Friday, April 6, 2018

பழைய பாலாற்றின் கழிமுகம்

 

——   சிங்கநெஞ்சம் சம்பந்தம்


சென்னையில் பாயும் கூவம் ஆறு, கொசத்தலையாறு (கொற்றலையாறு) ஆகியவை பழைய பாலாற்றின் கிளையாறுகளின் எச்சங்களே என்று ராபர்ட் ப்ருஸ் ஃபுட் (Robert Bruce Foote) கருதுகிறார். இவர் 1860 களில் சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புவியியல் ஆய்வுகள் மேற்கொண்டவர், இந்திய புவியியல் ஆய்வுத்துறையில் புவியியலாளராக பணி  புரிந்தவர். பின்னாட்களில், ‘வரலாற்றிற்கு முந்தைய இந்தியத் தொல்லியலின்  தந்தை’ என்று புகழப்பட்டவர். கூவம், கொசத்தலை ஆற்றுப் படுகைகளின் அளவினைக் கண்ட இவர் இவை போன்ற சிறிய ஆறுகளால் இத்தனை பெரிய ஆற்றுப் படுகைகளை உருவாக்க முடியாது என்று கூறுகிறார்.


தமிழ்நாட்டின் புவியியல் வரைபடம், காவிரி ஆற்றின் கழிமுகப் பகுதியில் சுமார் 7000 ச.கி.மீ அளவிற்கும், தென்பெண்ணை ஆற்றின் கழிமுகப் பகுதியில் 1300 ச.கி.மீ. அளவிற்கும் டெல்டாக்கள் உருவாகியிருப்பதைக் காட்டுகிறது. சற்றேறக்குறைய தென் பெண்ணை ஆற்றின் அளவிலான பாலாற்றின் கழிமுகப் பகுதியில் டெல்டா ஒன்றும் உருவாகவில்லை. மாறாக, திருவான்மியூர்-புலிக்காட் ஏரி – காவேரிப்பாக்கம் இவற்றிற்கு இடைப்பட்ட பகுதியில் சுமார்  1500 ச.கி.மீ. அளவிற்கு டெல்டா ஒன்று உருவாகியுள்ளது. ஆனால் தற்போது அங்கே பெரிய ஆறு எதுவும் பாயவில்லை; கூவம், கொசத்தலையாறு , அடையாறு போன்ற சிற்றாறுகள் தவிர. 


இந்த சிற்றாறுகளால் இத்தனை பெரிய டெல்டா உருவாகியிருக்க முடியாது எனக் கூறும் ப்ருஸ் ஃபுட், ‘முற்காலத்தில் பாலாறு, காவேரிப் பாக்கம் பகுதியிலிருந்து, வடகிழக்கு திசையில் பாய்ந்து புலிக்காட் ஏரியின் தென்புறத்தில் கடலில் கலந்திருக்கக் கூடும்; பின்னாளில் புவியியல் காரணங்களால் திசை மாறி தற்போது சென்னையிலிருந்து 70 கி.மீ தெற்கே கடலில் கலக்கிறது',   எனும் கருத்தை முன் வைக்கிறார்.  இவர் காலத்தில் வானூர்தியிலிருந்து எடுக்கப்பட்டப் புவிப்படங்களோ, செய்கோள் பதிமங்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



செய்கோள் பதிமங்கள் இன்றைய புவியியலாளர்களுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வரப்பிரசாதம். இவற்றை உற்று நோக்குகையில் காவேரிப்பாக்கம்  அருகேயிருந்து வடகிழக்கு நோக்கிச் செல்லும் ஆற்றின் தொல்தடச்சுவடுகள்  தெளிவாகத் தெரிகின்றன. திருவான்மியூருக்கும் புலிக்காட் ஏரிக்கும் இடையே விரிந்திருக்கும் டெல்டாவின் மேற்கு முனை (டெல்டாவின் துவக்கப் பகுதி) காவேரிப்பாக்கதிற்கு அருகே பாலாற்றில்தான் ஆரம்பிக்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது ப்ருஸ் ஃபுட் அவர்களின் கருதுகோள் சரியே எனத் தோன்றுகிறது.


திருவள்ளூர் மாவட்டத்தில் கொசத்தலையாற்றின் மருங்கே அமைந்துள்ள அத்திராம்பாக்கம், பட்டரைப் பெரும் புதூர், திருவள்ளூர், மேட்டுப்பாளையம்,வடமதுரை போன்ற இடங்களில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்குச் சான்றுகளாக பல தடயங்களை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்புகளுக்கு பிள்ளையார் சுழி போட்டதும் ப்ருஸ் ஃபுட் அவர்கள்தான். ‘நதிகளை நாகரிகத்தின் தொட்டில்கள்’ என்பர் வரலாற்று அறிஞர்கள். கற்கால மனிதர்கள் வாழ்ந்தபோது பெரிய ஆறு ஒன்று இங்கே பாய்ந்திருக்கலாம் என்பதற்கு தொல்லியல் தடயங்கள் வலு சேர்கின்றன. மீஞ்சூர் அருகேயுள்ள அரியலூரில் முற்றாக் கரி மற்றும் பெரும் மரத்துண்டுகள் கிடைப்பது, இந்தத் தொல்தடத்தில் பேராறு ஒன்று ஓடியிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. 

