—— தொல்லியல் அறிஞர் முனைவர் சு. ராஜவேலு
முன்குறிப்பு:
செப்டெம்பர் மாதத்தின் (2019 ஆண்டு) முதல் வாரம் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் - மரபு பாதுகாவலர்கள் வாட்சப் குழுமத்தில் தொல்லியல் அறிஞர் பேராசிரியர் முனைவர் சு. ராஜவேலு அவர்கள் தமிழியின் பழமை குறித்து குழும உறுப்பினர்களின் கேள்விகளுக்குக் கொடுத்த விளக்கக் கருத்துகளின் தொகுப்பு.
சுபாஷிணி:
நமது அண்மைய காணொளிப்பதிவு வெளியீடுகளில் டாக்டர் ராஜவேலுவின் பேட்டி, டாக்டர் ராஜனின் பேட்டி ஆகியன தமிழ் நிலம் சமணம் வருவதற்கு முன்பே இலக்கிய வளம் நிறைந்து இருந்தது என்பதை விளக்குகின்றன.
I.
மண்ணின் குரல்: ஜூலை 2019 - அகழ்வாய்வுகளின் வழி தமிழ் எழுத்துக்களின் தொன்மையை அறிவோம் - பகுதி 1: https://youtu.be/H_RIo4z7-ug
தமிழி எழுத்துக்கள் வட இந்தியாவில் தோன்றிய அசோகன் பிராமியிலிருந்து பின் மருவி கி.மு.2ம் நூற்றாண்டு வாக்கில் சமண முனிவர்களால் தமிழகத்திற்குக் கொண்டுவரப்பட்டவை என்ற கூற்று தமிழ் கல்வெட்டுக்கள் மற்றும் எழுத்துரு ஆய்வுலகில் நிலவி வந்தது. அது இன்றும் தொடர்கின்றது.
குறிப்பிடத்தக்க சில ஆய்வுகள் தமிழக நிலப்பரப்பில் அதாவது கொடுமணல், அரிக்கமேடு, பொருந்தல், ஆதிச்சநல்லூர், அழகன்குளம், மற்றும் மிக அண்மையில் கீழடி எனப் பல பகுதிகளில் நிகழ்த்தப்பட்டு, தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டு அவை அறிவியல் கரிம ஆய்வின் படி காலத்தால் கி.மு. 7, கி.மு. 6 என காலக்கணக்கிடப்பட்டாலும் கூட, இச்செய்தி பரவலாகச் சென்றடையாது இருப்பது வேதனையே. கடந்த 30 ஆண்டுகளாகக் கடல்சார் மற்றும் தொல்லியல் ஆய்வுகளைத் தமிழகத்தில் நடத்தி வரும் டாக்டர்.ராஜவேலு அவர்கள் இப்பேட்டியில் அகழ்வாய்வு சான்றுகளைக் குறிப்பிடுகின்றார். தமிழி எழுத்துரு அசோகன் பிராமியிலிருந்து கிளைத்து வளர்ந்த எழுத்துரு அல்ல, மாறாக அது தமிழ் நிலத்திலேயே தமிழர்களால் உருவாக்கப்பட்ட எழுத்துரு எனத் தமது அகழ்வாராய்ச்சி ஆய்வுத்தகவல்களுடன் விவரிக்கின்றார்.
கூடுதலாக இப்பதிவில், களப்பிரர்களுக்குப் பின் தமிழக நிலப்பரப்பில் ஆட்சி செய்த பல்லவர்கள் வடக்கிலிருந்து வந்தமையாலும், வடமொழியை ஆட்சி மொழியாகத் தமிழக நிலப்பரப்பில் ஏற்படுத்திய போது அம்மொழிக்கான எழுத்துருவாகப் பல்லவ கிரந்தம் என்ற எழுத்துருவை உருவாக்கிய செய்தியையும் பகிர்கின்றார்.
II.
