Saturday, July 11, 2020

கல்வியில் பெண்கள் அன்றும் இன்றும்

கல்வியில் பெண்கள் அன்றும் இன்றும்

-- தேமொழி  


            தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு  அமைப்பின், "கடிகை" - தமிழ் மரபு முதன்மை நிலை இணையக் கல்விக்கழகம் வழங்கும் "வையத்தலைமை கொள்"  என்ற பொருண்மையில் நிகழ்த்தப்படும் உலக மகளிர் கருத்தரங்கில்,  "செம்மை மாதர்" என்ற  மூன்றாம் நாள் கருத்தரங்கின் பிரிவின் கீழ்  ""கல்வியில் பெண்கள் அன்றும் இன்றும்""  என்று பெண்கல்வி குறித்து,  சென்ற நூற்றாண்டின் துவக்கம் முதல்  பெண்களின் கல்வியின் நிலை தலைமுறைகளாக்  கண்ட மாற்றங்கள்  குறித்து நான் செய்யும் ஒரு  மீள்பார்வைதான்  இக்கட்டுரை. 

            அனைவருக்கும் கல்வி குறித்து முக்கியத்துவம் புரிய வேண்டும்.  அந்தப் புரிதல் இல்லாத காரணத்தால், தெளிவான சிந்தனையும், விழிப்புணர்வும் இன்றி இந்தியா 200 ஆண்டுகளுக்கு மேல் அடிமை நாடாக இருந்தது. அதில் பெண்களின் நிலையும் அடிமைக்கு அடிமை என்ற நிலையிலிருந்தது. கல்விதான் நிலையை மாற்றியது என்பதை நாம் அறிவோம். விடுதலைப் போராட்டத்தைத் துவக்கி முன்னின்று நடத்தியவர் பெரும்பாலும் பிரிட்டிஷ் இந்தியாவின் குடிமக்களாகப் பிறந்து ஆங்கிலேயர் ஆட்சி உருவாக்கித் தந்த வாய்ப்பில் இங்கிலாந்து சென்றோ, அல்லது பிரிட்டிஷார் உருவாக்கிய மெக்காலே கல்வித் திட்டம் தந்த பயிற்சியால் உலக அறிவு பெற்று தங்கள் உண்மை நிலையை உணர்ந்தவர்களாக மாறியவர்கள்தாம்.   அவ்வாறுதான்,  பெண்களுக்கான கல்வி வாய்ப்பும் கிடைக்கப் பெற்றவுடன் அவர்களது  அறிவுக் கண்ணும் திறந்தது.  தங்கள்  மீது பல்லாண்டுகளாக நடத்தப்படும் அடக்குமுறையையும், தங்களின் திறமையின்  மூலம் அவர்கள் அடையக் கூடிய  பரந்த வெளியையும் பெண்கள் உணர்ந்து கொண்டார்கள். 

            ஆனால் கிடைத்த வாய்ப்பைக் கொண்டு கல்வி கற்பது என்பது பாதி கிணறு தாண்டும் ஒரு நிகழ்வு மட்டுமே. கற்ற கல்வியைப் பயனுக்குக் கொண்டுவந்து  தன்னையும், தனது குடும்பத்தையும், தனது சமூகத்தையும் உயர்த்தி அதனை முன்னேற்ற வழியாக  மாற்றிக் கொள்வது அடுத்த கட்டம். ஆண் பெண் என அனைவருக்குமே இது பொருந்தும். இன்று பெண்களைப் பொறுத்தவரையில் வாழ்வின் நிலையில் முன்னேற்றம் என்பதில் கல்வியின் மூலம் பாதிக்கிணற்றை எளிதாகத் தாண்டிவிடும் சூழ்நிலை வந்துவிட்டது .. அடுத்த பாதி .. அதாவது கற்ற கல்வியைப் பயனுக்குக் கொண்டு வந்து அடுத்தவரைச் சாராமல் சுதந்திரமாக வாழ்வது, தான் அடைய விரும்பும் குறிக்கோளை எட்டுவது,  அதில் அவர்கள் இன்று என்ன நிலையில் உள்ளார்கள் என்பது  பெண்கள் அனைவரும் தங்களையே  கேட்டுக் கொள்ள வேண்டிய ஒரு கேள்வி.  

