Wednesday, June 1, 2022

திரு. ஹேமச்சந்திரன் அவர்களுக்கு அஞ்சலி





தனது சுய முயற்சியின் காரணத்தினாலும் வரலாற்றின் மீது கொண்ட ஆர்வத்தினாலும் ஒரு தனி மனிதர் ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கி செயல்படுத்த முடியும் என சாதித்துக் காட்டியவர் சென்னை விருகம்பாக்கத்தில் கடல் அருங்காட்சியகத்தை உருவாக்கிய திரு. ஹேமச்சந்திரன் அவர்கள். அவர் இன்று காலமானார் என்ற அதிர்ச்சியான செய்தி கிட்டியது. அவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் அஞ்சலிகள்.

வரலாற்று அறிஞர் கடலோடி நரசையா தான் எனக்கு இவரை முதலில் அறிமுகப்படுத்தியவர்;  சென்னையில் விருகம்பாக்கத்தில் இருக்கின்ற கடல் அருங்காட்சியகத்தை உருவாக்கி  இந்த அருங்காட்சியகத்தைச்   செயல்படுத்தி வந்தார் திரு. ஹேமச்சந்திரன் அவர்கள்.    அவரது அருங்காட்சியகத்திற்குத் தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினரோடு நந்தனம் உட்பட  3 கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்களையும் ஒருங்கிணைத்து ஒரு வரலாற்றுச் சுற்றுலாவை முன்னர் ஏற்பாடு செய்திருந்தோம்.   இந்த நிகழ்ச்சியில் அப்போதைய தமிழக அருங்காட்சியகங்களின் ஆணையர் டாக்டர்.சண்முகம் இஆப (தற்போது முதலமைச்சரின் தனிச் செயலர்களில் ஒருவர்) நேரில் வந்திருந்து மாணவர்களுக்கு உரையாற்றினார்.


தான் பணி ஓய்வு பெற்ற நாளிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு மிகத்தீவிரமாக கவனத்துடன் பக்கிங்ஹாம் கால்வாய், கலங்கரை விளக்கங்கள், தமிழக கடற்கரையோர எச்சங்கள், பல்வேறு வகை ஆவணங்கள் எனத் தனது சொந்த சேகரிப்பாக ஒரு அருங்காட்சியகத்தை தானே உருவாக்கியவர்.

அருங்காட்சியகத்தில் உள்ள ஆவணங்கள் வரலாற்று மாணவர்களுக்கும் வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் நிச்சயமாக பயன் அளிக்கக்கூடியவை.

இவரது பணிகளைப் பாராட்டி தமிழக அரசின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறை அவரது சேகரிப்புக்களுக்கு முறையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று  கேட்டுக் கொள்கின்றோம்

அருங்காட்சியக முகவரி:
THE MARITIME HERITAGE MUSEUM,  NO 8, ELANGO NAGAR ANNEXE, VIRUGAMBAKKAM, CHENNAI 600092.

-முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

அச்சுப் புரட்சியும் உலகளாவிய பதிப்பு முயற்சிகளும்



   —   முனைவர் க. சுபாஷிணி 


குட்டன்பெர்க் என்ற பெயர் பதிப்பகம் அல்லது ஆய்வுலகம் மட்டுமன்றி அச்சு நூல்களைக் கையில் எடுத்து அதனைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய ஒரு பெயர். யோகானஸ் குட்டன்பெர்க் (Johannes Gensfleisch zur Laden zum Gutenberg) என உலகளாவிய அளவில் அச்சுப் புரட்சியின் தந்தை என அறியப்படுகின்ற  குட்டன்பெர்க் அவர்களது பிறந்த இல்லம் மற்றும் அருங்காட்சியகம் ஜெர்மனியின் மைன்ஸ் நகரில் அமைந்திருக்கின்றது.  



இவர் பிறந்த தேதி சரியாக அறியப்படவில்லை என்றாலும் 1400 ஆம் ஆண்டு வாக்கில் பிறந்தவர் என்பதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 3 பெப்ரவரி 1468 அன்று அதாவது, தனது அறுபத்து எட்டாவது வயதில் அவர் மறைந்தார். தனது வாழ்நாளில் ஒரு கண்டுபிடிப்பாளராக, ஒரு பொறியியலாளராக, அச்சுப் பணியாளராக, பதிப்பாளராக, தச்சராக எனப் பல துறைகளில் தடம் பதித்தவர் இவர். இவரது அச்சுயந்திரக் கண்டுபிடிப்பு  ஐரோப்பாவுக்கு அச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்தி அது உலகம் முழுவதும் பரந்து விரிந்து உலகளாவிய அளவில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தக் காரணமாகியது.

இவரது அச்சு இயந்திரங்கள் ஏற்படுத்திய தாக்கம் இத்தாலியின் ரோம் நகரத்தில் மையம் கொண்டிருந்த வாட்டிகன் அரசை எட்டியது. ஐரோப்பா மட்டுமன்றி உலகம் முழுவதும் பைபிள் அச்சாக்கம் செய்யப்பட்டு அவை உலகம் முழுவதும் செல்ல வேண்டும் என்ற எண்ணம் கத்தோலிக்க அரசுக்கு தோன்றியது. இதன் காரணமாக அச்சு இயந்திரங்கள் ஜெர்மனியில் உருவாக்கப்பட்டு கப்பலில் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட வரலாற்று நிகழ்வும் நிகழ்ந்தது.




இதன் தொடர்ச்சியில் இந்தோனேசியாவிற்குச் செல்வதற்காக வந்த ஒரு கப்பல் கேரளாவின் கொச்சின் பகுதியில் நிறுத்தப்படவே அங்கிருந்த பாதிரிமார்கள் அந்த அச்சுயந்திரம் தங்களது தமிழ் நிலத்து சமயப் பணிகளுக்குத் தேவை என்ற காரணத்தினால் அதனைக் கேட்டுப் பெற்று தமிழின் முதல் அச்சு நூலை உருவாக்கினர். அதற்கு முன்பே 'கார்டிலா' என்ற ஒரு நூல் ரோமானிய தமிழ் உச்சரிப்புடன் என்ற வகையில் வாட்டிகனில் அச்சிடப்பட்டது.  'தம்பிரான் வணக்கம்' என்ற நூலே தமிழில் வெளியான முதல் அச்சு நூல் என்ற பெருமையைப் பெறுகிறது. இது நடந்த காலம் கி.பி 16ஆம் நூற்றாண்டின் மத்திய காலகட்டமாகும்.

யோகானஸ் குட்டன்பெர்க்  தொழில் ரீதியாக அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார் என்றபோதிலும் அவரது செயற்பாடு மாபெரும் சமூகப் புரட்சிக்கு வித்திட்டது என்பதை மறுக்க இயலாது. ஆய்வுலகம் இதனை Gutenberg Revolution என்று சிறப்பித்துக் குறிப்பிடுகின்றது. இதற்குக் காரணம் நூல் வாசிப்பு என்பது ஐரோப்பாவைப் பொறுத்தவரை தேவாலயங்களிலும் அரசவை மற்றும் அரசு சார் அமைப்பிலும் மட்டுமே என்ற நிலை மாறி எல்லாத் தரப்பு மக்களும் தாள்களில் அச்சு நூல் வடிவில் கொண்டுவரப்பட்ட எழுத்துப் படிமங்களை வாசிக்கக்கூடிய வாய்ப்பை அது உருவாக்கியது எனலாம்.



இந்தியச் சூழலை எடுத்துக் கொண்டால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில், மிகக் குறைந்த அளவில், சமூகத்தில் உயர் சாதி என அறியப்பட்டோரும் அரசுகளில் மட்டுமே என்ற வகையில் ஓலைச்சுவடிகள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்தன. ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பதும், அதனை மறுபதிப்பு செய்வதும், அதனை எழுத்தாணியால் கீறி எழுதி தயாரிப்பதும் சுலபமான காரியமாக இல்லை. இதுவும் ஒருவகையில் சுவடிகள் எல்லோரையும் சென்றடைவதற்குத் தடையாக அமைந்தது எனலாம். இந்தச் சூழலில் அச்சு இயந்திரங்களைக் கொண்டு பெரிய எண்ணிக்கையில் நூல்களை இயந்திரத்தின் வழியாக பல பிரதிகளை அச்சாக்கம் செய்யும் முயற்சி நடைமுறைக்கு வந்தபிறகு பொதுமக்களும் நூல்களை வாங்கி அல்லது நூலகங்களிலிருந்து பெற்று வாசிக்கக் கூடிய வாய்ப்பு என்பது பரவலாக்கம் கண்டது.


தனது அச்சு இயந்திரம் படிப்படியாக பல்வேறு மாற்றங்களை உட்புகுத்தி இன்று நாம் காணும் பேரளவிலான  நிலையை அடைவதைக் காண  இன்று குட்டன்பெர்க் நம்மோடு இல்லை.  ஆனால் அவர் லத்தீன் மொழியில் அச்சாக்கம் செய்து உருவாக்கிய 200 பைபிள் நூல்கள் அவர் காலத்தில் அவர் சாதித்தது பெரிய  சாதனை எனலாம். அன்று 200 பைபிள் நூல்களை அவர் அச்சுப் பதிப்பாக்கம் செய்து முடிக்க மூன்று ஆண்டுகள் ஆயின.

நூல்களை அச்சாக்கம் செய்து முடித்த பின்னரும் கூட அவை மக்களை சென்றடைய சரியான திட்டமிடல் அல்லது முன்னெடுப்பு என்பது அன்று சரியாக இயங்கவில்லை.  அந்த சமயத்தில் கத்தோலிக்க சமய அமைப்பு அச்சு ஊடகத்தின் வழியே மக்களைச் சென்றடைய முடியும் என்ற எண்ணத்தை உறுதியாக நம்பியதால் பெருமளவில் பதிப்புகளைத்  தயாரித்து வினியோகிக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. அதற்கு அடுத்த நூற்றாண்டு ஜெர்மனியில் தோன்றி பின்னர் படிப்படியாக விரிவாக்கம் கண்ட லூத்தரன் சீர்திருத்தக் கிறித்துவம் தனது கருத்துக்களை வெளியிடவும் அச்சு எந்திரத்தின் துணையை நாடி அதனைப் பயன்படுத்திக் கொண்டது.  கிபி 1500 ஆண்டு வாக்கில் ஏறக்குறைய எட்டு மில்லியன் நூல்கள் ஐரோப்பாவில் இயந்திரங்களால் பதிக்கப்பட்டிருந்தன.

மார்ட்டின் லூத்தர் வாட்டிகன்  கத்தோலிக்க அமைப்புக்கு எதிராக தனது 95 கருத்துகளை தாளில் அச்சுப் பதிவாக்கி தேவாலயத்தின் வாசலில் 1517ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி ஆணி அடித்து ஒட்டி வைத்தார். கத்தோலிக்க தேவாலயத்தில் பழமைவாத சிந்தனைகள் மற்றும் அங்கு நிலவும் பிரச்சினைகளை அறிவார்ந்த வகையில் எதிர்க்கும் வகையில் அவரது கருத்துகள் அமைந்திருந்தன. இந்த அறிக்கை அக்காலகட்டத்தில் அச்சுப்பதிப்பு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. ஏறக்குறைய மூன்று லட்சம் அறிக்கைகள் 1517 முதல் 1520 வரையிலுமான காலகட்டத்தில் ஐரோப்பா முழுமையுமே விநியோகிக்கப்பட்டன.

