Sunday, July 25, 2021

உண்டெரூல்டிங்கன்(ஜெர்மனி) கற்கால மனிதர்கள் குடியிருப்பு


-- முனைவர் க. சுபாஷிணி 


உலகம் முழுவதும் இன்று தொல்லியல் கள ஆய்வுகள் என்பது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்ற ஒரு துறையாக வளர்ந்து வருகின்றது. தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல், பொருந்தல், அழகன்குளம், கீழடி போன்ற இடங்களில் நடைபெறுகின்ற அகழாய்வுகள் பற்றிய செய்திகள் இன்று பத்திரிகை செய்திகள் அல்லது ஆய்வாளர்களின் அறிக்கைகள் என்ற எல்லையைக் கடந்து பொது மக்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் தனிநபர் ஆய்வுகளாகவும்  பதிவுகளாகவும் பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் பதிவுகளாக இக்காலத்தில் வெளிவருகின்றன. 

தமிழ்நாட்டுத் தொல்லியல் செய்திகளை அறிந்து கொள்கின்ற அதேவேளை தமிழ்நாட்டிற்கு வெளியே நடைபெறுகின்ற, அல்லது நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுகள் மனித குலத்தின் தொன்மை பற்றிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகின்றது. இத்தகைய அறிவு உலகளாவிய அளவில் மனித குலத்தின் தோற்றம், வளர்ச்சி, மற்றும் நிலைத்தன்மை, போராட்டங்கள், வெற்றி, அரசு உருவாக்கம், இடப்பெயர்வு, புலம்பெயர்வு என்கின்ற பல்வேறு மனிதகுல அசைவுகளைப் பற்றி அறிந்துகொள்வதில் தெளிவைத் தருவதாக அமையும்.

தொல்லியல் ஆய்வுகளை மிக நீண்டகாலமாக, செயல்படுத்தி வரும் நாடுகளில் ஒன்று ஜெர்மனி. ஜெர்மனியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகள் பல்வேறு அருங்காட்சியகங்களிலும், பல்கலைக்கழக ஆய்வுக் கூடங்களிலும், கண்காட்சி பகுதிகளிலும் மட்டுமன்றி அகழாய்வுகள் நடத்தப்பட்ட பகுதிகளிலேயே அருங்காட்சியகங்களாக அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களைக் கொண்டது ஜெர்மனி. ஒவ்வொரு பெரிய நகரமாகட்டும், சிறு நகரமாகட்டும், கிராமம் ஆகட்டும்... எல்லாப் பகுதிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இந்தப் பதிவு கற்கால மனிதர்களின் குடியிருப்பு  ஒன்றினை பற்றியது. 

Pfahlbaumuseum Unteruhldingen - உண்டெரூல்டிங்கன் கற்கால மனிதர்கள் குடியிருப்புகள் அருங்காட்சியகம் ஜெர்மனியின் கொன்ஸ்டன்ஸ்  ஏரிக்கு அருகே உள்ளது. 

இன்று உலகளாவிய வகையில் யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் 111 கற்கால மனிதர்களின் குடியிருப்புகளில் ஒன்றாகவும் இது அமைகிறது.  

ஜெர்மனிக்குத் தெற்கிலும், சுவிசர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய இரு நாடுகளுக்கும் அருகிலேயும் உள்ளது இப்பகுதி. 1853-1854 ஆகிய காலகட்டத்தில்  இந்த ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களது வலைகள் அடிக்கடி தண்ணீருக்கு அடியில் மாட்டிக் கிழிந்து போனதை அவர்கள் அன்றைய நகர அதிகாரிகளிடம் தெரிவிக்க அவர்கள் கடலுக்கடியில் ஆய்வு செய்யும் சிலரை அனுப்பி சோதனை செய்த போது இது மிகப்பெரிய ஒரு கண்டுபிடிப்பாக அமையும் என யாரும் முதலில் எதிர்பார்க்கவில்லை.  வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மனித குல வாழ்விடப் பகுதிகளுள் ஒன்றாக இப்பகுதி இருந்தது என்பதும் அவர்கள் வாழ்வியல் கூறுகள் தொடர்பான ஏராளமான தொல்பொருட்கள் இங்குக் கிடைத்ததும் ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தன. 