மண்ணின் குரல்: ஜூலை 2019 - அகழ்வாய்வுகளின் வழி தமிழ் எழுத்துக்களின் தொன்மையை அறிவோம் - பகுதி 2: https://youtu.be/gznNu5jIZQE
தமிழ் மொழியின் பண்டைய எழுத்தான தமிழி (தமிழ் பிராமி) கல்வெட்டுக்களிலும் மக்களின் புழக்கத்திலும் பயன்பாட்டிலும் இருந்திருக்கின்றன என்பது நமக்கு தொல்லியல் அகழாய்வுகளில் கிடைக்கின்ற சான்றுகளாக அமைகின்றன. கி.மு.700 வாக்கிலேயே பொதுமக்களும் தங்களது பானை ஓடுகளில் பொறித்து வைக்கக்கூடிய வகையில் இந்த எழுத்து மக்கள் பயன்பாட்டில் இருந்திருக்கின்ற சூழலில் இந்த எழுத்துரு அதற்கும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே உருவாகி செம்மை பெற்று வளர்ந்திருக்க வேண்டும் எனக் கருதலாம்.
இறந்த வீரனுக்காக மக்களால் எழுப்பப்படுபவை நடுகற்கள். நடுகற்களிலும் தமிழி எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளமையை மிக அண்மைய கண்டுபிடிப்பைக் குறிப்பிட்டு இந்தப் பதிவு பேசுகிறது. இதுகாறும் கிடைத்துள்ள தமிழி கல்வெட்டுக்கள் சமயம் சேராதவையாக இருப்பதும் இவ்வகை கல்வெட்டுக்கள் பொதுவாக யாரோ ஒருவர் யாருக்கோ வழங்கிய நன்கொடை, சேவை என்பதைச் சுட்டுவதாகவே அமைகின்றது என்றும், கி.பி. 4ம் நூற்றாண்டிற்குப் பிறகே, பல்லவ ஆட்சிக் காலம் தொடக்கமே சமய சார்புடனான கல்வெட்டுக்கள் பெருகின என்றும் இப்பதிவில் டாக்டர்.ராஜவேலு குறிப்பிடுகின்றார்.
பெரும்பாலோர் ஆய்வு நூல்கள் எத்தனையோ வந்திருந்தாலும் அவற்றை வாங்கி வாசிப்பதில்லை. கேள்விப்படும் செய்திகளையே நம்பி அதனையே உண்மை எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பர். ஆனால் நாம் தொடர்ச்சியாக ஆய்வுத் தகவல்களை வழங்குவோம்.
சு.ராஜவேலு:
சிக்காகோவில் பேசிய எனது கட்டுரையின் சுருக்கத்தை மீண்டும் வெளியிட்டமைக்கு நன்றி சுபா.
தமிழருக்குச் சொந்த அறிவு இல்லை ... அடுத்தவர் வந்துதான் நமக்கு எழுத்தறிவை, கல்வி அறிவை, கலைகளை இலக்கியங்களை உருவாக்கினர் என நம்பிக் கொண்டிருப்பவர்கள் நாம் எத்தனை அறிவியல் சான்றுகள் மூலம் கருத்துக்களைச் சொன்னாலும் ஏற்க மாட்டார்கள். தமிழன் கி.மு. 700 அளவில் எழுத்துக்களைத் தரப் படுத்தி அதை கி.மு. 400 அளவில் இலங்கைக்கும், வட இந்தியர்களுக்கும் கொடையாக அளித்தான். அறிவியல் காலக்கணிப்பு இது.
பிற இந்திய மொழிகளையும் வடமொழி கல்வெட்டுகளையும் நன்கறிந்த இந்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டு அறிஞர்கள் கே.வி.இரமேஷ் சம்பத், பி.ஆர் சீனிவாசன் (இவர்கள் அனைவருமே தலை சிறந்த இந்தியக் கல்வெட்டு அறிஞர்கள்) போன்றோர் சமஸ்கிருத பண்டிதர்கள். இவர்கள் தமிழே காலத்தால் முற்பட்ட எழுத்துக்கள் கொண்டது எனச் சொன்னவர்கள். நான் 25 ஆண்டுகளுக்கு முன்பே அதற்கான சான்றுகளைப் பட்டியல் இட்டுள்ளேன். இன்னும் நாம் நாகசாமி யையும், ஐராவதத்தையும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.
நான் சாதாரணமான கேள்விகளை வைக்கின்றேன்...
