Saturday, March 5, 2016

சிறைக்கண் பீலி அதிர்தர ஆங்கண்

-- ருத்ரா இ.பரமசிவன்



சிறைக்கண் பீலி அதிர்தர ஆங்கண்


கோட்டுமா தொலைச்சிய கொடுவில் பகழி
கூர்த்தன்ன‌ நெடுவிழி கொலை செய்தாங்கு
வேறு வேறு கிடப்ப பேய்ச்சுரம் படுத்து
பொருள்வயின் ஆறலை நலிய விட்டனள்.
குவியிலை வீஇணர் நுண்ணறுந் தாது
சிதறுதரப் பொருதனள் சில்நகை சிந்தி.
பைங்கூழ்ச் சிறுகால் நடைசெய் சிறுவன்
சிறுபறை கண்ணகத்து ஓவுவின் மஞ்ஞை
சிறைக்கண் பீலி அதிர்தர ஆங்கண்
பரிவுதப பூங்கோல் எறிந்த நிலையின்
ஊழ் என்னே!பாழ் என்னே!அடுநனி காதலின்
அழல்பெய் மழையில் எனை மாய்ந்தே ஒழியும்
வண்ணம் செய்தனள் வாழியவள் நலனே.



விளக்க உரை:

கொம்பு முளைத்த காட்டுப்பன்றியைக் (கோட்டுமா) கொல்லும் (தொலைச்சிய) வளைந்த வில்லில் பூட்டிய அம்பு போல் கூரிய நெடும்விழி உடைய அவள் (தலைவி) தன் பார்வையால் என்னை (தலைவனை) கொலை செய்ததால் இப்போது நான் பொருள் வேட்டைக்கு வந்த நான் கை வேறாய் கால் வேறாய் ஆனவன் போல் இந்த அச்சம் தரும் காட்டுவழியில் தவித்து மாட்டிக்கொண்டேன்.(பேய்ச்சுரம் படுத்து)..அவள் அன்பில் பூத்த‌ இல்லறம் புகுவதற்கு நான் இந்த பொருள் தேடலில் காட்டுவழியில் அலைந்து திரியலுற்றேன்.(ஆறலை நலிய விட்டனள்).

கொத்து கொத்தான இலைகள் நடுவே அந்த சிறு பூங்கொத்துகள்  நுண்ணிய மகரந்தங்களை சிதற விட்டாற்போல் அவள் தன் மெல்லிய சிரிப்பை சிந்தி என்னோடு ஒரு போர்க்களம் புகுந்தாள்.(பொருதனள்) காதலால் தானே அவள் இப்படி என்னுடன் மோதுகிறாள்.இது ஒரு பொய்ச்சண்டை தானே! இருப்பினும் இது எனக்கும் வலிக்கும் ஆனால் வலிக்காது.ஒரு ஓவியத்தில் தெரியும் சண்டைக்காட்சியால் யாருக்கும் இங்கே ரத்தம் இல்லை.காயம் இல்லை.இருப்பினும் நானும் காயம்பட்டு தான் போனேன்.இந்தக்காட்சியை இதனோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

அதோ அந்த பசுமையான குறுஞ்செடியின் இளந்தண்டை ஒக்கும் கால்களில் நடந்து வரும் சிறுவன் (பைங்கூழ்ச் சிறுகால் நடைசெய் சிறுவன்) தன் கையில் உள்ள சிறு பறையை அடித்துக்கொண்டே வருகிறான்.பறையின் அடிபடும் வட்டப்பொட்டு போன்ற கண்ணில் (கண்ணகத்து)ஒரு மயிலின் சிறு ஓவியம் தீட்டப்பட்டு உள்ளது.(ஓவுவின் மஞ்ஞை) அவன் கொஞ்சம் கூட பரிவு இன்றி (பரிவு தப) தன் கையில் உள்ள பூப்போன்ற சிறு கம்பினால் பறையின் மீதுள்ள அந்த ஓவியத்தில் அடித்துக்கொண்டிருக்கிறான்.(பூங்கோல் எறிந்த).அப்போது அந்த மயிற்சிறகுகளின் சிறு பீலி இருக்கும் அந்த வட்டக்கண் பெரும் அதிர்வு அடைகிறது.(சிறைக்கண் பீலி அதிர் தர ஆங்கண்).

அடிக்கும் போது வலிப்பது போல் தோன்றினாலும் அந்த பீலிகளின் அதிர்வு கூட கிச்சு கிச்சு மூட்டத்தான் செய்கிறது.இது என்ன  நிகழ்வு? இது என்ன வெறுமையான ஆனால் காதல் தாக்கும் உணர்வு? (ஊழ் என்னே! பாழ் என்னே!அடு நனி காதலின்).  இருப்பினும் இது அழல் வீசும் காதல் நோயின் மழை போன்றது. இதில் நான் இறந்து பட்ட ஒரு மாயத்தில் ஒழிந்து போகும் வண்ணம் அல்லவா அவள் ஒளிந்து விளையாடுகிறாள்.என் மீது அவள் காதலின் அழகு வாழ்க வாழ்க என்று வாழ்த்துகின்றேன்.(வாழி அவள் நலனே)



___________________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
___________________________________________________________
 



No comments:

Post a Comment