இங்கு அகழாய்வை நிகழ்த்திய குழுவில் இடம்பெற்றவர்களுள் ஒருவர்  ஃபெர்டினன் கெல்லர்.  இவரே இப்பகுதிக்கு 'Pile Dwelling' எனப் பெயரிட்டு தனது ஆய்வறிக்கையை வெளியிட்டார். 

அடுத்து இங்கு மக்கள் வாழ்ந்த  கி.மு 3000 கால அளவிலான வீடுகள், இங்கு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பற்றி தினம் சில குறிப்புகளாக வழங்குகின்றேன். 

உண்டெரூல்டிங்கன்(ஜெர்மனி) கற்கால மனிதர்கள் குடியிருப்பு அருங்காட்சியகத்திற்கு நேற்று சனிக்கிழமை 24.7.2021 சென்றிருந்த போது பதிந்த காட்சி.

முகப்புப் பகுதியில் பயணம் தொடங்கும் இடம்


ஏரிக்கு அடிப்பகுதியில் மணலில் புதையுண்ட மக்கள் வாழ்விடப் பகுதி



ஃபெர்டினன் கெல்லர்



"உண்டெரூல்டிங்கன்(ஜெர்மனி) கற்கால மனிதர்கள் குடியிருப்பு - 2"
                                    
வீடுகளைக் கட்டி குடியிருப்புகளை உருவாக்க எப்போது மனித குலம் தனது முயற்சியைத் தொடங்கியது என நம் எல்லோருக்குமே எப்போதாவது மனதில் கேள்விகள் எழுந்திருக்கும், அல்லவா?

கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற அகழாய்வுகள் வெளிப்படுத்திய, நாம் அறிந்த தமிழ்நாட்டு அகழாய்வுகள் போல  உலகின் ஏனைய பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகளையும் தெரிந்து கொள்வோமே. இது ஒப்பாய்வுகளுக்கு உதவும் என்பதோடு பொதுவாகவே ஹோமோ சேப்பியன்களான இந்த மனித குலத்தின் வாழ்விடங்கள் உருவாக்கல் என்ற பொதுக் குணத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் உதவும் அல்லவா? 

ஜெர்மனியின் உண்டெரூல்டிங்கன் பகுதியில் ஏறக்குறைய பொ.ஆ.மு 3917   ஆண்டு காலகட்டம் வாக்கில் உருவாக்கப்பட்ட வீடுகளின் மாதிரிகள் இங்கு உள்ள மிக முக்கிய காட்சிப் பொருள்களாக அமைகின்றன.  காலவரிசைப்படி ஒவ்வொரு வீடுகளும் முன்னர் இப்பகுதியில் மக்கள் அமைத்த வீடுகளின் தொல் படிமங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில் மாதிரிகளாக  இங்கே உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் முதலில் வருவது ஹோர்ன்ஸ்டாட் வீடு (Hornstaat Haus).


இந்த வகை வீடுகள் இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுப் பணியின்போது ஏரிக்கு மிக ஆழமான பகுதிகளில் கிடைத்துள்ளன. அடிப்படையில் ஓர் அறை மட்டும் கொண்ட மரத்தாலும் குச்சிகளும் கட்டப்பட்ட வீடுகள். இவ்வகை வீடுகள் கட்டப்பட்ட காலமாக பொ.ஆ.மு. 3917 ஆம் ஆண்டு என ஆய்வாளர்கள் நிகழ்த்திய கரிம ஆய்வுகளின்  வழி உறுதி செய்கின்றார்கள். இந்த வகை வீடுகளின் தொல் படிமங்கள் 1980ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை கான்ஸ்டன்ஸ் ஏரிக்கரையில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டவை. இந்த அகழ்வாய்வை பாடன் ஊர்ட்டன்பெர்க் மாநிலத்து வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு அமைப்பு (State office of Historic Monuments) நிகழ்த்தியது.

இந்த வீடுகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட மரத் தூண்கள் 4 - 9 மீட்டர் உயரம் கொண்டவை. சுவர்கள் களிமண்ணால் பூசப்பட்டு மேற்கூரைகள் ரீட் கானரி வகைப் புற்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு மாதிரியாக வைக்கப்பட்டுள்ள இந்த வீடு 1996 ஆம் ஆண்டு முதலில் உருவாக்கப்பட்டு அதன் பின்னர் மீண்டும் 2011 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. 


