Saturday, September 25, 2021

கவிஞர் புதுவைச் சிவம் வெளியிட்ட "பெரியார் இராமசாமி" நூல்


 -- முனைவர் சிவ.இளங்கோ,  புதுச்சேரி


புதுச்சேரி, முத்தியால்பேட்டைக்கு வருகை தந்திருந்த ஈ.வெ.ராமசாமிப் பெரியாரைக் கவிஞர் புதுவைச் சிவம் (ச.சிவப்பிரகாசம்) 1926 ஆம் ஆண்டில் முதன் முதலாகச் சந்தித்தார். அன்று முதல் அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு புதுச்சேரியின் சுயமரியாதை இயக்கப் பணிகளை மேற்கொண்டு வந்தார். உலகச் செய்திகளைத் தனக்குக் கற்பித்து வரும் ஆசானாகப் பெரியாரைக் கொண்டாடும் கவிஞர் புதுவைச் சிவம், தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை ஒரு குறுங் காவியமாக இயற்றி, "பெரியார் பெருந்தொண்டு" என்ற தலைப்பில் 1944 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலுக்குப் பாவேந்தர் பாரதிதாசன் மிகச் சிறப்பான  பாயிரமொன்று (அணிந்துரை) எழுதியுள்ளார். 

இதற்குப் பின்னர், 1949 ஆம் ஆண்டில், தந்தை பெரியார் குறித்து அறிஞர் பலரின் கருத்துகளைத் தொகுத்த கவிஞர் புதுவைச் சிவம், அத்தொகுப்பு நூலைத் தனது சொந்தப் பதிப்பகமான "ஞாயிறு நூற்பதிப்பகம்" வாயிலாகப் "பெரியார் இராமசாமி" என்ற தலைப்பில் வெளியிட்டார்.
evr book.JPG
இந்நூலுக்குக் கட்டுரை, கவிதைகளைப் பிறரிடமிருந்து தருவிக்கும் பொருட்டு, அவர் பல்துறை அறிஞர்களுக்கும் மடல் எழுதினார். 1948 ஆம் ஆண்டில், இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜகோபாலாச்சாரியார் அவர்களுக்கும் இம்மடலைப் புதுவைச்சிவம் அனுப்பினார். கவிஞர் புதுவைச் சிவம் குறித்து நேரடி அறிமுகம் இல்லாத நிலையில், ராஜாஜி அவர்கள், தந்தை பெரியாரைப் பற்றிய ஒரு கருத்தை எழுதி அதைப் பெரியாருக்கே அனுப்பி விட்டார். ராஜாஜி எழுதிய அந்தக் கடிதத்தைப் பாதுகாக்க விரும்பிய பெரியார், ராஜாஜியின் கடிதத்தைப் புதுவைச் சிவத்திற்கு அனுப்பி, அக்கடிதத்தை நூலுக்குத் தகுந்த வகையில் பிளாக் செய்து கொண்டு, மீண்டும் தனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். 

அந்தக் கடிதத்தில் தந்தை பெரியார் அவர்கள் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:
evr book2.JPG

E. V. ராமசாமி
சென்னை
3.12.1948

அன்புள்ள தோழர் சிவப்பிரகாசம் அவர்களுக்கு வணக்கம். 
தாங்கள் டெல்லி கவர்னர் ஜெனரல் C. இராஜகோபாலாச்சாரியார் அவர்களுக்கு என்னைப் பற்றி கருத்து கூறும்படி எழுதிய கடிதத்தையும், ஒரு நல்ல கருத்தையும் எழுதி எனக்கு அனுப்பி விட்டார். அதை உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன். அதைத் தாங்கள் பிளாக் எடுத்துப் போட்டுக்கொண்டு இந்த காகிதத்தை எனக்கு அனுப்பிக் கொடுக்கக் கோருகிறேன்.

தங்கள் 
ஈ.வெ.ராமசாமி 
(கையொப்பம்)

இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருப்பவர், தனக்கு அறிமுகமில்லாத ஒருவர், பெரியாரைப் பற்றி கருத்துக் கேட்டபோது அதைத் தவிர்த்து விடாமல், பெரியாரைப் பற்றிய ஒரு கருத்தை எழுதி, அதைப் பெரியாருக்கே அனுப்பி வைக்கிறார். பெரியார் அவர்களும் அதை ஓர் ஆவணமாகக் கருதி, பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கடிதத்தைப் புதுவை சிவத்திற்கு அனுப்பி வைத்து, மீண்டும் அதைத் தனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர் எதிர் அணியில் இருந்தாலும்கூட, இரு பெரும் தலைவர்களுக்கு இடையே நிலவிய விரிசல் இல்லாத நட்பும், அதைக் கண்ணியத்தோடு அவர்கள் பரிமாறிக் கொண்டதும் பெரும் வரலாற்று நிகழ்வுகள் அல்லவா?

-- தந்தை பெரியார் அவர்களின் 143 ஆவது பிறந்தநாள் - சிறப்புப் பதிவு 

---







No comments:

Post a Comment