Wednesday, February 3, 2021

அண்ணாவின் ‘திராவிடநாடு'



-- கல்பனாதாசன்


‘தேனூறும் தமிழகத்தில் தேன்போன்றது, இந்தத் 'திராவிட நாடு' என்றும் உயர்வானது' என்று கண்ணதாசனால் ஒரு திரைப்பாடலில் படம்பிடிக்கப்பட்டது அண்ணாவின் ‘திராவிடநாடு' இதழ். பேனா பிடித்தவர்கள் பலபேருக்கு அது அரிச்சுவடியாக இருந்த இயக்க இதழ் என்றும் கண்ணதாசன் அதே பாடலில் வர்ணித்திருக்கிறார். ‘தம்பிக்கு' என்னும் தலைப்பில் அண்ணா திராவிடநாடு இதழில் வரைந்த மடல்வடிவக்கட்டுரைகள் தமிழ் உரைநடை இலக்கியத்திற்கு அரிய வரவு. அதன் மூலம் அவருக்கு ஆயிரம் பல்லாயிரம் அரசியல் தம்பிகளும் இலக்கியத்தம்பிகளும் கிடைத்தார்கள்.  கே ஏ அப்பாஸின் கடைசிப்பக்கம் ‘பிளிட்ஸ்' பத்திரிகைக்கு எப்படியோ அப்படியே அண்ணாவின் ‘திராவிடநாட்'டுக்கு அவரது ‘தம்பிக்கு' கடிதங்கள்.

‘தம்பிக்கு' கடிதங்களுக்கு முதன்முதலில் 1963 இல் நூல்வடிவம் தந்த பெருமை பாரிநிலையத்தைச்சேரும். 10 தொகுதிகள் வெளியிட்டது பாரிநிலையம். அண்மையில் தமிழரசி பதிப்பகம் 2005 இல் ‘தம்பிக்கு கடிதங்க'ளை மீண்டும் வெளியிட்டுள்ளது. திராவிடநாட்டில் எழுதிய 171 கடிதங்களும் காஞ்சியில் எழுதிய 119 கடிதங்களும் சேர்ந்து மொத்தம் 290 கடிதங்கள் கொண்ட 10 தொகுதி அது.

தம்பிக்கு பதிப்புரையில் ம. நடராசன் சொல்கிறார்-. ‘வாழ்க வசவாளர்கள்', ‘இன்றைய பகைவர் நாளைய நண்பர்', ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு', ‘தம்பி உடையான் படைக்கஞ்சான்'  என்னும் அண்ணாவின் தலைப்புகள் தமிழர்களின் மனத்தைப்பண்படுத்தி நெறிப்படுத்துபவை. ‘தடைக்கற்கள் படிக்கற்கள் ஆகட்டும்', ‘துணிவு தெளிவு கனிவு', ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு', ‘எதையும் தாங்கும் இதயம்' என்னும் மடல்கள் அண்ணாவின் வாழ்வியல் நெறியின் வெளிப்பாடாக அமைந்தவை.

திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு, எழுத்தாளர் இயக்குநர் ப. புகழேந்தி இருவரும்  திராவிட இயக்க இதழ்கள் 265க்கும் மேற்பட்டவை எனப்பட்டியல் இடுகின்றனர். நீதிக்கட்சிக்காலத்திலிருந்து நடத்தப்பட்ட இதழ்கள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்தப்புள்ளிவிவரம் தருகின்றனர். அவற்றில் தலையான ‘திராவிடன்', ‘குடியரசு', ‘விடுதலை' ஆகியவற்றுக்கடுத்து அண்ணாவின் ‘திராவிடநாடு' முக்கியத்துவம் வாய்ந்தது. குடியரசு, விடுதலை ஆகிய இதழ்களில் துணையாசிரியராகப் பணிபுரிந்த அண்ணா 1942 இல் 'திராவிடநாடு' தொடங்கினார். 3-2-1963 வரை இதழ் தொடர்ந்து வெளிவந்தது. பிறகு 'காஞ்சி' என்னும் பெயரில் அதை நடத்தினார். 'ஹோம்லண்ட்' என்னும் ஆங்கிலப்பத்திரிக்கையையும் அண்ணா கொஞ்சகாலம் நடத்தினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ப. நெடுமாறன் தலைமையில் அதற்கு நிதி திரட்டிக்கொடுத்ததுண்டு.