பொ.ஆ.மு.  3900 எனும்போது இன்றைக்கு ஏறக்குறைய 6000 ஆண்டுக்காலப் பழமையான தொல் எச்சங்கள் என்பதை அறிய முடிகின்றது. ஐரோப்பாவில் தொல் மனிதர்கள் வாழ்ந்த பல இடங்கள் பற்றிய செய்திகள் இன்று நமக்குக் கிடைக்கின்றன. அந்த வகையில் இந்தப் பகுதியில் கிடைத்திருக்கின்ற இந்தக் குடியிருப்புகளின் எச்சங்கள் நமக்கு இப்பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் நீண்ட கழிகளையும், களிமண், மற்றும் புல் சருகுகளையும் கொண்டு வீடுகளைக் கட்டும் திறன்களையும் கொண்டிருந்தனர் என்பதையும், ஓரிடத்தில் தங்கி வாழ்வது, உணவுகளைச் சேகரிப்பது என்ற பழக்கங்களையும் கொண்டிருந்தனர் என்பதையும் இந்த அகழாய்வுச் செய்தி உலகுக்கு வெளிப்படுத்தியது.

அடுத்த பதிவில் இங்குக் கிடைத்த மேலும் சில தொல்பொருட்கள் பற்றிய செய்திகளைப் பகிர்கிறேன்.


"உண்டெரூல்டிங்கன்(ஜெர்மனி) கற்கால மனிதர்கள் குடியிருப்பு - 3"
                                

தொல் மனிதர்களின் வரலாறு மண்ணுக்குள் மறைந்து கிடக்கின்றது. ஆழமாக நிலத்தைத் தோண்டி அகழாய்வு செய்யும்போது நமக்குப் பல்லாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் பற்றிய தொல் எச்சங்கள் கிடைக்கின்றன. அதேபோல கடலுக்கடியில் அகழாய்வு செய்யும் போதும், ஏரிகள், குளங்கள் போன்ற நீர் நிலைகள் இருக்கின்ற பகுதிகளில் அகழாய்வு செய்யும்போதும் ஏராளமான அரும் பொருட்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

மனிதகுலம் மட்டுமல்ல; மிருகங்களும் சரி, தாவரங்களும் சரி; நீர்நிலைகள் எங்கு இருக்கின்றதோ அங்கேயே வாழ்விடத்தை உருவாக்கிக்கொள்ளும் அடிப்படை பண்பை    ஆய்வுகள் நமக்கு வெளிப்படுத்துகின்றன. அதனால்தான் பெருவாரியான அனைத்து நாகரிகங்களும் ஏதாவது ஒரு நதிக் கரையை ஒட்டியே அமைந்திருக்கின்றன. நைல் நதி நாகரிகம்,  வைகை நதி நாகரிகம் போன்றவற்றை இதற்கு  உதாரணமாகக் காட்டலாம்.  அல்லது ஏரிகள் குளங்கள் கடற்கரை அருகே என்ற வகையில் அமைந்திருக்கின்றன.

ஜெர்மனியின்  உண்டெரூல்டிங்கன்   பகுதி தொல்லியல் அகழாய்வின் போது ஏரியின் அடிப்பகுதியில் புதையுண்டு கிடந்த மர வீடுகளைப் பற்றிய செய்திகளை இதற்கு முந்தைய பதிவில் கூறியிருந்தேன். இப்பகுதியில் மரங்களின் அல்லது கழிகளின், புற்களின் எச்சங்கள் மட்டுமே கிடைத்தன என்று எண்ணிவிட வேண்டாம். 

இப்பகுதியில் நடத்தப்பட்ட பல்வேறு கால அகழாய்வுகளில் இங்கு மண்ணால் உருவாக்கப்பட்ட மண்பாண்டங்கள், இரும்பு மற்றும் மரத்தால் ஆன கருவிகள், கற்களாலான அணிகலன்கள் மட்டுமன்றி விலங்குகளின் கொம்புகளும் எலும்புகளால் ஆன பொருட்கள் என பல்வேறு தடயங்கள் கிடைத்திருக்கின்றன.

நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் 5000 ஆண்டுகள் பழமையான மரத்தாலான கலங்கள் மட்டுமன்றி மனிதர்கள் பயன்படுத்திய துணி வகைகளும் கிடைத்திருக்கின்றன. பானைகளுக்குள் வைக்கப்பட்டிருந்த ரொட்டி துண்டின் படிமங்கள், ஆப்பிள் பழங்கள், சமைத்த அல்லது சுட்ட பயிர்கள் சமைத்த கஞ்சி போன்றவை பதப்படுத்தப்பட்ட நிலையில் பானைகளில் கண்டெடுக்கப்பட்டன. இந்தக் கண்டுபிடிப்புகள் இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் குடியிருப்பு, வாழ்வியல் தன்மை ஆகியவற்றை ஆச்சரியப்படத்தக்க வகையில் நமக்கு விளக்குகின்றன.

அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களான கோடரி, சமைக்கப் பயன்படுத்தும் பானைகள், ஊசிகள், மீன்களைப் பிடிப்பதற்காக உருவாக்கப்பட்ட இரும்பு கொக்கிகள் போன்றவையும் கிடைத்திருக்கின்றன. இவை இக்காலத்திலும் நமது வாழ்வியல் தேவைகளுக்கு அடிப்படையாக இருப்பவை தான். இதனைக் காணும்போது அடிப்படையில் மனித வாழ்வு என்பது பெரிய மாற்றத்தை இந்த ஐந்தாயிரம் ஆண்டுகள் கால வாக்கில் அடையவில்லை என்பதைக் காண்கின்றோம்.

நமக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் விட்டுச் சென்ற பொருட்கள் தான் இன்று நமக்குக் கடந்த காலத்தை அறிந்து கொள்ள உதவுகின்றன. 

உடைந்த வகையிலும் முழுமையான வகையிலும் இப்பகுதியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மண்பாண்டங்கள் கிடைத்திருக்கின்றன. இவை குறிப்பிடத்தக்க  வடிவத்துடன் நேர்த்தியாக அமைக்கப்பட்ட வகையில் உள்ளன. இப்பகுதியில் பல்வேறு பண்பாட்டுக் குழுவினர் வாழ்ந்திருக்க கூடிய வாய்ப்புகள் உண்டு என்பதைக் காட்டும் வகையிலும் இத்தகைய மண்பாண்டங்களின் அமைப்பில் வேறுபாடுகள் இருப்பதையும் காண முடிகின்றது.  பொ.ஆ.மு 3800லிருந்து பொ.ஆ.மு. 1000 வரையிலான (அதாவது இன்றைக்கு ஏறக்குறை 6000லிருந்து 3000 ஆண்டுகள் என) கரிமப் படிம ஆய்வுகள் காட்டுகின்றன.

கற்காலத்தில் அமைக்கப்பட்ட மிக எளிய சமையல் அறை ஒன்றில் வைக்கப்பட்ட நீர் அருந்துவதற்கான கோப்பைகள், பொருட்களை வைப்பதற்கான பாத்திரங்கள், பல்வேறு வகையான மண்பாண்டங்கள், உணவு சாப்பிடுவதற்கான மண்பாண்டங்கள், உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான பாத்திரங்கள் என்பவை உடைந்த நிலையிலும் முழுமையான நிலையிலும் என்ற வகையில் இங்குக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.



இங்குக் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்கள்  இந்த மாநிலத்தின் ஆய்வுக்கூடத்தில்  ஆய்வுக்காகப் பாதுகாக்கப்பட்டாலும் இப்பகுதியில் அமைந்திருக்கின்ற சிறிய அருங்காட்சியகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நடைபெற்ற ஏராளமான தொல்லியல் கண்டுபிடிப்புகளில் முழுமையான, அல்லது உடைந்த மண் பாண்டங்கள் பற்றிய செய்திகளை அடிக்கடி நாம் இப்பொழுது ஊடகங்களின் வழி கேள்விப் படுகிறோம் அல்லவா.. ? அதேபோல ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் மத்திய ஆசியா போன்ற நாடுகளிலும் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகளில் மண்பாண்டங்கள் ஏராளமானவை கிடைத்துள்ளன என்பது நமக்கு ஆச்சரியமே. அவை அனைத்தும் அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்படுகின்றன; பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தப்படுகின்றன. எனது ஏராளமான அருங்காட்சியங்களுக்கான பயணங்களின்போது நான் இத்தகைய மட்பாண்டங்கள் பலவற்றைப் பார்த்ததுண்டு. அந்த வகையில் இங்கு உண்டெரூல்டிங்கன் பகுதியில் உள்ள சிறிய அருங்காட்சியகத்திலும் நான் நேரில் கண்ட மண்பாண்டங்களின் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.