தமிழ் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் எழுத்துக்களையும் சமணர் உருவாக்கினர் என்றால் அவர்கள் பற்றிய குறிப்புகள் ஏன் அகத்திலும் புறத்திலும் இல்லை? மாறாக அவர்களின் சமயத்திற்கு முற்றிலும் எதிரான காதலும் வீரமும் மட்டுமே கருப்பொருளாகச் சங்க இலக்கியங்களில் பேசப் படுகிறதே. இதற்கு விளக்கம் அளிக்க இயலுமா? கி.மு. 700 இல் சமணமே வட இந்தியாவில் இல்லை. சமணர் கி.பி. 300 அளவில்தான் தமிழகத்தில் தொண்டை மண்டலத்திற்கு வருகின்றனர். தமிழி எழுத்துக்கள் அறிவுசார்ந்த தமிழ் மக்களால் உருவாக்கப்பட்ட எழுத்துக்கள். அதனைச் சமணர்கள், பௌத்தர்கள் வணிகர்கள் வழியாக அறிந்து அவர்களுடைய மொழிக்கு ஏற்ப வர்கங்களை உருவாக்கினர். தமிழின் அடிப்படை உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்களை அப்படியே வைத்துக் கொள்கின்றனர்.
கி.மு. 700- 600 இல் அடிப்படையான உயிர் எழுத்துக்கள் தமிழில் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஓ ஆகிய எட்டும். மெய் எழுத்துக்கள் 18 ம் புள்ளி இல்லாமல். கி.மு. 400 இல் இலங்கையில் இவ்வெழுத்துகள் வர்கங்களை கொண்டு மாற்றம் பெறுகின்றன. இதே கால கட்டத்தில் ஆந்திராவில் பட்டிபொருலு (Bhattiprolu) இல் இருந்த பௌத்த துறவிகளும் இந்த மாற்றங்களைச் செய்கின்றனர். வட இந்தியாவில் 5 கல்வெட்டுகள் இதே கால கட்டங்களில் வெளியிடப் பட்டன. இவற்றைப் பற்றி அரிய Early South Indian Palaeography by T. V. Mahalingam; Indian Palaeography by R. B. Pandey; Indian Epigraphy by D. C. Sircar; Indian paleography by G. Buhler போன்றோர் நூல்கள் பார்க்கவும்.
1. மகன்தான் கல்வெட்டு
2. பிப்ரவா பேழை கல்வெட்டு
3. கொசுண்டி கல்வெட்டு
4. ஈரன் காசு பொறிப்பு
ஆகியவற்றின் காலம் கி.மு. 400. இந்த கல்வெட்டுகளில் கூட்டெழுத்து முறை இல்லை. இன்றைய இந்திய எழுத்துக்கள் இந்த கூட்டெழுத்து முறையில் உள்ளவை. இதனை உருவாக்கியவர் கி.மு. 300 சார்ந்த அசோகர். அல்லாது மெய், உயிர்மெய் இரண்டுமே ஒரே குறியீடு உடையவை என்பது நம் அனைவருக்கும் தெரியும். எ.கா. அக்கம் என்ற சொல். இதனைத் தொடக்க நிலையில் தமிழர்கள் மெய் எழுத்துக்கள் புள்ளி பெறாமல் எழுதினர். மேற்குறித்த வட இந்திய, பட்டிபொருலு கல்வெட்டுகள் அனைத்தும் இவ்வாறே எழுதப் பட்டன. அதாவது 'அககம' என்ற குறியீடுகளைப் படிப்பவர்கள் அதன் பொருள் உணர்ந்து 'அக்கம்' எனப் படிக்க வேண்டும். இதை உணர்ந்த அசோகன் கூட்டெழுத்து முறையைத் தனது கல்வெட்டுகளில் புகுத்துகின்றான். அதாவது க க வை மேலும் கீழும், அல்லது பக்கங்களில் சேர்த்து எழுதும் முறை.
இதனை கி.மு. 300 இல் அறிந்த தமிழர்கள் கூட்டெழுத்து முறையை முதலில் முயற்சி செய்கின்றனர். இம்முயற்சி கொடுமணலில் நடைபெறுகின்றது. கொடுமணல் வணிக நகரம். இங்கு மட்டும் 40 பானை ஓடுகளில் எழுதி முயன்றுள்ளனர். இங்கு தான் வட இந்திய வணிகர்கள் தமிழர் எழுத்துக்களை கற்று வட இந்தியாவிற்குத் தெரிவிக்கின்றனர். ஆனால் தமிழர்களுக்கு இந்த கூட்டெழுத்து முறை ஒத்து வரவில்லை.