ஹோம்லண்ட் தொடங்கியபோது திராவிடநட்டில் அது குறித்து அண்ணா எழுதிய அறிமுகம் சுவையானது.- ‘தம்பி, ஆங்கில இதழ் முந்திரிப்பருப்பானால் திராவிடநாடு வெண்பொங்கல். அது கருவி. இது என் உள்ளம். அது பிறர் நெஞ்சைத்தொட, இது உன்னுடன் உறவாட. அது பிறருக்கு நம்மை விளக்க. இது நம்மை உருவாக்க. எனவே இதனை இழந்துவிட ஒருபோதும் சம்மதியேன்.'

திராவிடநாடு முதலிதழ் 8-3-1942 அன்று ஓரணா விலையில் ஞாயிறு தோறும் வெளிவரும் என்னும் அறிவிப்புடன் வந்தது. ஆசிரியர் சி. என். அண்ணாதுரை. ‘தமிழுண்டு தமிழ்மக்களுண்டு, இன்பத்தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு' என்னும் பாரதிதாசன் வரிகள் முகப்பை அலங்கரித்தன. முதலில் காஞ்சிபுரம் தேரடித்தெருவிலிருந்தும் பின்னர் திருக்கச்சி நம்பி தெருவிலிருந்தும் வெளிவந்தது. திராவிடநாடு இதழின் பெரும்பாலான பக்கங்களை அண்ணாவே ஆட்கொண்டார். 'சொலல்வல்லன்' என்னும் குறள் வரிக்கு இலக்கணமான காரணத்தால் அண்ணாவுக்கு அது சாத்தியமாயிற்று.

திராவிடநாடு இதழில் பாரதிதாசன், நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், என். வி.  நடராசன், மு. கருணாநிதி, இரா. செழியன், அரங்கண்ணல், தில்லை வில்லாளன், ராதாமணாளன், ப. உ. சண்முகம், ம. கி. தசரதன், ப. வாணன், வாணிதாசன் ஆகியோர் எழுதினார்கள். அரங்கண்ணல், தில்லை வில்லாளன் இருவரும் துணையாசிரியர்களாக இருந்தார்கள். நெடுஞ்செழியன் 1949 வாக்கில் துணையாசிரியராக இருந்தார். ஈழத்து அடிகள் அண்ணாவுக்கு வலதுகரமாக இருந்து எழுத்தாளராக, நிர்வாகியாக, எழுத்தராக, காசாளராக, மேலாளராக இப்படி எண்ணிறந்த பணிகளைச்சுமந்து திராவிடநாட்டைச் செம்மை செய்தார். திராவிடநாட்டின் முகப்புப்பக்கத்தில் கவிதைகளை வெளியிடுவது அன்ணாவின் வழமை. அறிமுகமே இல்லாத இளம்கவிஞர்கள் பலருக்கு அண்ணா முகவரி உண்டாக்கித்தந்ததுண்டு.

அண்ணா 1949 வாக்கில் கட்சியின் பொதுச்செயலராக இருந்தபோது ‘நம்நாடு' பத்திரிகையையும்  ஆசிரியராக இருந்து பார்த்துக்கொண்டார். ராயபுரம் அறிவகத்தில் தங்கியிருந்த அண்ணா கடைசிநேரத்தில் (எப்போதும் அப்படித்தான்) எழுதித்தரும் கட்டுரையை எடுத்துக்கொண்டு ப. புகழேந்தி காஞ்சிபுரம் திராவிடநாடு இதழுக்குப் பயணம் போவார். அதற்கு ரூ. 5 அவருக்கு பேட்டா கொடுத்தார்கள். ரூ. 3 வண்டிச்சத்தம்போக ரூ. 2 சாப்பாடு சிற்றுண்டிக்குப் போதுமானதாக இருந்தது என்கிறார் புகழேந்தி.    

