தமிழால் இணைவோம்! தமிழால் உயர்வோம்!
வணக்கம்.
வியந்து நிற்கின்றோம். 2015ஆம் ஆண்டு ஏப்ரல் தொடங்கிய நமது மின்தமிழ்மேடை காலாண்டு ஆய்விதழ் இன்று 25வது இதழாக மலர்ந்து நிற்கின்றது. 154 எழுத்தாளர்கள் இதுவரை நமது காலாண்டிதழில் பங்களித்துள்ளார்கள் என்பதோடு 848 பதிவுகள் இதுவரை நமது காலாண்டிதழில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அனைத்தும் ஆய்வுத் தரமும் சமூகப் பார்வையும் என்ற வகையில் உயர்ந்த தரத்துடன் கூடிய படைப்புகளாக வெளிவந்துள்ளன.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு தொடங்கப்பட்ட 2001 ஆம் ஆண்டு முதல் நமது கவனமும் செயல்பாடுகளும் தரமான ஆய்வுகளை நோக்கியதாகவே அமைந்தது. தமிழக வரலாறு சார்ந்த பல்வேறு தரவுகளைச் சரியாக ஆவணப்படுத்தி ஆய்வு செய்யும் செயல்பாட்டை ஊக்குவிப்பதிலும் செயல்படுத்துவதிலும் தனிக்கவனத்தைத் தமிழ் மரபு அறக்கட்டளை கொண்டிருக்கின்றோம். அத்தகைய சீரிய பணியில் மின்தமிழ் மேடை எனும் இக்காலாண்டிதழ் தனிச் சிறப்பு பெறுகிறது.
கல்வெட்டுக்கள், சிற்பங்கள், பயணக்குறிப்புகள், உலகளாவிய தொல்லியல் கண்டுபிடிப்புகள், நாட்டார் வழிபாட்டு மரபு சார்ந்த ஆய்வுகள், தமிழர் வரலாறு, தமிழ் இலக்கியங்கள் என்றிவை மட்டுமல்லாது சமூக நலன் சார்ந்த, சமூக அக்கறை கொண்ட பார்வையுடன் கூடிய ஆக்கங்களும் நமது மின்தமிழ் மேடை காலாண்டிதழை அலங்கரிக்கின்றன. இது மேலும் தொடரும்!
தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பகப் பிரிவு 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் முதல் இரண்டு நூல்களாக திருக்குறளின் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டு ஜெர்மானிய மொழிபெயர்ப்பு நூல்கள் இரண்டு, ஆங்கில அறிமுக உரையுடன் வெளிவந்தன. இதனை அடுத்து `திருவள்ளுவர் யார்? கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்` என்ற நூலும் 2019ஆம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடாக வந்தது.
2020 ஆம் ஆண்டு `நாகர்நிலச் சுவடுகள்` என்ற நூலை நாம் வெளியிட்டோம். கொரோனா தொற்றுநோய் பரவல் தொடர்பான ஊரடங்கு ஏற்பட்ட சூழலால் நமது பதிப்பகப் பணியில் சற்றே சுணக்கம் ஏற்பட்டது. ஆயினும் அதனைக் கடந்து வந்து இந்த 2021 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக வரலாற்று ஆய்வு நூல்களை வெளியீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன் தொடக்கமாக இவ்வாண்டு பிப்ரவரி மாதம் மறைந்த பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களது நினைவுகளைத் தாங்கிய வெளியீடாக `அறியப்பட வேண்டிய தமிழகம்` என்ற நூல் நமது பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இப்போது டாட்.காம் அமைப்புடன் இணைந்த வகையில் `கீழக்கரை வரலாறு` என்ற நூலை இவ்வாண்டு மார்ச் மாதம் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு செய்திருந்தோம். இதனை அடுத்து தொடர்ச்சியாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகளாக சில நூல்கள் இப்போது தயார் நிலையில் உள்ளன. அவை பற்றிய செய்திகள் படிப்படியாக நமது திணை மாத இதழிலும் நமது செய்தி ஊடக பகுதிகளிலும் பகிர்ந்து கொள்ளப்படும்.
இவ்வாண்டு தமிழகத் தலைநகர் சென்னை மாநகரில் மிகச் சிறப்பாக நடைபெற்ற 44வது புத்தகக்கண்காட்சி நிகழ்ச்சியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரதிநிதிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. நூல் வெளியீடுகள் மற்றும் உரைகள், சிறப்புரைகள் என்ற வகையில் இந்தப் பங்களிப்பு அமைந்திருந்தது.
தரமான ஆய்வு நூல்களை வரலாற்று ஆர்வலர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருப்பதோடு ஏனைய பதிப்பகங்களின் வெளியீடுகளாக வருகின்ற ஆய்வு தரம் நிறைந்த நூல்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தையும் தமிழ் மரபு அறக்கட்டளை உறுதியாக ஏற்றிருக்கின்றோம். அந்த வகையில் நமது முக்கிய பொறுப்பாளர்கள் தொடர்ச்சியாக நல்ல நூல்களை வாசித்து அவற்றை விமர்சனம் செய்வது அவற்றைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் வழங்குவது என்ற பணிகளையும் தொடர்ந்து செய்து வருகின்றார்கள். அத்தகைய படைப்புகளுக்குத் தளமாக அமைகின்றது நமது மின்தமிழ் மேடை எனும் இக்காலாண்டிதழ்.
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடுகளை வாங்கி உங்கள் ஆதரவை வெளிப்படுத்துங்கள்.
தமிழால் இணைவோம்! தமிழால் உயர்வோம்!
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
No comments:
Post a Comment