இதனால் தொல்காப்பியர் புள்ளி முறையைப் புகுத்தி தமிழைச் சீர் செய்தார். 'மெய்யின் இயற்கை புள்ளி யொடு நிலையல் எகரமும் ஒகரமும் அவ்விதம் அற்றே', தொல்காப்பியம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு. எ/ ஏ மற்றும் ஒ/ஓ ஆகியவற்றுக்கும் ஒரே குறியீடு. எ பக்கத்தில் ஒரு புள்ளி வைத்தால் மாத்திரை குறையும். அவ்வாறேதான் ஒ / ஓ வும். கெட்டான்/ கெட்டான் - கெ பக்கத்தில் புள்ளி வைத்தால் அது கெட்டான். புள்ளி இல்லை என்றால் கேட்டான். புரிந்திருக்கும். இந்த கே இரட்டைச் சுழி வீரமாமுனிவர் காலத்தில் தமிழில் புகுத்தப் பட்டது. ஓலைகளில் எழுதப் படும் இலக்கியங்கள் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை படி எடுக்கும் பொழுது அவ்வவ் காலங்களில் இடைச்செருகல்கள் ஏற்படும். அவ்வாறே 'அய்', 'அவ் என்பவையும். 'ஐ' கி.பி 4 ஆம் நூற்றாண்டு சமணரால் புகுத்தப் பட்டது. 'ஔ' வீரமாமுனிவர் காலத்தில் வருகிறது. ஆயுத எழுத்தும் அவ்வாறுதான்.
படுக்கை கோடுகளையும் செங்குத்து கோடுகளையும் வைத்துத் தான் தமிழி கோடுகள் உருவாக்கப் படுகின்றன. மெய்யெழுத்துகளைச் சுட்ட முதலில் புள்ளிகள் பயன் படுத்தப் படவில்லை. பாமர தமிழன், ஆடுமாடு மேய்த்த வேளாண்மை செய்த தமிழன், கீறல் குறியீடுகளிலிருந்து தெரிவு செய்த எழுத்துகளை உருவாக்குகின்றான். தமிழன் அனைத்தையும் சோதனை செய்து பார்க்கிறான். நான் விரிவாக இதைச் சொல்லவில்லை. மூன்று நான்கு படிநிலைகள் இவற்றின் வளர்ச்சி நிலையில் உள்ளன. முதலில் உயிர் ஏறிய மெய் எ.கா: க+அ- க - கடலன். குறில்/ நெடில் வேறுபாடுகள் இல்லாமை 'க' நெடில் குறியீடு 'க' குறில் குறியீடு ஆகவும் படிக்கப் பட்டது. நம்மிடம் இருந்து எழுத்துகள் வட இந்தியா சென்றமையால் 'ஏ' குறியீடு 'ஓ' குறியீடுகளை மாற்றாமல் வைத்தனர் அவர்கள். நம்ம ஆள் அறிவியல் பூர்வமாகச் சிந்தித்தான் இன்னும் சொல்லப் போனால் 'ஆ' குறியீடு முதல் நிலையில் இல்லை.
முதலில் மெய் உயிர்மெய் குறில் நெடில் வேறுபாடுகள் காட்டப்படவில்லை. ஈகார குறியீடு இகரமாக வைக்கப்பட்டது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டளவில் சூத்திரதாரி தொல்காப்பியர் இவற்றைச் சீர் செய்கின்றார். குறில்களின் ஒலியையும் மெய்யையும் சுட்ட புள்ளியை அறிமுகம் செய்கிறார். மாத்திரை குறைக்கப்படுகிறது. எ/ஒ அவ்வாறே. மூன்று புள்ளிகள் இகரமாகிறது. இகரமாக இதுவரை இருந்த குறியீடு ஈகாரமாகிறது. இவை எல்லாம் இன்றைய கணினி வளர்ச்சியைப் போன்றது. இவற்றை எல்லாம் உங்களுக்குத் தனியாக வகுப்பறையில் தான் புரிய வைக்க முடியும். வெறும் தமிழியை மட்டுமே கற்றலாகாது. இக்கால கட்ட இலங்கை பிராமி, வட இந்தியப் பிராமி ஆகியவற்றை ஒப்பு நோக்க வேண்டும்.
