தெற்கத்திச் சீமை பாளையக்காரர்களும் சிங்கம்பட்டி ஜமீனும்
- முனைவர்.இரா.அனுசுயா
தமிழ்நாட்டில் மொத்தம் 72 பாளையங்கள் இதில் 18 பாளையங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. நாயக்கர்களால் பட்டியலிடப்பட்ட 72 பாளையங்களே அனைவருக்கும் தெரிந்த ஜமீன்களாக இருக்கின்றன. பல ஜமீன்கள் இருந்ததற்கான சுவடுகள் இருப்பினும் வரலாற்றில் இடம்பெறாத நட்டாத்தி ஜமீன், சாத்தான்குளம் ஜமீன் என சாதிவாரியான பல ஜமீன்கள் வரலாறு வெளி உலகத்திற்குத் தெரியாமலே அழிந்து போயின.
பாளையக்காரர்கள் ஆட்சி முறையை முதலில் அங்கீகரித்தவர் மதுரையில் ஆளுநராக இருந்த விசுவநாத நாயக்கர். இவ்வாறு பட்டியலிடப்பட்ட ஜமீன் வரிசையில் வந்தவர் தான் ‘தோன்றின் புகழொடு தோன்றுக’ என்ற குறளுக்கேற்ப வாழ்ந்து மறைந்த திருநெல்வேலி சிங்கம்பட்டி ஜமீன் 31வது பட்டம் TNS தீர்த்தபதி ஐயா. இவரது முழுப்பெயர் தென்னாட்டுப் புலி நல்லகுத்தி சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெய தியாகமுத்து சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா. தாத்தா மற்றும் தந்தையின் பெயரையும் சேர்த்து வைத்துள்ளனர். பாண்டியர்களின் வழித் தோன்றல்களான இவர்கள் பாளையக்காரர்களாக, குறுநில மன்னர்களாக பல்வேறு கிராமங்களை உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான ஏக்கர்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்து ஆட்சி புரிந்து வந்தனர். அவர்களுக்கு 8000 கிஸ்தி செலுத்தி வந்துள்ளனர்.
ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பின்பே பாளையக்காரர்கள், குறுநில பரப்பை ஆள்பவர்கள் ஜமீன்களாகப் பெயர் மாற்றம் பெற்றார்கள். 1936ல் TNS தீர்த்தபதி ஐயா அவர்களுக்கு 3 வயது இருக்கும் போது சிங்கம்பட்டி ஜமீனுக்கான மன்னராக முடிசூட்டப்படுகிறது. மன்னர்களுக்கு ஆயகலைகள் கற்றுக் கொடுப்பது வழக்கம். ஆனால் தீர்த்தபதி ஐயா ஆயக்கலைகள் அனைத்தும், கற்கவில்லை. எனினும் ஆங்கிலப் புலமை, வில்லேற்றம், துப்பாக்கி சுடுதல், ரகபி, வாள்வீச்சு, பாலே நடனம் என அரச குடும்பத்திற்குத் தேவையான அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர். வெளிநாடு சென்று படிக்க வைப்பது இவர்களது குடும்ப வழக்கம். 2ம் உலகப் போரின் காரணமாக இவரை இலங்கையிலுள்ள கண்டி பல்கலைக்கழகத்திலே படிக்கச் சென்றார். அப்போது கண்டியில் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு (England Oxford) பல்கலைக்கழக பேராசிரியர்களே வகுப்பு எடுப்பது வழக்கம். ஆகவே இவரது ஆங்கிலப் புலமையானது, இன்றும் பலருக்கு ஆச்சரியமூட்டுவதாகவே இருந்தது.
1952ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் வந்த பிறகு இவர் நிர்வகித்து வந்த சொத்துக்கள் உரிய முறையில் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. முடிசூடியதால் இன்றளவும் இவர் மன்னராகக் கருதப்பட்டார். மன்னருக்கே உரிய பண்பு நலன்களுடன் வாழ்ந்தவர். மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்வது, இரத்த தானம் அளிப்பது என்று தானங்கள் பல செய்தவர். அம்பையில் இவர் அளித்த நிலக்கொடையில் தான் அரசு பள்ளிக்கூடமும், அரசு மருத்துவமனைகளும் அமைத்துள்ளது. தீர்த்தபதி பள்ளி, தீர்த்தபதி மருத்துவமனை என்றே அழைக்கப்படுகிறது. திருவிதாங்கூர் மகாராஜா ராஜமார்த்தாண்ட வர்மனுக்குப் போரில் ஜமீன் குடும்பம் உதவி செய்ததால் இவர்களுக்கு 6000 ஏக்கர் அன்பளிப்பு வழங்கப்பட்டது. காரையார் சொரிமுத்து கோயில் அறங்காவலர். ஆடி அமாவாசை அன்று நடைபெறும் திருவிழாவில் ராஜ உடையில் ராஜகுடையுடன் மன்னராக வீற்றிருந்து சம்பிரதாயமாக விழாவினை தொடங்க பூசாரி உத்தரவு கேட்பதும் தீர்த்தபதி ஐயா விழா தொடங்க ஆணை பிறப்பிப்பதும் வழக்கம். 6000 ஆண்டுகளுக்குப் பழமையான இக்கோவிலில் மன்னரிடம் கேட்ட பின்பே பூக்குழி திருவிழா தொடங்கும்.