சமய நிறுவனங்களின் கொள்கை பிரச்சாரத்திற்கு மட்டுமன்றி படிப்படியாக அச்சு இயந்திரங்களின் பயன்பாடு என்பது மருத்துவம், கல்வி அறிவியல் என்ற வகையில் விரிவாக பயன்படுத்தப்பட்டது. இதன் காரணத்தால் மொழிகளின் இலக்கணத்தில் சீர்திருத்தங்களும் சீரமைப்பு முயற்சிகளும் நிகழ்ந்தன.

இன்று நாம் ஒவ்வொருவரும் நாம் விரும்பும் வகையில் நூல்களை வாங்கி வாசிப்பது எளிமையான ஒரு நிகழ்வாக மாற்றம் கண்டுள்ளது. தகவல்களும் செய்திகளும் எல்லோருக்கும் பொது என்ற வகையில் கருத்துப் புரட்சியை எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்த்ததில் அச்சு இயந்திரங்களே அடிப்படையாகின்றன.

தமிழக் கல்வி சூழலிலும் கல்லூரி பாடத் திட்டங்களிலும் அச்சுப் பதிப்பாக்கத்தின் வரலாறு மற்றும் அது படிப்படியாக கண்ட வளர்ச்சியும் முன்னேற்றங்களும்  பற்றிய செய்திகளும் யோகானஸ் குட்டன்பெர்க் பற்றிய வரலாற்றுத் தகவல்களும் இணைக்கப்பட வேண்டும். இது கல்வித் தளத்தில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆரம்பக்கால அச்சு பதிப்பாக்க செயல்பாடுகள் மற்றும் அச்சு இயந்திரங்கள் பற்றிய அடிப்படை புரிதலை வழங்க நிச்சயம் உதவும்.




Sunday, May 29, 2022

எங்கே நிகழ்ந்தது மனிதனின் தொடக்கம்

எங்கே நிகழ்ந்தது மனிதனின் தொடக்கம்

-- முனைவர் சிவ இளங்கோ புதுச்சேரி.


          பேரண்டம் (பிரபஞ்சம்) தொடங்கிய காலம் 1350 கோடி ஆண்டுகள்; சூரியக் குடும்பம், பூமி உட்பட உருவான காலம் 450 கோடி ஆண்டுகள்; உயிரினம் தோன்றியது 380 கோடி ஆண்டுகள்; பரிணாம வளர்ச்சியில் ஊர்வன, பறப்பன, விலங்கினங்கள் தோன்றிய பின்னர் மனிதக் குரங்கினம் உருவான காலம் 70 - 60 லட்சம் ஆண்டுகள்; அதனுடைய பரிணாம வளர்ச்சியில் மனித இனம் தோன்றியது 25 லட்சம் ஆண்டுகள்; இவையெல்லாம் அறிவியலாளர்கள் நமக்கு அளித்திருக்கும் தகவல்கள். ஆனால் மனித இனம் தோன்றியது குறித்துப் பல்வேறு கருத்துகள் உலவி வருகின்றன. பொதுவான கருத்தாக, கிழக்கு ஆப்பிரிக்காவில் மனித இனம் தோன்றி, உலகமெங்கும் பரவியது என்று கூறும் அதே நேரம், மத்திய தரைக்கடல் பகுதி, ஆசியா, ஐரோப்பா, சைனா ஆகிய பகுதிகளிலும் மனித இனம் தோன்றி இருந்திருக்கக்கூடும் என்றும் அறிவியல் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக் கண்டம் என்று முன் வைக்கப்பட்ட கருத்து இன்றுவரையிலும் கருத்தாகவே உள்ளது. உலகின் முதல் நாகரிகத் தொட்டில் சுமேரியா என்பதிலும் இன்னும் சர்ச்சை தீர்ந்தபாடில்லை. காலம் பின்னோக்கிச் செல்லச் செல்லச் சான்றுகளுடன் நிறுவுதலில் ஏற்படும் நம்பகத்தன்மை முழுமையடையாமல் போவதே, 'இதுதான்' என்று அறுதியிட்டுக் கூறும் நிலையைத் தடுத்து வருகிறது. 

          மனிதன் முதலில் தோன்றிய இடம் இருக்கட்டும்; முதன் முதலில் தோன்றிய மனித இனம் எது என்பதே இன்னும் ஆய்வில் தான் உள்ளது(Indianexpress.com). அதாவது மனித இனம் என்பது ஒன்றல்ல என்றும், இதுவரை சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மனித இனங்கள் தோன்றி வாழ்ந்து வந்துள்ளன என்றும் கூறுகிறார்கள். இன்றைய உலகில் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் 'ஹோமோ சேப்பியன்ஸ்' (Homo sapiens) இனத்தைச் சேர்ந்தவர்கள். இதில் ஹோமோ என்பது மனித இனம் என்றும், சேப்பியன்ஸ் என்பது அவ்வினத்தின் பரிணாம வளர்ச்சிப் பிரிவான 'அறிவாளன்' என்றும் பொருள்படும். நமக்கு முன்னதாக 'ஹோமோ எரக்டஸ் (Homo erectus), 'ஹோமோ புளோரேசியன்சிஸ்' (Homo floresiensis), 'ஹோமோ நியாண்டர்தால்' (Homo neanderthalensis), 'ஹோமோ சோலயன்சிஸ்' (Homo soleansis), 'ஹோமோ டெனிசோவா' (Homo denisovans), 'ஹோமோ ரூடால்பென்சிஸ்' (Homo rudolfensis), 'ஹோமோ எர்கஸ்டர்' (Homo ergaster) உட்பட சில மனித இனங்கள் தோன்றி இதே பூமியில் வாழ்ந்து இருக்கின்றனர். அவர்கள் நம் இனமான ஹோமோ சேப்பியன்ஸ் காலத்திலும் வாழ்ந்திருக்கின்றனர். அதேநேரம், இன்று, இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் (2021) வாழ்ந்து வரும் ஒரே மனித இனம் ஹோமோ சேப்பியன்ஸ் மட்டுமே என்று வலியுறுத்திக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள். பிற மனித இனங்கள் என்ன ஆனார்கள் என்பது ரகசியமாகவே இருந்து வந்தாலும், அண்மைக்காலங்களில் ஆய்வுகள் வழி வெளிப்பட்டு வருகின்றன (சேப்பியன்ஸ்:2018:16-22).

          அறுபது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதக் குரங்கு இரண்டு பெண்களை ஈன்றது. அதில் ஒன்று, இன்றும் வாழும் சிம்பன்சி என்னும் மனிதக் குரங்கின் மூதாதையர் ஆனது. மற்றொன்று, இன்றைய மனித (ஹோமோ) இனத்தின் மூதாதையர் ஆனது. சிம்பன்சி இனத்தில் பல பிரிவுகள் இருப்பதைப் போல் மனித இனத்திலும் பல பிரிவுகள் உண்டாயிற்று. இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட மனித இனங்கள் தோன்றி வாழ்ந்ததாகப் புதைபடிமங்கள் வழி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆய்வுகள் தொடர்ந்தால் இன்னும் சில மனித இனங்கள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புள்ளது. இக்கட்டுரை எழுதப்பட்ட இக்காலத்தில் (ஆண்டு- 2021) புதியதாக ஒரு மனித இனம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. சீனாவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மண்டை ஓடு, 1,46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முற்றிலும் புதிய மனித இனத்தைச் சேர்ந்ததாகவும், இப்புதிய இனத்திற்கு 'ஹோமோ லாங்கி' (Homo longi) எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.[1] ஆனால் இவை எதுவும் இன்றைய வாழ்வில் இல்லை, ஒன்றைத் தவிர. அதுதான் நம் இனமான மனித (ஹோமோ) அறிவாளன் (சேப்பியன்ஸ்). இன்றைய மனித வர்க்கத்தை 'அறிவாளன்' என்று குறிப்பிடக் காரணம், ஹோமோ சேப்பியன்ஸ் மற்ற விலங்கினங்கள் அனைத்தையும் வெற்றி கொண்டதோடல்லாமல், பிற மனித வகைகளையும் வெற்றி கொண்டதால்தான். 

          இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றி, எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்பிரிக்காவை விட்டு ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்து வந்த ஹோமோ சேப்பியன்ஸ்கள், தங்கள் அறிவால் ஆன ஆற்றல்களால் பிற அனைத்து இனங்களையும் தோற்கடித்தும், கொன்றழித்தும் இன்றைய உலகின் முதல் ஆற்றல் மிக்கவர்களாகத் திகழ்கின்றனர். அன்றோ கல் ஆயுதம். இன்றோ அணு ஆயுதங்கள். இது பரிணாம வளர்ச்சியையும் தாண்டிய அறிவியல் வளர்ச்சி. இயற்கைக்கு மாறான வளர்ச்சி. ஹோமோ சேப்பியன்ஸ்களின் இவ்வளர்ச்சியில், இத்தனை நாள் மறைந்திருந்த இரண்டு நிலைகள் உள்ளதாக ஆய்வுலகம் குறிப்பிடுகிறது. 

          ஒன்று 'இனக்கலப்புக் கோட்பாடு'. ஹோமோ நியாண்டர்தால், ஹோமோ எரக்டஸ் உட்படத் தங்கள் புலம் பெயர்வால், பிற மனிதர்களோடு கொண்ட உறவால், மனித இனங்கள் கலந்து இன்றுள்ள ஒரே மனிதக் கூட்டமாக மாறி உள்ளன என்பது ஒரு கோட்பாடு. மற்றொன்று, மாற்றீட்டுக் கோட்பாடு. அதாவது, பிற மனித இனங்கள் அனைத்தையும் தாங்கள் கொன்றொழித்துத் தங்களை மட்டும் வெற்றியாளர்களாக நிலைநிறுத்திக் கொண்டனர் என்னும் கோட்பாடு (சேப்பியன்ஸ்:2018:16, 17). இரண்டுமே கோட்பாடுகள் தான். இரண்டிலுமே உண்மை இருக்கக்கூடும். ஆனால் தற்போதைய ஹோமோ சேப்பியன்ஸ் (மனித அறிவாளன்) இனம், தாங்கள் வேறு எதனுடனும் தொடர்பில்லாத தனி மனித இனம் என்று கூறப்படுவதையே விரும்புவதால், இரண்டாவது கோட்பாடு, அதாவது பிற மனித இனங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்ற கோட்பாடு வலுவாகப் பரந்திருக்கிறது. அதுவும் சில காலம் தான். டி.என்.ஏ. என்னும் மரபணுச் சோதனைகளில் நியாண்டர்தால் மனித இனத்தின் மரபணுக்கள் 2010 ஆம் ஆண்டில், தற்போதைய மனித இனத்தில், கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும் விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஒரு சில இடங்களில் எங்காவது இனக்கலப்பு (நான்கு விழுக்காடு வரை - சேப்பியன்ஸ்:2018:19) நிகழ்ந்து இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பிற மனித இனங்கள் இன்று யாரும் இல்லை என்று நிறுவுவதில் பெரும்பாலோர் ஆர்வமாக உள்ளனர்.