நம்மவர் செய்யும் தவறு ஒப்பு நோக்காதது. வட இந்தியப் பிராமியை அறியாது தமிழியின் தொன்மையை வரையறை செய்தால், பிறகு பேரறிஞர் சொல்லி விட்டார் என அரைத்த மாவையே அரைக்க வேண்டியது தான். 99 விழுக்காடு கல்வெட்டு ஆய்வாளர்களே இந்த தவறுகளைச் செய்து வருகின்றனர். அறிவியல் காலக்கணிப்பு கணிப்பு கொடுப்பதில் பொருந்தல் சான்று வந்த பிறகும் கூட, "ஐராவதம் சொல்லி விட்டார், நாகசாமி சொல்லிவிட்டார், இவர் என்ன சொல்வது?", என்பர். இவர்களை விட இந்தியக் கல்வெட்டுகளில் ஊறித்திளைத்த பி. ஆர். சீனிவாசன், கே.வி. இரமேஷ் சம்பத் போன்றோர்களையும், என்னையும் சேர்த்துத்தான் ஏற்கமாட்டார்கள்.
ஐராவதம் ஒருவேளை இன்று இருந்திருந்தால் ஏற்று இருப்பார். என்னுடைய கருத்தையும் வாசிப்பையும் நேசித்தவர் அவர். அரிக்கமேடு வாசிப்பில் தவறாக ஒரு பானையில் 'வளவன்' எனப் படித்து அவர் ஆசிரியராக இருந்த தினமணியில் சோழர் பட்டப்பெயர் பொறித்த மட்கலன் என்ற தலைப்பில் வெளியிட்டார். அந்த வாசிப்பு தவறு என்றேன். இருவருமே புதுச்சேரி சென்றோம். நான் அதனை 'குளவாய்' எனப் படித்திருந்தேன். இறுதியில் தான் படித்தது தவறு எனத் திருத்தி 'விமலா பக்லி' நூலில் அதனை எழுதினார். தரவுகள் கிடைக்கக் கிடைக்க வெளிச்சம் வரும். அவரின் பத்ரபாகு சமண கோட்பாட்டு அடிப்படையில் சமணர்களே தமிழர்களுக்கு கி.மு.200 இல் எழுத்துக்களை அறிமுகம் செய்தனர் என்றார். ஆனால் அறிவியல் காலக்கணிப்பு கி.மு. 530 என வந்துள்ளது. இந்த காலகட்டத்தில் சமணம் வட இந்தியாவிலே பெரிதாகப் பேசப்படவில்லை. பத்ரபாகு கர்நாடக வருகை கி.மு. 400 (மேலும் அதுவுமே ஒரு புராண செய்தி). அப்படி எனில் கி.மு. 530 சாத்தியமா? தமிழனே இந்தியர்களுக்கு எழுத்தறிவைத் தந்தவன். வட இந்தியச் சமணரும் இல்லை, பௌத்தரும் இல்லை. அவர்கள் நம்மிடம் பெற்று அவர்கள் மொழிக்கு ஏற்ப மேலும் குறியீடுகளை உருவாக்கினர். இது கி.மு. 400 இல் நடந்தது.
இலக்கிய தரவுகள் பெரும்பாலும் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓலைகளில் மீள் பதிப்பு செய்யப்படுபவை. ஒரு கால கட்டத்தில் பதிப்பிப்பவர்கள் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றம் செய்து பதிப்பிப்பர். உயிர் எழுத்து 12 என்று உள்ளது. ஆனால் உண்மையில் 'ஔ' இல்லை 13 வதாக 'ஃ' இல்லை. 'ஐ' க்கு பதில் 400 வரை 'அய்' என எழுதினர். 'ஒள' க்கு பதில் 'அவ்' என எழுதினர். பிற்கால வட இந்தியத் தாக்கம் 'ஐ' திருநாதர் குன்று கல்வெட்டில் வருகிறது. இது சமணர் கல்வெட்டு. முதல் சமணக் கல்வெட்டு கடவுள் வாழ்த்துடன் 'நமோஸ்து' எனப் பறையன் பட்டு கல்வெட்டில் வருகிறது. இதுவும் சமணக் கல்வெட்டு இரண்டுமே தொண்டை மண்டலம். மதுரை சுற்றி உள்ள தமிழி கல்வெட்டுகளில் எவற்றிலும் சமயம் சார்ந்த சொற்களோ குறியீடுகளோ இல்லை. அசோகர் கல்வெட்டு கடவுள் வாழ்த்துடன் 'தேவானாம்பிய பியதஸி' எனத் தான் தொடங்கும். முதலில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு தொண்டை மண்டலம் வந்த சமணர்கள், படிப்படியாகத் தென் தமிழகம் சென்று ஏற்கனவே ஊரின் வெளியிலிருந்த குகைப்பகுதியில் தங்கி அருகில் வட்டெழுத்து கல்வெட்டு களையும் சமண திருமேனி களையும் வெட்டுகின்றனர். தமிழிக்கும் இவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்த படுக்கைகள் பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் ஒருவகை. சித்தன்னவாசல் மலைப்பகுதியில் ஈமச் சின்னங்கள் அகழாய்வு செய்யப்பட்டதை இப்போதும் பார்க்கலாம்.
