ச.பாலமுருகன்
தமிழகத்தின் முக்கிய ஆறாகவும் பழங்கால மக்கள் வாழ்ந்த தடயங்களைக்கொண்டதாகவும் விளங்குவது பாலாறு ஆகும். பிரம்மதேசம் பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். இப்பாலாற்றின் கரையில் அமைந்துள்ள மற்றொரு ஊரான பில்லாந்தாங்கல் என்ற ஊரில் பழங்கற்காலத்தைச் சேர்ந்த நுண்கருவிகள், கோடரிகள், கத்திகள் போன்ற பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றை நோக்கும் போது இவ்வூரும் பழங்காலந்தொட்டே மக்கள் வசிக்கும் ஊராக இருந்திருக்கலாம். மேலும் இவ்வூர்க் கல்வெட்டுகளில் இவ்வூர் முக்கிய வழித்தடத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுவதால் இது மக்கள் போக்குவரத்து, வணிகம், விவசாயம் ஆகியவற்றில் சிறந்த ஊராக பண்டைய காலத்திலிருந்திருக்க வேண்டும்.
வரலாற்றுக்கால தொடக்கக் காலமான சங்ககாலம், சங்கம் மருவிய காலச் சான்றுகள் நேரடியாகக் கிடைக்கப்பெறவில்லை எனினும், இவ்வூர் 9 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து முக்கிய வழிபாட்டு இடமாக இருந்துள்ளது. இங்குள்ள இரண்டு பண்டைய கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் இவ்வூரின் வரலாற்றை மிக அழகாக விளக்குகின்றன.
பிரம்மதேசத்தின் கல்வெட்டுகள்:
இவ்வூரில் மொத்தம் 90 கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் கல்யாணவரதர் கோயிலில் ஒன்றும், செல்லியம்மன் கோயிலில் ஒன்றும், சந்திரமௌலீஸ்வரர் கோயிலின் வெளிப்புறத்தில் ஒன்றும், உருத்திர கோட்டீஸ்வரர் கோயிலில் நான்கும் மற்றவை சந்திரமௌலீஸ்வரர் கோயிலிலும் உள்ளன. இக்கல்வெட்டுகளில் காலத்தால் முந்தியது பல்லவர் காலத்துக் கல்வெட்டு ஆகும். கம்பவர்மன் காலத்தில் (பொ.ஆ.866) கல்வெட்டே இவ்வூரில் கிடைக்கப்பெறும் பழைய கல்வெட்டு ஆகும்.
அரசர்கள்:
பிரம்மதேசம் கோயில் கல்வெட்டுகளில் பல்லவ அரசர் கம்பவர்மன், சோழ அரசர்களில் ஆதித்தியன், பராந்தக சோழன், சுந்தரசோழன், பார்த்திவேந்திரவர்மன், முதலாம் ராஜராஜன், முதலாம் இராஜேந்திரன், முதலாம் இராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராஜேந்திரன், வீரகம்பண்ணன் ஆகியோரது கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் வீர கம்பண உடையாரின் கல்வெட்டே காலத்தால் பிந்தியதாகும்.