            அக்கேள்வியில்தான்  அவர்களது  எதிர்காலம் அடங்கியுள்ளது, முன்னேறுவதற்கு முட்டுக்கட்டை போடும் இடையூறுகளைக் களைவதும், பெண்களின் திறமைக்கு மதிப்பளிக்காமல், அவர்கள் திறமையை  வெளிக்காட்ட விடாமல் இடையூறு செய்பவர்கள் எவரையும் ...... அது, மற்றொரு பெண்ணோ அல்லது ஆணோ, அல்லது  அரசு எடுக்கும் திட்டங்களோ அது எந்த வடிவில் வந்தாலும், அந்த இடையூறு செய்பவர்களை ஒருகை பார்ப்பதையும் பெண்கள் தங்கள் கவனத்தில் இருத்த வேண்டும்.  

            முதலில் கல்வி கற்பதில் பெண்களின்  கல்வி நிலை எவ்வாறு இருந்தது?  அதற்கான கட்டமைப்பு எவ்வாறு இருந்தது? அதற்கான சமூகச் சூழல் எவ்வாறு இருந்தது? அவற்றில் ஏற்பட்ட மாறுதல்களும், சீர்திருத்த நடவடிக்கைகளும்  கொண்டு வந்த மாற்றங்கள்  என்ன?  என்பதைச் சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போம்.  ஏன் என்றால் நாம் கடந்து வந்த பாதை குறித்து அறிவது  நமது வெற்றியைக் கொண்டாடவும்  எதிர்காலத்தைத் திட்டமிடவும் உதவும். 

            சங்ககாலத்தில்  சாதாரண மக்களும் கல்வி அறிவு பெற்றவராக இருந்தனர், கீழடி மட்பாண்ட தொல்லியல் தடயங்கள்  காட்டுவது போல சற்றொப்ப 2600  ஆண்டுகளுக்கு முன்னரே சாதாரண  தமிழ் மக்களும் வீட்டில் புழங்கும் பானை சட்டிகளிலும் தங்கள் பெயர்களைக் கீறி வைத்திருந்தனர்; சங்க காலத்தில் 40க்கும் சொச்சமான பெண்பாற் புலவர்கள் இருந்தனர்; குறமகள், விறலியர், குயவர் வீட்டுப் பெண், அரசி  என எந்த நிலையில் வாழ்ந்த ஒரு பெண்ணும் என, எல்லோரும்  பாடல்கள்  எழுதினார்கள்  என்பவற்றை விரைவில் கடந்து; சென்ற  நூறு ஆண்டுகளுக்கு  முன்னர் பெண்கள் இருந்த நிலைக்கு நாம் வந்துவிடுவோம்.  

பாரதியார் மறைந்த பிறகு ஒரு நூறாண்டுகளை நாம் அடுத்த ஆண்டு கடக்கப் போகிறோம். "பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் - மிகப் பீழை யிருக்குதடி"   என்று மனம்  நொந்துப்  பாடிய பாரதிதான் புதுமைப் பெண்கள் குறித்து கற்பனை செய்து, காலத்தைக் கடந்தும்  பாடினார். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்றுதான் சென்ற நூற்றாண்டில் சமுதாயம் இருந்தது.  ஆனால் பாரதியோ,  
                        "ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று
                        எண்ணியிருந்தவர் மாய்ந்துவிட்டார்
                        வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற
                        விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார் .. .. .. 

                        பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
                        பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
                        எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
                        இளைப்பில்லை காணென்று கும்மியடி"
            என்று  இவ்வாறு ‘கற்பனையில்’ மட்டுமே  பாடிடும் நிலை இருந்த காலமது. அவரது கற்பனையில் பெண்கள் கல்வி பெற்று முன்னேறிவிட்டதாகப் பாடிக் கும்மியடித்தார். 