          உயரம் - குள்ளம், பருமன் - ஒல்லி, கருப்பு - வெள்ளை போன்ற வேற்றுமைகள் இன்றும் பிற மனித இனத்தின் எச்சங்கள் நம்முடன் வாழ்வதைக் குறிப்பதாக ஒரு சில எதிர்வாதம் இருந்தாலும், இன அழிப்பு வாதத்தை எல்லோரும் விரும்பி ஏற்கிறார்கள். இதற்காக இல்லாத கடவுள்களை இவர்களே உருவாக்கி, கடவுள் மனித இனத்தை உருவாக்கியதாகக் கற்பித்துத் தனித்தனிச் சமயம், மதம், கூட்டம் என்று கூறி, அவற்றிலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று பெருமை கொள்வதையே மனித அறிவாளனான சேப்பியன்ஸ் இனம் விரும்புகிறது. சிலர் ஆதாம் ஏவாளில் இருந்து வந்த இனம் என்றும், சிலர் உருவமற்ற இறைவனால் படைக்கப்பட்டோம் என்றும், சிலர் உருவமுள்ள இறைவனால் படைக்கப் பட்டோம் என்றும், சிலர் தங்களைச் சூரிய, சந்திர வம்சம் என்றும் கட்டுக் கதைகளைக் கூறித் தங்களைச் சேப்பியன்ஸ் (அறிவாளன்) என்பதிலிருந்து வேறுபடுத்திக் கொள்வதில் ஆவேசமும், வெறியும் கொள்கிறார்கள். இன்றும் காட்டப்படும் ஆவேசமும், வெறியும் ஒரு காலத்தில் இவர்கள் பிற இனங்களைக் கொன்றழித்து இருப்பார்கள் என்பதைப் பெரிதும் நம்ப வைக்கின்றன. வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த கொடூரமான மதச் சண்டைகளும், இன்றும் நிகழ்ந்து வரும் மதக் கலவரங்களும் அவற்றை நிரூபிக்கின்றன. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஹோமோ சேப்பியன்ஸ் (மனித அறிவாளன்) இனத்தில் எல்லோருமே மதம் பிடித்தவர்களாகவும், இரக்கமற்றவர்களாகவும் இருந்திருக்கிறார்களா என்றால் இல்லை. மகாவீரர், புத்தர் போன்ற பொறுமையையும், அன்பையும் போதித்த உண்மையான அறிவாளர்களும் இருந்திருக்கின்றனர். அவர்களும் ஹோமோ சேப்பியன்ஸ் இனம்தான்.

          வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட ஹோமோ சேப்பியன்ஸ் உள்ளிட்ட பிற மனித இனங்களின் வாழ்க்கை முறையையும், பண்பாட்டையும் பற்றி அறிந்து கொள்ள அதிகமான சான்றுகள் ஏதும் இல்லை. அவர்கள் பயன்படுத்தியதே கற்கருவிகள் தான். இந்தக் கற்கருவிகளை வைத்தே பூமியில் வாழ்ந்த மனித இனங்களின் காலத்தையும் கணிக்கும் நிலைதான் இன்றைய மனித இனத்தின் வரலாறாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. கற்கருவிகள் குறித்துப் பல கதைகள் உண்டு. பழங்கால மனிதர்கள் பற்றிய ஆய்வுத் தகவல்கள் இல்லாத அக்காலத்தில், கி.பி. 1800 ஆம் ஆண்டில், அவர்களுடைய ஆயுதங்கள் பற்றிக் கேள்விப்பட்ட ஜான் பிரெரே என்பவர் கற்கோடரியின் படம் ஒன்று வரைய, இங்கிலாந்து பத்திரிகை ஒன்று அதை வெளியிட்டது. அதைப் பார்த்து மக்கள் பயந்ததே அதிகம். இவை கடும் சீற்றத்துடன் கூடிய புயலின் போது வானத்தில் இருந்து விழுந்ததாக மக்கள் நம்பினார்கள். அதனை இடிக் கற்கள் என்றும் கூறினார்கள். மின்னல் தாக்கியதால் நிலத்திற்குள்ளிருந்து மேற்பரப்பில் வந்ததாகப் பேசிக்கொண்டார்கள். இதனால் பயந்து போய்க் கற்கோடரியின் வடிவத்தைத் தாயத்து போல் அணியும் பழக்கமும் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் கற்கோடரியின் தொடர் பயன்பாடு இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. சேர்வராயன் மலைப் பகுதிகளில் உழவு செய்யும்போது கிடைத்த கற்காலக் கோடரிகளை இடியாக விழுந்தவை என்று எண்ணி மரத்தடிக் கோவில்களில் வைத்து தெய்வீகக் கல்லாக வணங்கி வருகின்றனர் (ஏற்காடு இளங்கோ:2017:67,111). கல்லாலான கோடரியை மட்டும் பார்க்க வேல் வடிவத்தில் காணப்படும். அதனுடன் ஒரு மரக்கிளை அல்லது மூங்கில் வைத்துக் கட்டினால் அது வேல் ஆயுதம் தான். வேலன் வெறியாட்டம் என்பது நாட்டையும், ஊரையும் காக்கும் வீரர்களுக்காக நடத்தப்படும் ஒரு சடங்காகச் சங்க காலத்தில் இருந்தது. அவர்கள் உயிர்த் தியாகம் செய்தால் நடுகற்களில் அவர்கள் உருவம் பொறித்து வணங்கப்படும். அவர்கள் கையில் இருந்த அந்த ஆயுதம் தான் வேலாயுதம். இது வேல் வடிவம் கொண்ட கற்கோடரியின் நீட்சியாக இருக்கக்கூடும். உருவ வழிபாட்டின் தொடக்கமாக இந்தக் கற்கோடரிகள் (வேல்) இருந்திருக்கலாம்.

          எது எப்படியோ, மனித இனம் தோன்றியது ஆப்பிரிக்காவில் தான் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர். மனித இனத்தின் பல வகைகளும் அங்கு தான் தோற்றம் பெற்றன. எழுபது முதல் அறுபது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றிய மனித இனத்தின் சில வகையினர், இருபது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவை விட்டுப் புலம் பெயரத் தொடங்கினர். நில வழியாக அவர்கள் ஆசியா, ஐரோப்பா, சீனா, தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளிலும், கடற்கரை  வழியாகத் தென் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் பரவினர். எழுபத்தையாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அவர்கள் தெற்காசிய நாடுகளுக்குப் பரவியதாகக் கூறப்படுகிறது. இலங்கையில் 34,000 ஆண்டுகளுக்கு முன்பும், வட இந்தியப் பகுதிகளில் உத்தரப் பிரதேசம் பெலான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் 18,000 ஆண்டுகளுக்கு முன்பும் இவர்கள் பரவி இருந்தனர் என்பதாகப் பல்வேறு ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன (Dr. V. Selvakumar: 2010:17-36).

          இப்படியாக, இந்தியத் துணைக்கண்டத்தில் பரவியிருந்த இனம்தான், இக்கண்டத்தின் பூர்வகுடிகள் என்று கூறப்படுகிறது. ஆனால் இக்கண்டத்திற்கென்றுச் சொந்தப் பூர்வகுடி மக்கள் குறிப்பாகத் தென்னிந்தியா எனப்பட்ட அன்றைய தமிழகத்தில் பூர்வகுடி மக்கள் இருந்தனர் என்றும், அவர்கள் குமரிக்கண்டம் அல்லது இலெமூரியா என்ற கண்டத்தோடு இணைந்திருந்தனர் என்றும் விலங்கியல் ஆய்வாளர்களால் 19 ஆம் நூற்றாண்டில் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குமரிக்கண்டத்தைக் கடல் கொண்டபோது எஞ்சியிருந்த தமிழ் இனத்தவர் தான் தற்போதைய தமிழ் நாட்டினர் என்று தமிழ் இலக்கியங்களை மேற்கோள் காட்டித் தமிழறிஞர்களான பாவாணர், அப்பாதுரையார் போன்றோர் கருத்துரைத்து வந்தனர். ஆனால்  1915 ஆம் ஆண்டில், ஆல்பர்ட் வெகனர் என்ற ஜெர்மானியர் 'பாஞ்சியா' (Pangaea) என்னும் கோட்பாட்டை முன்வைத்து, அது வரலாறு, தொல்லியல் ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட பிறகு, குமரிக்கண்டக் கோட்பாடு கிட்டத்தட்ட கைவிடப் பட்ட ஒன்றாக ஆகிவிட்டது. இன்று உலகில் உள்ள ஏழு பெரிய கண்டத் திட்டுகளும் ஒருகாலத்தில் ஒன்றாக இருந்து, 22.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரியத்தொடங்கி, இன்று தனித்தனியாக ஏழு கண்டத் திட்டுகளாக நிலை பெற்றுள்ளன என்பது தான் 'பாஞ்சியா' கோட்பாடு. இக்கோட்பாட்டில் குமரிக்கண்டம் இல்லை. கிட்டத்தட்ட இக்கோட்பாடு அனைத்து அறிவியலாளர்களும் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது.[2] ஆனாலும் திராவிட மொழிக் குடும்பத்தினர் இந்தியத் துணைக்கண்டத்தின் பூர்வகுடி மக்களே என்ற ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், சிந்துவெளி முதற்கொண்டு தென்னிந்தியா வரையில் பரவியிருந்தவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து புலம் பெயர்ந்த திராவிடர்களே என்று மரபியல், மொழியியல் கூறுகளை வைத்து நிறுவும் ஆய்வுகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன (Dr. V. Selvakumar: 2010:33-35).

          வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை வலுவான சான்றுகளுடன் விளக்கவும், நிறுவவும் வாய்ப்பில்லை. பேரண்டம், சூரியக் குடும்பம், பூமி, உயிரினங்கள், மனித இனங்கள் இவை எல்லாமே வரலாற்று நிகழ்வுகள் தான். இவற்றிற்கெல்லாம் வரலாறு இருந்தாலும் அவை உருவாக்கப்பட்ட வரலாறாக இல்லாமல் இயற்கையோடு இயைந்த வரலாற்றைக் கொண்டவை. அதற்கு மாறான வரலாறு என்பது மனித இனத்திற்காக மனிதர்களால் உருவாக்கப் பட்ட வரலாறாக அதுவும் வென்றவர்களின் வரலாறாகக் கிடைக்கிறது. அந்த மனித இனத்திலும் எந்த இனம் அறிவு சார்ந்து செயல்பட்டதோ அப்போதிலிருந்து தான் அவ்வரலாறு தொடங்குகிறது. அவற்றிலிருந்து எப்போது, ஏதோ ஒன்று சொல்லப்பட்டதோ அல்லது எழுதப்பட்டதோ அந்தக் காலம் வரை வரலாற்றுக் காலமாகக் கொள்ளப்படுகிறது. அதற்கு முன்பு ஆதி வரையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தான். அதாவது, இன்றிலிருந்து பின் கணக்கில் 5,000 அல்லது 6,000 ஆண்டுகள் வரையிலான காலமே வரலாற்றுக்காலம். இக்காலத்தில் தான் மனிதனின் எண்ணங்கள் எழுத்துகள் ஆயின. மனிதன் புதிய புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டான். கண்டுபிடித்தான். 6,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து உலகம் தோன்றிய காலமான 450 கோடி ஆண்டுகள் வரை வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தான். இக்கால கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மனிதனும், பிற உயிரினங்களும் இயற்கையில் ஒன்றுதான். ஆனால் மனித இனத்தில் ஹோமோ சேப்பியன்ஸ் என்ற இனத்தவனே வரலாற்றை வசப்படுத்திய மனித இனமாக (அறிவாளன்), சிறுகச்சிறுக எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த உயிரினமாக மாறிப்போனான். இந்த அடிப்படையில் மனித இனம் தோன்றி, பரவி, அவர்கள் வாழ்ந்த இடத்தில் அவர்கள் பயன்படுத்திய கற்களை வைத்து வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களைக் கற் காலங்களாக ஆய்வாளர்கள் பிரித்து வைத்துள்ளனர். இக்காலங்கள் ஒவ்வொரு இடத்துக்கும் மாறுபடும்.
                    மிகப் பழங்காலம்               : 2 கோடி ஆண்டுகள் 
                    பழங்கற்காலம் (முன்)       : 7 இலட்சம் - 50,000 ஆண்டுகள் 
                    பழங்கற்காலம் (இடை)     : 1.5 இலட்சம் ஆண்டுகள் - 35,000 ஆண்டுகள்
                    பழங்கற்காலம் (கடை)      : 30,000 ஆண்டுகள் - 10,000 ஆண்டுகள்
                    இடைக் கற்காலம்               : 10,000 ஆண்டுகள் - 3,000 ஆண்டுகள்
                    புதிய கற்காலம்                   : 8,000 ஆண்டுகள் - 2,000 ஆண்டுகள் 
                    செம்புக் காலம்                    : 5,000 ஆண்டுகள் - 3,000 ஆண்டுகள்
                    இரும்புக் காலம்                  : 3,000 ஆண்டுகள் - 2300 ஆண்டுகள் 

          இன்றைய இந்தியத் துணைக்கண்டத்தில் கற்கால மனிதர்களின் வரலாற்றை அவர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்களைக் கொண்டு கணிக்கப்பட்ட கால அட்டவணை தான் மேற் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட குறிப்பில் உள்ளவை (Dr. V. Selvakumar: 2010:17).

