—— துரை.சுந்தரம்
முன்னுரை:
ஜூன், 2019 10-ஆம் நாள். நம்பியூரிலிருந்து ஹரி கிருஷ்ணன் என்னும் இளைஞர் தொலைபேசியில் அழைத்துப்பேசினார். தாம் நம்பியூருக்கருகில் இருக்கும் கிடாரை என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்றும், தொல்லியலில் ஆர்வம் உண்டு என்றும், தம் ஊர்ப்பகுதியில் சில கல் தொட்டிகளைக் கண்டறிந்து வைத்துள்ளதாகவும், அவற்றில் இரண்டு தொட்டிகளில் எழுத்துப் பொறிப்புகள் இருப்பதாகவும் கூறி இக்கட்டுரை ஆசிரியரை நேரில் வந்து பார்க்கும்படிக் கேட்டுக்கொண்டார். கிடாரை என்னும் ஊர்ப்பெயரே சற்று வியப்பை அளித்து ஆர்வத்தை ஏற்படுத்தியது. கேள்விப்பட்டிராத ஒரு பெயர். கொங்குப்பகுதியில் மழைக் காலம் என்பதால் ஜூன் மாதத்தில் நம்பியூர் செல்ல இயலாது போனது. ஜூலை மாதம் 24-ஆம் நாள் கட்டுரை ஆசிரியர் நம்பியூர் சென்று கல் தொட்டிகளைப் பார்வையிட்டதில் புதிய செய்தி ஒன்றைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அது பற்றிய பகிர்வு இங்கே.
கல் தொட்டிகள்:
வரலாற்றில் கொங்குப்பகுதி, கால்நடை வளர்ப்பு மற்றும் மேய்ச்சல் தொழிலுக்குப் பெயர் பெற்றது. “ஆ கெழு கொங்கு” என்னும் இலக்கிய வரி பலரும் அறிந்த ஒன்று. எனவே, ஆங்காங்கே, சிற்றூர்கள் பலவற்றில் கால்நடைகள் நீர் அருந்த வகை செய்யும் கல் தொட்டிகள் இருப்பதைக் காணலாம். இதில் வியப்பொன்றுமில்லை. அவற்றில் ஒரு சில கல் தொட்டிகளில் எழுத்துப் பொறிப்புகளும் இருந்துள்ளன. அக் கல்தொட்டிகளை அமைத்துக் கொடுத்தவர் பெயர் பொறிக்கப்பட்டவையாக அவை பெரும்பாலும் அறியப்படுகின்றன.
சாலைவழி நடைப்பயணம்:
மேலே குறிப்பிட்ட கல்தொட்டிகள் ஊருக்குள் காணக்கிடைப்பவை. இவ்வகைக் கல்தொட்டிகள் தவிர வேறுவகைக் கல்தொட்டிகளும் உண்டு. அவை, சாலைப் புறங்களில் காணப்படும் கல்தொட்டிகள். பழங்காலத்தில், சாலைப்போக்குவரத்தில் இன்றுள்ளவாறு வண்டி-ஊர்திகள் மிகுதியாய் இருக்கவில்லை. சாலைகளில் நடந்து செல்வோர் மிகுதியாய் இருந்தனர். வணிகப்பண்டங்களை ஊர் விட்டு ஊருக்கு எடுத்துச் செல்வோர், மாட்டுவண்டிகளில் எடுத்துச் சென்றனர். சிறு வணிகர்கள் தம் வணிகப் பண்டங்களைப் பொதிகளாகச் செய்து கழுதை அல்லது மாடுகளைச் சுமக்கவைத்துச் சென்றனர். கால்நடைகளை மேய்க்கும் தொழிலிலிருந்தவர்கள் தம் கால்நடைகளை இடம் மாற்றிக் கொண்டு செல்லும்போது சாலைகளில் நடைப்பயணமாகவே செல்வர். கால் நடைகளுக்கான சந்தைகளுக்கும் இவ்வாறே ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கால்நடைகளை ஓட்டிச் செல்வோருக்கும் நடைப்பயணமே வழி. இவ்வாறாகப் பல்வேறு தரப்பினர்க்கும் சாலை வழி நடைப்பயணமே பயன்பாட்டிலிருந்தது. நடைப்பயணர்கள் மற்றும் கால்நடைகள் ஆகியோரின் நீர் வேட்கையைத் தீர்க்கும் பொருட்டுச் சாலைகளில் ஆங்காங்கே கிணறுகள் அமைத்து அவற்றின் அருகிலேயே கல்லால் சமைக்கப்பட்ட தண்ணீர்த் தொட்டிகளை வைத்து அறச் செயல்களில் ஈடுபட்ட பெரியோர்கள் பலர் ஊர்களில் இருந்துள்ளனர்.