            பெண்கள் ஏன் கல்வி கற்க வேண்டும்.... என்று கூறப்படும் காரணமேகூட பல வகையில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது எனலாம்.  பெண்கள் விரும்பிய துறையைத் தேர்வு செய்து, அது கல்விப் புலமோ,  கலைப்புலமோ, அரசியல் புலமோ, அறிவியல் புலமோ, சமூகத் தொண்டோ, தொழிலோ அல்லது வணிகமோ, அது எதுவாகவும் இருக்கட்டும்,  அத்துறையில் குறிப்பிடத்தக்கச் சாதனை செய்தவர்  இந்தப் பெண்மணி  என்ற ஒரு  நிலையை எட்டுவதற்கு அவர்கள் போடவேண்டியது ஒரு எதிர் நீச்சலாகவே இருக்கிறது. 

            அவ்வாறு  முன்னேறும் வழியிலும் உச்ச நிலையை எட்டி வெற்றிக் கொடி நாட்ட  ஏற்படும் இடையூறுகளும் பற்பல.  பொருளாதாரம் போன்ற ஒரு சில தடைகள் என்பது   இருபாலருக்கும் பொது என்றாலும் "கண்ணாடிக் கூரை" என்று உயரமுடியாத தடையில் சிக்கிக் கொள்வது பல பெண்களின் நிலை. "The system is at fault", "The double standard"  என்று சமூகத்தில் ஊறிப்போயுள்ள சமூகத் தடை  நிலைகள் அவை. ஒரு சில அரசுப்பணி போன்ற சூழல் தவிர்த்து,  பணியில் முன்னேற்றம், பதவி உயர்வு, தலைமைப் பொறுப்பு, நல்ல வேலை வாய்ப்புகள்  கிடைக்கப்பெறாமல்  எளிதில் பெண்கள் பின்னுக்குத் தள்ளப்படும் சூழல் இருந்து வருகிறது.  இவ்வாறு  ஆண்கள் எதிர் கொள்ளாத வகையில், பெண்களுக்கு,  அவர்கள் பெண்கள் என்ற பாலினத் தகுதியின் காரணமாக அவர்கள்  தனிப்பட்ட முறையில் அவர்கள் எதிர் கொள்ளும்  தடைகள் பல உண்டு. 

            கரடுமுரடான பாதையில் பயணித்துத்தான், பல எதிர்ப்புகளைச் சமாளித்துத்தான் பெண்கள்  தாங்கள் கனவு கண்ட குறிக்கோள் என்ற இடத்தைச் சேர வேண்டியிருக்கிறது.  காலத்தில்  முன்னும் பின்னும் என்ற ஒரு மீள்பார்வை செய்து பெண்களின் நிலை என்ன? பெண்கள்  கடந்து வந்த பயணத்தில் அவர்கள் முந்தைய தலைமுறை செப்பனிட்டுத் தந்த பாதையில் எளிதாகப் பயணித்து அடுத்த தலைமுறைக்கும் வழிகாட்டுகிறார்களா?  அல்லது விடுதலை பெற்ற ஒரு நாட்டில், பாடுபட்டு தங்கள் முன்னோர்  பெற்றுத் தந்த சுதந்தரத்தின் அருமை தெரியாமல் வரும் தலைமுறை பொறுப்பற்று இருப்பது போல இருக்கிறார்களா? அவர்களுக்கு வெற்றிகளுக்கு  இன்றும் இருக்கும் இடையூறுகள் என்ன ? என்று சற்றே ஆராயலாம். 