          மிகப் பழங்காலத்தைச் சேர்ந்த தொல்பொருள்கள் மிக அரிதானவை. இவற்றில் சில தற்போதைய பாகிஸ்தானின் ரிவாட் பள்ளத்தாக்கில் கிடைத்துள்ளன. பழங்கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் குறிப்பாகக் கற்கோடரிகள் சோகான் பள்ளத்தாக்கு (பாகிஸ்தான்), பெலான் பள்ளத்தாக்கு (உத்தரப் பிரதேசம்), அன்ஸ்கி பள்ளத்தாக்கு (கர்நாடகம்), நர்மதா பள்ளத்தாக்கு மற்றும் பிம்பேட்கா பாறைக் குகைகள் (மத்தியப் பிரதேசம்), திட்வானா (ராஜஸ்தான்), அத்திரம்பாக்கம் மற்றும் குடியம் (தமிழ்நாடு) ஆகிய பகுதிகளில் கிடைத்துள்ளன. இங்குக் குறிப்பிடப்பட்ட பகுதிகளிலேயே மிகப் பழமையான கற்காலக் கருவிகள் கிடைத்த இடம் இன்றைய சென்னைக்கு அருகிலுள்ள அத்திரம்பாக்கம் என்ற ஊரைச் சுற்றியுள்ள பகுதிகள் தான். இங்கு 15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்திருந்த மனித இனத்தினர் பயன்படுத்திய 'அச்சூலியன்' வகைக் கற் கருவிகள் (Acheulian) கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுடன் அங்கு வாழ்ந்த மனிதர்களின் வாழ்விடங்கள், பிராணிகளின் கால்தடங்கள், எலும்புகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. வரலாற்றுக்கு முந்தைய பழங்கற்காலக் கருவிகள் பிரான்சின் சோமி (Somme river) ஆற்றங்கரையில் 'செயின்ட் அச்சூல்' என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதை வைத்து, அதன் காலத்தைக் குறிப்பதற்காக 'அச்சூலியன்' கருவிகள் என்று வழங்கப்படுகிறது (Dr. S. Vasanthi: 2012:2). அதேபோன்று அக்கருவியைப் (கற்கோடரி) பயன்படுத்திய ஹோமோ எரக்டஸ் என்ற மனித இனம் தமிழ் நாட்டில் வாழ்ந்ததாக நிலவியல், தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆப்பிரிக்காவில் தோன்றிய மனித இனமான ஹோமோ எரக்டஸ் இனம், தமிழ்நாட்டின் அத்திரப்பாக்கம் பகுதியில் வாழ்ந்தனர் என்பதற்கு அப்பகுதியில் அவர்கள் பயன்படுத்திய கற்கருவிகள் சான்றாக அமைந்துள்ளன.

          இதற்கு முன்பே, 1863 ஆம் ஆண்டில், சென்னைக்கு அருகிலுள்ள பல்லாவரத்தில் தற்போதைய திரிசூலம் பகுதியில் பழங்கற்காலக் கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது கற்கோடரி ஆகும். கடினமான படிகக்கல் அல்லது கூழாங்கல் அல்லது மணற்கல் (Quartzite) வகையைச் சேர்ந்தது. இதற்கு அடுத்து இதே ஆண்டில் அத்திரம்பாக்கம் குடத்தலை/கொற்றலை/கொசத்தலை/கோர்த்தலை ஆற்றுப் படுகைகளில் பூண்டிக்கு அருகே கற்கோடரியும், வேறு சில ஆயுதங்களும் கிடைத்தன. இதேபோன்று பாலாறு, வடஆற்காடு, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, தர்மபுரி, திருநெல்வேலி போன்ற பகுதிகளிலும் கற்கருவிகள் கிடைத்தன. பழங்கற்கால மனிதர்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் வாழ்ந்ததை இவை உறுதிப்படுத்தின. இங்கு வாழ்ந்தவர்கள் பயன்படுத்திய கற்களை வைத்துப் படிகக்கல் மனிதர்கள் (Quartzite Men) என்று இங்கு வாழ்ந்தவர்கள் அழைக்கப்பட்டனர். இவ்வகைக் கற்கள் எங்கு தென்படுகின்றனவோ அவ்விடத்தைப் பழங் கற்காலக் குறியீடுகளாக ஆய்வாளர்கள் கொண்டனர். (Dr. K. V. Raman: 2015:51). இதனால் பழைய கற்காலம் குறித்த உலக வரைபடத்தில் இந்தியாவும் இடம் பிடித்தது. சென்னைக்கு அருகில் கிடைத்த தொல்பொருள் கற்கருவிகளை வைத்து சென்னையின் அப்போதைய பெயரான மதராஸ் என்ற பெயரால் மதராசியப் பண்பாடு (Madrasian culture) என்று இப்பண்பாடு குறிக்கப்படுகிறது. மேலும் இங்குக் கிடைத்த கருவிகளை வைத்து, இது இக்கருவிகள் உற்பத்தி செய்யப்பட்ட இடம் என்பதைக் குறிக்கும் வகையில் இவ்விடம் மதராசியன் கற் கருவித் தொழிற்சாலை (Madrasian Industry) என்றும் மெட்ராஸ் மரபு என்றும், அச்சூலியன் தொழிற்சாலை (Acheulian Industry) என்றும் அழைக்கப்படுகின்றது. இதே போல் இந்தியாவில் மற்றொரு கற்கருவி உற்பத்தி இடமாக நர்மதைப் பள்ளத்தாக்கில் உள்ள சோன் என்னும் பகுதி குறிக்கப்படுகிறது. இது சோன் பண்பாடு (Soan culture) என்று அழைக்கப்படுகிறது (Dr. S. Vasanthi: 2012:5-11).

          பழங்கற்கால உலக வரைபடத்தில் சென்னையும், இந்தியத் துணைக் கண்டமும் சேரக் காரணமாக அமைந்தவர் இராபர்ட் புரூஸ் பூட் (Robert Bruce Foote - 1834-1912)) என்பவர். இங்கிலாந்தில் பிறந்து நிலவியல், தொல்லியல் வல்லுநராக விளங்கியவர். இந்தியாவில் தொல்லியல் ஆய்வு நிறுவனம் 1861 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதற்கு முன்பு 1851ஆம் ஆண்டில் இந்தியப் புவியியல் ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. உலகில் மனித இனத் தோற்றம் குறித்த ஆய்வுகள் 1860 ஆம் ஆண்டுகளில் தீவிரமடையத் தொடங்கிய காலத்தில், புவியியல் ஆய்வு மையப் பணிக்காகச் சென்னை வந்தார் இராபர்ட் புரூஸ். நிலவியலிலும், தொல்லியலும் ஆர்வம் கொண்டிருந்த அவர் அது தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வந்த போதுதான், 1863 ஆம் ஆண்டில், பல்லாவரம், அத்திரம்பாக்கம், குடியம் ஆகிய பகுதிகளில் கற்கருவிகளைக் கண்டுபிடித்தார். மூங்கிலில் செருகக்கூடிய சிறிய வகை கல் ஈட்டி முனைகள் பல்லாவரத்தில் கிடைத்தன. தொடர்ந்து பூண்டிக்கு அருகில் உள்ள பரிக்குளம் கிராமத்தில் ஐந்து இலட்சம் ஆண்டுகள் பழமையான செம்மண் சரளைக் கல் படுகையில் கற்காலக் கருவிகளைக் கண்டுபிடித்தார். பூண்டிக்கு வடக்கில் குடியம் பகுதியில் மிகப் பழமைவாய்ந்த, நீளமான பதினாறு குகைகளைத் தேடியலைந்து அகழ்வாராய்ச்சி நடத்தி அங்கு ஏராளமான கற்கருவிகளைக் கண்டுபிடித்தார். இதன் மூலம் பழங்கற்கால மனித இனம் தமிழ்நாட்டில் வாழ்ந்ததை உலகிற்கு அறியப்படுத்தக் காரணமானார். 

          நிலவியல், தொல்லியல், மானுடவியல், படிமவியல் அறிஞராக வளர்ச்சி நிலை பெற்ற புரூஸ், தொடர்ந்து தென்னிந்தியா முழுமைக்கும் சென்று ஆய்வு செய்தார். ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்தில் இயற்கையாக அமைந்த பெலும் குகைகளைக் கண்டுபிடித்தார். கற்கால மனிதர் தொட்டு, புத்தத் துறவிகள் காலம் வரையில் பெலும் குகையில் மனிதர்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்த மானுடவியல் வரலாறும் அவரால் வெளியானது. பெலும் குகைப் பகுதியில் நாற்பதடி உயரம் கொண்ட புத்தர் சிலை ஒன்று உள்ளது. மேலும், நெல்லூர், ஹைதராபாத், மைசூர், குஜராத் ஆகிய பகுதிகளிலும் ஆய்வுகளை மேற்கொண்ட புரூஸ், கர்நாடகாவைச் சேர்ந்த பெல்காம் மாவட்டத்தில் காண்டாமிருகத்தின் மண்டைஓடுப் படிமத்தைக் கண்டெடுத்தார். 1883 ஆம் ஆண்டில் திருநெல்வேலி, சைதாங்க நல்லூர் பகுதியில் தேரி எனப்படும் மணல் குன்றுப் பகுதிகளிலும், சாயர்புரம் தேரிப் பகுதிகளிலும் நுண் கற்கருவிகளைக் கண்டெடுத்தார். அங்கு நுண் கற் கருவிகள் தயாரிக்கும் தொழில் கூடம் இருந்ததையும் புரூஸ் வெளிப்படுத்தினார். அது இடைக் கற்காலத்தைச் சேர்ந்த நுண் கற் கருவிப் பண்பாடு என்று அறியப்படுகிறது. அவருடைய தொடர் ஆய்வுகளுக்காக இராபர்ட் புரூஸ் பூட், "இந்தியத் தொல் பழங்கால வரலாற்றின் தந்தை" எனப் போற்றப்படுகிறார் (ஏற்காடு இளங்கோ: ராபர்ட் புரூஸ் பூட்: 2017).

