Friday, January 12, 2018

ஆண்டாள்


——  ருத்ரா இ பரமசிவன்.   




கோவில்களை
விட்டிறங்கி
மூலை முடுக்கெல்லாம்
இப்போது ஒலிக்கிறாள்.
அவள் பற்றிய
சொல்லையும்  பொருளையும்
உரைத்துப் பார்ப்பதில்
சொல் தான் தேய்ந்து போகும்.
அந்த வெளிச்சம் மறையாது.

ஒருவன்
என்னைக் கழுதை என்று
சொல்லி விட்டுப்போனான்.
அப்போது நான் ஒரு கழுதை  தான்.
ஆயிரம் பேர் வந்து
"உன்னைக் கழுதை "என்று சொன்னானாமே
என்று கேட்ட போது
நான் ஆயிரம் கழுதை ஆகிவிட்டேன்.
எறும்பு புற்றை இமயமலை ஆக்கும்
"பஜனை" சத்தங்களால்
செவிகள் கிழிவது தான் மிச்சம்!
கேவலம்
என்று ஒரு உபனிஷதம் இருக்கிறது.
கைவல்யம் என்ற பெயர்ச்சொல்
ஆகி
அது பிரம்மம் மட்டுமே
என்று விரித்து உரைக்கிறது.
 பிரம்மம் என்ன
கேவலமாகி விட்டதா?
கேனோன் (கேணையன் )
என்றோர் உபனிஷதமும் உண்டு.
பிரம்மன் யார் என்று
அது
கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
அவன் என்ன கேணயனா?

ஒரு கல் வந்து
கல்லாக இருக்கும்
கடவுளிடம்
அர்ச்சனை செய்யவந்தாலும்
இந்தக்  கல்  அந்தக்கல்லிடம்
"உன் கோத்திரம்"
என்ன என்று கேட்கிறது.
ஆண்டாள்
தன் விண்ணப்பத்தை
ஆண்டவன் என்னும்
அந்தப் பெருமாளிடம்
அர்ச்சனையாய் வைத்திருந்தாலும்
என்ன கோத்திரம்
என்ற கேள்வி தானே வந்திருக்கும்.
அந்த மனவெளி உணர்ச்சியின்
"ஹெலூஸினேஷன்"
ஒரு ரசம் பிழிந்த தமிழாய்
நமக்குக் கிடைத்திருக்கிறது.
தமிழின் வரப்பிரசாதம்
என்று நாம் கன்னத்தில் ஒற்றி
வணங்குவதும்
அற்புதம் தானே.

கடவுளை
"அஜாதம் அவர்ணம்" என்றெல்லாம்
போற்றிப் போற்றி என்று
பாடும்போது
அவன் பிறப்பும்
ஒரு வேரற்று தானே தொங்குகிறது.
பக்தி என்பதே பக்குவம்
என்பதன் மறு வடிவம்
பக்குவமற்ற பக்தியை
எப்படி அழைப்பது?
வேண்டாம்!
இருட்டில் இருப்பவர்கள் தான்
தீவட்டிகள் தூக்கி அலையவேண்டும்.



படம் உதவி: விக்கிப்பீடியா 
https://commons.wikimedia.org/wiki/File:Lord_Krishna_with_his_head_on_the_lap_of_the_Alvar_saint,_Andal.JPG


________________________________________________________________________
தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com) 








No comments:

Post a Comment