            முதலில் கடந்து வந்த தடைகள் குறித்து ஒரு மீள் பார்வை... 
            அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற ஒரு நிலை கடந்த நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தது. இதை ஒரு பழமொழியாகவே சொல்லி பெண்களை முடக்கிவிட்ட ஒரு அவலநிலை  அன்று.  பிறகு தொடர்ந்து வந்த மற்றொரு காலத்தில் தங்கள் உயர் தகுதி நிலையைப் பறைசாற்றிக் கொள்ள, அதாவது நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் பெண்கள் என்று கதைகளிலும் படங்களிலும் காட்டப்படுவது போல, மேல் வர்க்கம்  எனக் கருதப்படும்  பெற்றோர்  சிலர், பிறந்த வீட்டிற்கு ஒரு "ஸ்டேட்டஸ் சிம்பல்" அல்லது புகுந்த  வீட்டில் படித்த மருமகள் அல்லது கணவன் பெருமை பேச  ஒரு "டிரோஃபி வொய்ஃப்" தகுதி என்று பெண்கள் கல்விப்  புகட்டப் பட்டனர். பெருமைக்காகப் படிக்கும்/படிக்க வைக்கப்படும் பெரிய இடத்துப்  பெண்கள் என்ற இந்த நிலை தவிர்த்து பெண் கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட்டதில்லை.  படிக்க வைத்து வீட்டில் பதுமையாக இருத்தி அழகு பார்ப்பது, பெருமை பேசுவது என்ற அளவில் பெண்கல்வி நின்றுவிடும்.   பெண்களைப் படிக்க வைப்பது நல்ல தகுதியுள்ள மணமகனைத் திருமணம் செய்து வைக்க  என்பது போன்ற எண்ணங்கள் இன்றும் கூட மக்களிடம் இருப்பதைக் காண முடிகிறது. 

            இவை போன்ற ஒருசில விதிவிலக்கான சூழல்கள்  தவிர்த்து,  பெண்களின் கல்விக்கு வெளியுலகம் தடை போட வேண்டும் என்பதில்லை,  சிலசமயம் குடும்ப உறவுகளும் கூட நேர்முகமாகத் தடை செய்வதும்,  அல்லது மறைமுகமாகப் பெண்களின் கடமைகள் குறுக்கே நிற்பதும் உண்டு. 
            அவ்வாறு பெண்கள் எதிர் கொண்ட (எதிர்கொள்ளும்?) கல்வித்தடைகள்:   
            1. குடும்பச் சூழல்:
             முன்னர் குடும்பங்கள் பெரிய குடும்பமாக இருக்கும், குறைந்தது ஒவ்வொரு  வீட்டிலும் 5 அல்லது 6 பிள்ளைகள்  இருப்பர்.   ஆகவே, அம்மாவுக்கு எடுபிடி உதவி தேவை, சமைக்க, பாத்திரம் விளக்க, துணி தோய்க்க, அடுத்து வரிசையாகப் பிறக்கும் தம்பி தங்கைகளைப் பார்த்துக் கொள்வது என்ற ஒரு  குடும்பச் சூழல்.   மகப்பேறு காலத்திலும் முன்னர் பல பெண்கள் உயிரிழந்தனர். அம்மாவிற்கு உடல் நலமில்லை, அல்லது அம்மாவே இல்லை  என்பது போன்ற ஒரு  நிலையில்  யார் பிள்ளைகளைப் பாரமரிப்பது, வீட்டு வேலைகள் செய்வது? இது போன்ற  நிலையில்  குடும்பப் பொறுப்பை ஏற்கப்  பெண்கள் கல்வி நிறுத்தப்படுவதுண்டு. 

            2. பெண்களின் பருவ வயது மாறுதல்:
            பிறகு நடுநிலைப் பள்ளியுடன் பெண் கல்வியை நிறுத்துவதும் உண்டு.  கணவன் எழுதும் கடிதத்தைப் படிக்கும் அளவிற்குக் கல்வி அறிவு போதும் என்ற  ஒரு   மனநிலை.  அதுவும் பெண் பெரிய பெண்ணாகிவிட்டால்  உடனே கல்வியை நிறுத்திவிடுவார்கள்.  ஏன் வம்பு, படிக்க அனுப்பினால் அதனால்  என்னென்ன  தொல்லைகள்  வருமோ என்ற கவலை. மேலும், காதல் விவகாரத்தில் பெண்கள் விழுந்தால்  உடனே படிப்பை நிறுத்தி சொந்தத்தில் ஒரு திருமணம் செய்துவிடுவார்கள். காலாகாலத்தில் ஒரு கல்யாணம் செய்து பொறுப்பை முடித்துவிட வேண்டும். எத்தனைக்காலம்தான் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பது? என்பது போன்ற எண்ணங்கள் மக்கள் மத்தியிலிருந்தது. 

