தமிழ்த் தாயின் அரிய மைந்த!
-- புதுவைச் சிவம்
சீர்மணக்கும் செந்தமிழிற் புலமை சான்றோய் !
தித்திக்கும் கவிதையினில் எழுச்சி யூட்டிப்,
பார்மணக்கச் செய்திடுவோய் ! உயர்க ருத்துப்
பாவாண! நற்கனக - சுப்பு ரத்னப்
பேர்கொண்டோய் | பாரதியார் மதிக்கும் அன்பு
பெற்றதால், பாரதிதாசன் எனும் பேர் பூண்டோய்!
ஏர்மிக்க தமிழ்த்தாயின் அரிய மைந்த!
இந்நாளில் எமைவிட்டுப் பிரிந்த தென்னே!
துயில்கின்ற தமிழகத்தைத் தட்டித் தட்டித்
தூயபணி யாற்றிடவே கவிதை தந்தோய்!
பயில்கின்ற பேதங்கள் மூடக் கொள்கை
பறந்திடவே பகுத்தறிவுப் பாடல் சொன்னோய்!
செயிர்விளைக்கும் சாத்திரங்கள் மதங்கள் யாவும்
சிதைந்தழியப் புரட்சிப்பா புகட்டி வந்தோய்!
அயர்வகற்றித் தமிழரெலாம் விழிப்புக் கொண்டே
அடிமைதனை நொறுக்குகையில், மறைந்த தென்னே!
செந்தமிழை யழிப்பதற்குக் கொண்டு வந்த
தீய இந்தி தனையெதிர்க்க வீரந் தந்தாய்!
பைந்தமிழின் கலையழிக்கும் பகைக்கூட் டத்தைப்
பாதாளஞ் சேர்த்திடவே துடித்து நின்றாய்!
விந்தையுறு தமிழகத்தின் ஆட்சி காண
வெஞ்சமரே நேரிடினும் அஞ்சோ மென்று
சந்தமொழிக் கவிதையினைப் பாடி வந்த
தளபதியே, நீ இதற்குள் மறைந்த தென்னே!
கலைவளர்க்கத் துடித்திட்டாய்! குறட்பா வுக்குக்
கருத்தமைத்தாய் புதுமுறையில் ! மேனாட் டாரின்
மலைபோன்ற அறிவியல்நூல் தமிழில் தோன்ற
வளர்த்திட்டாய் நல்லார்வம்! தமிழ்ச்சொல் ஆட்சி
குலைத்திடவே மாறுபொருள் கூறி வந்த
கொடியருக்கு நல்லறிவு புகட்டி வந்தாய்!
விலைமதிக்க முடியா உன் கவிதை தன்னை
விண்ணவருக் களித்திடவே சென்றா யோநீ!
இருபதெனும் நூற்றாண்டில் தமிழ கத்தே
இணையற்று விளங்கிவந்த கவிஞ ரேறே !
ஒருநொடியில் தயக்கமின்றிக் கவிதை சொல்லும்
உயர்புலவ! வண்ணப்பா இயற்றுங் காலை,
பெரும்புலமை யுடையவரும் இடரே கொண்டு
பேதளிப்பர்; மலைவின்றி விரைந்த ளிக்கும்
ஒருபுலவ! உனை என்று காண்போம் ? இந்த
உலகத்தில் உன்கவிபோல், புகழே கொள்க !
— இது, 22-4-64-ல், இடுகாட்டில் நடைபெற்ற இரங்கற் கூட்டத்தில் பாரதிதாசன் மாணவர் ச. சிவப்பிரகாசம் (புதுவைச் சிவம்) அவர்கள் கூறியது.
---
No comments:
Post a Comment