          இராபர்ட் புரூசைத் தொடர்ந்து வேறு பல ஆய்வாளர்களும் இப்பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அரசின் தொல்லியல் துறையினரும், சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினரும் அங்கு அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டனர். அத்திரம்பாக்கம் கோர்த்தலை (கொற்றலை) ஆற்றுப்பகுதியில் சாந்திபாப்பு என்பவர், 1991 ஆம் ஆண்டு முதல் ஆய்வுகளை மேற்கொண்டார். 1999ஆம் ஆண்டு முதல் இப் பகுதியில் அகழ்வாராய்ச்சிகளையும் அவர் மேற்கொண்டார். இதில் 3500க்கும் மேற்பட்ட தொல் பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கு மனித இனம் வாழ்ந்ததை இவர் ஆய்வின் வழி உறுதிப்படுத்தினார். இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஹோமோ சேப்பியன்ஸ் இனத்தவர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டில் மனித இனம் வாழ்ந்திருக்கிறது. அவர்கள் ஹோமோ எரக்டஸ் என்னும் சேப்பியன்ஸ் இனத்திற்கு முந்திய இனம். 20 இலட்சம் தொடங்கி 16 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் தோன்றிப் புலம் பெயர்ந்தவர்கள். அச்சூலியன் கருவிகளை உபயோகப் படுத்தியவர்கள். சாந்திபாப்பு மேற்கொண்ட ஆய்வுகளில் கிடைத்த தொல்பொருட்கள் நவீன ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டன (cosmogenic nuclide burial dating). இவ்வாய்வின் முடிவுகள், தமிழ்நாட்டில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் வாழ்ந்ததை நிரூபித்துள்ளன. இப்பகுதியில் வெளிநாட்டுத் தொல்லியல் ஆய்வாளர்களும் தொடர் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். 2001 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இங்குக்கிடைத்த பொருட்கள் காஸ்மிக் கதிர் காலக் கணிப்பு முறையில் (cosmic ray exposure dating) ஆய்வு செய்யப்பட்டு, இக்கற்கருவிகள் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று அறிவிக்கப்பட்டது.[3]

Siva Ilango3.jpg
 
         மனித இனம் குறித்த ஆய்வுகளில் தற்காலத்தில் மரபணுச் சோதனை ஆய்வுகளும் முக்கிய இடம் பிடித்துள்ளன. 2010 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மரபணுச் சோதனையில் தமிழ்நாட்டில், மதுரை அருகில், ஜோதிமாணிக்கம் என்னும் கிராமத்தில் வாழும் விருமாண்டி என்பவரின் மரபணு (DNA M130), ஆப்பிரிக்காவில் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு புலம் பெயர்ந்து வந்த ஹோமோ சேப்பியன்ஸ்/நியாண்டர்தால் இனத்தின் மரபணுவோடு பொருந்தியதை வைத்தும் மனித இனத்தின் வரலாறு விரிவுபடுத்தப்பட்டது. இம் மரபணுவின் சாயல் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி ஆய்வுகளிலும் அவ்வப்போது தென்பட்டது. ஆஸ்திரேலியாவின் பூர்வகுடிகளில் பாதிப்பேருக்கு இம்மரபணு மாதிரிகள் உள்ளன. பிலிப்பைன்ஸ், மலேசியாவின் பழங்குடி இனத்தவருக்கும் இம்மரபணு மாதிரிகள் உள்ளன (Dr. V. Selvakumar: 2010:33). இவை எல்லாம் ஹோமோ எரக்டஸ், ஹோமோ சேப்பியன்ஸ் ஆகிய மனித இனங்கள் தமிழகம் தொடங்கி ஆஸ்திரேலியா வரை பரந்து இருப்பதையே உறுதிப்படுத்துகின்றன.

Siva Ilango2.jpg
          புதிய கற்காலக் கருவிகளும் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் புதிய கற்காலம் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என கணிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தின் கருவிகள் தொழில்நுட்ப வகையில் முன்னேற்றம் அடைந்தவை. பளபளக்கும் தன்மை உள்ளவை. செம்பு கண்டுபிடிக்கப்படுவதற்கு முற்பட்ட காலமான புதிய கற்கால மக்கள், வேளாண்மை செய்வதில் ஈடுபட்டிருந்தனர். நிலையான குடியிருப்புகளை ஏற்படுத்திக்கொண்டனர். வீட்டு விலங்குகளை வளர்த்தனர். படிப்படியாக சமூக வாழ்க்கையில் பழகிய அவர்களின் மொழி, பேச்சு நிலையிலிருந்து எழுத்து நிலைக்கு மாறிய காலமாக இருந்தது. 1865 ஆம் ஆண்டில் சேலம் பகுதிகளில் இராபர்ட் புரூஸ் ஆய்வுகளை மேற்கொண்டு 65 வகையான புதிய கற்காலப் பொருள்களைக் கண்டுபிடித்துள்ளார். 2006 ஆம் ஆண்டில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை, செம்பியன் கண்டியூர் பகுதியில் கிடைத்த வழவழப்பான கற்கோடரி ஒன்று சிந்துவெளியில் உள்ளதைப் போன்ற குறியீடுகளுடன் கூடியதாகக் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு தமிழகத் தொல்லியல் துறையினரால் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் மட்கலன்கள், பானை ஓடுகள், எலும்புச் சிதைவுகள் போன்றவையும் கிடைத்தன ((ta.m.wikipedia.org).

          இறந்தவர்களை அப்படியே விட்டுச் செல்வதுதான் பழங்கால மனிதர்களின் வழக்கமாக இருந்தது. புதிய கற்காலத்தில் இந்த நிலை மாறி வந்தது. இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் பழக்கத்தால் இறந்தவர்களின் உடல்களை வைக்கும் இடத்தில் அடையாளமாகக் கற்களைச் சுற்றி வைத்தனர். பல இடங்களில் பெருங்கற்கள் அல்லது பாறையைச் சுற்றி அடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இக்காலமே பெருங்கற்காலம் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பெருங்கற்காலம் என்பது 5000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி கி.மு. 300 வரையிலும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பெருங்கற் சின்னங்கள் ஏராளமான அளவில் இன்றும் காணப்படுகின்றன. கல்திட்டை, கல்வட்டம், நெடுங்கல், குத்துக்கல் (Menhirs) என்று பலவகைப் பெயர்களில் இவை உருவத்திற்கேற்ப அழைக்கப்படுகின்றன. இறந்தவர்களின் நினைவுச் சின்னங்கள் எல்லா ஊர்களிலும் ஆங்காங்கே காணப்படுகின்றன. முன்னோர் வழிபாடு, நடுகல் வழிபாடு ஆகியவற்றின் முதல் நிலையே பெருங்கற்காலச் சின்னங்கள் எனலாம். பெருங் கற்களைக் கொண்டு இறந்தவர் நினைவிடம், காலம் கணிக்கும் அமைவிடம், நினைவு உருவங்கள் என உலகம் முழுவதும் ஏராளமான பெருங்கற் சின்னங்கள் உள்ளன.

          வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த தொல்லியல் பொருள்களும், எழுத்துச் சான்றுகளும் நமக்கு ஏராளமாகக் கிடைத்துள்ளன. ஆனால் மிக நீண்ட பகுதியான வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த சான்றுகளாக நமக்குக் கிடைத்து இருப்பவை கல் ஆயுதங்கள் தான். அறிவு ஆட்சி செய்யாத போது, எல்லாமும் இயற்கையைச் சார்ந்தே இருந்தன. அறிவின் ஆட்சி எல்லாவற்றையும் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. இயற்கைக்கு மாறான நம்பிக்கைகளும் இன்றைக்கு இயற்கைக்கு எதிராகவே திரும்பி இருக்கின்றன. நடந்தே சென்று உலகைச் சுற்றி வந்த மனித இனம், இன்று விமானத்தில் பறந்து, இயற்கையை எப்படிக் காப்பாற்றுவது என்று மாநாடு கூட்டி விவாதித்துக் கொண்டு இருக்கிறது. அதையும் தாண்டிப் பிற கிரகங்களுக்குச் சென்று கால் வைப்பதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. எங்கோ இருக்கும் பிற கோள்களிலிருந்து வரும் அறிவில் உயர்ந்த இனங்கள் நம்மை (மறைமுகமாக) ஆட்சி செலுத்தி வருகின்றனவா என்பது குறித்த ஆய்வுகளும் (unidentified flying object - UFO) ஒருபக்கம் நடைபெற்று வருகின்றன. ஆற்றலை, ஆறறிவை வியக்கின்ற நேரத்தில், அதன் ஆளுமைத் தன்மை, பிறவற்றை அடிமைப்படுத்தி அடக்குமுறைகள் செய்வது என்பது மனித இனத்தின் மரபணுவிலேயே உள்ளதா அல்லது உயிரினங்களின் மரபணுவிலேயே உள்ளதா என்பதை, பூமியில் மனித இனம் அழியும் முன்பே, ஆராய்ந்து அறிவதும் அதன்படி வாழ்வியலை மாற்றி அமைப்பதும் நிகழ்காலத் தேவை என்ற எண்ணம் ஆய்வாளர்களுக்குத் தோன்றாமலா இருந்திருக்கும்?


குறிப்புகள்:
1.     சீனாவின் ஹெய்லாங்கியாங் மாகாணத்தில் ஷாங்குவா நதியின் குறுக்கே 1933 ஆம் ஆண்டில் பாலம் கட்டும் போது கண்டெடுக்கப்பட்ட இந்த மண்டை ஓடு, தனிப்பட்ட ஒருவரின் பாதுகாப்பில் எண்பது ஆண்டுகள் வைக்கப்பட்டு, அவர் இறந்த பிறகு அண்மையில் அறிவியலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சீன மொழியில் லாங் என்றால் டிராகன் என்று பொருள். எனவே டிராகன் மனிதன் என்ற பொருளில் ஹோமோ லாங்கி (Homo Longi) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஆதி மனிதன் மற்றும் நவீன மனிதக் கூறுகளின் கலவையாக உள்ளது. இதன் தாடை எலும்பும், தற்போதைய திபெத்தியப் பீடபூமியில் கண்டெடுக்கப்பட்டுள்ள டெனிசோவன் இனத்தின் ஒரு தாடை எலும்பும் ஒரே மாதிரியாக இருப்பதால் டெனிசோவன் இன மனிதனின் முக அமைப்பாக இருக்கலாம் என்றும் கருத்து கூறப்பட்டுள்ளது. தி இன்னோவேஷன் என்னும் அறிவியல் இதழில் இது குறித்த ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது (www.bbc.com/tamil/science-576). ஹோமோ டெனிசோவன் இனம் கடந்த காலத்தைச் சேர்ந்த ஒரு வியத்தகு மர்மம். ரஷ்யாவின் டெனிசோவா குகையில் கண்டெடுக்கப்பட்ட 50,000- 30,000 ஆண்டுகள் பழமையான விரல்களில் நிகழ்த்தப்பட்ட டி. என். ஏ. ஆய்வுகளின் வழி டெனிசோவன் இனம் கண்டறியப்பட்டது (Indianexpress.com).

