின் அடர்த்தி
அசர வைத்தது
இந்த உலகத்தையே!
அவளுக்குள் அவன்!
அவனுக்குள் அவள்!
இதற்கு என்ன "இலக்கணக்குறிப்பு"எழுதுவது?
காதல் குமிழிகள் கட்டிய வீட்டில்
அன்னத்தூவிகள் எல்லாம்
உதிர்ந்து போனபின்
கரடு முரடாய் சோறு பொங்கி
தொட்டில் கட்டி
பாசமலர்க்காட்டில்
அவள் தொலைந்து போன போது
அப்போதும் யோசிக்கிறாள்
அது என்ன இலக்கணம் என்று.
எந்திரமாகித்தான் போனாள்.
பரிணாம வீச்சில்
கங்காரு நிலையிலிருந்து
குதித்து வந்தவள் போலும் அவள்!
குழந்தை குட்டிகளை
அவள் மட்டுமே ஒரு
பாசப்பைக்குள் வைத்துக்கொண்டு
ஓடுகிறாள்.
அவள் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத‌
வாழ்க்கைச்சக்கரம் கூட‌
மூச்சு வாங்கி நின்று கொள்கிறது!
புதிய புதிய யுகங்களுக்குள்ளிருந்து
இன்னும் இன்னும்
புதிய புதிய யுகங்களாய்
தோலுரித்துக்கொள்கிறாள் அவள்.
மிச்சம் கிடக்கின்ற அந்த‌
பாம்புச்சட்டைகளை
மியூசியத்தில் வைத்து
பாது காத்துக்கொள்ளுங்கள்.
மஞ்சள் குங்குமம் வைத்து
பூஜித்துக்கொள்ளுங்கள்
அவள்
புள்ளி வைத்து கோலம்போட்டு
தெரு முனையில்
தேங்கிப்போக அவதாரம் எடுக்கவில்லை!
அவள் புள்ளிகளும் கோடுகளும்
ஆயிரம் ஆயிரம் கணினிகளுக்குள்
"அல்காரிதம்" ஆனதில்
பிரபஞ்சங்கள் கூட‌
அவள் பூங்கரத்தின் செம்பஞ்சுக்குழம்பில்
மெகந்தி ஆயின!
படைக்கும் பிரமனின் "ப்ராஜெக்டில்"
உள்ள குளறுபடிகளைக்கூட‌
"டீ பக்" செய்து
ப்ரோகிராம் ஓட்டி வாகை சூடுவாள்.
பெண்ணே!
இனி என்றும் உனக்கே வெற்றி!


___________________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
___________________________________________________________
 


No comments:

Post a Comment