Sunday, September 22, 2019

கீழடி ஆதாரங்கள் - சில குறிப்புகள்



 ——    பேராசிரியர் அ.ராமசாமி


            கீழடிச்  சான்றுகளைச் சங்ககாலச் சான்றுகள் எனச் சொல்வதைத் தொல்லியல் ஆய்வாளர்கள் ஏற்க மாட்டார்கள். அவை ஒரு பழைய நாகரிகத்தின் ஆதாரங்கள். முச்சங்கம், சங்கம், இறையனார் அமர்ந்து தமிழாய்ந்தது போன்றன புராணிகம் தமிழ்நாட்டிற்குள் பரவிய காலகட்டத்துக் கருத்துகள். அதனை ஏற்று நிறுவும் முயற்சிகள், கிடைத்த அறிவியல் ஆதாரங்களையும் புராணிகத்தன்மை கொண்டவைகளாக மாற்றிவிடும்.

            கீழடிச் சான்றுகளைச் சங்கம் என்ற சொல்லோடு இணைக்காமல் பேசுவதே சரியானது.

            மொழி, இலக்கிய ஆய்வியல் காத்திரமான பங்களிப்புச் செய்த பலரும் சங்ககாலம் என்பதை ஏற்றுப் பேசுவதில்லை. சான்றோர் இலக்கியங்கள், வீரநிலைக்காலம்வீரநிலைக்கவிதைகள், செவ்வியல் கவிதைகள், செவ்வியல் இலக்கியக்காலம் போன்றவற்றையே அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

            இப்போது அறிவியல் ஆய்வகத்தின் வழி கீழடி  என்னும் இடத்தில் கிடைத்துள்ள தரவுகள், 2600 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்ட கட்டட அமைப்பும், நகர அமைப்பும், வாழ்க்கைக்கான வசதிகளும் கொண்ட நகரம் ஒன்று இருந்தது என்பதற்கான ஆதாரங்களாக ஆகியிருக்கின்றன. அங்கு வாழ்ந்தவர்கள் மண்பாண்டங்களில் எழுதினார்கள்; விலங்குகள், பறவைகள் போன்றவற்றை வரிவடிவங்களாகத் தீட்டினார்கள் என்பதோடு உலோகங்களால் செய்த கருவிகள் பயன்பாட்டிலிருந்தன. தங்கத்தில் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட நகைகள் செய்தார்கள். அவை விற்பனைப்பண்டங்களாக இருந்தன. தங்களுக்குள் தொடர்புகளைச் செய்ய எழுத்துப் பயன்பாட்டைக் கொண்டிருந்தார்கள் என்று விவரிப்பதற்கான பருண்மையான ஆதாரங்கள் இவை. அதனால் வைகைக் கரை நாகரிகம் 2600 ஆண்டுகள் கொண்டது என்பதல்ல. அதற்கும் சில ஆயிரங்களுக்கு முன்பே தோன்றி வளர்ந்த நாகரிகம்.

            கீழடிச் சான்றுகள் வழி உறுதியாகியுள்ள தகவல்களைத் தமிழின் தொல்லிலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஏற்கெனவே தந்துள்ளன. கீழடி தரும் செய்திகளைத் தமிழின் தொல் இலக்கியங்களில் ஒன்றான நெடுநல்வாடை விரிவாகச் சொல்கிறது.  அது மதுரை மாநகரைப் பாடல்வெளியாகக் கொண்டது. பரிபாடலில் வையை நதியின் பெருக்கமும் பரவலும் நகரின் விரிவும் தரப்பட்டுள்ளன.

            இன்னொரு கடல் நகரமான காவிரிப்பூம்பட்டினத்து வாழ்க்கையைப் பட்டினப்பாலை விவரித்திருக்கிறது. துறைமுகம் சார்ந்த தொழிற்சாலைகளை விவரிக்கவும் செய்கிறது. முல்லைப் பாட்டில் காத்திருக்கும் தலைவியின் வீடும் கூட வசதியான வீடுதான். இவையெல்லாம் நகரநாகரிக வாழ்க்கையின் பதிவுகளைத் தருகின்றன.

            இவற்றிற்கிணையாகக் கிராமப் புறங்களையும் மலைப் பாதைப் பயணங்களையும் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் போன்ற ஆற்றுப்படைகள் விவரித்திருக்கின்றன.

            குறிஞ்சிப்பாட்டு வன அறிவையும் மலைவளத்தையும் கொண்டிருந்ததை -பயன்படுத்திக்கொண்டதைத் தருகின்றது. இவையெல்லாம் பத்துப்பாட்டு என்னும் நெடும்பாடல்கள் வழி அறியப்படும் நாகரிக வாழ்க்கை.  நெடும்பாடல்களுக்கு முன்னால் எட்டுத் தொகையிலிருக்கும் குறும்பாடல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவை எழுதப்பெற்ற காலம் சில ஆயிரங்களுக்கு முன்பு. அவற்றிற்கும் முன்னால் வாய்மொழித்தன்மை கொண்ட ஐங்குறுநூற்றுப் பாடல்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றின் மொழியமைப்புக்கும் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல் போன்றவற்றின் மொழிநடைக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. வாய்மொழிப்பாடல்களில் இறுக்கம் ஏற்படச் சில நூற்றாண்டுகள் அல்லது சில ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்பது மொழியியலும் இலக்கியவரலாறும் சொல்லும் செய்திகள்.

            இலக்கியங்கள் தரும் தகவல்களைப் போலப் பன்மடங்கு செய்திகளையும் தமிழர்களின் இயற்கை அறிவியல் பார்வையையும் மொழிபற்றிய கோட்பாட்டையும், நூலாக்கம், சமூக அமைப்பு குறித்த கருத்துகளையும் தொல்காப்பியப் பனுவல் குறிப்பிடுகின்றது. உயிரித் தோற்றவியலும் மானுடவியல் கூறும் அறிவுத்தோற்றம், குடும்பம், அரசு, கோட்டை, காப்பரண் போன்றவற்றை உருவாக்குதல் பற்றியெல்லாம் அது விரிவாகப் பேசியுள்ளது. ஐரோப்பியச் சிந்தனை மரபுக்கு ஆதாரமாக இருக்கும் அரிஸ்டாட்டிலின் பனுவலையொத்த பனுவலாக இருக்கிறது தொல்காப்பியப் பனுவல். ஆனால் சிக்கல் என்னவென்றால் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, தொல்காப்பியம் உள்ளிட்ட தமிழ்த் தொல்நூல்களின் காலத்தையும் அறிவியல் பூர்வமாக உறுதிசெய்ய முடியவில்லை என்பதுதான்.

இப்போது கீழடியில் கிடைத்துள்ள தொல்லியல் ஆய்வுகள் வழி உறுதிசெய்யப்பட்டுள்ள உண்மைகள்;
            இலக்கியங்கள் பேசும் உண்மைகளை உறுதி செய்கின்றன என்பதில்தான் நாம் மகிழும் காரணங்கள் இருக்கின்றன. அந்த மகிழ்ச்சியைச் சங்கப்புனைவுகளோடு இணைத்துக் கெடுத்துக் கொள்வது சரியாக இருக்காது.



---



No comments:

Post a Comment