Sunday, March 6, 2016

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 11

- செல்வன்.



பேரா யூகோ: ஆனால் அவர்கள் கட்சியில் சேர்ந்ததாலும், நீங்கள் பா.ம.க, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், கொங்குநாடு முன்னேற்றக்கழகம் மாதிரியான கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்ததாலும் ஜாதி வன்முறை குறைந்துள்ளதா? (மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தென் தமிழகத்தை சேர்ந்த தேவர் கட்சி, கொங்குநாடு முன்னேற்றக்கழகம் மேற்குப்பகுதி தமிழகத்தின் கவுண்டர் இனமக்களின் கட்சி)

சன்னா: நிச்சயமாகக் குறைந்துள்ளது. இதை இன்னொரு கண்ணோட்டத்தில் பார்ப்பதானால் நாங்கள் தலித் அல்லாதவருக்குக் கட்சியில் பதவிகளைக் கொடுப்பது பிற கட்சிகளுக்கும், சாதியினருக்கும் "நீங்களும் இக்கட்சியின் ஒரு அங்கம்" எனும் செய்தியை அளிக்கிறது. இதுவரை மற்ற சாதியினர்க்கும், கட்சிகளுக்கும் நெருக்கமாகும் வாய்ப்பு எங்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே இருந்துவந்தது. பிற சாதிக்கட்சி தலைவர்களுடன் எங்களால் நேரடியாகப் பேச முடியவில்லை. அந்தத் தலைவர்களுக்கும் தலித் தலைவர்களுடன் பேசும் மனநிலையும் இல்லை. இத்தகைய மனத்தடை நீடித்து வந்தது. ஆக இம்மாதிரி சமயங்களில் கூட்டணி பற்றி பேசுவதற்கும், தொகுதிகளைப் பற்றி பேசுவதற்கும் எங்கள் கட்சியில் உள்ள தலித் அல்லாதோர் பெருமளவு உதவியாக இருக்கிறார்கள். இதன் இன்னொரு பலனும் என்னவெனில் எங்காவது ஜாதிக்கலவரம் நிகழ்ந்தால் எங்கள் கட்சியில் உள்ள தலித்-அல்லாத தலைவர்கள் களத்தில் உள்ள தலித் அல்லாதவருடன் எளிதில் பேச முடிகிறது. இது அமைதியை உருவாக்கவும், பிரச்சனைகளைத் தீர்க்கவும் உதவுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உள்ள தலித் அல்லாதோர் இதில் பெரும்பங்கு வகித்துள்ளார்கள். அவர்கள் பங்கை அங்கீகரிப்பதன் மூலமும், மதிப்பதன் மூலமும் இதுவும் ஒற்றுமை நிலவும் சமூகத்தை உருவாக்கும் முயற்சியே என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பேரா யூகோ: சரி.நல்லது. ஆனால் அதே சமயத்தில் பரமக்குடியில் நிகழ்ந்தது என்ன என்பதைப் பார்த்தோமெனில் (பரமக்குடியில் செப்டம்பர் 2011ல் போலிஸ் துப்பாக்கிச்சூட்டிலும், லத்திசார்ஜிலும் ஆறு தலித்துகள் உயிரிழந்தார்கள்) அந்தக் கலவரத்தின் காரணமே தலித்துகள் குருபூஜை மற்றும் தெய்வமகான் என்ற சொற்றொடர்களை பயன்படுத்தக்கூடாது என்ற கோரிக்கையே ஆகும். அவர்கள் அந்தச் சொற்றொடர்கள் தம் தலைவரை குறிக்க மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனக் கருதினார்கள். இம்மானுவேல் சேகரனைக் குறிக்க இந்த வார்த்தைகள் எப்படி பயனாகலாம் எனக் கேட்டார்கள். இம்மாதிரி சூழலில் கட்சியில் உள்ள தலித் அல்லாத தலைவர்கள் குறுக்கிட்டு இதைச் சரிசெய்திருக்க முடியாதா?

