Sunday, June 27, 2021

அக்கரைச் சீமையின் வீரமகள் அஞ்சலை குப்பன்



--  மலாக்கா முத்துக்கிருஷ்ணன்


மொரீசியஸ் நாட்டின் ஐரோப்பியக் கொடுங்கோன்மைக்கு எதிராகப் போராடியவர். மொரீசியஸ் நாட்டின் கரும்புத் தோட்ட முதலாளிகளுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியவர்.  மொரீசியஸ் நாட்டின் மனித உரிமைகளுக்காக தன் உயிரையே தியாகம் செய்தவர். 1940-ஆம் ஆண்டுகளில் மொரீசியஸ் நாட்டில் நடந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சி.  கப்பலேறி வந்தாலும் சூடு சொரணை உண்டு. கைப்பிடி சோற்றிலும் கைத்துளி உப்பு உண்டு. மனித உரிமைகள் மரித்துப் போகா என்று காலனித்துவத்தை எதிர்த்த ஒரு தமிழ்ப் பெண்மணியின் வீர வரலாறு வருகிறது. அவரைச் சற்று நேரம் நினைத்துப் பார்ப்போம். அஞ்சலைக்கு அஞ்சலி செலுத்துவோம்.

மொரீசியஸ் நாட்டில் இப்போது அந்தப் பெண்மணிக்காகச் சிலை வடித்து சீர் செய்கிறார்கள். அஞ்சல்தலை வெளியிட்டுப் பார் புகழப் பெருமை செய்கிறார்கள். ஒரு விளையாட்டு அரங்கத்தைக் கட்டி மரியாதை செய்கிறார்கள். யார் அந்த அஞ்சலை குப்பன். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அஞ்சலை குப்பன் எனும் பெயர் கொஞ்சமாய் மறைந்து மங்கலாகத் தெரியும். ஏன் தெரியுமா? இந்தத் தமிழச்சியின் தியாக உணர்வுகள் குறித்து உலகத் தமிழர்களுக்கு அதிகமாய்த் தெரியாது. தெரியவே தெரியாது என்று சொன்னால் தான் சரியாக அமையும். இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் கழித்து இப்படி ஒரு தமிழ்ப் பெண் வாழ்ந்து இருக்கிறார் என்று தெரியாமலேயே போய்விடும். அதனால் முன்கூட்டியே இப்படி ஒரு பதிவைப் பதிவு செய்துவிடுவது சாலச் சிறப்பு என்பது காலத்தின் கணிப்பு அல்ல. ஞாலத்தின் எதிர்பார்ப்பு.

மொரீசியஸ் நாட்டில் இரண்டு பெண்களுக்குச் சிலை வைத்து இருக்கிறார்கள். ஒன்று மொரீசியஸ் தலைநகரில் வைக்கப்பட்டு உள்ள இங்கிலாந்து நாட்டின் விக்டோரியா மகாராணியாரின் சிலை. உலகத்தின் கால் பகுதிக்கு மகாராணியாராகக் கோலோச்சியவர்.  மற்றொன்று அஞ்சலை குப்பன் அவர்களின் சிலை. மொரீசியஸ் தலைநகரம் போர்ட் லூயிஸ் (Port Louis) அபரவாசி (Aapravasi Ghat) வளாகத்தில் அந்தச் சிலையை வைத்து இருக்கிறார்கள். வேறு சிலைகள் எதுவும் இல்லை. ஒரு தமிழ்ப் பெண்ணுக்குச் சிலை வைத்து இருக்கிறார்கள். பெருமையாக உள்ளது.

அஞ்சலை குப்பன், மொரீசியஸின் கரும்புத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். 1943 செப்டம்பர் 27-ஆம் தேதி ஆங்கிலேயர்களின் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்தவர். அப்போது அவர் நிறைமாதக் கர்ப்பிணி. அவருக்குத்தான் அங்கு சிலை வைக்கப்பட்டு உள்ளது.  மொரீசியஸ் நாட்டில் 68 விழுக்காடு இந்திய வம்சாவழியினர். 27 விழுக்காடு ஆப்பிரிக்க வம்சாவழியினர். 3 விழுக்காடு சீன வம்சாவழியினர். 2 விழுக்காடு பிரிட்டிஷ் வம்சாவழியினர். ஏறக்குறைய 75,000 தமிழர்கள் வாழ்கின்றனர்.  