ஆட்சிப்பகுதி:
தொண்டை மண்டலத்தின் அமைந்துள்ள பிரம்மதேசம் கல்வெட்டுகளில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து தாமர் கோட்டத்து தாமர் நாட்டு கரைக்கோட்ட பிரம்மதேயம் என்று குறிப்பிடுகிறது. இதில் ஜெயங்கொண்ட சோழமண்டலம் என்பது சோழர் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிப்பிரிவாகும். தாமர் கோட்டம் என்பது தொண்டை மண்டலத்தின் 24 கோட்டங்களுள் ஒன்றாகும். (தாமர் என்பது தற்போது தாமல் என்ற பெயராலே வழங்கப்படுகிறது) தாமர் நாடு என்பது தாமர் கோட்டத்தில் உள்ள பல நாடுகளில் இதுவும் ஒன்றாகும். ஜெயங்கொண்ட சோழமண்டலம் என்ற ஆட்சிப்பிரிவு 11 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளிலிருந்து குறிக்கப்படுகிறது. அதற்கு முந்தைய கல்வெட்டுகளில் தாமர்கோட்டம் மட்டுமே குறிக்கப்படுகிறது. மேலும் இவ்வகைப்பாட்டில் பற்று என்ற வருவாய்ப்பிரிவு இவ்வூர் கல்வெட்டுகளில் அதிகம் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோட்டங்கள்
பிரம்மதேசம் தாமர் கோட்டத்தில் உள்ள ஒரு பிரிவாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இவ்வூர் கோயிலுக்கு அளித்த கொடைகளைப் பற்றிக் கூறும் கல்வெட்டுகளில் பல்வேறு கோட்டங்களிலிருந்து கொடைகள் வரப்பெற்றுள்ளன. குறிப்பாக படுவூர் கோட்டம், புலியூர் கோட்டம், சோழநாட்டுக் கிழார் கூற்றம், ஊற்றுக்காடு கோட்டம், வெண்குன்றக்கோட்டம், புறழ்கோட்டம், செங்காட்டுக் கோட்டம், காலியூர் கோட்டம் போன்றனவாகும். இதுபோல நாட்டுப்பிரிவுகளில் இன்னம்பர் நாடு, சக்ரப்பாடி, நீர்வேளுர்நாடு, மழநாடு, இங்கநாடு, உம்பர்நாடு, புலியூர்நாடு, பெரும்பாணப்பாடி நாடு, படுவூர்நாடு போன்றவையும் ஊர் என்ற பிரிவில் சங்கரப்பாடி, மாங்காடு, விதியூர், நெல்வேலி, வள்ளிவயம், இலங்காடு, தும்பூர், திரைராஜ்யகடிகா, தில்லைச்சேரி, அறியூர், மும்முடிச்சோழபுரம், பறியலூர், குண்டூர், ஆற்றூர், மயிலாப்பூர், காந்தப்புர பேட்டை போன்றன. இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டிருக்கும் கோட்டங்கள் காவிரி வடகரையிலிருந்து தொண்டைமண்டலத்தின் வடஎல்லை வரை நீண்ட பகுதிக்குள் அமைந்துள்ளன. இக்கோயில் மிக்க புகழ்பெற்றிருந்தது என்பதாலேயே இவ்வளவு பெரும் பரப்பிலிருந்து பல்வேறு சமூகப் பிரிவிலிருந்து கொடைகள் பெற்றுத் திகழ்ந்தது.
ஊர்ச்சபைகள்:
சோழர் கால ஆட்சியின் முக்கியச்சிறப்பாகக் கருதப்படுவது ஊர்ச்சபைகள் அல்லது குழுக்களின் உருவாக்கமும் அதன் செயல்பாடும் ஆகும். சங்க காலத்தில் இனக்குழுவாக இருந்த மனித சமூகம் வேளாண்மை, நெசவு, சிற்பக்கலை, ஓவியக்கலை உள்ளிட்ட துறைகள் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. சோழர்காலத்தில் உச்சநிலையை அடைந்த இக்கலைகளுடன் ஊர் உருவாக்கம், கோயில்கள், தெருக்கள், ஏரிகள், மடங்கள், அன்னசத்திரங்கள், பாசனவசதி, நில அளவீடுகள் போன்ற மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் உருவாகி நிலைபெற்றன. ஊரில் உருவான சமுதாய சொத்துக்களைப் பராமரிக்கவும், கோயிலில் தொடர்ந்து பூசைகள், வழிபாடுகள் நடைபெறவும், ஊர் அளவிலான குழுக்களும் சபைகளும் தோன்றி துறைவாரியான பணிகளை மேற்கொண்ட தகவல்கள் கல்வெட்டுகளில் காணலாம்.