"உண்டெரூல்டிங்கன்(ஜெர்மனி) கற்கால மனிதர்கள் குடியிருப்பு - 4"
                                      
உணவுதான் உயிர்களுக்கு ஆதாரம். உணவைத் தேடித் தான் உயிரினங்கள் அனைத்துமே பயணிக்கின்றன. அது தாவரங்களாகட்டும்.. விலங்குகளாகட்டும் மனிதர்களாகட்டும்.. எல்லோருமே ஒவ்வொரு நாளும் உணவை மையமாக வைத்துத்தான் வாழ்க்கைப் பயணத்தைச் செலுத்துகின்றோம். 


யாராவது நண்பர்களைப் பார்த்தால் சாப்பிட்டீர்களா..? அல்லது அருந்தத் தண்ணீர் வேண்டுமா..? எனக் கேட்பது உலக மனிதர்கள் அனைவருக்குமே இயல்புதான்.

உணவைச் சார்ந்தே பல்வேறு வணிக முயற்சிகளும் உலகம் முழுவதும் இன்று பரந்து விரிந்து கிடக்கின்றன. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்பி வைக்கப்படும் பொருட்களில் உணவுப் பொருட்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. இப்போது மட்டுமல்ல.. பண்டைய காலம் தொட்டே கடல் வணிகத்தில் உணவுப்பொருட்களை ஏதாவது ஒரு வகையில் பதப்படுத்திப் பத்திரப்படுத்தி அனுப்பி வைப்பதும் ஒரு கலையாகவே இருந்து வந்துள்ளது. தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட மண்பாண்டங்கள் எகிப்தின் செங்கடலோர அகழாய்வுகளில் கிடைப்பதும், ரோமானியப் பேரரசில் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்ட எம்ஃபோரா ஜாடிகள் தமிழகத்தின் அகழாய்வுப் பகுதிகளில் கிடைப்பதும் நாம் அறிந்தது தான்.

வேட்டையாடியும், மண்ணில் புதைந்து கிடக்கும் கிழங்குகளைத் தோண்டி எடுத்தும்,  பழங்களையும் இலைகளையும் பறித்துச் சாப்பிட்டு வாழ்ந்த தொல்  மனிதர்கள் படிப்படியாக ஓரிடத்தில் தங்கி வாழ முயன்றபோது உணவுப்பொருட்களைப் பதப்படுத்திப் பாதுகாத்து வைக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து கொண்டார்கள்.

இப்போது பலரது வீடுகளிலும் இருப்பது போல அன்று குளிர்சாதனப்பெட்டி வீடுகளில் இல்லை அல்லவா...? ஆனாலும் தொல் மனிதர்கள் தொடக்கக் காலத்தில் உணவுகளை ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் சேமிக்க ஏராளமான முயற்சிகளைச் செய்திருக்கின்றார்கள். அவர்களது அன்றைய முயற்சிகளை ஒப்பிடும்போது இன்று நாம் செய்கின்ற முயற்சிகள் குறைவு என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

கிழங்குகளைச் சாப்பிட்டது போக மீதத்தைப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.... அன்று பிடித்த மீன்களைச் சாப்பிட்டது போக மீதத்தை மிச்சப்படுத்தி வைக்கவேண்டும்... அதேபோல காய்கறிகளையும் பழங்களையும் நாளைக்குச் சாப்பிட மிச்சப் படுத்தி வைக்க வேண்டும்...

அதுமட்டுமா குளிர்காலம் வந்து விட்டால் உணவைத் தேடுவது சிரமம்... அந்தச் சூழலில் அன்றாடத் தேவைக்கு வேண்டிய உணவைக் கோடைக் காலத்திலேயே சேமித்து வைக்கவேண்டும்... இப்படிப் பல சவால்கள் நமது தொல் மனிதர்கள் சந்தித்தார்கள்.