இவரது அரண்மனையில் முன்னோர்கள் பயன்படுத்திய வாள், தங்கப் பல்லக்கு, அரசாங்க கடிதங்கள், குறுநில மன்னர்களுடன் தொடர்பிலிருந்ததற்கான சான்றுகள், 1000 குதிரைகள் பராமரிக்கப்பட்ட இடம், பல்லக்கு ஊர்வலம், வில்லு வண்டி எனப் பல அரிய செய்திகள் பராமரிக்கப்பட்டு மக்களது பார்வைக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவரது அரண்மனை அருங்காட்சியகத்தில் நமக்கெல்லாம் நன்கு பழக்கமான மெனுகார்டு அப்போதே அவர்கள் பயன்படுத்தியுள்ளதைப் பார்க்க முடியும். நீர் வடிகட்டித் தரும் மண்பாண்டங்கள், கெடாமல் இருக்கும் ஹாட்பாக்ஸ், வேட்டை துப்பாக்கிகள், குப்பிகள், குதிரைக் குளம்பினால் செய்யப்பட்ட ஆஷ் ட்ரே, அக்கால ரேடியோ செட் எனப் பல அரிய பொருட்களைப் பார்க்க முடியும். வில் கம்புகள், போர்க்கருவிகள், வாள் வகைகள், யானை பொம்மை என வீரம் சார்ந்த கருவிகள் பல வகைப்பட்டவை காணக்கிடைக்கின்றன. சிங்கம்பட்டி ஜமீன் அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ள யானை பொம்மை அரிய வரலாற்றை உள்ளடக்கியது. ஜமீனால் அதிக சிரத்தையோடு பாதுகாக்கப்பட்டு வந்த இந்த பனையோலையால் செய்யப்பட்ட யானை பொம்மை விவேகானந்தரால் சேதுபதி ராஜாவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. பின்பு ராஜா தன்னுடைய பேத்தி வள்ளி நாச்சியாருக்கு தற்போதைய ராஜாவின் தந்தையாருக்குத் திருமணம் முடித்த போது சீதனமாகக் கொடுக்கப்பட்டது. தாய் வீட்டுச் சீதனம் என்பதாலேயே அதிக பராமரிப்புடன் பாதுகாக்கப்படுகிறது. இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி தான் விவேகானந்தர் சிகாகோ மாநாட்டிற்குச் சென்றுவரக் காரணமாக இருந்தவர்.
மன்னர் பரம்பரைக்குச் சொந்தமான மாஞ்சோலை எஸ்டேட் ஒரு வழக்கு செலவிற்காக ஆங்கிலேயருக்குக் குத்தகைக்கு விடப்பட்டு பின்பு கைமாறியது. சிங்கம்பட்டி ஐமீன் அவர்கள் செல்வமும், வீரமும், கல்வியும் பாரம்பரியமும் மிக்க குடும்பத்தில் பிறந்து மன்னராக இருந்தாலும் பண்பிலும் அன்பிலும் சிறந்து விளங்கியவர். அவருக்கு மிகவும் பிடித்தமானது வில்வண்டி. இத்தகைய வில்வண்டியை 25,000 ரூபாயில் செலவு செய்து பராமரித்து வைத்துள்ளார். பார்வையாளராக வருபவர்கள், மாணவர்கள் விரும்பினால் இத்தகைய அரச வில்லு வண்டியில் பயணிக்கவும் அனுமதியளிப்பார். மனிதர்களிடம் மட்டுமல்லாது விலங்குகளிடமும் அன்பாக இருந்தவர் ஆசையாக வளர்த்து வந்த நாய் இறந்த போது அதற்கு நினைவுத்தூண் எழுப்பியவர். நூல் குறிப்புகளும் எழுதி வைத்துள்ளார். ஒரு மன்னர் பரம்பரையையே அழகாக வரலாற்று அருங்காட்சியகமாக மாற்றி நமக்குத் தந்து மறைந்துள்ளார்.
முனைவர்.இரா.அனுசுயா, உதவிப் பேராசிரியை
சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை
No comments:
Post a Comment