Sunday, August 9, 2015

அழிந்தது யானை மரம்!

யானை மரம்...


விழுப்புரம் வடக்கு இரயில்வே காலனி பகுதிக்குச் செல்பவர்களின் கண்களில் இருந்து இந்த மரம் தப்பியிருக்கவே முடியாது. அவ்வளவு பிரம்மாண்டமாக, பரந்து விரிந்தக் கிளைகளுடன், இரயில்வே இருபாலர் பள்ளியின் பின்புறம் காட்சியளித்து வந்தது இந்த மரம்.

இம்மரத்தைக் கற்பக விருட்சம் என்பர். “ஐந்தருக்களில் ஒன்று. தேவர்கள் பாற்கடல் கடைந்த காலத்தில் தோன்றியது. இது விருஷவுருப் போன்றது” என கற்பக விருட்சத்திற்கு விளக்கம் கொடுக்கிறது அபிதான சிந்தாமணி.

அட, நம்ம ஊரிலும் கற்பக விருட்சமா? என ஆவலோடு எத்தனைப் பேர் இந்த மரத்தைப் பார்த்திருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் வடஇந்தியாவில் இருந்து இந்த வழியாக இரயிலில் வந்த சாதுக்கள் சிலர், இந்த மரத்தின் கீழ் சில மணி நேரம் தியானித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

இந்த மரத்தின் அடித்தோற்றம் யானையின் வடிவத்தைக் கொண்டிருந்ததால் இதற்கு ‘யானை மரம்’ என்றும் பெயர்.



இதுகுறித்து மிகவும் ஆய்வு செய்த விழுப்புரம் தாவரவியல் பேராசிரியர் (ஓய்வு) திரு. பீம.தனஞ்செயன்,

“பாம்பகேஸி எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மரத்திற்கு ‘ஆடன் சோனியா டிஜிட்டோ’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் பிறப்பிடம் ஆப்ரிக்கா. பண்டைய காலத்தில் மனிதர்களுக்கு வீடாகவும், அவர்கள் உடுத்தும் ஆடையாகவும், உணவாகவும் பயன்பட்டது” என விளக்கமளித்திருந்தார்.  இந்த விவரம் அடங்கியப் பலகை மரத்திற்கு அருகில் நடப்பட்டும் இருந்தது. மாணவர்களும் மற்றவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக.

கடந்த 2010ஆம் ஆண்டில் யானை மரத்தைப் படம்பிடித்த நான், அழிந்து கொண்டிருக்கும் இந்த அரிய தாவர இனத்தை பாதுகாக்க தாவரவியலாளர்கள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன். 2011இல் ஏற்பட்ட தானே புயலில் பிரம்மாண்ட இம்மரத்தின் கிளையொன்று முறிந்தது. பின்னர் படிப்படியாக தன் சுயத்தை இழந்து கொண்டே வந்தது யானை மரம்.

நேற்று காலை இரயில்வே குவார்ட்டர்சுக்கு சென்ற நான், யானை மரம் இப்போது எப்படி இருக்கிறது என பள்ளியின் காம்பவுண்டு சுவர் வழியாக எட்டிப் பார்த்தேன்.




அய்யோ...!

 ________________________________________________________ 
 
கோ.செங்குட்டுவன் 
ko.senguttuvan@gmail.com
________________________________________________________

No comments:

Post a Comment