மதுரையைச் சுற்றி உள்ள குகைகளில் உள்ள படுக்கைகள் பெருங்கற்கால ஈமப்படுக்கைகள். இறந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள். நடுகல் போன்றவை. இவற்றை அதிட்டானம்/ பாழி/பாளி எனக் குறித்தனர். இந்த பாழியைத் தான் சமண பள்ளி என ஐராவதம் குறிப்பிட்டார். பாழி என்பது இறந்தவர்களுக்கு எடுக்கப்படும் நினைவுக் கல் என தாதப்பட்டி நடுகல் சுட்டுகிறது. இதிலிருந்து தான் பள்ளிப்படை கோயில்கள் வருகின்றன. அமணன் என்றால் முற்றும் துறந்தவர் என்பது பொருள். அசோகனுடைய கல்வெட்டில் சிரமண என வருகிறது. இது துறவிகளைக் குறிக்கும் சொல். தமிழன் துறவி ஆகக் கூடாதா? சமணர்கள் துணியைத் துறந்து அம்மணமாக மாறியதால் இது பின்னர் இவர்களை மட்டுமே குறித்ததானது. உறை என்பது இறந்ததைச்சொல்கிறது. உறைந்து விட்டவர், தெய்வமானவர். அவருக்காக எடுக்கப்பட்ட நினைவுப் படுக்கை, உறைதல், Fossilized. அதாவது, இது பால் உறைந்து விட்டது என்பது போன்று.
சந்திரகுப்தர் காலத்தில் வந்த மெகஸ்தனிஸ் தனது இண்டிகாவில்,"சந்திரகுப்தர் அவையில் எவருக்கும் எழுத்தறிவில்லை" எனக் குறிப்பிடுவது உண்மை. இதனை அசோகனுடைய கல்வெட்டிலும் பார்க்கலாம். தான் வெளியிட்ட கல்வெட்டுகளைப் படித்து மக்களுக்குச் சொல்வதற்குத் தர்ம மகா மாத்திரர்களையும் அவர் நியமித்தார். பெரும்பான்மை மக்கள் எழுத்தறிவு அற்றவர்தான் என்பது பொருள். அசோகரால் வெளியிடப்பட்டது அரச கல்வெட்டுகள், royal inscriptions. தமிழகத்தில் உள்ளவை மக்களால் கீறப்பட்ட மக்கள் எழுத்துகள், people script. தமிழி மக்கள் எழுத்து. அசோகன் பிராமி அரச அலுவல் எழுத்து.
அவ்வாறாகக் கீறப்பட்ட தமிழ் எழுத்துகள் தமிழி. தமிழி மக்களால் உருவாக்கப்பட்டது. சுமார் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு இது தரப்படுத்தப்பட்டது. ஆரம்பக் கட்டம் ஒரு சோதனை நிலை. 'ஐ' முதன் முதலாக கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் வருகிறது, திருநாதர்குன்று சமணர் கல்வெட்டில். அசோகன் எழுத்துக்கள் என்பது அரச அலுவல் எழுத்து, ராயல் ஸ்கிரிப்ட் ஆகும். அவர் பிராமி மட்டும் பயன்படுத்தவில்லை, க்ரோஷ்டி, அராமைக் மற்றும் கிரேக்க (Kharosthi Aramaic and Greek) மொழியையும் பயன்படுத்தினார். அவர் அனைத்து வட்டார மொழி எழுத்துக்களையும் கடன் வாங்கினார். அசோகன் எழுத்துக்களை பட்டிபொருலுவின் திறமையான புத்த பிக்குகள் உருவாக்கியுள்ளனர். அவர்கள் அடிப்படை தமிழ் எழுத்துக்களைக் கடன் வாங்கி, பிராகிருத மொழிக்கு ஏற்றவாறு வர்க எழுத்துக்களை உருவாக்கினர். நம்முடைய தமிழியின் அடிப்படை கி.மு. 7 அல்லது 6 ஆம் நூற்றாண்டு முதல் தமிழியில் படிப்படியாக வளர்ச்சியுறுவதை ஒருவர் காணலாம். தமிழி குறித்து நான் வகுப்பு அல்லது உரை நிகழ்த்தினால் வாருங்கள் சான்றுகளுடன் விளக்குகின்றேன். புள்ளி மூன்றாம் நூற்றாண்டில் தானே வருகிறது. அதற்கும் முன்பாகவே தமிழி அடிப்படையில் பட்டிபொருலு பொளத்த துறவிகள் பாகத மொழிக்கு ஏற்ப எழுத்துக்களை உருவாக்கி விட்டனர் அசோகன் காலத்தில் கூட்டெழுத்து முறை. நாம் புள்ளி வைக்க ஆரம்பிக்கின்றோம். படிப்படியாக வளர்ச்சி.