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் அண்ணாவின் திராவிடநாடு பற்றி கட்டுரை வாசித்த கு. விவேகாநந்தன் எழுதுகிறார்- அண்ணாவின் பிறபணிகளைக்காட்டிலும் இதழ்ப்பணி சிறந்துவிளங்குவதற்குக்காரணம் அவரது எல்லாத்திறங்களும் இதழ்களில் ஒருசேர நின்று நிலவியதேயாகும். திராவிடநாடு இதழில் அவர் கையாண்ட ஒவ்வொரு இதழின் இலக்கிய வடிவமும் சிறந்துவிளங்குகின்றது. அந்திக்கலம்பகம், ஊரார் உரையாடல், கேட்டீரா சேதி முதலானவை பின்னாளில் ஆனந்தவிகடன், குமுதம் இதழ்களில் வேறு வேறு பெயர்களில் எடுத்தாளப்பட்டன.

அவர் கனவுகண்ட அரசியல் திராவிடநாடு லட்சியம் கைகூடாவிட்டாலும் தமது இதழ்-இலக்கியமான திராவிடநாட்டில் அண்ணா செங்கோல் செலுத்தினார். பல்வேறு ஆசிரியர்கள் செய்யும் பணியை அவர் ஒருவரே தன்னந்தனியனாகச் செய்தார். அரசியல் விமர்சனம், பயணக்குறிப்புகள், கேலிச்சித்திரம், நாடகம், சிறுகதை, தொடர்கதை, புதினம் என்று எல்லாத்துறைகளையும் ஒரு கை பார்த்ததுடன் அவற்றில் தமது கைவண்ணம் சிந்தாமல் சிதையாமல் நாளுக்குநாள் மெருகேறும் வண்ணமும் பார்த்துக்கொண்டார்.

அண்ணாவின் பாணி அவருடைய பிறவிக்குணத்தின்பாற்பட்டது. நட்பும் தயையும் கொடையும் பிறவிக்குணம் என்பார்கள். அவை அண்ணாவின் பண்புகள். உயர்குடிப்பண்புகள். தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும் அவர் அறியாத கீழ்க்குணங்கள். இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்யும் சால்பு அவரது அடிப்படை இயல்பு. அத்தகைய பண்புகள் அவரது எழுத்துக்கும் உரமாகி ஊற்றாகி அவருடைய தமிழில் அற்புதம் புரிந்தன. எதையும் சுவையோடு அதுவும் நகைச்சுவையோடு கேட்டார்ப்பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியும் தமிழ் அவரது தமிழ். அந்தத்தமிழ் அவரது திராவிடநாட்டில் பக்கத்துக்குப்பக்கம் பளிச்சிட்டது.

அண்ணாவின் பேச்சைக்கேட்க மைல்கணக்கில் நடந்த தம்பிகள் ஏராளம். அதேபோல் அவரது திராவிடநாடு இதழ் வெளிவரும் கிழமைதோறும் முன்னதாகவே கடைதேடி ஓடிப்போய் காத்திருக்கும் தம்பிகளுக்கும் குறைவில்லை. அண்ணா அன்பின் உருவகம். அவர் உருவாக்கிய குடும்ப பாசம் கட்சியையும் தம்பிகளையும் அப்படிக்கட்டிப்போட்டிருந்தது. வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வரும் தம்பிகள் அவருக்குக் கிடைத்தார்கள்.  அவர்களைக்கொண்டு அவர் 1949 இல் தொடங்கி 18 ஆண்டுகள் உழைத்து 1967 இல் ஆட்சிக்கட்டில் ஏறினார். ஆனால் தமிழ்நாட்டின் கெடுவாய்ப்பு  இரண்டே ஆண்டுகளில் அவரைக் காலம் காவு கொண்டுவிட்டது.  