2.     பாஞ்சியா (Pangaea) – 22.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் நிலப்பரப்புகள் ஒன்றாக இருந்தன. அதன் வடபகுதி லாரேசியா என்றும், தெற்குப் பகுதி கோண்டுவானா என்றும் அழைக்கப்பட்டது. பின்னர் ஏற்பட்ட கண்டத்திட்டு நகர்வுகள் காரணமாக இப்பொழுது உள்ள ஏழு கண்டங்களாக பூமியின் நிலப்பரப்புகள் பிரிந்து இருக்கின்றன. கண்டங்கள் நகர்தலின் போது இன்னொரு கண்டத் திட்டில் மோதும் நிலை ஏற்பட்டால் அந்த மோதலின் விளைவாக தொடர் மலைகள் உண்டாகி இருப்பதை முன்பே ஆல்பிரட் வெகனர் சுட்டிக்காட்டியிருந்தார். தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவற்றுக்கு இடையிலான நிலப்பாலம் ஒன்று நீண்ட காலத்திற்கு முன்பு இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் இப்பகுதிகளில் முன்பிருந்த கிளாசாப்டரிஸ் என்ற மரத்தின் பாறைப் படிமங்கள் படர்ந்து இருப்பதை வைத்தும் இப்பகுதிகள் ஒன்றாக இருந்தவை என்று நிரூபித்தார். இந்த வகைப் பாறைப் படிமங்கள் முதன் முதலில் இந்தியத் துணைக்கண்டத்தில் கோண்டுவானா என்ற பகுதியில் கிடைத்ததால், பழைய ஒன்றாக இருந்த தெற்கு நிலப்பகுதிகள் கோண்டுவானா நிலம் என்று அழைக்கப்பட்டன. மேலும், இலெமூரியாப் பகுதிகள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வந்து ஆசியக் கண்டத்தில் மோதிய நிகழ்வையும் அவர் சுட்டிக்காட்டினார். இவை இரண்டுக்கும் இடையில் இருந்த டெத்திஸ் என்ற பெருங்கடல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, இறுதியில் கடலுக்கு இடமே இல்லாமல் கண்டத் திட்டுகள் மோதியதால் உருவானவைதான் திபெத்தியப் பீட பூமியும், இமய மலைத் தொடர்களும் என்றார். அதனால்தான் எவரெஸ்ட் சிகரம் ஆண்டுதோறும் சில சென்டி மீட்டர்கள் உயர்ந்துகொண்டே இருக்கிறது என்றும் அவர் கூறினார் (essay by Dr Siva Ilango in City ads Newspaper, July 15, 2010, p.3).

3.     திருமதி சாந்திபாப்பு  சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஆய்வு நிறுவனம் மூலம் மரபியல் கல்வி குறித்து உலகளாவிய அளவில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இக்கட்டுரையில் கூறப்பட்ட அவரது ஆய்வுகள் குறித்த கருத்துகள், தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, 2020, ஜனவரி, 6 - 10 வரை நடத்திய தொல்லியல் பட்டறையில், திருமதி சாந்தி பாப்பு அவர்களால் செயல் விளக்கமாக அளிக்கப்பட்டவை.

நூல் விவரப் பட்டியல்:
1.     யுவால் நோவா ஹராரி, சேப்பியன்ஸ் - மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு, 2011, மஞ்சள் பப்ளிஷிங் ஹவுஸ், போபால்.
2.     முனைவர் கே. வி. இராமன், தொல்லியல் ஆய்வுகள், 2015, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
3.     முனைவர் தி. சுப்பிரமணியன், தமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாடு, 2018, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
4.     ஏற்காடு இளங்கோ, ராபர்ட் புரூஸ் பூட், 2017, ராமையா பதிப்பகம், சென்னை.
5.     Dr. V. Selvakumar, Tamil cultural connections across the world, 2010, Tamil University, Thanjavur.
6.     Dr.  S. Vasanthi, Peeping the past - Through palaeolithic tools (An introduction), 2012, Department of Archaeology, Government of Tamilnadu, Chennai.
7.   Akhilesh, Kumar & Pappu, Shanti & Rajapara, Haresh & Gunnell, Yanni & Shukla, Anil & Singhvi, Ashok. (2018). 


Friday, May 27, 2022

பாக்கிஸ்தான் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் கிமு 2ஆம் நூற்றாண்டு பௌத்தப் பள்ளி கண்டுபிடிப்பு



   —   முனைவர் க. சுபாஷிணி 


வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பண்டைய பௌத்த மதச் சான்றுகள் கிடைப்பதைப் பற்றிய செய்திகள் வரலாற்று ஆய்வுகளின் வழியும் தொல்லியல் கள ஆய்வுகளின் வழியும் கிடைக்கின்றன. இதைப்போல இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நிலப்பகுதிகளிலும் இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பல்வேறு வரலாற்றுத் தேடல்கள், அகழாய்வுப் பணிகளில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெற்ற கண்டுபிடிப்புகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

பாகிஸ்தான் நாட்டின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் தொல்லியல் களப்பணியாளர்கள் ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டு பழமையான பௌத்தப்பள்ளிகளைக் கண்டு பிடித்திருக்கின்றார்கள்.  இந்த பௌத்தப் பள்ளி பாகிஸ்தான் நாட்டில் உள்ள பௌத்தப் பள்ளி வளாகங்களில் பழமையான  ஒன்றாகக் கருதப்படுகின்றது.


பாரிக்கோட் என்ற நகரில் ஏறக்குறைய கிமு 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பௌத்த சமய அமைப்பாக இதனைக் கருதலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இந்தக் கட்டிட பகுதி இதன் அருகிலேயே கிமு 3ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பௌத்த விகாரைக்கு அருகிலேயே அமைந்திருக்கின்றது.

பாகிஸ்தான் மட்டுமன்றி உலக அளவில் பழமையான பௌத்தப் பள்ளிகளில் ஒன்றாக இது அறியப்படுகின்றது. கிபி 2 ஆம் நூற்றாண்டு எனக் கருதப்பட்டாலும் கூட இதன் காலம் கி மு 3,  அதாவது மௌரியப் பேரரசர் காலம் எனக் கருதக்கூடிய வகையில் கரிம சோதனை ஆய்வு முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. இந்தப் புதிய கண்டுபிடிப்பானது பண்டைய காந்தாரப் பகுதியில் பண்டைய பௌத்த சமய செயல்பாடுகள் பற்றிய சான்றுகளை வழங்குவதாகவும் அக்காலகட்டத்தில் இப்பகுதி முக்கியத்துவம் பெற்ற ஒரு நகரமாக விளங்கி இருக்கலாம் என்ற கருத்தையும் வெளிப்படுத்துகிறது.

ஆசிய அளவில் இத்தாலியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தொல்லியல் கள ஆய்வில் ஈடுபடுவது 1955 வாக்கில் தொடங்கியது. அச்சமயத்தில் தொல்லியல் கள ஆய்வுக்கு தலைமை ஏற்றவர் ஆய்வாளர் கீசோப் தூச்சி (Giuseppe Tucci) ஆவார். தற்சமயம் இத்தாலிய தொல்லியல் பணிக் குழுவின் தலைவராக Ca'Foscari University of Venice பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் லூக்கா மரியா ஒலிவியர் (Luca Maria Oliviero) பணியாற்றுகின்றார். இவர் தலைமையிலான குழு 2020 ஆம் ஆண்டு தொடக்கம் பாகிஸ்தான்  ஸ்வாட் பகுதியில் தொடர்ந்து தொல்லியல் ஆய்வுகளை நிகழ்த்தி வருகின்றது.
இந்தக் கள ஆய்வு நடைபெறும் பாரிக்கோட் (Barikot) என்ற நகரம் கிரேக்க மற்றும் லத்தீன் மொழியில் Bazira or Vajrasthana என குறிப்பிடப்படுகின்றது. இது மாவீரன் அலெக்சாந்தர் காலத்தில் அவனது படைகளால் கைப்பற்றப்பட்ட நிலப்பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு நிகழ்த்தப்பட்ட கள ஆய்வுகளும் அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் இந்த நகரம் மாவீரன் அலெக்சாண்டர் போரிட்டு வந்த காலமான ஏறக்குறைய கிமு 327 காலகட்டத்தில் மக்கள் வாழ்ந்த ஒரு நகரமாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போதைய காலகட்டத்தில் இந்த பாரிக்கோட் நகர  பள்ளத்தாக்கு பகுதியில் நிகழ்ந்த விவசாய செயல்பாடுகளை முன்னிறுத்தி தானியங்கள் விற்பனை மற்றும் தானியங்கள் சேகரித்து வைக்கும் பகுதியாகவும் இருந்தது என்று அறியப்படுகிறது. இப்பகுதியில் வேளாண்மை சிறப்புற்று இருந்தது. வருடத்திற்கு இரண்டு முறை அறுவடை நிகழ்ந்ததும் அதாவது வசந்த காலத்தில் ஒரு முறையும் கோடை காலத்தின் இறுதியில் ஒரு முறையும் அறுவடை நிகழ்வதையும் கள ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவிற்குத் தனது படைகளைக் கொண்டு செல்வதற்கு முன் தங்கியிருந்த ஒரு பகுதியாகவும் இந்த நகரம் அமைகிறது.

ரோமானிய வரலாற்று அறிஞர் Quintus Curtius Rufus பாரிக்கோட்  நகரம் வளமான பொருளாதார உயர்வு பெற்ற ஒரு நகராக இருந்தது என்று தனது நூலான Histories of Alexander the Great என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.

2020 ஒரு தொடக்கம் இங்கு நிகழ்த்தப்பட்டு கொண்டிருக்கும் தொல்லியல் கள ஆய்வுகளில் இங்கு பிரமிக்க வைக்கும் வகையிலான கிமு 3ஆம் நூற்றாண்டு அல்லது கிமு 2ஆம் நூற்றாண்டு காலத்து பௌத்த சமய சின்னங்கள் பல கிடைத்துள்ளன. பௌத்த விகாரை அதனை ஒட்டிய வகையில் அமைந்த பௌத்த பள்ளி, வட்ட வடிவில் அமைந்த சிறிய ஸ்தூபி, மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் சின்னங்கள், ஆபரணங்கள் ஆகியவை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன.

கிபி முதலாம் நூற்றாண்டை சார்ந்த கரோஷ்டி எழுத்து பொறிப்பு கொண்ட கல்வெட்டுக்களும் இங்கே கிடைத்துள்ளன.

இப்பகுதிகளில் கள ஆய்வுகள் நடைபெறுவதற்கு முன்பே தொல்லியல் சான்றுகளைச் சட்டத்திற்கு விரோதமாக திருடி விற்கும் செயல்பாடுகள் நடந்துள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நிகழ்கின்ற அரசியல், மற்றும் சமயப் போராட்டங்கள் காரணமாகவும் அங்கு நடைபெறுகின்ற வன்முறை செயல்பாடுகளின் காரணமாகவும் பல வரலாற்று சின்னங்கள் சேதம் அடைந்துள்ளன என்பதையும் கருத வேண்டியுள்ளது. அத்தகைய இடர்ப்பாடுகளுக்கு இடையே இப்போது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்ற அகழாய்வுப் பணிகள் புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்துள்ளன‌. காந்தார கலைப் பண்பாடு இப்பகுதியில் செழித்து வளர்ந்த ஒரு பண்பாடு என்பதும் இப்பகுதியின் சிறப்பாகும்.