இன்னொன்று, கொடுமணல் அகழாய்வு தமிழகத்தின் தலைசிறந்த அகழாய்வு. இங்கு மட்டுமே 1000க்கும் மேற்பட்ட பானை ஓடுகளில் பெயர் பொறித்த எழுத்துக்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் இதுவரை 175 இடங்களில் அகழாய்வுகள் நடந்துள்ளன. இவற்றில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் பயன் படுத்திய மட்கலங்களில் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஆட்பெயர்கள் கிடைக்கின்றன. வட இந்தியாவில் ராமாயணம் மகாபாரதம் சொல்கின்ற ஊர்களில் அகழாய்வுகள் நடந்துள்ளன. எண்ணிக்கையும் 700க்கு மேல். ஆனால், ஒரு இடத்தில் கூட எழுத்துப் பொறித்த மட்கலன் கிடைக்கவில்லை. இதனால் தமிழி மக்கள் எழுத்து என்பதும் அசோகன் பிராமி அரச அலுவல் எழுத்து என்பதும் உறுதியாகிறது.
இன்னொன்று, கொடுமணல் வணிக நகரம். இங்கு வந்தவர் தங்கள் பெயர்களை தமிழியில் பிராகிருத மொழியை எழுதி உள்ளனர். எ.கா. நிகம (Nigama). வட இந்தியாவில் இந்த வணிகக் குழுவின் பெயர் அசோகன் காலத்திற்குப் பிறகு வர்க்க எழுத்தில் தான் எழுதப்படுகிறது. தமிழகத்தில் அவர்களது பிராகிருத பெயர் கிடைப்பதாலேயே பிராகிருதம் மிகுந்துள்ளதாகத் தவறான ஒரு விழுக்காட்டை ஐராவதம் தருகின்றார். வினைச்சொற்கள் கிடைத்திருப்பின் இதனை ஏற்கலாம். என்னுடைய பெயர் ராஜவேல் இரண்டும் கலந்த கலவை அதற்காக நான் சமஸ்கிருதம் அறிந்த பண்டிதன் ஆகிவிடமாட்டேன். வந்த வடநாட்டு வணிகர்கள் தமிழி எழுத்துக்களை கற்று எழுதிப் பழகி உள்ளனர். சென்ற ஆண்டு நடந்த அகழாய்வில் தமிழி அகர வரிசையில் எழுதப் பட்ட பானை ஓடு கிடைத்துள்ளது. அறிவியல் காலக்கணிப்பிற்கு அனுப்பப்பட்ட சான்றுவகை, ஸ்பெசிமன், குழியின் கீழிருந்து இரண்டு அடுக்குக்கு மேலிருந்தது அனுப்பப்பட்டது. அதற்கும் கீழ் இரண்டு அடுக்கு மண்ணுக்குள் உள்ளன. கீழ் நிலையில் கீறல் குறியீடுகள் கிடைக்கின்றன. அடுத்து தமிழி . அதற்கடுத்த நிலை 4 பிராகிருத எழுத்துக்கள் உள்ள தமிழி மிகுந்த அடுக்கு இது. இதன் காலம் தான் கி.மு.530. அரிக்கமேடு, அழகன் குளம், பூம்புகார் மற்றும் கொடுமணல் போன்ற வணிக நகரங்களில் மட்டுமே இவை கிடைத்துள்ளன. dha, SA, SAha, bha ஆகிய எழுத்துகள் இங்கு கிடைத்துள்ளன. ஆக, பிராகிருதமே தமிழர் கொடுத்த கொடையாக இருக்க வாய்ப்பு உண்டு.
---
No comments:
Post a Comment