            3. கல்விக்கான கட்டமைப்புகள் இல்லாமை:
            பல ஊர்களில் நடுநிலைப் பள்ளிக்கு மேல் வகுப்புகள் இல்லாதிருந்தது. அவ்வாறு  இருந்தாலும் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளியோ அல்லது வகுப்போ  இருப்பதில்லை. சிலர் விரும்பிய வகையில்  பெண்களுக்கான  தனி உயர்நிலைப்பள்ளி இல்லை என எத்தனை எத்தனையோ பெண்கல்விக்கான தடைகள்.

            4. பிற்போக்கு எண்ணங்கள்:
            பெண் படித்து என்ன செய்யப் போகிறாள்,  அவள் சமைப்பது குடும்பத்தைப் பராமரிப்பது  போதும்  என்ற எண்ணம் உள்ளவர் வாழ்ந்த  காலம் சென்ற நூற்றாண்டு. பெண்களைப் படிக்க வைப்பது அவர்கள் சுற்றத்திலேயே இருக்காது, படித்த பெண் கெட்டுப் போகும்,  பெண்ணுக்குப் படித்த திமிர் வந்துவிடும், பெண் "வாயாடி"யாக மாறிவிடுவாள். எதிர்க்கேள்வி எழுப்பும்  மனப்பான்மை  வந்துவிடும்.   "ஒவ்வொருவரையும் வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்" என்ற பிற்போக்குக் கொள்கைகள்  மக்களிடம் பரவலாக இருந்தது. 

            5. பொருளாதாரச் சூழலில் இரண்டாம் நிலை:
            பள்ளியில் கட்டணக் கல்வி என்ற முறை இருந்தது. பணவசதி இல்லையென்ற சூழல் இருப்பின்,  மகனுக்குத்தான்  முதல் வாய்ப்பு.  ஆண் கல்விக்கு முன்னுரிமை.  மகன் படித்து குடும்பத்தைக் காப்பாற்றுவான்.   மகள் படிப்பு குடும்பத்திற்கு உதவப் போவதில்லை . அப்படியே செலவு செய்து படிக்க வைத்தாலும் மீண்டும் வரதட்சிணை, நகை நட்டுப் போட்டு கல்யாணச் செலவு வேறு. எனவே  பெண்ணை படிக்க வைத்தால் இரட்டைச்   செலவு என்பதும் பல குடும்பங்கள் எதிர்கொண்ட சூழ்நிலை. 

            6. குறுகிய கல்வி வாய்ப்புகள்:
            நோபிள் ப்ரோஃபெஷன் எனப்படும் கல்விப்புலமும், மருத்துவப் புலம் மட்டுமே பெண்களுக்கான தொழில் புலமாகவே ஒதுக்கப்பட்டதும்  ஒரு காலம்.  பெண்கள் படித்து  பள்ளி ஆசிரியர், மகப்பேறு மருத்துவர், கொஞ்சம் செவிலியர் என்றுதான் பணிகள் செய்ய முடிந்தது. தொழிற் கல்வியாக  இல்லாவிட்டால் வங்கியில்  கணக்கர், தட்டச்சுப் பயின்ற அலுவலர் போன்ற பணிகள் தவிர வேறு வாய்ப்புகள் இல்லை. பொறியாளர், வழக்கறிஞர் போன்ற தொழிற்  கல்விகளுக்குப்  பெண்களைப்  படிக்க வைக்கப்  பல குடும்பங்கள் முன் வந்ததில்லை. 

            7. சிறந்த முன்மாதிரி அமையாத சூழல்:
            அவ்வாறு தொழில் கல்விகளிலும், தலைமை இடங்களிலும் ஒரு பெண்ணாளுமையைப் பார்த்து பெண்களும் தங்கள் முன்மாதிரியாக அவர்களைக் கொள்ள வாய்ப்பும் இருந்ததில்லை. 