சன்னா: நீங்கள் சொல்வது சரிதான். இது திடீரென எழுந்த பிரச்சனையோ, எதிர்பாராது எழுந்த பிரச்சனையோ அல்ல. அந்தப் பகுதியில் முக்குலத்தோர் குருபூஜை என்பதி முத்துராமலிங்கத் தேவரை மட்டுமே குறிக்க பயன்படும் சொல் என்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள். இம்மானுவேல் சேகரனின் குருபூஜை அவர்களது குருபூஜைக்கு போட்டியாக எழுந்ததும் பிரச்சனை துவங்கியது. பரமக்குடி துப்பாக்கிச் சூடு பிரச்சனை அன்றைய தினம் மட்டும் நிகழ்ந்த பிரச்சனையல்ல. இதன் விதை இம்மானுவேல் சேகரனின் குருபூஜை நிகழ்ந்த அன்றே விதைக்கபட்டுவிட்டது. அவர்கள் இதை ஒரு போட்டியாக நினைத்து நிறுத்த முனைகிறார்கள். இது ஒரு உணர்ச்சிகரமான விஷயமாகும். இம்மாதிரி விவகாரங்களை இரண்டு-மூன்று தலைவர்கள் உட்கார்ந்து பேசி சரிசெய்துவிட முடியாது. இது இம்மானுவேல் சேகரனுக்கும்,. முத்துராமலிங்கத் தேவருக்கும் 1950ல் நிகழ்ந்த மோதலின் தொடர்ச்சியாகும். அவர்கள் இருவரும் இன்று இல்லையென்றாலும், பிரச்சனை தொடர்கிறது. இதில் நாம் தலையிட்டு உடனடியான தீர்வைக் காணமுடியும் என எதிர்பார்க்க இயலாது. இதை நிறுத்தக்கூடிய வாய்ப்புள்ள தலைவர்கள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியிலேயே இருக்கிறார்கள். இதனால் தான் 2011ல் நாங்கள் மதுரை மேயர் சீட்டை (பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் மற்றும் தேவர் சமுதாய தலைவர்) மூக்கையா தேவரின் மகன் கணேசனுக்கு கொடுத்தோம். கட்சியில் அவர் பெயர் திருமா பசும்பொன் என்பதாகும். இதில் திருமா என்பது கட்சித்தலைவர் திருமாவளவனின் பெயரில் ஒரு பகுதி. மற்றும் பசும்பொன் என்பது முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த ஊர். அவர் இன்று கட்சியில் இல்லை. அது வேறு விஷயம். ஆனால் அவர் எங்கள் பக்கத்தில் அன்று இருந்ததால் பரமக்குடிக்கு வெளியே இருந்த முக்குலத்தோர் விடுதலைச் சிறுத்தைகளிடமிருந்து ஜாதிவன்முறை துவங்காது எனவும், விடுதலைச் சிறுத்தைகளால் அவர்களுக்குப் பிரச்சனை வராது எனவும் நம்பினார்கள். அவர் கட்சியை விட்டுப் போனபின்னும் பலரும் அதற்குள் மனம் மாறியிருந்தார்கள். எனக்குத் தெரிந்து ஒரு கிராமத்தில் பிள்ளை சமுதாயத்தை சேர்ந்த 500 பேர் ஒட்டுமொத்தமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார்கள். இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர்சேர்ப்பு முகாமில் நிகழ்ந்த சம்பவமாகும்.

கட்சித்தலைவர் தொல்.திருமாவளவனின் அறிவுரைப்படி நாங்கள் 2009லும், 2011லும் உறுப்பினர் சேர்க்கை முகாம்களைத் தமிழகத்திலும், புதுவையிலும் நடத்தி நடத்தி 45 லட்சம் உறுப்பினர்களை இரண்டு ஆண்டுகளில் சேர்த்தோம். இத்தகைய சிறப்புள்ள இந்த முகாமின் ஒருங்கிணைப்பாளராக நான் இருந்து வருகிறேன். இது தொடர்ந்து நல்லபடி நடந்து இயக்கத்தின் நோக்கத்தை வலுப்படுத்தி வருகிறது. இந்த முகாமில் பல முக்குலத்தோர்களும், நாயுடுக்களும், பிள்ளைமார்களும், கவுண்டர்களும் கட்சியில் சேர்ந்தார்கள். இது இந்த உறுப்பினர் சேர்ப்பு முகாம் மற்றும் தலித்துகள் அல்லாதவருக்குக் கட்சியில் தலைமைப்பொறுப்பு அளித்ததாலும் நிகழ்ந்ததாகும். ஆக வி.சி கட்சியில் உள்ள தலித் அல்லாதவர்கள் ஜாதி கலவரத்தையும், மோதலையும் கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறார்கள்.





---..(திரு. சன்னா அவர்களின் நேர்காணல் தொடரும்...)..---
 
 
 

___________________________________________________________
 

 செல்வன்
 holyape@gmail.com
___________________________________________________________
 

No comments:

Post a Comment