Reference: 
2,000-Year-Old Buddhist Temple Unearthed in Pakistan    —   The structure is one of the oldest of its kind in the Gandhara region, David Kindy, Smithsonian    —   February 15, 2022




Thursday, May 19, 2022

ராஜராஜனின் கொடை: நூல் மதிப்புரை

ராஜராஜனின் கொடை:  நூல் மதிப்புரை 

 — சுந்தர் பரத்வாஜ்
பொன்னியின் செல்வன் குழும தோற்றுநர்


Financial management for non financial managers என்ற நூலை 30 ஆண்டுகளுக்கு முன் படித்திருக்கிறேன். சிறப்பான தகவல்கள் அடங்கியது. அதிலிருந்தே வரலாற்றாசிரியராகப் படித்து வராமல் வரலாற்றின் மீது கொண்ட காதலால் வரலாற்றைத் தேடி அறிந்து நம்முடனும் பகிர்ந்துகொள்ளும் ஆர்வலர்கள், அறிஞர்கள் இவர்களது கருத்து மிகவும் என்னை ஈர்க்கும். நானும் கட்டிடம் சார்ந்த தொழில் செய்யும் ஒரு வரலாற்று ஆர்வலர்.  இந்த வகையில் பேராசிரியர் நா கண்ணன், கணினி முனைவர் சுபாஷினி அவர்கள் நிறுவிய  தமிழ் மரபு அறக்கட்டளையின் தோற்றமும் வளர்ச்சியும் வியக்கத்தக்கது. பரந்து விரிந்து பல்வேறு அறிஞர்களையும் உள்ளடக்கி இன்றைய மற்றும் நாளைய பன்னாட்டு இளைஞர்களுக்கு நமது தமிழ் மொழியின் சிறப்பையும் தமிழ் வரலாற்று ஏற்றத்தையும் பகிர்ந்தளித்து தன்னலமில்லாத சிறந்த சமுதாய வளர்ச்சி பணியினை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரை ராஜராஜன் ஒரு உன்னதத்தின் உச்சியை உடனடியாக நமக்குள் எழுப்பும் தீப்பொறி.
"ராஜராஜனின் கொடை"
முனைவர் க. சுபாஷிணி
பதிப்பு: 2022 தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் 

டாக்டர் சுபாஷிணி  எழுதிய ராஜராஜனின் கொடை  நூல் அவரது கணினி பின் புலம் காரணமாக லேஅவுட் திட்டமிடல் - செயல்படுத்தல் எதிர்கால சிந்தனை போன்றவற்றுடன் மிக அருமையாக வெளிவந்திருக்கிறது. இதனை "மாற்றுரைத்து" சொக்கத்தங்கம் என வியக்கிறார் நமது பெருமதிப்பிற்குரிய தஞ்சைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் செல்வகுமார் அவர்கள். அப்படி என்ன எழுதி இருக்கிறார்கள் என்று பார்க்க, படிக்கத் துவங்கினால் பிரமித்துப் போகிறோம். ராஜராஜனின் கொடை அண்மைக்கால ஆய்வு அறிஞர்களின் பெரும் கொடையை உள்ளடக்கிய சிறப்பான முன்னெடுப்பு. இனி அந்த நூலைப் பற்றிய எனது பார்வையைப் பகிர்ந்து கொள்கிறேன்.

ராஜராஜனின் கொடை; எளிமையான தலைப்பில் தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவுனர் டாக்டர் சுபாஷிணியின் கருத்தாழம் கொண்ட ஆய்வுப் பேழை. செய்வன திருந்தச் செய் என்ற கொள்கைப் பிடிப்பில் தீவிரமானவராய் ஒளிர்கிறார். கணினி சார்ந்த ஆய்வுப் பட்டம் பெற்ற சுபாஷிணி‌யின்  பார்வை - விருப்பு வெறுப்பற்ற - சுத்திகரிக்கப்பட்ட - தமிழ் கூறும் நல்லுலகம் சார்ந்த சமகால வரலாற்றுப் பார்வை. பதிப்புரையிலேயே அசத்துகிறார் முனைவர் தேமொழி. அணிந்துரையில் அருமையான கருத்துக்களை உதிர்க்கிறார் தஞ்சை பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் செல்வகுமார் அவர்கள்.

உலகத்தமிழ் மாநாட்டை ஒட்டி டாக்டர் எம்ஜிஆர் அவர்களால் நிறுவப்பட்ட தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் தமிழக வரலாற்றிற்கு பெரும் பங்களிப்பை ஈந்துள்ளது. குறிப்பாக பேராசிரியர் முனைவர் ராஜவேல், முனைவர் ஜெயக்குமார், முனைவர் செல்வகுமார் காலஞ்சென்ற எனது அருமை நண்பர் அதியமான் ஆகியோரின் பங்களிப்பு போற்றத் தகுந்தது. அதிலும் டாக்டர் ஜெயக்குமார் அவர்களின் நாகப்பட்டினம் புத்த விகாரம் குறித்த கடல் சார்ந்த ஆய்வுத் தகவல்கள் மிகவும் சிறப்பானவை. சிங்கப்பூரில் நடந்த தமிழக வரலாற்று ஆய்வு மாநாட்டுக் குறிப்புகள் " நாகப்பட்டினம் - சுவர்ண தீபம்" என்ற தொகுப்பாக ஆங்கிலத்தில் வெளியானதில் டாக்டர் ஜெயக்குமார் அவர்களின் சூடாமணி விகார ஆய்வுக் கருத்துகளும் அடக்கம். அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல் களஞ்சியமான இத்தகைய ஆய்வு கருத்துக்கள் பலரையும் சென்று சேரவில்லையே என்ற கவலை என் போன்ற வரலாற்று ஆர்வலர்களுக்கு இருந்து வந்தது. அதனைத் துடைத்தெறிந்து கடந்த 30 ஆண்டுகளுக்குள் தமிழக வரலாறு; குறிப்பாகச் சோழ வரலாறு, அதிலும் ராஜராஜன் - ராஜேந்திரன் - குலோத்துங்கன் ஆகிய மன்னர்களின் பௌத்தம் சார்ந்த கொடைகளைத் தேர்ந்தெடுத்து அவை அடங்கிய பெரிய லெய்டன் - சிறிய லெய்டன் செப்பேடுகளை - அவை பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ள நெதர்லாந்து பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் ஆய்வு செய்து அருமையான புகைப்படங்களுடன் சுவைமிக்க வரலாற்றுத் தரவுகளை நமக்காகத் தொகுத்துப் பகிர்ந்துள்ளார் டாக்டர் சுபாஷிணி அவர்கள்.

பொ.ஆ. 1006ல் ஸ்ரீவிஜய வணிக குழுக்களின் புத்தமத வழிபாட்டிற்காக நாகப்பட்டினம் அருகே ஆனைமங்கலம் என்ற கிராமம் இறையிலியாக ராஜராஜனால் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவிஜய அரசர்கள் அங்கு ஒரு புத்த விகாரம் எழுப்பி வழிபட்டனர். ஸ்ரீவிஜயம் மற்றும் சீன வணிகர்கள் நாகப்பட்டினம் பின் இலங்கை எனப் பௌத்த யாத்திரை மேற்கொண்டனர். ஆயினும் ஸ்ரீவிஜய மன்னர்கள் சீனப் பேரரசரிடம் சோழ மன்னர் பரம்பரை தங்களுக்குள் அடங்கியது என்ற வகையில் திரித்துக் கூறிய தகவல்கள் மாமன்னன் ராஜேந்திர சோழனின் செவிகளை எட்டியது. எனவே 1018ல் ஸ்ரீவிஜயத்தின் மீது படை எடுத்து அதனை சோழப்பேரரசின் சிற்றரசாக ஒடுக்கினான். இதற்கான கல்வெட்டு ஆதாரம் தமிழகத்தில் கிடையாது. ஆனால் சீன வரலாற்றுப் பதிவுகளில் உள்ளது.

இவை போன்ற புதிய தரவுகளை சாஸ்திரி,  பண்டாரத்தார் போன்ற அறிஞர்களுக்குப் பிறகு வரலாற்றறிஞர் மகாலிங்கம்‌, டி என்  ராமச்சந்திரன், மயிலை சீனி வேங்கடசாமி, முனைவர் ஜெயகுமார் போன்றோரின் அண்மைக்கால ஆய்வுகளைத் தொகுத்து எடுத்துச் சிறப்பாக வழங்கியுள்ளார் டாக்டர் சுபாஷிணி அவர்கள். தொடர்ந்து தமிழகம் வந்து இத்தகைய லெய்டன் செப்பேடுகள் கண்டிப்பாகத் தமிழகம் வந்து சேர வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக தொல்லியல் துறை அமைச்சரிடம் கொடுத்து அது தமிழக அரசு மானிய கோரிக்கை அரசாணையாக இடம் பெற்றுவிட்டது. தொடர்ந்து நெதர்லாந்து அரசும் காலனியாதிக்க நாடு வேறு நாட்டிலுள்ள தனது கலைச்செல்வத்தை முறையாக உறுதி செய்தால் கோரிக்கை விடுக்கும் நாட்டிற்குக் கொடுப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்துள்ளது நமக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது.

பன்னாட்டு அமைப்பான தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவுனர் டாக்டர் சுபாஷிணி அவர்களின் செய்வன திருந்தச் செய் என்ற கோட்பாட்டினால் லெய்டன் செப்பேடுகள் ஒரு நாள் சென்னை வந்து சேரும் என்பதில் நமக்கு ஐயமில்லை. டாக்டர் சுபாஷிணி அவர்கள் வருடிப் பார்த்து மகிழ்ந்த அந்த செப்பேடுகளை ஆயிரமாண்டு இன்ப நினைவலைகளுடன் நாமும் வருடிப் பார்க்கும் நாள் இதோ வந்து கொண்டே இருக்கிறது. அவரது எழுத்திற்கும் செயல்பாட்டிற்கும் நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்  சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.




Sunday, May 15, 2022

800 ஆண்டுகள் தொன்மைவாய்ந்த கீழடி அர்ச்சுன லிங்கேஸ்வரர் கோயில்


-- முனைவர். ப. தேவி அறிவு செல்வம்

கிபி 1291ஆம் ஆண்டு வாக்கில் மதுரையை ஆட்சி செய்த முதலாம் குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது. கிபி1291,1298 ஆம் நூற்றாண்டு கல்வெட்டும் இக்கோவிலில் உள்ளது. இக்கோயிலின் தெற்கு, வடக்கு, மேற்கு பக்கச் சுவர்களில் எண்ணற்ற கல்வெட்டுகள் இருந்துள்ளன. 


இப்பொழுது இக்கோயிலானது புனரமைக்கப்பட்டு சமீபத்திய கோயிலாகக் காட்சி அளிக்கிறது. இக்கோயிலின் சிதைந்த பகுதிகள் கோயில் வளாகம் முழுவதும் நிறைந்து காணப்படுகின்றன. அதிட்டான பகுதியிலும் கல்வெட்டுக்கள் தமிழ் எழுத்துக்களுடன் இருக்கின்றன. கல்வெட்டில் இக் கோயிலின் பெயர் அர்ச்சுனேஸ்வரர் கோவில் என்றும், இப்பொழுது அர்ச்சுன லிங்கேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. 


Wednesday, May 11, 2022

தமிழில் காட்சியியலும் வள்ளுவமும்


 
— முனைவர் ஆனந்த் அமலதாஸ்


தமிழில் காட்சியியல் என்பது ஆங்கிலத்தில் “பிலாசபி” என்று சொல்வதற்கு “சமமான” சொல் எனலாம்.   தத்துவம் சமஸ்கிருதச் சொல். ‘காட்சியர்’ என்றால்  ‘அறிவாளி’, ‘சிந்தனையாளர்’ என்று பொருள். பிலாசபருக்குச் சமமாகச் சொல்லலாம்.

நம்பிக்கையும்  பகுத்தறிவும்  (Faith and Reason):
மெய்யியல்,  தத்துவம்,  பிலாசபி  என்பதும் கூட மக்கள் மத்தியில் தெளிவற்ற  நிலையில் உள்ளது. அரசியல் தலைவர்கள் அனைவரையும் ‘பிலாசபர்’ என்று  பொதுவாகச் சொல்லி விடுவோம். அதில் தவறில்லை. ஆனால் எந்தப் பொருளில்  அந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறோம் என்று தெரிந்திருப்பது முக்கியம்.  இல்லையென்றால் ஏதோ அர்த்தமில்லாமல் பேசுவது போல ஆகும்.