பிரம்மதேசம் என்ற ஊர் தற்போது சிறிய ஊராட்சியாக உள்ளது. ஆனால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அப்பகுதியின் நிர்வாகம் செய்யக்கூடிய அலகாக அமைந்திருந்தது. இவ்வூரில் பல்வேறு குழுக்களும் வாரியங்களும் செயல்பட்ட விவரங்கள் கல்வெட்டில் காணக்கிடைக்கின்றன. பொதுவாக ஊரில் உள்ள சபை ஊரின் செல்வந்தர்களால் அல்லது பிராமணர்களால் அமையப்பெற்றிருக்கும். இச்சபையின் கீழ் பல வாரியங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தன.
பிரம்மதேசம் கல்வெட்டில் பெருங்குறி மகாசபை என்ற அமைப்பு முக்கியத்துவம் பெற்ற ஒரு சபையாகக் குறிக்கப்பட்டுள்ளது. இச்சபை ஊரில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து அவ்வப்போது ஆணைகள் பிறப்பித்துச் செயல்பட்டுள்ளது. இச்சபை புளியமரத்தின் கீழ் கூடிய முடிவெடுத்தது பற்றியும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சபையின் கீழ் அல்லது இது போன்ற பிற சபைகளான கம்மாளர்சபை, ஆளுங்காணத்து குழு, கணவாரியப் பெருமக்கள், ஏரிவாரியப் பெருமக்கள், கிராமந்தர் என்ற நீர்பாசனப்பிரிவு, இவற்றுடன் அஞ்சஷட்டசதத்து சபை என்கிற நாலாயிரவர் சபை போன்றவை கல்வெட்டுகளில் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு கோட்டங்களிலிருந்து வரும் கொடைகளைப் பெற்று அதை வாரியங்கள் வாரியாக செயல்படுத்தும் பணியை இச்சபைகள் செய்கின்றன. இச்சபைகள் ஊரின் முக்கிய முடிவுகள் எடுக்கும் அமைப்பாகவும் நிர்வாக அலகாகவும் செயல்பட்டது பற்றி அறியலாம். கச்சி ஏகம்பத்து திருவுண்ணாழிகை சபை பற்றிய குறிப்பும் உள்ளது. இக்குழுக்களின் உறுப்பினர் தேர்வுகள் தொடர்பான தகவல்கள் இவ்வூர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படவில்லை.
ஏரிகள்:
மக்கள் வாழ்க்கையில் உயிர்நாடியாகத் திகழ்வது நீர். இந்நீரைச் சேமிக்கவும் பயன்படுத்தவும் ஆதி காலத்திலிருந்தே மக்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டுள்ளனர். ஆதிகால மக்கள் நீர் இருக்கும் இடமான ஆற்றங்கரையிலே தங்களது குடும்பங்களை அமைத்து வாழ்ந்து வந்தனர். பின்னர் வேளாண்மை பெருகிய போது ஆற்றிலிருந்து நீரைத் தொலை தூரத்திற்குக் கொண்டு செல்ல வாய்க்கால்களையும் அந்நீரைச் சேமிக்க ஏரிகளையும் வெட்டினர். தொண்டை மண்டலப்பகுதியில் பாலாறு, தென்பெண்ணையாறு, செய்யாறு ஆகிய ஆறுகள் இருந்தாலும் அவற்றில் ஆண்டு முழுக்க நீர் இருக்காது என்பதாலும் மழை குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே பெய்யும் என்பதாலும் நீரைச் சேமிக்க ஏரி, குளம் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளைத் தமிழர்கள் அமைத்தனர். அதில் முக்கியமான பாசன ஆதாரமாக விளங்குவது ஏரி. சோழர்காலத்தில் தமிழகத்தில் பல்வேறு ஏரிகள் உருவாக்கம் பெற்றது பற்றிப் பல கல்வெட்டுகளில் காணலாம்.