            சென்ற 20 ஆம் நூற்றாண்டுகளின் துவக்கத்தில் பெண்கள் எதிர் கொண்ட இச்சூழல் படிப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாக சமூக மாறுதல்களை எதிர் கொண்டு வந்தது. அதற்கு, அரசு எடுத்த நடவடிக்கைகள் , சமூகச் சூழலில் தோன்றிய மாறுதல்கள், குடும்பச் சூழலிலும் பெற்றோரின் மனப்பான்மையிலும் ஏற்பட்ட முன்னேற்றம் போன்றவை காரணங்களாக அமைந்தன.   அவற்றை அடுத்து சற்று விரிவாகப் பார்ப்போம்.  இதற்காக அமெரிக்க 'பியூ ஆய்வு மையம்' சென்ற நூற்றாண்டில் பிறந்தவர்களைத்   தலைமுறைகளாகப் பிரிக்கும் அடிப்படையைப் பின் பற்றிப் புரிந்து கொள்ளலாம். ஏனெனில், இந்தியாவிலும், தமிழகத்திலும் இதே காலகட்டத்தில்தான் குறிப்பிடத்தக்க  மாறுதல்களும்  நிகழ்ந்தன.  
            சென்ற நூற்றாண்டில்,
            பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் பிறந்தவர்கள் (1945க்கு முன் உள்ள காலகட்டத்தில்) பிறந்து வளர்ந்தவர்கள், 
            விடுதலை பெற்ற இந்தியாவில் (1946 முதல் 1964 காலகட்டத்தில்) பிறந்து வளர்ந்தவர்கள், 
            அதற்கு அடுத்த தலைமுறையினர் (1965 முதல் 1980 காலகட்டத்தில்) பிறந்து வளர்ந்தவர்கள், 
            அவர்களுக்கும் அடுத்த தலைமுறையான (1981 ஆண்டுக்குப் பின்னர்) பிறகு பிறந்து வளர்ந்தவர்கள் 
            எனப் பிரிக்கலாம்.  இவர்களை முறையே சைலண்ட், பேபி பூமர், ஜெனெரேஷன்-எக்ஸ், மில்லினியல் [Generation classification by Pew Research Center: Silent Generation (before 1945), Baby Boomers (1946-1964), Generation X (1965-1980), Millennials(after 1981), ref: https://www.pewsocialtrends.org/] என்று அழைக்கப்படுவார்கள். இந்தத்  தலைமுறைகளுக்கு இடையில் உள்ள இடைவெளி சுமார் 15-20 ஆண்டுகள் போல இருக்கும்.  ஒவ்வொரு தலைமுறையினரும்,  ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் கொண்ட   சூழல்களின்  தாக்கத்தின் எதிரொலியாக உருவெடுத்து வருபவர்கள்.  



            இவர்களில் இந்தியா விடுதலை பெற்ற பின்னர் பிறந்தவர்களும்  வளர்ந்தவர்களும், அவர்களது பிள்ளைகளாகப் பிறந்தவர்களும் வளர்ந்தவர்களும் தத்தம் செயல்பாடுகளால் நாட்டிலும் கல்வியிலும் தமக்கென ஒரு கவனத்தை வகுத்து செயல் பட்டவர்கள்.  அவர்கள் ஏற்படுத்திய மாறுதல்கள் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகக் கல்விச் சூழலிலும் நல்ல மாறுதல்களைக் கொண்டு வந்தது.  ஒரு அறுபது ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்தால், பெண்களுக்கு அன்று 1950களின் மத்தியிலிருந்த தடைகள் சமுதாய மனப்பான்மையின்  அடிப்படையிலும், உயர் கல்விக்கு ஆதரவான சரியான கட்டமைப்புகளும் இல்லாமல் இருந்திருப்பதும் தெரிய வரும். சில சமயங்களில், உயர் கல்வி மட்டுமல்ல,  இவை பள்ளிப் படிப்பையே தடை செய்த சூழல்களாகவும் அமைந்தன.

            விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் தலைமுறைத் தமிழருக்கு  நல்ல அடிப்படைக் கல்வி கற்க, காமராஜர் காலத்தில் தமிழகமெங்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன, தேவையானோருக்கு மதிய உணவு வழங்கப் பட்டது, பள்ளியில் கல்விக் கட்டணம் என்ற முறை நீக்கப்பட்டது.  அனைவரும் அடிப்படைப் பள்ளிக் கல்வி  பெறப் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட்டது.  இவ்வாறு பள்ளிக் கல்வி கற்றவர் கல்வியின் அருமை புரிந்து தங்கள் பிள்ளைகளின் தலைமுறைக்குக் கல்வியும்  உயர்கல்வியும்  கொடுப்பதில் மிக ஆர்வம் காட்டினார்கள்.  அடுத்த தலைமுறைக்கும் உயர் கல்வி கற்க, குறிப்பாகப் பெண்கள் உயர் கல்வி கற்க நல்ல மாறுதல்கள் ஏற்பட்டன.  

            1966 இல் இந்தியப் பிரதமராகப்  பொறுப்பேற்ற இந்திராகாந்தி பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்று வளரும் சிறுமிகளுக்கு முன்மாதிரியாக, நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தார். தமிழகத்தில் 1978 இல் கொண்டுவரப்பட்ட +2 என்ற மேல்நிலை வகுப்புத்  திட்டம் பெண்களுக்குக் கல்வியிலும், உயர் கல்வியிலும் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தியது.  அதுநாள் வரை பள்ளி இறுதிக்குப் பிறகு  கல்லூரிகள் அதிகம் இல்லாத காலத்தில் வேறு ஊரில் சென்று ஓராண்டு கல்லூரியின் புகுமுக வகுப்பில், ஆங்கிலப் பயிற்று மொழிக்கும் மாறிய ஒரு சூழலில்  விரைவில் கற்க இயலாது மொழிச் சிக்கல் போன்றவற்றை எதிர் கொண்டு தடுமாறிய நிலை முற்றிலும் இல்லாது  போனது. ஆண்களுக்கே அது ஒரு  நல்ல திருப்பத்தைக் கொண்டு வந்த நிலையில், பெண்களுக்கும் இது உதவியது. 

            மேல்நிலை வகுப்பில் பயில்வோருக்கு பொறியியல், மருத்துவம் எனத்  தொழிற் கல்வியில் எதையும் தேர்வு செய்யலாம் என்ற நிலை வந்தது. அதற்கு முன்னர் இவற்றில் ஏதோ ஒன்றைத்தான் தேர்வு செய்ய இயலும். அதிலும் பெண்கள் புகுமுக வகுப்பில் தோல்வி  அடைந்தால் அவர்கள் திருமணம் செய்து வைக்கப்பட்டு கல்வி முடிக்கப்பட்டது. மேல்நிலைப் பள்ளி பெண்கள் கல்வியில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. தான் படித்த பள்ளியிலேயே பள்ளியை முடித்து, கல்லூரி சென்று பயிற்று மொழி மாறியதால் முதலில் துவண்டாலும், மூன்றாண்டு  கல்லூரி  படிப்பிலும், பருவமுறை பாடத்திட்ட வாய்ப்பிலும் பெண்கள் வெற்றிகரமாக உயர்கல்வியை முடித்தார்கள். அதற்குக் கல்வி பெற்ற தலைமுறையான பெற்றோர்களும், 1966 இல் இந்தியாவின்  நான்காவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் தீவிர பிரச்சாரம்  செய்யப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு முறையால் குறைந்த உறுப்பினர்கள் கொண்ட சிறு குடும்பமும் காரணம் என்பதை மறுக்க இயலாது.   

