Sunday, January 14, 2018

ஓலைச்சுவடியில் தமிழ்ப்புத்தாண்டு



——  ருத்ரா இ பரமசிவன்.  

 

விசும்பின் விரியிழைத் தோகையன்ன‌
மஞ்சின் வரிகொடு ஓவுபல காட்டி
விடியல் இன்று கலித்தே ஆர்த்தது.
குரல்கதிர் பரிதி கடல் எனும் பழனம்
உழுதது கண்டே நனிகளி உற்று
நனந்தலைப் படப்பை நடந்தேன் ஆங்கு.
அலவன் வரிய மயிரிய மணற்கண்
எழுதிய போன்ம எழுத்துக்கள் ஊர‌
கண்டேன் "தமிழ் வாழிய" என்றே!
ஆழிமகள் அடியொற்றித் தந்த‌
அனிச்சம் தூவிய மென்னகை அலையும்
அழிக்க ஒண்ணா அன்பொடு தடவி
வாழ்த்தும் வாழ்த்தும் ஈண்டு ஓர்
"தமிழ்ப்புத்தாண்டு! தமிழ்ப்புத்தாண்டு!"அஃதின்
விண் இமிழ் நுண் ஒலி எங்கணும் கேட்கும்.
கேள்மின்! கேள்மின்! மின் தமிழ் நண்பர்காள்!
மண்ணும் விண்ணும் மற்றும் எல்லா
மலர்தலை உலகம் யாவும் இது கேட்கும்.
தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க!
தமிழ் என்றென்றும் வாழ்கவே!


______________________________________________

அருஞ்சொற்பொருள்:

மஞ்சின் வரி — மேகத்தின் படிமக்கீற்றுகள்
ஓவு — ஓவியம்
குரல்கதிர் — கதிர்க்கற்றைகள்
பழனம் — வயல்
நனந்தலை படப்பை — விரிந்த வெளியும் நெய்தல் சார்த்த வனமும்
அலவன் வரிய — நண்டுகள் நடந்த வரிச்சுவடுகள்
மயிரிய மணற்கண் — மெல்லிய இழைகளை ஏற்படுத்தினார் போன்ற கடற்கரையின் (பட்டு)மணல் படர்ந்த இடம்
எழுதிய போன்ம — எழுதினாற் போலும் உள்ள காட்சி
ஆழிமகள் அடியொற்றி — கடல்மகள் அடியெடுத்து நடந்து
அனிச்சம் தூவிய மென்னகை அலையும் — அனிச்ச மலர்கள்  தூவியதைப்போன்ற மெல்லிய நகை புரிந்து வரும் அலைகள்





________________________________________________________________________
தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com) 

No comments:

Post a Comment