இதனடிப்படையில் பிறந்ததுதான் பானைகள் உருவாக்கும் தொழில் நுட்பமும் உணவைப் பதப்படுத்தும் தொழில் நுட்பமும், மண்பாண்டங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் நமது சூழலில் இந்திய நிலப்பகுதியில் மட்டும்தானா என்ற கேள்விக்கு  'இல்லை' என்பதே நமக்கு விடையாகக் கிடைக்கிறது. ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் அதேபோல ஆப்பிரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் மத்தியக் கிழக்காசிய நாடுகளிலும் நிகழ்த்தப்பட்ட ஏராளமான தொல்லியல் ஆய்வுகளில் மிக நீண்ட காலமாக மனித குல பயன்பாட்டில் இருந்த மண்பானைகள் பற்றிய செய்திகள் அதிகம் கிடைக்கின்றன. செய்திகள் மட்டுமல்ல.. ஏராளமான மண்பாண்டங்கள் இன்று உலகின் பல்வேறு அருங்காட்சியகங்களில் பல்கலைக்கழகக் கண்காட்சி பகுதிகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

இங்கு ஜெர்மனியின் உண்டரூல்டிங்கன் பகுதியில் 1920ம் ஆண்டில் 'Wasserburg Buchau' பகுதியில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வில் மண்பாண்டங்களை உருவாக்கும் அடுப்பும், மண்பாண்டங்களை பத்திரப்படுத்தி வைக்கும் ஒரு வீடும் அவற்றிற்குள் பதப்படுத்திய உணவுப் பொருட்கள்  வைக்கப்பட்ட பல்வேறு மண்பாண்டங்கள் உள்ள வகையில் எனக் கிடைத்தன.

இங்குப் புகைப்படத்தில் காட்டப்படுகின்ற அடுப்பு மற்றும் அருகில் உள்ள வீடு அகழாய்வில் கிடைத்த தொல்லியல் எச்சத்தை அடிப்படையாகக் கொண்டு மாதிரியாக உருவாக்கப்பட்டவை. இத்தகைய வீடுகள் மனிதர்கள் வாழ்ந்த வீடுகள் இல்லை என்றும் இவை மண்பாண்டங்களில் பொருட்களைச் சேகரித்து பதப்படுத்தி வைக்கப்பட்ட தனி வீடுகள் என்றும் இந்த ஆய்வுகள் வெளிப்படுத்தின.

உணவு தோல் பைகளிலும், மரத்தாலான பெரிய வட்டவடிவிலான குடுவைகளில், மண்பாண்டங்களில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த செய்திகள் இந்த ஆய்வின்போது வெளிவந்தன. உணவு பதப்படுத்தல் என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீன்களும் பயிர்களும் காய்கறிகளும் பண்டைய மக்களால் இங்கு பதப்படுத்தப்பட்ட செய்தி, உணவைப் பதப்படுத்திப் பாதுகாக்கும் முறை, மற்றும் மண்பாண்டங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் ஜெர்மனியின் இப்பகுதியில் இன்றைக்கு நான்காயிரம் ஆண்டு வாக்கில் வழக்கில் இருந்தது என்னும் செய்தி வரலாற்று ஆய்வில் ஈடுபடும் நாம் எல்லோருக்குமே ஆர்வம் தரும் ஒரு செய்தி தானே. 

இவ்வளவு குளிர் நிறைந்த ஜெர்மனி போன்ற நிலப்பகுதிகளில் இன்றைக்கு நான்காயிரம் அல்லது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே களிமண் கொண்டு மண்பாண்டங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் இருந்தது என்பதை அறியும்போது மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த நல்ல தட்பவெப்பச் சூழலைக் கொண்ட தமிழ்நாடு போன்ற நிலப்பகுதிகளில் அதே காலகட்டத்தில் அல்லது அதற்கு முன்னரும் கூட இத்தகைய தொழில் நுட்பங்கள் இருந்திருக்க வேண்டிய சாத்தியம் உள்ளது என்ற கருத்தையும் நாம் நோக்க வேண்டியிருக்கின்றது. இதற்குச் சான்றுகளைத் தேட வேண்டிய அவசியம் நமக்கு இருப்பதால் மிக ஆழமான வகையில் அகழாய்வு குழிகளைத் தோண்டி ஆய்வுகளைச் செய்வது இத்தகைய தேடுதலுக்கு நல்ல விடைகளை அளிக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.


---

No comments:

Post a Comment