Sunday, April 27, 2014

அமரருளும் ஆரிருளும் (புதிய சிந்தனை)

Inline images 1
அமரருளும் ஆரிருளும் (புதிய சிந்தனை)

“நவிறொறும் நூனயம்“ (குறள் 783) என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திருக்குறளே திகழ்கிறது.  ஒவ்வொரு குறளையும் ஒவ்வொரு முறை கற்கும் போதும் புதிதாய் பொருளொன்று தோன்றுகிறது.  இவ்வகையில் அறத்துப்பாலில் இல்லறவியலில் அடக்கமுடைமை அதிகாரத்தில் உள்ள 
“அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை 
யாரிரு ளுய்த்து விடும்“ (குறள் 121) என்ற குறளைக் கற்றபோது எழுந்த புதிய சிந்தனை விளக்கம் இது.

அடக்கமுடமை என்ற நல்லகுணம் ஒருவனை தேவர்களோடு சேர்த்து வைக்கும்.  அடங்காமை என்ற கெட்டகுணம் அவனை மிகுந்த இருட்டான இடத்தில் தள்ளிவிடும் என்று இக்குறளுக்குப் பொருள் கூறப்படுகிறது.  இக்குறளில் உள்ள “அமரருள்“  என்ற சொல்லிற்கு உரையாசிரியர்கள் வழங்கிய விளக்கங்கள் கீழே தொகுக்கப்பெற்றுள்ளன.  பல உரையாசிரியர்கள் “அமரருள் உய்க்கும்“ என்ற சொல்லிற்குத் “தேவர்களுள் உய்க்கும்“ என்றே விளக்கம் கூறியுள்ளனர்.

“அமரருள்“ என்ற சொல்லிற்குத் “தேவர்களுள்“ என்று பொருள் கூறியுள்ளனர்.
இந்த விளக்கம் கீழ்க்கண்ட காரணங்களால் தவறாகத் தோன்றுகிறது.

1) “அடக்கம்“ என்பதற்கு எதிர்மறை “அடங்காமை“
எனவே “அமரருள்“ என்பதற்கு எதிர்மறையாக “அசுரருள்“ என்று இருக்க வேண்டும்.
நல்லனவற்றிற்கு உதாரணமாக நல்லவனை எடுத்துக் காட்டினால்,
தீயனவற்றிற்குத் உதாரணமாகத் தீயவனைக் காட்டிட வேண்டும். 
மாறாக, அமரருக்கு(தேவருக்கு) எதிர்மறையாக அசுரர் என்ற சொல் பயன்படுத்தப்படாமல், ”ஆரிருள்“ கூறப்பட்டுள்ளது.

மேலும்,
2) அடக்கம் அமரருள் (அமரர்+உள்) உய்க்கும் என்று கொண்டால்,
அடங்காமை ”ஆரிருள்+உள் (ஆரிருளுள்) உய்க்கும் என்றே குறள் இருக்க வேண்டும்.  ஆனால் இக்குறளில் ஆரிருள் (ளு - இடம்பெறவில்லை) உய்க்கும் என்றே உள்ளது.  எனவே “உள்“ என்ற சொற்பதத்தைத் திருவள்ளுவர் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.

எனவே மேற்கண்ட குறளில் உள்ள, அமரருள் என்ற சொல்லை அமரர்+உள் என்று பதம் பிரிக்காமல்
அமரருள் = அமர்+அருள் என்று பதம் பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும்.
இவ்வாறு பதம்பிரித்தால “அருள்“ என்பதற்கு எதிர்மறையாக “இருள்“ வருகிறது.

அமர் என்ற சொல் தேவரைக் குறிக்கும்.
“அமர் அருள்“ என்பது “தேவரது அருளை“க் குறிக்கும்.

எனவே மேற்கண்ட குறளை,
“அடக்கம் அமர்அருள் உய்க்கும், அடங்காமை
ஆர்இருள் உய்த்து விடும்“
எனப் பிரித்துப் படித்து, “அடக்கம் அமர் (தேவர்) அருள் உய்க்கும், அடங்காமை ஆர்இருள் உய்க்கும்“ எனப் புதியதொரு பொருள் கொண்டால் இக்குறளுக்கான விளக்கம் சிறப்பாக அமைகிறது.
அடக்கமாக இருப்பனைத் தேவர்களின் அருள் உய்க்கும்.  அடங்காமல் இருப்பவனை ஆரிருள் உய்த்துவிடும்.

எனது விளக்கம் சரிதானே?

அன்பன்
கி.காளைராசன்

2 comments:

  1. பதிவிற்கு நன்றி ஐயா. எனது இந்த விளக்கம் இந்தக் குறளுக்கு ஒரு புதிய விளக்கஉரையாக அமைந்திடும் என நம்புகிறேன்.
    அன்பன்
    கி.காளைராசன்

    ReplyDelete
  2. உய்த்து என்பது என்ன பொருள்

    ReplyDelete