திராவிடநாட்டில் அவர் எழுதிய நாடகங்களில் ‘சந்திரோதயம்' ‘சந்திரமோகன்', ‘நீதிதேவன் மயக்கம்' வரலாற்றுப்புகழ் வாய்ந்தவை. ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' (சந்திரமோகன்) நாடகத்தில் சிவாஜி வேடமேற்ற வி. சி. கணேசன்  பெரியாரால் பெயர்சூட்டப்பெற்று சிவாஜி கணேசன் என்றே புகழ்பெற்றார். நாடகத்தில் நடிப்பதற்குமுன் மாதக்கணக்கில் திராவிடநாடு அலுவலகத்தில் சிவாஜி தங்கியிருந்ததுண்டு. ‘தீ பரவட்டும்', ‘ஆரியமாயை', ‘கம்பரசம்' ஆகிய தொடர்கட்டுரைகள் புரட்சிகரமானவை.  அண்ணாவுக்கும் ரா. பி. சேதுப்பிள்ளைக்கும், அண்ணாவுக்கும் சோமசுந்தரபாரதிக்கும் நிகழ்ந்த சொற்போரின் தொகுப்பே ‘தீ பரவட்டும்' என்னும் பெயரில் நூல்வடிவம் பெற்றது. ‘ஆரியமாயை' எழுதியதற்காக அண்ணா சிறைவாசம் செய்ததுண்டு. 

பெரியாரிடமிருந்து பிரியவேண்டிய கட்டாயம் நேர்ந்தபோது எழுதிய ‘ராஜபார்ட் ரங்கதுரை', ‘இரும்பாரம்', ‘ரொட்டித்துண்டு';  சம்பத்தோடு பிணங்கவேண்டிய  அவசியம் வந்த தருணத்தில் படைத்த ‘எல்லோரும் இந்நாட்டுமன்னர்' அழகிய உருவகங்கள். அண்ணாவைப்பின்பற்றிக் கழகத்தில் எல்லோருமே பேசவும் எழுதவும் முனைவார்கள். ஒருசிலரைத்தவிர அவரது ஆளுமை பிறருக்குக்கைகூடவில்லை. அண்ணாவின் எழுத்திலும் சரி பேச்சிலும் சரி மெல்லிய நகைச்சுவை இழைந்துகொண்டே இருக்கும். நயமான மென்மையான சொல்வளம் அருவிபோல் வழிந்துகொண்டே இருக்கும். அண்ணாவைப் பின்பற்றியவர்களுக்கு இவை அறவே இல்லை என்பதால் அண்ணாவின் பாணியை அவர்கள் பின்பற்றியவிதம் சலிப்பூட்டுவதாகவே முடிந்தது.

ஒருமுறை திராவிடநாடு இதழின்மீது வகுப்புப்பகைமையை ஊட்டுவது என்னும் கோணத்தில் அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  ஜாமீன் தொகை ரூ 3000 கட்டவேண்டும். அவ்வளவு பணத்திற்கு அண்ணா எங்கே போவார்? வாசகர்களிடம் கையேந்தினார். வேண்டியதொகை வசூலானதும் இனி போதும் என்று அறிவிப்பும் தந்துவிட்டார். பின்னர் திராவிடநாடு கட்டுரைகளுக்கு எதிரான அவ்வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துவிட்டது.