மணியம்பாளையம் கல் தொட்டி:
நம்பியூர்-பெருமாநல்லூர் சாலையில் அமைந்துள்ள ஊர் மணியம்பாளையம். நம்பியூரிலிருந்து ஆறு கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து பெருமாநல்லூர் பதினைந்து கி.மீ. தொலைவில் உள்ளது. 15 கி.மீ. என்று பொறிக்கப்பட்ட நெடுஞ்சாலைக் கல்லின் அருகில்தான் கிடாரை ஆர்வலர் கூறிய கல் தொட்டியும் காணப்படுகிறது. சாலையோரத்தில், ஆனால் சாலைக்குச் சற்றுத் தள்ளி, அம்மன் கோயிலுக்கு முன்புறத்தில் மண் தரையில் இந்தக் கல் தொட்டி உள்ளது. வெள்ளை நிறக்கல்லால் அமைக்கப்பட்ட தொட்டி. கல்லின் பரப்புச் செம்மையாக இல்லை; கரடு முரடாக உள்ளது. தொட்டியின் முன்புற நீளவாட்டுப்பகுதியில் ஐந்து வரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்துக்கள் அமைந்த கல் பரப்பும் சமன் செய்யப்படாமல் சிறு சிறு மேடு பள்ளங்களைக் கொண்டுள்ளது. எனவே, எழுத்துகள் சில இடங்களில் படிக்க இயலாதவாறு உள்ளன. கல்தொட்டிக்குத் தொடர்ந்து சுண்ணம் பூசி வந்துள்ளனர். எனவே, எழுத்துகள் சுண்ணப்பூச்சு காரணமாக மறைந்து தெளிவில்லாமல் இருந்தன. உடன் வந்தவர்கள், சுண்ணப்பற்றை நீக்க நீண்ட நேரம் ஆனது. அகற்றிய பின் எழுத்துகள் படிக்கப்பட்டன.
துளையுடன் கூடிய பண்ணையோடிக் கல்தொட்டி
கல்வெட்டுப் பாடம்:
1 துந்துமி வருஷம் ….. மாதம் திறவலூர் யிருக்கு
2 ம் பாலை வேளாள(ரில்)………ணி…. சின்ன
3 ய கவுண்டன் மகன் (மாலை கவுண்டன் பண்
4 ணையோடி வச்ச உபயம்
5 அழகப்பெருமாள் லட்சிக்க
கல்வெட்டுச் செய்திகள்:
கல்வெட்டு, துந்துமி வருடத்தில் பொறிக்கப்பட்டது எனக் கல்வெட்டில் குறிப்புள்ளது. துந்துமி என்கிற துந்துபி ஆண்டு வியாழவட்டத் தமிழ் ஆண்டுப்பட்டியலில் கி.பி. 1862, கி.பி. 1922 ஆகிய இரு ஆண்டுகளில் அமைகிறது. எழுத்தமைதியை அடிப்படையாகக் கொண்டால், கல்வெட்டு பொறிக்கப்பட்ட ஆண்டு, கி.பி. 1862-ஆம் ஆண்டு எனக்கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே, கல்வெட்டு நூறாண்டுக்கு மேல் பழமையானது எனக் கருதலாம். கல்வெட்டில் வருகின்ற திறவலூர் பெருமாநல்லூருக்கருகில் அமைந்த துரவலூர்/தொரவலூர் ஊராகலாம். அவ்வூரைச் சேர்ந்த பாலைகுல வேளாளர்களில் சின்னய கவுண்டர் என்பாரின் மகன் மாலைக்கவுண்டர் என்பார் இந்தக் கல்தொட்டியைச் செய்துகொடுத்துள்ளார் என்று கல்வெட்டு கூறுகிறது. இந்தத் தர்மத்தை அழகப்பெருமாள் காக்கவேண்டும் என்று கல்வெட்டு வரி முடிகின்றது. மேற்கண்ட துரவலூரில் இருக்கும் பெருமாள் கோயிலின் இறைவன் பெயரான அழகப்பெருமாள் என்பதுதான் கல்வெட்டிலும் குறிக்கப்படுகிறது. எனவே, கல்வெட்டில் வரும் திறவலூர், தற்போதுள்ள துரவலூரே என்பதில் ஐயமில்லை. காக்கவேண்டும் என்னும் கருத்தைக் கல்வெட்டில் எழுதப்பட்ட “லட்சிக்க” என்னும் சொல்லால் அறிகிறோம். “ரக்ஷிக்க” என்னும் வடமொழிச் சொல்லே "லட்சிக்க" என்று எழுதப்பட்டுள்ளது. ’ர’, ‘ல’ ஆகிய இரண்டெழுத்துகளும் தம்முள் இடம் மாறிக்கொள்வது தமிழில் நாம் காணுகின்ற ஒன்றே. கொடை அல்லது தர்மம் என்பதைக் கல்வெட்டில் உள்ள “உபயம்” என்னும் சொல் குறிக்கிறது.