            இவ்வாறு கல்வித்தடை நீங்கி அதனால் அடிப்படைக் கல்வியும் உயர் கல்வியும் பெற்ற பெண்களுக்கு கற்ற கல்வியைப்  பயனுக்குக் கொண்டுவருவது அடுத்த கட்டம். ஆனால் இதில் தடைகளும் தடங்கல்களும் அவர்களைத் தனித்தன்மையுடன் சிறந்து விளங்க விடாத நிலை இன்றும் தொடர்கிறது.  கல்வியில் தேர்ந்து விளங்கிய பெண்கள் எல்லோரும் டெஸ்ஸி தாமஸ் போன்றோ நிலையையோ,  இஸ்ரோ செய்வாய் கிரக திட்டத்தில் பங்கேற்கும் பெண்கள் போன்ற ஒரு உயர்நிலையை எட்ட பல தடங்கல்கள் இருக்கின்றன. 

            ஆண்கள் பெண்கள் என்று பிரிவினருக்காக தனித்தனியாக அமைக்கப்படும் நிறுவனங்கள் செயலரங்கங்கள் தவிர்த்த பொதுவாக இருபாலரும்  பங்கேற்கும் சூழ்நிலையில்,  பெண்களுக்குச் சம வாய்ப்பும் அவர்களது திறமையை மதிக்கும் வகையில் அதற்கேற்ற பங்களிப்பு வழங்குவதை முதன்மையான கொள்கையாக அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டும்.  பணியிடங்களில் பெண்களுக்கான உரிய விகிதாச்சாரம் கொடுப்பதும், அத்துடன் அவை முக்கியமான பணிகளுக்காகவும் என்ற  நிலை இருக்க வேண்டும். கருத்தரங்கங்களில், ஆய்வரங்கங்களில்  பெண்களின் கல்விக்கும்  திறமைக்கும்  முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவர்களுக்குப் பங்களிப்பு வழங்கப்படல் வேண்டும். ஒவ்வொரு நிகழ்வு ஏற்பாடு செய்கையிலும், பணியிடத்திலும் ஆண்டுக்கொரு முறை தங்கள் செயல்பாடுகளை மீள்பார்வை செய்து குறை இருப்பின் அதனைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கத் தீர்மானங்கள் செய்யப்பட வேண்டும். சட்டம் போட்டு அறிவுறுத்த வேண்டிய நிலைக்காகக் காத்திருக்காமல் ஒவ்வொருவரும்  தன்முனைப்புடன் மாறுதல்களை முன்னெடுப்பது இந்த நூற்றாண்டின் தேவை. பெண் கல்விக்கு ஏற்படும் தடைகளை, அந்தத் தடைகளை உருவாக்குவோர் ஆணோ பெண்ணோ அரசோ, அல்லது  யாவரும்  இணைந்து ஒட்டு மொத்த சமுதாயமோ, எவராக இருப்பினும் அவற்றை  நீக்குவது அனைவரின் பொறுப்பு. 

                        ஞான நல்லறம்வீர சுதந்திரம்
                        பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்.. .
                        நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
                        நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
                        திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
                        செம்மை மாதர் திறம்புவது இல்லையாம்... 
            என்று செம்மை மாதரின் இலக்கணத்தை வகுத்தளித்தார் பாரதியார். 

                        அதனால்தான், "பெண்களிடம் கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்" என்றார்  தந்தை பெரியார். 


குறிப்பு:  ஜூலை 10, 2020 அன்று  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு  அமைப்பின், "கடிகை" - தமிழ் மரபு முதன்மை நிலை இணையக் கல்விக்கழகம் வழங்கும் "வையத்தலைமை கொள்"  என்ற பொருண்மையில் நிகழ்த்தப்படும் உலக மகளிர் கருத்தரங்கில்,  "செம்மை மாதர்" என்ற  மூன்றாம் நாள் கருத்தரங்கின் பிரிவின் கீழ்  ""கல்வியில் பெண்கள் அன்றும் இன்றும்""  என்று பெண்கல்வி குறித்து,  சென்ற நூற்றாண்டின் துவக்கம் முதல்  பெண்களின் கல்வியின் நிலை தலைமுறைகளாக்  கண்ட மாற்றங்கள்  குறித்து வழங்கப்பட்ட கட்டுரை.

தொடர்பு:
முனைவர் தேமொழி 
(jsthemozhi@gmail.com)


No comments:

Post a Comment