Tuesday, March 8, 2016

முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினை தொடங்கி வைத்தது யார்…?

--  சன்னா.


 
ஈவெரா அவர்களை பெரியார் என அழைக்கக் காரணம் யார்..?
அகில இந்தியாவிற்குமான முதல் தலித் பெண் தலைவர் யார்..?

முதல் இந்தி எதிர்ப்பு • சென்னை மாகாண பிரதம அமைச்சர் ராஜாஜி 1937 ஆகஸ்ட் 10ம் நாளன்று இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்தார். அது மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியிருந்தது. ஆனால் அது ஒருங்கிணைக்கப்படவில்லை இதை பயன்படுத்திக் கொண்ட ராஜாஜி 21.04.1938 அன்று ஓர் ஆணையை பிறப்பித்து பள்ளிகளில் கட்டாய இந்தி மொழியைக் கட்டாயமாக்கினார். எல்லோரும் கொதித்தார்கள். ஆனால் யார் தொடங்குவது என்பதில் ஏனோ தயக்கம் இருந்தது. இந்த தயக்கத்தை முதலில் உடைத்தவர் அன்னை மீனம்பாள் அவர்கள். (காண்க பேட்டி). அதன் தொடர்ச்சியாய் சென்னை தி.நகரில்
நடத்தப்பட்ட முதல் இந்தி திணிப்பு எதிர்ப்புக் கூட்டம் தந்தை சிவராஜ் தலைமையில் நடந்தது. அந்த வரலாற்றுக் சிறப்புமிக்க கூட்டத்தையும் போராட்டதையும் தனது வீர உரையால் தொடங்கி வைத்தவர் அன்னை மீனாம்பாள் அவர்கள். (கொடுக்கப்பட்ட படத்தில் தி நகரில் நடைபெறும் முதல் இந்தி எதிர்ப்பு கூட்ட மேடையில் நாற்காலியில் அமர்ந்திருப்பவர் தந்தை சிவராஜ். கீழே அமர்ந்திருப்பவர் அன்னை மீனாம்பாள், மைக் முன் பேசுபவர் சி.என்.அண்ணாதுரை அவர்கள்)


கூட்டம் முடிந்த பிறகு போராட்டம் தீவிரமானது. எல்லா தலைவர்களும் அன்னை மீனாம்பாள் இல்லத்திற்கு அவரையும் தந்தை சிவராஜ் அவர்களையும் பார்க்க வந்தவண்ணம் இருந்தனர். அதில் ஒருவராக கிஆபெ விசுவநாதத்துடன் வந்த ஜெகதீசன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று அன்னை மீனாம்பாள் அவர்களிடம் கேட்டார், உடனே தன் வீட்டிலேயே உண்ணாவிரதம் இருக்கலாம் என்று அம்மையார் அவருக்கு இடம் கொடுத்தார். விளைவாய் 01.05.1938 முதல் ஜெகதீசன் சாகும்வரை உண்ணாவிரத்தை தொடங்கினார். போராட்டம் சூடு பிடித்தது. (பார்க்க அன்னை மீனாம்பாளின் பேட்டி)

எனவே.. 1938 ஏப்ரல் கடைசி வாரத்தில் தொடங்கி 1940ல் முடிந்த இந்தி
எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கி அதை வளர்த்தெடுத்தவர் அன்னை மீனாம்பாள். அதனால்தான் சுதேச மித்திரன் இதழ் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் தலைவர் என்று அன்னை மீனாம்பாள் அவர்களை பதிவு செய்தது (காண்க படங்கள்..)

இத்தனை ஆதாரங்கள் இருந்தும் அன்னை மீனாம்பாள் மற்றும் தந்தை சிவராஜ் ஆகியோருக்கு இந்தி எதிர்ப்பு போராட்டத்தை உயர்த்திப் பிடிக்கும் எந்த முற்போக்காளர்களும் உரிய அங்கீகாரம் வழங்க மறுக்கிறார்களே ஏன்…?

பெரியார் • காந்திக்கு மகாத்மா என்று பட்டம் இருப்பதுபோல ஈவெரா அவர்களுக்கு ஒரு பட்டத்தை நாம் ஏன் தரக்கூடாது என்று டாக்டர் 
தர்மாம்பாள், நாராயிணி அம்மாள் ஆகியோரை கேட்டேன், பிறகு பெரியார் என்று பட்டத்தை தேர்ந்தெடுத்து 13.11.1938 அன்று நடந்த பெண்கள் மாநாட்டினை அன்னை மீனாம்பாள் கொடியேற்றி தொடங்கி வைக்க, நீலாம்பாள் அம்மையார் தலைமையுரை ஆற்றினார். பிறகு ஈவெரா அவர்களுக்கு பெரியார் என பட்டம் அளிக்கப்பட்டது. ஈவெரா பெரியார் ஆனார். ஆனால் அன்னை மீனாம்பாள் என்ன ஆனார் வரலாற்றில்..?

பெண்ணியத் தலைவர் • திராவிட இயக்கதினருடன் சில வேளை நட்புடனும் சில வேளை முரண்பட்டும் இருந்த அன்னை மீனாம்பாள் எம்.சி.ராஜா, டாக்டர் அம்பேத்கர், தந்தை சிவராஜ் ஆகியோர் முக்கியத் தலைவர்களாக இருந்த டிப்ரஸ்டு கிளாஸ் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவர் அன்னை மீனாம்பாள். பிறகு பட்டியலினக் கூட்டமைப்பு, இந்திய குடியரசு கட்சி ஆகியவற்றில் முக்கிய தலைவராக இருந்ததுடன், சென்னை மாகாணம் மற்றும் இந்திய அளவிலான மாதர் சங்க இயக்கத்தின் முன்னணித் தலைவர்.


பல்வேறு பதவிகளை வகித்த அன்னை மீனாம்பாள் கௌரவ நீதிபதியாகவும் இருந்திருக்கிறார். சென்னையில் எங்கு நீங்கள் மீனாம்பாள் பெயரில் உள்ள குடியிறுப்புகள், தெருக்களை பார்க்க நேர்ந்தால் அது அன்னை மீனாம்பாள் அவர்களின் நினைவாக வைக்கப்பட்டதே.. மக்களின் அன்பை அவ்வளவு பெற்றிருந்தார் அன்னை மீனாம்பாள்.
இந்தப் பெண்கள் தின நாளில் அன்னை மீனாம்பாள் அவர்களின் போராட்ட சாதனைகளை முன்வைத்து அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்..

அன்னை மீனம்பாள் அவர்களின் புகழ்பெற்ற முழக்கம்
••பெண்களின் விடுதலையே ஆண்களின் விடுதலை••

மேலும், இந்த ஆண்டாவது அன்னை மீனாம்பாள் அவர்களின் பெயரில் விருது ஒன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். ஆயினும், பலசிறப்புகள் வாய்ந்த இந்த பெரும் ஆளுமையை மறைத்தது யார்…? மறந்தது யார்…?
 
 
 
 
 
 

___________________________________________________________
 
 
கவுதம் சன்னா
 g.sannah@gmail.com
___________________________________________________________
 
 

No comments:

Post a Comment