பிரம்மதேசம் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள ஊர் என்பதால் அவ்வாற்றிலிருந்து நீர் கொண்டு வந்த சேர்க்க போதிய நீர் ஆதாரங்களை அமைக்கத் தேவையேற்பட்டதன் விளைவாக அவ்வூரில் பல ஏரிகள் வெட்டுவித்துப் பயன்படுத்தப்பட்ட தகவல்கள் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இவ்வூரில் திகைத்திறல் ஏரி, பனையுடைநல்லூர் ஏரி, குந்தவை பேரேரி, வீரமாதேவி பேரேரி, இராசேந்திரசோழப் பேரேரி, சுந்தரசோழப் பேரேரி, தூரேரி, கடப்பேரி, சம்புவராயர் பேரேரி, மதுராந்தகப் பேரேரி என்ற ஏரிகள் பற்றிய குறிப்புகளும் பரமேசுவர வாய்க்கால், ராமவாய்க்கால், சோழபாண்டிய வாய்க்கால் போன்ற வாய்க்கால்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. சோழபாண்டிய பேராறு, திருவெக்கா ஆறு, வேகவதி ஆறு போன்ற ஆறுகளின் பெயர்களின் இக்கல்வெட்டுகளில் காணலாம்.
விழாக்கள்:
கோயில் உள்ள ஊர்களில் திருவிழாவிற்குப் பஞ்சம் இருக்காது. பிரம்மதேசத்தில் பல்வேறு கோயில்களுள்ளன. இக்கோயில்களில் பெருவீற்றை நாள்விழா, திருவோணம், ஐப்பசித்திருநாள் போன்ற விழாக்கள் நடைபெற்றது பற்றி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வூர் கோயிலில் வழிபாட்டிற்குப் பயன்படுத்திய படையல் பற்றியக் குறிப்புகளும் காணப்படுகின்றன. அவை, இலைக்கறி, நெய், தயிர், பாக்கு, வெற்றிலை, மோர், மிளகுக்கறி, புளிக்கறி, சர்க்கரை ஆகியனவாம்.
ஊரமைப்பு:
ஊரில் கோயில்களும் சாலைகளும், தெருக்களும் பொது இடங்களும் இருந்ததைப்பற்றி கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. பிரம்மதேசத்தில் ஆறாங்கட்டளைத்திருவீதி, பெருந்தெரு என்று தெருக்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறாங்ககட்டளைத்திருவீதி என்று குறிக்கப்பட்டிருப்பதால் இவ்வூரில் இதேபோன்று ஆறு தெருக்கள் இருந்தன என்பதை அறியலாம். மேலும் இவ்வூரில் தெண்ணாயிரவர் மடம், பவித்ரமாணிக்க மடம், ஜனநாதன் மண்டபம் ஆகியன அமைந்திருந்ததைப்பற்றியும் கல்வெட்டுகளின் மூலம் அறியலாம்.
அளவைகள்:
தமிழர்களின் எண்ணியல் அறிவு பற்றிய அறிய சோழர்காலத்துக் கல்வெட்டுகள் மிக்க பயனுடையதாக உள்ளன. தமிழ் எண்ணியலில் மேலிலக்க எண்கள், கீழிலக்க எண்கள் என இரு பெரும் பிரிவாகப் பிரித்து கீழிலக்க எண்களில் மீச்சிறு அளவைகளாப் பிரித்துப் பயன்படுத்திய விதம் வியப்புக்குரியதாகும். ஒரலகை 320 (முந்திரி) ஆகப் பிரித்து வகைப்படுத்தும் அறிவு கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன. பிரம்மதேசம் கல்வெட்டுகளில் நிலங்களைக் குழி, மா, வேலி என்ற அளவாலும், பொன்னைக் கழஞ்சு என்ற அளவிலும் முகத்தில், அளவையை மரக்கால் என்ற அளவாலும், நெல்லைக் காடி என்ற அளவாலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்மக்கட்டளை என்ற நிறுத்தல் அளவை, தூனி, உழக்கு, ஆழாக்கு, செவிடறை, மஞ்சாடி, செவிடு, குண்டில், தடி, கோல் என்ற அளவைகளும் இவ்வூர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை அறியலாம். இப்பகுதியில் பயன்படுத்திய மரக்கால் சீரிபோழ்ந்தம் மரக்கால், அருண்மொழி தேவன் மரக்கால் என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது. நிலங்களை 16 சாண்கோல் என்ற அளவுகோலால் அளக்கப்பட்டது என்பதும் கல்வெட்டுகளில் மூலம் தெரியவருகிறது.
