-- மா.மாரிராஜன்
எத்தனையோ அழகான அதி அற்புத கற்றளிக் கோவில்கள். உயிரோட்டமான கண்கவர் சிற்பங்கள். இவற்றை உருவாக்கிய தச்சர்களும், சிற்பிகளும் எவ்வாறு இருப்பார்கள்?
ஒரு சில கோவில்களில் இவர்கள் அடையாளம் காணப்பட்டாலும் கல்வெட்டுச் சான்றுகளுடன் இவர்தான் இக்கோயிலைக் கட்டிய சிற்பி என்று அடையாளப்படுத்துகிறது ஒரு சிற்பம்.
சோழ மாதா செம்பியன் மாதேவியார் ஏராளமான கோவில்கள் கட்டியவர். செங்கற் தளிகளைக் கற்றளிகளாகப் புதுப்பித்தவர். அம்மையாரின் ஆஸ்தானச் சிற்பியின் பெயர் ஹரசரணசேகரன்.
கும்பகோணம் அருகே உள்ளது கோனேரி ராஜபுரம் என்னும் திருநல்லம் கோவில். செங்கற்றளியான இதைக் கற்றளியாக புதுப்பித்தார் மாதேவியார். தனது கணவர் கண்டராதித்தர் பெயரால் இக்கற்றளியை எடுப்பித்தார். இவரது ஆணைப்படி கற்றளியைக் கட்டிய சிற்பிதான் ஹரசரணசேகரன். இச்சிற்பியின் உருவமும், உருவத்தைச் சுற்றிக் கல்வெட்டும் இக்கோவிலில் உள்ளது.
கோவிலில் உள்ள ஆடவல்லானை வணங்கும் கோலத்தில் இச்சிற்பி உள்ளார். "உடைய பிராட்டியார்க்குத் திருக்கற்றளி எடுப்பித்த ஆலத்ததூருடையான் சாத்தன் குணபத்தனான ஹரசரணசேகரன்." இச்சிற்பிக்கு கண்டராதித்தரின் விருதுப்பெயரான இராசகேசரி மூவேந்த வேளான் என்னும் பட்டத்தை அளித்து பெருமைப் படுத்தினார் அம்மையார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சோழ தேசத்துச் சிற்பி இவர்.
தகவல் உதவி:
"வரலாறு - நீங்களும் நானும்"
சிறப்புரை: மருத்துவர் இரா. கலைக்கோவன்
தமிழ் மரபு அறக்கட்டளையின் இணையவழி உரைத்தொடர் திசைக்கூடல்-213
---
No comments:
Post a Comment