திராவிடநாடு தொடங்கியபோது எழுதினார்- இவன் எம். ஏ. படித்தால் போதுமா? ஓர் இதழ்நடத்த வல்லவனா? என்று ஏளனக்குரல் எழுப்பியோர் எவ்வளவு பேர்? தமிழ் இலக்கணம் இலக்கியம் அறிவானோ?  என்று எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசியோர் எவ்வளவு பேர்? ஈராறு திங்கள் நடமாடி பிறகு ஈளைகட்டி இருமி இருக்குமிடம் தெரியாது போகும் என்று சாபமளித்தோரும் உண்டே? எதுகை மோனை போதுமா ? எண்ணத்தில் ஒரு புதுமை எழுத்திலே ஒரு தெளிவு இருக்கவேண்டாமா ? அது இவன் பெறுதல் ஆகுமோ என்று தலையசைத்துப்பேசியோர் தொகை மட்டும் சிறிதா?

திராவிடர் கழகம் தம்மையும் தமது தி. மு. க. வையும் கடுமையாக விமர்சித்த போது எழுதினார்- கரி தன் குட்டிக்கு வீரமும் தீரமும் வளர்வதற்காக துதிக்கையால் குட்டியை இழுத்தும் தள்ளியும் தட்டியும் பயிற்சி தரும். தி. மு.க. வுக்கு அத்தகைய பயிற்சியை தி.க. தந்திருக்கிறது. பயிற்சி போதவில்லையோ என்று ஒருவேளை எண்ணக்கொண்டு மறுபடியும் பயிற்சி தர முன்வரக்கூடும். அதைத்தவறாகக்கருதவேண்டாம்.

இப்படி எதையும் நிதானத்துடனும் அமைதியுடனும் சிந்தித்து எழுதியும் பேசியும் நாகரிகம் காத்தவர் அண்ணா. அந்தப்பண்புதான் அவரை மற்றவர்களிடமிருந்து தனித்துநிற்கவைத்தது. அவருக்கு வெற்றிக்கனியை  எளிதில் ஈட்டித்தந்தது. நீக்குப் போக்கு நெளிவு சுளிவு எல்லாம் அவருக்கு இயற்கையிலேயே கைவந்தன. ஆலமரம்போல் நிற்காமல் நாணல்போல் வளைந்தார். சாதித்தார். 

பெரியாரின் துக்கநாள் அறிவிப்பு, பெரியார்- மணியம்மை திருமணம், தேர்தலில் பங்கேற்காமை என்னும் நிலைப்பாடுகளைக் கடுமையாக எதிர்த்தார். ஆனாலும் அவரைத்தரக்குறைவாக விமர்சிக்காமல் பிரிந்துசென்று தனிக்கட்சி கண்டு வளர்ந்தார். திராவிடநாடு பிரிவினையைச்சட்ட விரோதமாக்கிய போது சூட்சுமம் புரிகிறதா என்று கொள்கை நிலைப்பாடு ஒன்றை வழிமொழிந்து பிரிவினைக்கொள்கையை கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் கலந்தார். ஓட்டு வழியா வேட்டு வழியா என்பதில் ஓட்டு வழியைத்தேர்ந்து முதல்வரானார். 

தலைசிறந்த பேச்சாளர், தலைசிறந்த எழுத்தாளர், தலைசிறந்த பத்திரிகையாளர், தலைசிறந்த மனிதநேயர் என உயர்ந்தார். நண்பர்கள், பகைவர்கள் எல்லோரையும் ஒருசேர தம்மை நேசிக்கும்படி அவர்களை அன்பால் கட்டிப்போட்டார். அவர்தாம் அண்ணா.


குறிப்பு: அண்ணாவின் ‘திராவிடநாடு' என்ற இக்கட்டுரை அண்ணாவைப் பற்றிய முழு மதிப்பீடு அன்று. அவரை இதழாளராகப் பார்க்கும் ஒரு சிறு முயற்சி.  15 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பார்வை இதழில் வெளியாகி காலச்சுவடு மூலம்  சில தீவிர இதழ்கள் என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றது.  இரு நிறுவனத்தார்க்கும் நன்றி. 

----

No comments:

Post a Comment