எண்ணுப்பெயர்ச்சொல்:
இவ்வூரில் உள்ள ஒரு சபையின் பெயர் அஞ்சஷ்டசதத்து சபை என்ற (5 X 8 X 100) என்ற நாலாயிரவர் சபை என்ற பெயரும் ஏழாயிரவன், சதுரமூவாயிரவன், மூவாயிரத்து நூற்றுவன், மூவாயிரத்து முன்னூற்றுவன் போன்ற போன்ற எண்ணிக்கையில் பெயர் கொண்டவர்கள் உள்ளனர். இவர்கள் வணிகக்குழுக்களாக அல்லது பட்டமாக இருக்கலாம்.
பெருவழிகள்:
இக்காலத்தைப் போன்று அக்காலத்திலும் சாலைப்போக்குவரத்து நன்முறையில் செயல்பட்டுள்ளது. தற்போது பிரம்மதேசம் அமைந்துள்ள இப்பகுதி ஒரு பெருவழியாக இருந்துள்ளது. தென்தமிழகப்பகுதியில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் பிரம்மதேசம் அமைந்துள்ளது. இதைப்பற்றி இவ்வூர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பதிக்கு (திருமலை) கூட்டமாகச் செல்லும் 100 பக்தர்களுக்காக இவ்வூரில் ஜெனநாத மண்டபத்தில் உணவளிக்கவும், தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்ட செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வூரின் எல்லையாக ராஜமல்லப்பெருவழி என்ற வழியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது காஞ்சிபுரம் செல்லும் சாலையாக இருக்கலாம்.
வரிகள்:
இக்கோயில் கல்வெட்டுகளில் ஒரு கல்வெட்டைத்தவிர மற்றவை சோழர்காலக் கல்வெட்டுகளும் ஒரு பல்லவர் கல்வெட்டும் ஆகும். இக்கல்வெட்டுகளில் தானம் பற்றிய தகவல்கள் தான் அதிகமாக உள்ளன. வரி செலுத்த வேண்டியது பற்றிய விவரங்கள் இல்லை. மேலும் இக்கோயிலில் காணப்படும் விஜயநகரப் பேரரசு கால கல்வெட்டான கம்பண்ண உடையார் கல்வெட்டு (பொ.ஆ. 1363) ஆய்குடி மக்கள் மீது ஆயம், உள்ளாயம், உள்ளிட்ட பல வரிகள் விதிக்கப்பட்டது தெரியவருகிறது. பொதுவாகத் தொண்டை மண்டலத்தில் காணப்படும் கல்வெட்டுகளில் சோழர்கள் காலத்தில் வரிகள் குறைவாகவும் பிற்காலத்தில் வந்த விஜயநகர மற்றும் நாயக்கர் காலத்தில் மிக அதிகமாக வரிகள் விதிக்கப்பட்டதையும் இங்கு நோக்கத்தக்கது.