“ஆழமாக அலசிப்  பார்த்த வாழ்வு அர்த்தமுள்ள வாழ்வு”,  என்பது சாக்ரட்டீஸ்  கூற்று (An examined life is worth living).   அப்படி என்றால் அடிப்படைக்  கேள்விகளைக் கேட்க வேண்டும்.   ஒரு கட்டெறும்புக்கு எத்தனை கால்கள் உண்டு?   இது அடிப்படைக் கேள்வி இல்லை.   இந்த மைக்ரோ போன் எப்படி வேலை  செய்கிறது?  தெரிந்தவர்களைக் கேட்டால் விளக்கம் சொல்வார்கள். இது அடிப்படை  கேள்வி இல்லை.

ஆனால்,  இந்த வாழ்க்கைக்கு ஏதாவது பொருள் இருக்கிறதா?  எத்தனையோ  பேர் சுட்டுக் கொல்லப் படுகிறார்களே,  அவர்கள் வாழ்வு அத்தோடு முடிந்து போய்  விட்டதா அல்லது பின்பு ஏதும் நடக்குமா? இந்தப் பிரபஞ்சத்திற்குத் தொடக்கம்  உண்டா,  முடிவு என்று ஒன்று உண்டா? இதெல்லாம் அடிப்படைக் கேள்விகள். இதற்கு  விவிலியத்தையோ,  குர்ஆனையோ,  கீதையையோ சான்று காட்டிப்  பதில் சொன்னால்  அதற்கு இறையியல் என்று சொல்வதுண்டு.   பகுத்தறிவு அளவில் சான்று வைத்து  பதில் அளித்தால் அதை மெய்யியல் என்பர். இந்த இரண்டையும் பிரித்துக்  காட்டலாம். ஆனால் அவை முரண்பாடானவை என்று சொல்ல முடியாது.  




கருப்பு பிடிக்குமா காவி பிடிக்குமா என்று கேட்டார் ஒருவர்.  எனக்குக் கருப்பும்  பிடிக்கும் காவியும் பிடிக்கும். இரண்டும் இயற்கையின் நிறங்கள்,  நமக்குக் கிடைத்த  கொடைகள். இவற்றை இப்பொழுது தனியார் மயமாக்கிவிட்டு எது வேண்டும் என்றால்  என்ன சொல்வது. அதுபோல்தான் நம்பிக்கையும் பகுத்தறிவும்.

நம்பிக்கை இன்றி பகுத்தறிவாளர்களும் வாழ முடியாது. பகுத்தறிவின்றி  நம்பிக்கை வாதிகளும் தங்கள் நம்பிக்கையை விளக்கமுடியாது. ஆனால் எங்கு பகுத்தறிவு முடிகிறது,  எங்கு நம்பிக்கை தொடங்குகின்றது என்பதைக் கூறுதல் கடினம். அந்த  எல்லைக் கோட்டை தீர்மானிப்பது சுலபமில்லை. ஆதி சங்கரரும் தாமஸ்  அக்குவினாவும் பக்கம் பக்கமாக அதுபற்றி எழுதியுள்ளார்கள்.

நம்பிக்கையும் பகுத்தறிவும் ஒன்றுக்கொன்று நிறைவு செய்கிறது. நம்பிக்கை  இல்லாமல் பகுத்தறிவு மட்டும் குணமளிக்காது,  மீட்பு கொடுக்காது,  முழுமை தராது.  பகுத்தறிவு இல்லாமல் நம்பிக்கை மட்டும் செயல் பட்டால் மனிதத்துவம் போய்விடும்,  மனிதாபிமானமும் மறைந்து விடலாம். மனிதம் இல்லாத விண்ணக விளக்க உரை  (heavenly metaphysics) நமக்குத் தேவையில்லை. அர்த்தமுள்ள வாழ்வை  மேற்கொள்ள இரண்டும் வேண்டும்.

கருத்தளவில் தெளிவு வேண்டும்: 
கருத்துத் தெளிவு இல்லை என்றால் குழப்பத்திற்கு இட்டுச்செல்லும்.  இப்பொழுது தமிழ் ஊடகங்களில் திருக்குறளில் பதிவான ஒரு பாடலுக்குப் பல  விளக்கங்கள் கொடுக்கின்றனர். அது ஒருவரை  ஒருவர் அவமதித்து,  ஏன்,  கொச்சைப்  படுத்தியும்  வருகிறது. இது தமிழுக்கும்,  தமிழ்ப் பண்பாட்டுக்கும்,  தமிழ் மக்களுக்கும்  பெருமை தருவதாகச் சொல்ல முடியாது. காரணம், இது  கருத்துத் தெளிவில்லாத நிலை.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பது குறள் கூறும் கோட்பாடு. இங்குச்  சர்ச்சைக்கு உள்ளானது ‘சமத்துவம்’ என்ற கருத்துக் கோட்பாடு. சமத்துவம்  என்பதற்கு நம்பிக்கை அடிப்படையில் விளக்கம் கொடுக்கலாம். அல்லது பகுத்தறிவு  வழியாகவும் விளக்கம் தரலாம். இரண்டுக்கும் முரண்பாடு இல்லை.  

கிறித்துவ மரபில் வந்தவர்கள் விவிலியத்தைச் சான்று காட்டிச் சமத்துவத்தை  ஏற்றுக் கொள்வார்கள். மனிதன் கடவுளின் சாயலால் படைக்கப்பட்டவன் என்பது  விவிலிய வாக்கு. அதன் பார்வையில் மனிதனின் தனித்துவமும் மகத்துவமும் அடங்கி  உள்ளது. இந்த நம்பிக்கை கொண்டவர்களுக்கு மனிதர்கள் சமத்துவம் பெற்றவர்கள்.

மற்றவர்கள் இதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். பரவாயில்லை. சமய  சாயம் பூசாமல் பேசலாம். குறள் சமயம் சாரா நூல். அதனால் வேறு விளக்கம்  கொடுக்க வேண்டும். பகுத்தறிவின் பார்வையில்,  மெய்யியல் கண்ணோட்டத்தில்  பார்க்கலாம்.

மெய்யியல் வரலாற்றில் 'பெர்சன' (person) என்ற கருத்து உண்டு. அதைத் தெளிவுபடுத்த வேண்டும். அதாவது பகுத்தறிவும் சுதந்திர உள்ளமும் (intelligence and free will) இயல்பாகக் கொண்ட தனிப்பட்ட ஒன்றை (substance), மனிதரை person  என்று சொல்வது. Person and personality are different.   இவை இரண்டையும் குழப்பி  விடக்கூடாது. “பெர்சனாலிட்டி” என்றால் தனி ஒரு மனிதனின் தனித்துவம்;  ஒருவரின்  'டெம்பரமென்ட்',  'கேரக்டர்' பற்றி பேசுவது. ‘பெர்சன’ என்பது இதற்கும் அடிப்படையாக உள்ளது.

பெர்சன் என்பதை முக்கியமான மூன்று அம்சங்களை அடையாளமாக வைத்து  விளக்கம் கூறலாம். 
ஒன்று: தனித்துவம் - “யுனீக்” - இதை டியூப்ளிகேட் பண்ண  முடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் உண்டு. அதை “க்ளோனிங்” செய்ய முடியாது.

இரண்டு: பகிர்ந்து கொள்ள முடியாதது: - incommunicable – அணுவைப் போல இதை உடைக்க முடியாது,  கரைக்க முடியாது,  மற்றொன்று இதை விழுங்க முடியாது. அதனால்தான் நெருங்கிய நண்பர்களைக்கூட நம்மால் முழுதும் புரிந்து கொள்ள  முடிவதில்லை.

மூன்று: subsistence – to be on one’s own.  தானாகவே இருக்கிற தன்மை கொண்ட நிலை.   பகுத்தறிவு உள்ள மனிதனின் இயல்பு இங்கே மையம்  கொண்டுள்ளது.

“நான்” என்பதையும் கூட இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 
ஒன்று: மற்றவர்  பார்வைக்கு உட்பட்டது. என்னுடைய செயல்களின் வழியாக,  நான் என் உணர்வுகளை  வெளிப்படுத்தும் முறையில்,  எனது மனப்போக்கின் வழியாக மற்றவர் என்னைப் பார்க்க  முடியும். இது உயிர் நிலையின் மையம். நம் சொந்தப் பொறுப்புணர்வுக்கும் மையம்.

மற்றொன்று:  பார்வைக்கு அப்பாற்பட்டது. அடிப்படையில் பகிர்ந்து  கொள்ள முடியாதது. இந்த மையத்தைத்தான் “அண்டலாஜிக்கல் பீயிங்”  என்று  சொல்கிறோம்.  

நாய்க்குத் தனிப்பட்ட இயல்பு உண்டு.  ஆனால் அதை ஒரு “பெர்சன்” என்று  சொல்ல முடியாது. அது பகுத்தறிவும் சுதந்திர உள்ளம் கொண்ட பொருட்கூறு அல்ல.

2000 ஆண்டுகளுக்குப் பின்னும் திருக்குறளைப் பற்றிப் பல விமர்சனங்கள்  நடக்கின்றன. அது ஒரு தொகுக்கப்பட்ட நூல். பல் வேறு பழமொழிகளை,  நீதிச்  சொல்லாடல்களைத் தொகுத்துத் தரப்பட்டுள்ளது என்பர். இது சில ஐரோப்பிய  அறிஞர்களின் கருத்து.  

விவாதத்திற்காக இந்தக் கருத்தை நாம் ஏற்றுக் கொண்டாலும் கூட,  இதைத்  தொகுத்தவர் ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தோடு மூன்று பகுதியாகப்பிரித்து,  133  அதிகாரங்களாக அமைத்து ஒரு நூலாக வடிவம் கொடுத்திருக்கிறார். அவர் ஒரு   கோட்பாட்டின் அடிப்படையில் செய்திருக்க வேண்டும். அப்பொழுது உள்ள சமுகச்  சூழ்நிலைக்குப் பதில் சொல்லும் குறிக்கோளோடு செய்திருக்க வேண்டும்.

எவருமே  குறிக்கோள் இல்லாமல் ஒரு வேலையைத் தொடங்குவதில்லை.  ஒரு எழுத்தாளன் அல்லது வணிகன் திட்டம் ஏதும் இல்லாமல் தன் வேலையைத்  தொடங்க மாட்டான். பிரபாகரன் என்ற மீமாம்ச சிந்தனையாளர் (ஏழாம் நூற்றாண்டு)  கூறிய வாக்கை மேல்நாட்டு இன்டாலஜிஸ்டுகள் அடிக்கடி சுட்டிக்காட்டி இந்திய மரபின்  அடையாளமாகக் கூறுவார்கள். “ஒரு பயனைச் சிந்தித்துத் தெளிவாக குறி  வைக்காமல் ஒரு முட்டாள் கூட ஒரு வேலையைத் தொடங்க மாட்டான் என்பது.  “பிரயோஜனம்   அநுத்திஷ்ய   ந    மந்தோ’பி   ப்ரவர்த்ததே, ” என்பது மீமாம்சாவின்  (slokavārtika)  சொல்லாடல்.

வள்ளுவர் அப்பொழுது இருந்த சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய  கோட்பாட்டுக்கு மாற்றுக் கண்ணோட்டம் தருகிறார். அவருக்கு உதவிய மூலநூல்கள்  என்னவென்று தெரியவில்லை. ஆனால் குறளின் கண்ணோட்டம் வைதிக  கோட்பாட்டுக்கு முரணானது என்பது தெளிவு. அதில் மாற்றுக் கருத்து இல்லை.