தமிழர்கள் இந்த நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமானவர்கள். இந்தத் தீவில் தான் அஞ்சலை குப்பன் உரிமைப் போராட்டங்கள் செய்து சாதனை படைத்து இருக்கிறார். நவீன மொரீசியஸின் வரலாற்றில் ஒரு முக்கிய மாந்தராகக் கருதப் படுகிறார். மொரீசியஸ் மக்களின் அடையாளச் சின்னமாகவும் மாறியுள்ளார். 

அஞ்சலை குப்பன்; அஞ்சலை திவாகரன்; அஞ்சலாய் குப்பன் (Anjalay Tassalam Twakaran); 1911 பிப்ரவரி 17-ஆம் தேதி ரிவியர் டு ரெம்பார்ட் (Riviere du Rempart) எனும் மாவட்டத்தில் பிறந்தார்.   1943 செப்டம்பர் 13-ஆம் தேதி பெல்லி வியூ ஹாரேல் (Belle Vue Harel) எனும் சீனி தோட்டத்தில் ஒரு பெரிய வேலைநிறுத்தம் தொடங்கியது. அதில் அஞ்சலையும் கலந்து கொண்டார். 1943 செப்டம்பர் 27-ஆம் தேதி உயிர் துறந்தார்.  அந்த நாள் மொரீஷியஸ் மக்களால் பெரிதும் போற்றப்படும் நாள். தியாக நாளாகவும் கருதுகிறார்கள். அன்றைய நாளில் தான் பிரிட்டிஷ் காலனித்துவ ஆதிக்கத்திற்கு எதிராகவும்; தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் போராட்டம் உச்சம் அடைந்த நாளாகும். 

ஆங்கிலேய முதலாளிகள் கேட்பதாக இல்லை. தெரிந்ததுதானே. வரித்து விடு. பிரித்து விடு. தொலைத்து விடு எனும் சாணக்கியத்தில் ஆங்கிலேயர்கள் பேர் வாங்கியவர்கள். பரம்பரை புத்தி பாதியில் போய் விடுமா. இந்தப் பக்கம் மலாயாவில் மட்டும் என்னவாம். 1900-ஆம் ஆண்டுகளில் அதே நிலைமை தானே. நான்கு தகரத்தில் ஒரு டப்பாவைக் கட்டி வைத்து; அதற்கு கூலி லைன் என்று பெயர் வைத்து; 150 ஆண்டுகளாக மலாயத் தமிழர்களின் உயிரை வாங்கவில்லையா. அது போலத்தான். 

Anjalai Kuppan.jpg
அஞ்சலை குப்பனுக்கு அவருடைய பெயரில் ஒரு விளையாட்டு அரங்கத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். அதன் பெயர் அஞ்சலை விளையாட்டரங்கம் (Anjalay Stadium, Belle Vue, Mauritius).  அது மட்டும் அல்ல. 2000 டிசம்பர் 13-ஆம் தேதி அவருக்காக அஞ்சலை அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பு செய்தார்கள். பள்ளிப் பாட நூல்களில் அவரின் வரலாறு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மொரீஷியஸ் நாட்டில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கட்டாயம் அஞ்சலையின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் படிக்க வேண்டும்.   2015 மார்ச் 8-ஆம் தேதி அனைத்துலக மகளிர் தினம். அதை முன்னிட்டு மொரீஸியப் பாலினச் சமத்துவம், குழந்தைகள் மேம்பாடு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரால் அதிகாரப்பூர்வமாக அஞ்சலி குப்பன் கௌரவிக்கப் பட்டார். அதன் பின்னர் பாட நூல்களிலும்  இந்த வீரமகளின்  வரலாறு இடம் பெற்றது. 


சான்றுகள்:
1. The historical significance of Anjalay Coopen - https://www.lexpress.mu/article/historical-significance-anjalay-coopen

2. Nouvelle d'Ananda Devi, La Mort d'Anjalay dans Au tour des femmes. Ed. B. Pyamootoo & R. Poonoosamy. Port-Louis:  Immedia, 1995: 67-74

3. Anjalay Coopen: Tamil Lady ‘Kabali’ of Mauritius - https://tamizharmedia.com/2019/06/30/anjalay-coopen-tamil-lady-kabali-of-mauritius/







No comments:

Post a Comment