சமூக அமைப்பு:
பிரம்மதேசம் என்ற ஊர் அந்தணர்களுக்குத் தானமாக அளிக்கப்பட்ட ஊர் என்பதால் இவ்வூரில் அந்தணப் பெருமக்கள் அதிகம் என்பதும் இவ்வூர் சமூக பிரிவுகளில் முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுக்களிலும் வாரியத்திலும் உறுப்பினர்களாக இருந்தார்கள் என அறியலாம். இவ்வூரில் வைணவர்கள், வணிகர்கள், வேளாண்மை செய்யும் குடிகள், கோயில் தானங்களையும் கொடைகளையும் கண்காணிக்கும் கண்காணி போன்றவர்களைப்பற்றியும் இவ்வூர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்புக்கல்வெட்டுகள்:
பிரம்மதேசம் கல்வெட்டில் அரசாட்சி, கிராமசபை, கோயில் நிர்வாகம், நிலக்கொடைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தெரியவருகின்றன. இதில் சில கல்வெட்டுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தனவாகவும் உள்ளன. அவை;
1. வீபரீத தண்டம்
பிரம்மதேசம் ஊரில் அமைந்துள்ள அஞ்சஷ்டசத்தது சபை ஏரி வாரியத்தின் கணக்கை எழுதும் கணக்கனுக்கு மதிப்பூதியம் வழங்க நிர்ணயித்துள்ளனர். மதிப்பூதியமாக தினமும் 3 நாழி நெல்லும் வருடத்திற்கு 7 கழஞ்சு பொன்னும் ஒரு சோடி ஆடையும் வழங்கிடத் தீர்மானித்துள்ளனர். அவர் கணக்குகளைச் சமர்ப்பிக்கும் போது தன்னுடைய நேர்மையை நிரூபிப்பதற்குப் பழுக்கக் காய்ச்சிய இரும்பு கம்பியினை கையில் பிடிக்கவேண்டும் என்றும் கையில் தீக்காயம் ஏற்படவில்லை என்றால் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் இல்லையென்றால் 10 கழஞ்சு பொன் தண்டமாக விதிக்கப்படும் என்றும் உடல் ரீதியான தண்டம் ஏதும் விதிக்கப்படாது என்ற விநோத வழக்கம் இருந்ததைக்காணலாம்.
2. ராஜேந்திர சோழன் பள்ளிப்படையா?
பிரம்மதேசம் சிவன் கோயில் ஒரு பள்ளிப்படைக் கோயில் என்றே செய்திகள் பரப்பப்பட்டு அதையும் சில ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டதனால் இராஜேந்திரசோழன் தனது இறுதிக்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்தார் என்றும் அவர் இறந்தது இங்குதான் என்றும் அவரது சமாதியே பள்ளிப்படைக் கோயிலாக எழுப்பப்பட்டுள்ளது என்ற கருத்துக்கள் பரவியுள்ளன. ஆனால், கல்வெட்டை நன்கு ஆய்ந்த ஆய்வாளர்கள் இக்கோயில் பள்ளிப்படை கோயில் அல்ல என்றும் இது வழக்கமாக அமைக்கப்பட்ட சிவன் கோயில் என்றும் தெரிவிக்கின்றனர். இதற்கு அவர்கள் ஆதாரமாகக் கொள்வது இக்கோயிலில் உள்ள கம்பவர்மன் கல்வெட்டு ஆகும். இராஜேந்திரசோழனுக்கு முன்பாகவே சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பப்பட்ட கோயில் எப்படி பள்ளிப்படைக் கோயிலாக இருக்கும் என்பது அவர்களது வாதம். மேலும், இக்கோயிலின் கல்வெட்டில் இராஜேந்திரசோழன் இறந்த பின்னர் உடன்கட்டை ஏறிய மன்னரின் தேவி வீரமாதேவியார் இறப்பிற்காகத் தாகம் தீர்க்க வேண்டி தண்ணீர்ப் பந்தல் அமைக்க இவரது உடன் பிறந்த சகோதரர் மதுராந்தகன் என்னும் பரகேசரி வேளான் என்பவனுக்கு நிலம் விற்றுக் கொடுத்துள்ளார். இதில் வீரமகாதேவியார் உடன்கட்டை ஏறிய தகவல் இருப்பதால்தான் இங்கு இராஜேந்திரசோழன் இறந்தான் என்று நம்புகின்றனர்.