காவேரிப்பாக்கத்திற்கு அருகே இருந்து வடகிழக்காகப் பாய்ந்த பழைய பாலாற்றின் கிளை நதிகளோ அல்லது கிளை நதிகளின் மிச்சங்களோதான் இன்றைய கொசத்தலையாறும், கூவம் ஆறும் என்பது தெளிவாகிறது. எனில், சென்னை பழைய பாலாற்றின் கழிமுகம்தானே.  அதுசரி, பாலாறு பாதை மாறியது எப்போது?

பாலாறு பாதை மாறியது எப்போது?
காஞ்சிபுரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பதினான்கிற்கும் மேற்பட்ட திவ்யத்தலங்கள் உள்ளன, இத்தலங்களைப் பற்றிப்  பாடப்பட்ட பாடல்கள் திவ்யப் பிரபந்தத்தில் ஐம்பதிற்கும் மேல் உள்ளன. ஆனால் எங்கேயும் பாலாறு எனும் சொல் கண்ணில் படவில்லை. வெஃகாணை உள்ளது. வேகவதி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தைத் திருமால் கிடந்த கோலத்தில் தடுத்து காஞ்சியைக் காத்தார் என்பது வைணவக் கதை. ஆக, வேகவதி இருந்திருக்கிறது, பாலாறு இல்லை. எனவே, பக்தி இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் (கி.பி. 8 – 9 ஆம் நூற்றாண்டு) இன்றைய பாலாறு வேகவதி ஆற்றின் வழித்தடத்தில் பாய்ந்தது என எண்ண  இடம் உண்டு

பரணியில் பாலாறு:
தமிழ் இலக்கியங்களில், கலிங்கத்துப்பரணியில்தான் முதன் முதலில்  பாலாறு காணப்படுகிறது. காஞ்சியிலிருந்து கலிங்கம் நோக்கிப் படையெடுத்து செல்லும் கருணாகரத் தொண்டைமான் , வடபெண்ணையாற்றை அடையும் முன் வழியில் எந்தெந்த ஆறுகளைத் தாண்டினான் எனும் குறிப்பு, பரணியில் 376 ஆவது பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
பாலாறு  குசைத்தலை பொன் முகரிப் பழவாறு 
 படர்ந்தெழு கொல்லிஎனும் 
நாலாறும் அகன்று ஒரு பெண்ணை எனும் 
 நதியாறு கடந்து நடந்துடனே .......                                                         
                                           (கலிங்கத்துப்பரணி 367).
கலிங்கத்துப் பரணியின் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி. அப்போது காஞ்சிக்கு வடக்கே பாலாறு ஓடியிருக்கிறது. அதாவது வேகவதியாறு, பாலாறு எனும் பெயரை அப்போது பெற்றிருக்கிறது. இந்தப் பாட்டில் குசத்தலையாறும் குறிக்கப்படுவதால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாலாறு பாதை மாறிவிட்டது என அறிய முடிகிறது. 

பெரிய புராணத்தில் பாலாறு:
பன்னிரண்டாம்  நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில், 'திருக்குறிப்புத் தொண்ட நாயனார்'என்ற பகுதியில் பாலாற்றின் வளமும் அது பாய்ந்தோடிய தொண்டை மண்டலத்தின் செழிப்பையும், மக்களின் வாழ்க்கை முறைகள், சைவ தலங்களின் சிறப்புகளையும் 11 பாடல்களில் விளக்கியுள்ளார்.
'துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரிபால்
பொங்கு தீர்த்தமாய் நந்திமால் வரைமிசைப் போந்தே
அங்கண் நித்திலம் சந்தனம் அகிலோடு மணிகள்
பங்க யத்தடம் நிறைப்பவந் திழிவது பாலி' – 1098
(விளக்கம்: உயர்ந்த தவமுடைய வசிட்ட முனிவனிடமிருக்கும் காமதேனு சொரிந்த பாலானது, பெருகும் தீர்த்தமாக உருபட்டு நந்தி மலையினின்றும் இறங்கி, அங்குள்ள முத்துக்களையும் சந்தனம் அகில் முதலானவற்றுடன், மணிகளையும் கொணர்ந்து தாமரைக் குளங்களை நிறைக்குமாறு கீழ் நோக்கி ஓடி வருவது பாலாறு). 



பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சியை ஆண்ட மன்னனின்  ஆணைப்படி, குண்டு கோபால் ராவ் என்பவர் , பாலாற்றின் பாதையை மாற்றி அமைத்தார் என்று செவிவழிச் செய்தி ஒன்று உள்ளது. ஆனால் சான்றுகள் ஏதும் இல்லை. 

காவேரிப்பாக்கத்திற்கு  மேற்கே, ஓடை ஒன்று “விருத்தக்க்ஷிரா நதி’  எனும் பெயரில் அழைக்கப்படுவதாக ப்ருஸ் ஃபுட் தனது நினைவேட்டில் குறிப்பிடுகிறார். இந்த வட சொல்லின் தமிழாக்கம் ‘பழைய பாலாறு’ என்பதே.   


________________________________________________________________________
தொடர்பு: சிங்கநெஞ்சம் சம்பந்தம் (singanenjam@gmail.com)




No comments:

Post a Comment