வேளாளர் குலப்பிரிவு - பாலைக் கூட்டம்:
பாலவேளாளர் என்று தற்போது அழைக்கப்பெறும் குலப்பிரிவினர், கல்வெட்டில் குறிப்பிடப்பட்டவாறு முற்காலத்தில் பாலை வேளாளர் எனப்பட்டனர். நம்பியூரில் அமைந்திருக்கும் தான்தோன்றீசுவரர் கோயில் கல்வெட்டுகளில் வேளாளர் குலப்பிரிவைச் சேர்ந்த மேன்மணியர், கழஞ்சியர், சோழர் ஆகியோர் குறிக்கப்பெறுகிறார்கள். ’கொங்கு குலகுருக்கள்’ என்னும் வலைப்பூத் தளத்தில், பாலவேளாளர்களாகப் பைத்தலை, வெள்ளேலி, மேல்மணியன், குண்டெலி, கழஞ்சியர் ஆகியோர் குறிக்கப்படுகிறார்கள். இவர்களில், பைத்தலை என்பார் சேவூர்ப் பகுதியிலும், வெள்ளேலி என்பார் தொரவலூரிலும், மேல்மணியன் என்பார் கிடாரையிலும் தற்போது இருப்புக்கொண்டுள்ளனர் என்று மேற்படி வலைத்தளம் குறிக்கிறது. நமது கல்தொட்டி அமைக்கப்பட்ட ஊர் மணியம்பாளையம், மேல்மணிய குலப்பிரிவினரின் பெயரால் அமைந்த ஊராகலாம் எனக் கருத இடமுண்டு. இக்கருத்துக்குச் சான்றாக இங்குள்ள மக்கள், மேல்மணிய குலப்பிரிவினர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இடம்பெயர்ந்து இவ்வூருக்கு அருகில் உள்ள வெள்ளாளபாளையம், கிடாரை ஆகிய ஊர்களில் குடியேறியுள்ளனர் என்று கூறுகின்றனர். கல்வெட்டிலும் கொடையாளி தொரவலூரைச் சேர்ந்த பாலைப் பிரிவினர் என்று குறிப்பிடுவதைக் காணலாம். கிடாரை, மணியம்பாளையம், வெள்ளாளபாளையம் ஆகிய ஊர்கள் நம்பியூரைச் சுற்றிலும் மிகுந்த அண்மையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளாளர் புதிதாகக் குடியேறிய பகுதி என்பதாலேயே வெள்ளாளபாளையம் என்று ஊர்ப்பெயர் அமைந்தது எனலாம். வெள்ளாளபாளையத்திலும் ஒரு கல்தொட்டி எழுத்துப் பொறிப்புகளுடன் இருப்பதைப் பார்த்தோம். ஆனால், முற்றிலும் கல் பொரிந்து போனதால் எழுத்துகள் அழிந்துவிட்டன.
கல்தொட்டியின் இன்னொரு பயன்பாடும் அது தெரிவிக்கும் அரிய செய்தியும்:
கல்வெட்டில், கல்தொட்டி என்னும் பெயர் குறிப்பிடப்படவில்லை. மாறாகப் ”பண்ணையோடி” என்னும் சொல் காணப்படுகிறது. “பண்ணையோடி வச்ச உபயம்” என்பது கல்வெட்டுத் தொடர். இங்குள்ள கல்தொட்டி “பண்ணையோடி” என ஏன் குறிப்பிடப்பெறுகிறது என மேலே ஆய்வு செய்யும்போது, இச்சொல் குறித்துக் கல்வெட்டு அகராதியின் துணையை நாடினோம். ”பண்ணையோடி” என்னும் சொல் அதில் காணப்படவில்லையெனினும், ‘பண்ணை” என்னும் சொல்லுக்கு “நீர்நிலை” என்று பொருள் கொடுத்திருந்ததோடு, அதற்கு எடுத்துக்காட்டாக, கி.பி. 950-ஆம் ஆண்டுக் கல்வெட்டுத் தொடரான “துலாசெய்க்கிறைக்கும் தேயாற பண்ணையினின்றும் தெற்கு நோக்கி” என்பது கொடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கல்வெட்டு, TRANSACTIONS OF ARCHAEOLOGICAL SOCIETY OF SOUTH INDIA நூலில் உள்ளது. இத்தொடரோடு பண்ணையோடி என்னும் தொடரையும் இணைத்துக் கல்வெட்டு அறிஞர் பூங்குன்றன் அவர்களிடம் கருத்துக் கேட்டபோது, அவர் கூறிய விளக்கம் அரியதோர் செய்திக்கு அடித்தளம் இட்டது.