கோயில் அமைப்பு பிரம்மதேசம் சந்திரமௌலீஸ்வரர் கோயில் சுமார் 2 ஏக்கர் பரப்பில் ஊரின் கிழக்குப்பகுதியில் பனைமரங்கள் சூழ இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது. இக்கோயில் முழுவதுமாக இந்தியத் தொல்லியல் துறையினரால் சீரமைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டுவருகிறது. இக்கோயில் வடபுறத்தில் சிறிய விமானமும் அதைத்தொடர்ந்து கோயிலும் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய இக்கோயில் 3 தள விமானத்துடன் அமைந்துள்ளது. விமானத்தின் நான்குபுறங்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம், முகமண்டபத்துடன் அமைந்துள்ளது. நந்தி அர்த்தமண்டபத்தில் அமைந்துள்ளது. கருவறையில் லிங்கமும் அதன் தென்மேற்கு மூலையில் மற்றொரு லிங்கமும் அமைந்துள்ளது. கோயிலைச்சுற்றி சுற்றுச்சுவர் அமைந்துள்ளது. கோயில் விமானம் மணற்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் மூன்று பக்கமும் நிறையக் கல்வெட்டுகள் அமைந்துள்ளன. எளிய தோற்றத்துடன் மிக்க அழகுடன் அமைந்த கோயில் இதுவாகும். இக்கோயிலில் வழிபாடு ஏதும் இல்லை.
பாலாற்றின் கரையில் அமைந்துள்ள ருத்திர கோட்டீஸ்வரர் ஆலயம் பாழடைந்து உள்ளது. ஆனால் வழிபாடு நடைபெற்று வருகிறது. இக்கோயிலிலும் முக்கிய கல்வெட்டுகள் உள்ளன.
நடுகற்கள்/ நினைவுச்சின்னங்கள்:
இவ்வூரில் மையத்தில் நாயக்கர் கால நவகண்ட நடுகல் ஒன்றும் மூத்த தேவி சிலை ஒன்றும் காணப்படுகிறது. இது இந்த ஊரின் சிறப்பான வரலாற்றுக்குத் தக்க சான்றாகும்.
முடிவுரை:
இந்தியத் தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்படும் பிரம்மதேசம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் முன்பு சிறப்புப் பெற்ற ஊராகவும் பல்வேறு சமய, கலாச்சார, சமூக, நிலவியல், நீர் மேலாண்மை தொடர்பான பல்வேறு தகவல்களுடன் எளிமையான அழகான தோற்றத்தில் அமைந்துள்ள ஊராகும். ஊரிலிருந்து தனித்து ரம்மியமாக நிற்கும் இக்கோயில் சோழர் கால கட்டக்கலைக்கும் தொண்டைநாட்டின் வரலாற்றிற்கும் சிறந்த சான்றாக அமைந்துள்ளது.
குறிப்புதவி:
1. தமிழ்நாட்டுக்கல்வெட்டுகள்- திருவண்ணாமலை மாவட்டம் தொகுதி – 1
2. விக்கிப்பீடியா
நன்றி:
புகைப்பட உதவி – திரு. சேது, திரு. சுகுமார், துணை வட்டாட்சியர்.
And unknown facebook user.
குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் வெளியீடான "வரலாற்றில் பிரம்மதேசம்" (ஊர் வரலாறு மின்னூல் வரிசை # 1)" என்ற நூலில் வெளியிடப்பட்டுள்ள செய்தி.
கட்டுரை ஆசிரியர்:
திரு. ச. பாலமுருகன்,
செயலர், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்
தொலைபேசி: 9047578421
தொடர்பு: tvmchr@gmail.com

No comments:
Post a Comment