-- மா. மாரிராஜன்
இரண்டு மொழிகளின் ஒப்பீடு, பழமை, சிறப்பு... இது குறித்த மொழியியல் ஆய்வு நூல்கள் குறித்து ஒரு தேடல். புராணம் மற்றும் இலக்கியம் மேற்கோள் இல்லாமல் சுயசார்பின்றி வரலாறு தொல்லியல்த் தரவுகளுடன் கூடிய நூல் மற்றும் கட்டுரைகளைத் தேடிய ஒரு தேடலில் நண்பரிடம் விசாரித்த போது... "தமிழா ? சம்ஸ்கிருதமா?" நூலை வாசியுங்கள் என்றார். கரச என்று அறியப்படும் பேராசிரியர் முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள் எழுதிய நூல்.
நூல் விவரம்:
தமிழா? சம்ஸ்கிருதமா?
ஆசிரியர்: முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் (கரச|KRS)
விலை: ₹180
தடாகம் வெளியீடு, முதற் பதிப்பு, ஜனவரி 2021
ISBN: 97893888627191
தமிழா? சம்ஸ்கிருதமா? நூலின் தலைப்பே கல்வெட்டு வடிவ எழுத்துக்களில் அமைந்து இருப்பது முதல் ஈர்ப்பு. நான் விரும்பும் இலக்கியச் செல்வர் பேரா.வீ.அரசு அவர்களின் அணிந்துரை அளித்திருப்பது அடுத்த ஈர்ப்பு. பொதுவாக மொழிக்கலப்பு என்பது இயல்பான நிகழ்வு. ஆனால், சம்ஸ்கிருத கலப்பு என்பது திட்டமிட்ட சதிச்செயல் என்ற அணிந்துரையே நூலின் உள்ளடக்கத்தை எடுத்துரைக்கிறது.
அடுத்து..
கரச அவர்கள் நுழையும் முன் ஒரு வேண்டுகோள் மற்றோர் ஈர்ப்பு.
"நுழையும் முன்.. வேண்டுகோள்!
இந்த நூலுக்குள் நுழையும் முன், ஓர் அன்பு வேண்டுகோள்:
- வாசிக்கும் போது, உங்களின் தனிப்பட்ட மதப் பிடித்தம் அரசியல் பிடித்தம் எஃதாயினும், சற்றே மறந்துவிடுங்கள் !
- தற்பிடித்தம் கடந்து, தமிழைத் தமிழாக மட்டுமே அணுகிக் காணுங்கள் !
தமிழ்மொழியின் தகைமைகளுள் தலையாவது என்னவென்றால், வேறு எந்த இனத்தின் மொழிக்குள்ளும் தன்னை வல்லடியாகத் திணித்துச் சிதைக்காத அறம் மிக்க மொழி, இத்தமிழ்மொழி!
அதே அறத்தின் சீர்மையை நீங்களும் கைக்கொண்டு, உங்களின் தற்பிடித்தம் கடந்து வாசிக்கவும். உங்களின் பிடித்தம்: இறைவனாக இருக்கட்டும் (அல்லது) உண்மையாக இருக்கட்டும்!
உண்மைத் தேடல்தானே இறைத் தேடல்?
- மனம் ஆரத் தமிழ் உண்மை காண்போம்!
- மனம் ஆறத் தமிழ் உண்மை காண்போம்!
- மனம் மாறத் தமிழ் உண்மை காண்போம்!"
"தற்பிடித்தம் கடந்து, தமிழைத் தமிழாக மட்டும் அணுகிக் காணுங்கள்"
அடடா!!! சுயசார்பு என்று அடிக்கடி நான் பயன்படுத்தும் ஒரு சொல், இங்கே தற்பிடித்தம் என்று ஆரம்பமாகிறதே. நாம் தேடிய நூல் இதுதானோ....?
"நீவிர், தமிழ் போல், வாழ்வாங்கு வாழ்க! வாருங்கள் நூலுக்குள் புகுவோம்!... "
என அழைக்கிறார், நெகிழ்ச்சியுடன் நூலுக்குள் புகுந்தேன்..
முதல் பகுதியில்,
"தமிழ் மொழி, வடமொழியைவிடப் பழமையானதா? ஆதாரம் உள்ளதா?
ஆம்; என விளக்கும் விரிவான விளக்கவுரைகள் மற்றும் அறிவியல் தொல்லியல்த் தரவுகள். என்னிடம் இருக்கும் ஐயங்களுக்குத் தெளிவான விளக்கம் தந்தன.
பிராகிருதம்=பிர + கிருதம் - Raw form
மேம்படாத வடிவம்..
சம்ஸ்கிருதம் = சம்ஸ் + கிருதம் - Refined form
மேம்பட்ட வடிவம்..
மேம்படாத கரடுமுரடான மொழிதானே முதலில் தோன்றியிருக்கும். அதாவது, பிராக்ருதத்தின் "தம்மம்" என்பதுதான் சம்ஸ்கிருதத்தில் "தர்மம்".
புரிய ஆரம்பித்தது. சம்ஸ்கிருதத்தின் மூலம் தெரிய வருகிறது. கரடுமுரடான தமிழி எழுத்துக்களும், மேம்பட்ட தமிழ் எழுத்துக்களும் தமிழே.
தோற்றமும் தமிழே.. வளர்ச்சியும் தமிழே.. வேறு எங்கிருந்தும் எதையும் பெறாமல் சுயம்பு மொழி இது.
நிறைய விளக்கங்கள், அறிவியல் ரீதியான ஆய்வுகள் என்று ஒவ்வொரு மொழியின் வேர்ச்சொல்லுக்குள் புகுந்து அடித்து ஆடுகிறார் ஆசிரியர். ஆசிரியருக்குத் தமிழ், சம்ஸ்கிருதம் உட்பட 12 மொழி தெரியுமாம்!!!!!!!
முழுமையாக வாசித்ததில் ஒரு தெளிவு கிடைத்தது. சம்ஸ்கிருதத்தை விட தமிழ் மொழி பழமையானதா? என்ற கேள்விக்கு; ஆம், என்ற பதிலை
25 பக்கத்தரவுகள் மூலம் வரலாறு அறிவியல், தொல்லியல் ரீதியாக ஆதாரத்துடன் நிறுவுகிறார்.
அடுத்த பகுதி..
"எவருடைய காலத்தில் தமிழ், பிறமொழிக் கலப்பு இல்லாமல் இருந்தது?"
தெளிவான, சரியான ஆய்வியல் வாதம் வைக்கப்படுகிறது. மொத்தத்தில் நான் தேடிய நூல் இதுதான் என்று கூறமுடியாது. நான் தேடிய நூல்களுள் இதுவும் ஒன்று என்று நிச்சயமாகக் கூறலாம்.
---
No comments:
Post a Comment