Thursday, September 9, 2021

மறக்க மனம் கூடுதில்லையே ....

-- முனைவர் அ.சுகந்தி அன்னத்தாய்


திருக்கார்த்திகை திருநாளில்
அரைப்படி பச்சரிசியை
அரை மணி நேரம் ஊறவச்சி
உள்ளங்கை ஒட்டாவரை
அறைக் காற்றில் உலர வைச்சு
உரலில் இட்டு உலக்கையிட்டு
இடித்து சளித்த மாவுடன் 
காய்ச்சிய கருப்படி நீரூற்றி
வாசனையைத் தூக்கலாக்க
சுக்குப் பொடியிட்டு
ஏலக்காய்த் தூளிட்டு
சுவைக்குச் சுவை சேர்க்க
தேங்காய்த் துறுவல் சேத்து 
பக்குவமாய்ப் பிசைந்தெடுத்து
ஐந்தாறு அங்குலமுள்ள
பச்சை பனைஓலையிலே பிளந்து பரத்தி வைச்சு 
பிரிஞ்சிடாம நூல் கட்டி
இட்லி தட்டுல அடுக்கி வைச்சு
கொப்பரையில் ஆவி காட்டி
வெந்தவுடன் இறக்கிவச்சு
ஆறவச்சு நூலவிழ்த்து 
பிய்ந்திடாம கொழுக்கட்டையை
எங்கப்பத்தா பிரிச்செடுத்தா
எட்டு வீதி தாண்டியும்
வாசனை கமகமக்கும்! 
வீதிக்குள்ளும் வீட்டுக்குள்ளும்
வீஞ்சிக்கிட்டு இருக்கும்
சொந்தங்களுக்குப்
பரிமாறினால்
கிட்ட வந்து ஒட்டிக் கொள்ளும்! 

இன்றோ பூமியில் ... 
சுவையாய் செஞ்சுதந்த என் அப்பத்தாவும் இல்ல! 
சுவைக்குக் காரணமான பனையோலையும் இல்ல!


-- முனைவர் அ.சுகந்தி அன்னத்தாய்


No comments:

Post a Comment