பண்ணையும் பண்ணையோடியும்:
கிணறுகளில் ஏற்றம் வைத்து நீர் இறைத்த முற்காலத்தில், கவலை (கமலை என்னும் வழக்கும் உண்டு) என்னும் தோல் பை முகந்துவருகின்ற நீர் முதலில் கொட்டப்படும் நீர்த்தொட்டியே பண்ணையோடி என்று வழங்கப்பட்டிருக்கவேண்டும். பண்ணை என்பது நீர்நிலையாகிய கிணற்றைக் குறித்தல் வேண்டும். (இந்த நீர்நிலை, ஒரு சிறிய குளமாகவும் இருக்கலாம். இக்கட்டுரையில் கிணறுதான் களப்பொருள்) பண்ணையோடியாகிய நீர்த்தொட்டியில் சேருகின்ற நீர், தொட்டியின் கீழ்ப்புறத்தில் அமைந்த துளையினூடே வெளியேறிக் கால்களின் வழியே செய் என்னும் வயல் பரப்புக்குப் பாயும் வகையில் நீர் மேலாண்மை அமைப்பு செயல்பட்டது எனலாம். இக்கருத்தை உறுதி செய்யும் வகையான், மணியம்பாளையம் கல்தொட்டியின் கீழ்ப்பகுதியில் துளை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வேளாண் தொடர்பான இந்த அமைப்பு ஒரு புதிய அரிய செய்தியாக நம்முன் வெளிப்படுகிறது.
மணியம்பாளையம் ஊர்ப்பெரியவர்கள் கூறுகையில், இக் கல்தொட்டி, அருகில் இருக்கும் கிணற்றுக்கருகில் நீண்ட காலம் இருந்துள்ளதாகவும் தற்போதுதான் இங்கு மாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டனர். கிணற்றிலிருந்து ஏற்றம் வழியாக நீர் இறைக்கும்போது பயன்பாட்டிலிருந்த இந்தக் கல்தொட்டிக்குச் சற்று அருகிலேயே கிணறு ஒன்று தற்போதும் உள்ளதைக் காணலாம். ஆனால், பழைய ஏற்றத்தின் அமைப்பு - கல் தூண்கள், அவற்றை இணைக்கும் குறுக்குச் சட்டம், கப்பி, உருளை - ஆகியனவற்றை இன்று காண இயலாது. சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டுக் கிணற்றின் தோற்றமே முற்றும் மாறியுள்ளது.
பண்ணை என்னும் வழக்கு:
பண்ணை என்னும் சொல் தற்போது வேளாண்(பயிர்) நிலம், வேளாண் தோட்டம் என்கின்ற பொருளில் வழங்குகிறது. ஆனால், சென்ற இரு நூற்றாண்டுகளில் ‘பண்ணை’ , நீர் தொடர்பாக வழங்கியது என்று இக்கல்வெட்டின் மூலம் அறிகிறோம். இதற்குச் சான்றாக, கோவைக்கருகில் இருக்கும் வெள்ளலூரில் ஆனைமலையம்மன் கோயிலில் இக்கட்டுரை ஆசிரியர் கண்டறிந்த கல்வெட்டு அமைகிறது. கோவிலில், நீர்ப் பயன்பாட்டுக்காகக் கிணறு ஒன்றை வெட்டிக் கொடுத்த செய்தியைக் குறிப்பிடும் கல்வெட்டு, கிணற்றை வெட்டிக் கொடுத்தவர் கிணற்றோடு கூடி “கல்லுப்பண்ணையும்” போட்டதாகக் குறிப்பிடுவதினின்று, ‘பண்ணை” என்னும் சொல் வழக்கில் இருந்துள்ளது என்றும், கல்லால் பண்ணை அமைக்கப்பட்டமை வழக்கம் என்றும் அறிகிறோம். இக்கல்வெட்டு, தொல்லியல் கழகத்தின் 2019-ஆம் ஆண்டுக்கருத்தரங்கில் வெளியிட்ட “ஆவணம்” நூலில் பதிவாகியுள்ளது. வரி 14-15 –இல் ”கல்லுப்பண்ணை” என்னும் சொல்லைக் காண்க. அதன் ஒளிப்படம் பார்வைக்கு:
வெள்ளலூர்க் கல்வெட்டு
தொடர்பு: துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
doraisundaram18@gmail.com, அலைபேசி : 9444939156.
No comments:
Post a Comment